கண்ணே, கொல்லாதே | 2 | சாய்ரேணு

 கண்ணே, கொல்லாதே | 2 | சாய்ரேணு

லாக்கப்பில்…

“கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ்! இந்தக் கேஸில் உனக்கு டிஎஸ்பி ப்ரமோஷன் கட்டாயம் கிடைக்கும் பார்” என்றாள் தன்யா.

முதல்நாள் கமிஷனரிடம் பேசியபோது இருந்த உற்சாகம் இல்லை போஸுக்கு. அலுப்பாகத் தெரிந்தான்.

“கேஸ் அவ்வளவு ஸ்ட்ராங்க் இல்லைன்னு கமிஷனர், ப்ராசிக்யூட்டர் எல்லோரும் நினைக்கறாங்க. ஆனா இவன் பேரில் பப்ளிக் கோபமா இருக்கறதால, எந்த லாயரும் கௌதமுக்காக வாதாடத் தயாரா இல்லை” என்றான்.

அதோடு அந்தக் கேஸை விட்டுவிட்டு வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தான்.

பத்து நிமிடங்கள் கழிந்திருந்தபோது மந்திரம் டீ கொண்டுவந்தான். பேச்சு நின்றது.

மந்திரம் வெளியே சென்றதும் தன்யா போஸை உற்றுப் பார்த்தாள். “போஸ், அவுட் வித் இட்” என்றாள்.

“என்ன சொல்ற?”

“நடிக்காதே போஸ். ஏதோ விஷயம் எங்ககிட்டப் பேச வந்திருக்க, அதைச் சொல்லாம ஏதேதோ பேசிட்டிருக்க” என்றாள் தர்ஷினி.

“எப்படித் தெரிஞ்சது?” என்றான் போஸ் சற்று வெட்கமாய்.

“குழந்தைக்குக் கூடத் தெரிஞ்சிருக்கும். விஷயத்தைச் சொல்லு” என்றாள் தன்யா.

போஸ் உடனே ஆரம்பித்துவிடவில்லை. கொஞ்சநேரம் உலாவினான்.

பிறகு இதையெல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தர்மாவின் எதிரில் அமர்ந்தான்.

“கௌதம்முக்கு உங்களைப் பார்க்கணுமாம்” என்றான் நறுக்குத் தெறித்தாற்போல்.

“வாட்?” என்றாள் தன்யா. என்றாள் தர்ஷினி.

“யெஸ்.”

சின்ன மௌனம்.

எல்லோரும் தர்மாவையே பார்த்தார்கள்.

தர்மா புன்னகை மாறாமல் “ஒய் நாட்?” என்றான்.

“நீங்க துப்பறிஞ்ச கேஸ் விவரங்களெல்லாம் நெட்டில் படிச்சிருக்கேன். கண்டுபிடிக்கவே முடியாதுங்கற கேஸெல்லாம் புலனாய்வு செஞ்சு உண்மையைக் கண்டுபிடிச்சிருக்கீங்க” என்றான் கௌதம்.

லாக்கப்பில் இருந்தாலும் நீட்டாக இருந்தான். முகத்தில் சாந்தம். கஞ்சா, சூதாட்டம், குடியோடெல்லாம் அந்த முகத்தைப் பொருத்திப் பார்க்கவே முடியவில்லை. பெண்களைப் பார்த்த பார்வையில் ஆச்சரியமான கண்ணியம் தெரிந்தது.

“எங்களைப் பார்க்கணும்னு சொன்னீங்களாமே?” என்றாள் தன்யா.

“ஆமா மிஸ் தன்யா. தன்யாதானே?” என்று கேட்டவன், அவள் தலையாட்டி உறுதிப்படுத்தியதும் தொடர்ந்தான்.

“நான் நல்லவன் கிடையாது. எத்தனையோ தப்புச் செய்திருக்கேன் – உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்…” தயங்கித் தொடர்ந்தான். “ஆனா… என் அப்பாவை நான் கொல்லல. நான் கொலைகாரன் கிடையாது!”

மூன்றுபேரும் அவனைச் சந்தேகம் நிறைந்த கண்களுடன் பார்த்தார்கள்.

“சரி, இதில் நாங்க என்ன செய்யணும்?” என்றாள் தன்யா.

“மேடம், நான் குற்றவாளி இல்லைன்னு நீங்கதான் நிரூபிக்கணும். எந்த லாயரும் என் கேஸை எடுத்துக்க மாட்டாங்க. ப்ளீஸ், மாட்டேன்னு சொல்லிடாதீங்க! என் உயிரை நீங்கதான் காப்பாற்றணும், ப்ளீஸ்!” என்று சொல்வதற்குள் உடைந்து கதறி அழுதான் கௌதம்.

பதில் சொல்லாமல் வெளியேறினார்கள் மூவரும்.

“ராஸ்கலுக்கு என்ன கௌதமபுத்தன் லுக் பார்த்தியா?” என்றாள் தன்யா.

“எல்லாத் தப்பும் செய்திருக்கானாம், இதை மட்டும் செய்யலியாம்! பண்றதைப் பண்ணிட்டுப் புத்தன் மாதிரி டயலாக் வேற!” என்றாள் தர்ஷினி கோபமாக.

“இங்கே புத்தன் ஒரு கொலை செய்தான், அவ்வளவுதான். விடுங்க, இதை இத்தோடு மறந்துடுங்க” என்றான் போஸ்.

“கொலை செய்தது புத்தன்தானா?” என்று தர்மாவின் குரல் ஒலித்தது.

எல்லோரும் அதிர்ந்து அவனைப் பார்த்தார்கள்.

“அவன் புத்தனோ, கொலையாளியோ. நம்மைக் கூப்பிட்டதுக்கு அவன் வழக்கைத் துப்பறிஞ்சு பார்ப்போமே” என்றான் தர்மா.

போஸ் கோபமாக எதிர்க்கப் போனவன் தணிந்து “சரி, துப்பறிஞ்சு பாருங்க. எங்க தரப்புக்குச் சாதகமா இன்னும் சில க்ளூஸ் கிடைச்சா நல்லதுதானே” என்றான்.

–இன்னும் வரும்…

ganesh

1 Comment

  • நான் நினைச்சது சரிதான்! கௌதம் கொலையாளி இல்லைன்னு எப்படி நிருபீக்க போறீங்க! ஆர்வமா இருக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...