ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா
ஐப்பசி மாதச் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜ சோழனின் பிறந்த நாள் விழாவை இன்று அரசு விழாவாகக் கொண்டாடுகிறது தமிழக அரசு.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவர் மாமன்னன் ராஜராஜ சோழன். இக்கோயில் கட்டடக் கலையிலும் கவின்மிகு கலையிலும் ராஜராஜன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாகத் திகழ்கிறது. எனவேதான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்த நாளை சதய விழாவாக அவ்வூர் மக்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டுடன் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இந்தாண்டு 1034வது ஆண்டு சதய விழா நேற்று (2-11-2022) மங்கள இசையுடன் தொடங்கியது. பெருவுடையாருக்கு 42 வகையான பொருட்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழில் பாராயணம் பாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அணணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அதன் பின், ராஜராஜசோழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சிகள், பட்டிமன்றங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆட்சியர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்.
சதய விழாவின் முக்கிய நிகழ்வாக ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பெருவுடையார், பெரியநாயகி திருமேனிக்கு 48 வகையான பொருள்களால் பேரபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் முடிந்த பிறகு 108 கலச பூஜை நடைபெறுகிறது. அதன் பிறகு தேவாரம், திருவாசகம் ஆகியவற்றுக்குப் பூஜை செய்யப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் தேவார வீதி உலா நடைபெறும்.
சதய விழாவைக் கொண்டாடும் வகையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் புதன்கிழமையான இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடம் நவம்பர் 3 அன்று, ராஜராஜ சோழனுக்கு விழா எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
ஐப்பசி நடைபெறும் சதயம் விழா ஆங்கில தேதி அடிப்படையில் ராஜராஜனின் பிறந்தநாளை கொண்டாடப்படும் என்று அறிவிப்பும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும், ஐப்பசி சதயம் வெவ்வேறு ஆங்கில தேதிகளில் அல்லவா வரும்? அதிகாரிகளிடம் முதல்வர் இது குறித்து கேட்டு முடிவெடுத்திருக்க வேண்டாமா?
முன்பே இப்படித்தான் திருவள்ளுவருக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வந்தது. இதற்கு தமிழ் அறிஞர்கள் அப்போது எதிர்ப்புத் தெரிவித்தனர். பிறகு திருவள்ளுவர் பிறந்த நாளைக் கணக்கிட்டு தமிழ் தேதியைக் குறிப்பிட்டனர்.
திருவள்ளுவர் பிறந்தது, வைகாசி மாதம் அனுச நட்சத்திரம். ஆகவே அன்று அவரை கொண்டாடுவோம் எனத் தமிழறிஞர்கள் முடிவெடுத்து, 1935 மே 17,18 ஆகிய தேதிகளில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கொண்டாடினர். இதை முன்னெடுத்தவர்கள், மறைமலையடிகள், தெ.பொ.மீ, திரு.வி.க முதலான தமிழறிஞர்கள்.
இந்த நிலையில், கி.ஆ.பெ. விசுவநாதம் முதலிய தமிழறிஞர்கள், நட்சத்திரப்படி பிறந்தநாள் வேண்டாம் என தீர்மானித்தனர். தை முதல் நாள் தமிழ் ஆண்டு தொடங்குவதாகவும் இதைத் திருவள்ளுவர் ஆண்டு என குறிப்பிட வேண்டும் எனவும் முடிவெடுத்தனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, 1971இல் திருவள்ளுவர் ஆண்டு என்பதைத் தமிழ்நாட்டு அரசிதழில் வெளியிட்டார். இது 1972இல் நடைமுறைக்கும் வந்தது. 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், அப்போதைய முதலமைச்சர், எம்.ஜி.ஆர். அதைச் சகல அரசு ஆவணங்களிலும் அலுவல்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார். அதன்படியே திருவள்ளுவருக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் காலத்திற்கு வெகு பிந்தைய ராஜராஜ சோழன் பிறந்த நாளை நட்சத்திரத்தை வைத்துக் கொண்டாடுவது தேவையா?
சித்திரை முதல் மாதமாகக் கொண்டு தொடங்குவது எப்படி தமிழ் மாதம் ஆகும்? புகழ்பெற்ற தமிழ் மன்னனுக்கு தமிழ் தேதியில் பிறந்தநாள் கொண்டாடுவது தானே முறை? என்கிற குரல்களும் எழுகின்றன.