கிருஷ்ணை வந்தாள் | 2 | மாலா மாதவன்
அன்னை தந்தை யாவாள் – காளி
அவனி எங்கும் வாழ்வாள்
முன்னை வினைகள் போக்கி – இன்பம்
முகிழ்த்துத் தழைக்கச் செய்வாள்
இன்னல் போக்கும் இனியாள் – காளி
இல்லம் தோறும் இருப்பாள்
அன்னை அவளை வணங்கு – இந்த
ஆலம் பாடி வந்து!
• • •
முதல் நாள் நடந்ததெல்லாம் கனவு மாதிரித் தெரிந்தது அகல்யாவுக்கு.
கிருஷ்ணை வந்தாள். அப்பாவைப் பார் என்றாள். சரியென்று விளையாட்டுத்தனமாய்த் தானே தொட்டோம். சட்டென்று மயங்கி சாய்ந்து விட்டாரே… இதோ திருவாடானை ஆஸ்பத்திரியில் பார்க்க முடியாதென்று மதுரைக்கு வந்து அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தாயிற்று.
காளிக்கான இன்றைய பாடலை தன் குறிப்பேட்டில் எழுதி வைத்து தன் தந்தை உடல்நலம் சரியாகப் பிரார்த்தித்துக் கொண்டாள். இன்னும் என்னவென்று சொல்ல வில்லை டாக்டர். எல்லா டெஸ்டும் எடுத்திருக்கிறார்கள். தாய்க்குத் தாயாய் , தந்தைக்குத் தந்தையாய் இருப்பவரை எப்பாடு கொண்டேனும் காப்பாற்றி விட வேண்டும் என அகல்யாவுக்கு மனம் துடித்தது.
அவளை அறியாமல் வாய் முணுமுணுத்தது.
“கிருஷ்ணை!”
அடுத்தகணம் அவள் பக்கத்து சேரில் அமர்ந்திருந்தாள் கிருஷ்ணை.
“ஹேய்.. நீ எப்படி இங்க? இப்ப தான் உன்ன நினைச்சேன். உடனே வந்துட்டியே!” அகல்யா தனக்கொரு துணை கிடைத்ததில் மகிழ்ந்தாள்.
“நீ சொன்ன மாதிரியே அப்பாவுக்கு ஆஸ்பத்திரி வாசம். சரியாயிடும்ல!” கவலைப் பட்டாள்.
“வினைப் பயன் கழிக்க விதியின் போக்கில் பயணப்பட்டே தீரணும். ஆனா ஒண்ணும் கண்டமில்லை. காளியம்மா எமனையும் விரட்டுவாள் தெரியுமா? ஆனால் எதிர் வருவாரை..? ” கிருஷ்ணை பேச்சை நிறுத்தி விட்டு அகல்யாவை அர்த்தத்துடன் பார்த்தாள்.
அகல்யா குழப்பமுற்றாள். அதற்குள் கிருஷ்ணை இருந்த இருக்கையில் யாரோ அமர வர..
“ஹான்.. குழந்தை இருக்கிறாள். மேலே உட்காரப் போறீங்களே!” கத்தி விட்டாள் அகல்யா.
“ஷ்! நானிருப்பது உனக்கு மட்டும் தான் தெரியும் அகல்யா. அவர்களுக்குத் தெரியாததால் உட்கார வந்தார்கள். உட்காரட்டும். இதோ நான் எழுந்து இந்தப் பக்கம் வந்து விட்டேன்.” எழுந்து அகல்யாவைத் தொட்டாள்.
கிருஷ்ணையின் மெத்தென்ற ஸ்பரிசம் அகல்யாவின் தலை முதல் பாதம் வரை குளிரூட்ட உள்ளுள் எழுந்த பரவசத்தை அடக்கத் தெரியாமல்..
“இல்லை, நீ இங்கேயே உட்காரு!” எனச் சத்தமாய்ச் சொல்லி விட்டாள்.
உட்கார வந்த கறுப்புக்குடை பெரியவரோ….
“என்னம்மா நீ இப்ப தான் உட்காராதன்ன.. இப்ப உட்காருங்கற. என்ன உங்கூட வந்தவங்க யாரும் சாப்புடப் போயிருக்காங்களா? அவங்களுக்காக இடம் புடிச்சு வச்சிருக்கியாக்கும். சும்மானாச்சும் குழந்தை இருக்குன்னு பொய் சொல்ற? ம்ம்!” என்றார்.
“இல்லய்யா! இந்த சீட் வேணாம். இதோ நான் எழுந்துக்கறேன். என் சீட்டுல உட்காருங்க!” என்ற அகல்யாவைப் பார்த்து..
“சரியான மறை கழண்ட கேசு போல! காலி சீட்ட கொடுக்க மாட்டேன்னு தான் உட்கார்ந்த இடத்தை விட்டுக் கொடுக்குது இந்தப் பொண்ணு. எதுக்கும் தள்ளியே போவோம்!” நினைத்தவர் வேறு பக்கமாகப் போய் அமர்ந்து கொண்டார்.
“ஏன் அகல்யா? நானென்ன அவ்வளவு உசத்தி உனக்கு? நான் வெறும் ஆடு மேய்ப்பவள் தானே!” சிரித்தாள் கிருஷ்ணை.
“ஆடு மேய்ப்பவளா? நீயா? எனக்கென்னமோ நீ என் கையைத் தொட்டதும் அகிலத்தை மேய்ப்பவள் எனத் தெள்ளந்தெளிவாகத் தெரிகிறது. எனக்கிந்த பாக்கியம் ஏனென்று என்று தான் தெரியவில்லை.”
“அகல்யாவுடன் இருக்க இந்த கிருஷ்ணைக்கு ஆசை வந்திருக்குன்னு வச்சுக்கோயேன்.”
“ஹை.. அதான் கூப்புட்டதும் வந்துட்டியா?” அகல்யா சந்தோஷப் பட்டாள்.
“ஆமா, அகல்யா எனக்குப் பிடித்தமானவள். என்னையே ஸ்மரணை செய்பவள். எனக்காகப் பாடுபவள். பதிலுக்கு நான் சற்று அகல்யாவுடன் நேரம் கழிக்க வந்தேன். அவ்வளவே.!” சிரித்தாள் கிருஷ்ணை.
அகல்யாவும் வாய் விட்டுச் சிரித்தாள். முன்பு உட்கார வந்த பெரியவர் இவள் சிரிப்பதைப் பார்த்து விட்டு “மெண்டலே தான்!” என்று முணுமுணுத்தார். அப்பெரியவர் இவளின் வாழ்க்கையில் தொடரப் போகிறாரோ? கிருஷ்ணைக்கே வெளிச்சம்!.
“சுந்தரவதனன் அட்டெண்டர்!” வார்டுபாய் அழைத்தான்.
கிருஷ்ணையுடன் பேசிக் கொண்டிருந்ததில் தன்னை மறந்திருந்த அகல்யா தன் அப்பாவின் பெயரைக் கேட்கவும் எழுந்து ஓடிப் போனாள்.
“டாக்டர் கூப்பிடறாரும்மா!”
சொல்லி விட்டு அழைத்துச் சென்றான்.
என்னவாயிற்றோ அப்பாவுக்கு.? பதறிய படி சென்றவளின் நினைவில் கிருஷ்ணை அறவே இல்லை. குழந்தை உட்கார்ந்திருக்கென்று அப்பெரியவரை உட்கார விடாது செய்தவள் அந்தக் குழந்தையைப் பற்றி மறந்தே போனாள். ஒவ்வொரு நேரத்துக்கும் முக்கியத்துவம் மாறிக் கொண்டே இருக்கிறது.
விடுவிடுவென்று நடந்தவள் டாக்டரிடம் பேசி விட்டு வந்தவளின் மனம் நிலை பிறழ்ந்தாற்போல் இருந்தது
மைல்ட் ஹார்ட் அட்டாக். பயப்பட ஒன்றுமில்லை. எந்த சர்ஜரியும் இப்போ வேண்டாம். இரண்டொரு நாளில் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்றவர் இனி கொஞ்சம் இதம்பதமா பார்த்துக்கங்க. அதிர்ச்சி தரும் செய்திகள் அவரிடம் சொல்ல வேண்டாம் என்றிருந்தார்.
மற்றவை எல்லாம் நார்மல் என்றாலும் எதனால் அந்த மைல்ட் ஹார்ட் அட்டாக்? அகல்யாவுக்கு யோசித்து மனம் கனத்துப் போனது.
தன்னாலா? தான் கல்யாணமே பண்ணிக் கொள்ள மாட்டேன் என அடம் பிடித்ததாலா? அப்பாவுக்கு என ஒரு குடும்பம் உண்டே. அவர்களது தொடர்பே அற்று விட்டதே. ஒருவேளை அதனால் தான் இந்த நெஞ்சு வலி வந்ததோ? என்ன அழுத்தம் அவர் மனதில்? இனி கவனமாகப் பார்த்துக் கொள்ளணும் அவரை. யோசித்த அகல்யா தன் கைபேசியை எடுத்து தேவகோட்டை பெரியம்மா ஜோதிக்கு அழைத்தாள்.
அவசரமாக மருத்துவமனை வந்ததில் யாருக்கும் சொல்லத் தோன்றவில்லை. அம்மா பக்க ஒரே உறவு இந்த ஜோதி பெரியம்மா தான். ஜோதிக்கு ஒரே பையன். அவனும் திருமணமாகி அமெரிக்காவில் இருந்தான். ஆக ஜோதிக்கும் இவள் மேல் கொள்ளைப் பாசம். சுந்தரவதனத்திடம் சண்டை போட்டு அவ்வப்போது அகல்யாவைக் கூட்டிக் கொண்டு தன் வீட்டில் வைத்துக் கொள்வாள். “அகல்யா வேற எங்க தான் போறா? எப்பப்பாரு உங்களோடயே வைச்சுண்டு கூண்டுக்கிளி மாதிரி ஆக்கி வைச்சிருக்கீங்க?” என சுந்தரவதனனிடம் குறைப் படுவாள்.
“என்னடி கண்ணு.. போன் பண்ணி இருக்க? கோவில் லட்சார்ச்சனையெல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா? என்னால வர முடியலடிம்மா. இந்தக் கால்வலி பாடாப் படுத்துது. முந்தாநாள் உனக்கு நானே போன் பண்ணி வரலைன்னு சொல்லணும்ன்னு இருந்தேன். அதையும் மறந்துட்டேன். சொல்லு! என்ன விஷயமா போன் செஞ்சே?”
ஜோதி கேட்க.. அகல்யா வெடித்து அழுதாள்.
“அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு பெரிம்மா. மதுரைல இருக்கேன்!”
“ஏண்டி பொண்ணே. என்னாச்சு? ஏன் எங்க கிட்ட கூடச் சொல்லாம ? தனியா நீ மட்டும் எப்படிடி? என்ன சொல்றார் டாக்டர்? தோ! பெரியப்பாவக் கூட்டிண்டு நான் கிளம்பி வரேன்!” படபடத்தாள் ஜோதி.
“ம். வாங்கோ. அப்பாவுக்கு ஒண்ணும் பயமில்லை. இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செஞ்சுடுவா. மைல்ட் ஹார்ட் அட்டாக்ன்னு சொல்றார் டாக்டர். நீங்க பணமெடுத்துண்டு நான் சொல்லும் போது வாங்க போதும்! வரதுக்கு நான் போன் பண்றேன்.”
“அட..பகவானே! உள்ளூற வச்சு வச்சு புழுங்க விட்டுருக்கார். வேதனை இப்ப வெடிச்சுடுத்து. ம்ம். நீ சொன்னப்புறம் காரெடுத்துண்டு வரேன் அகல்யா. நல்லவேளை இப்பவாக்கும் போன் செஞ்சியே!”
“என்னத்த பெரியம்மா உள்ளூற வைச்சுண்டு இருந்தார்?” அகல்யா கேட்ட கேள்வி காற்றோடு போயிற்று.
போனை வைத்த அகல்யா மிகவும் சோர்ந்திருந்தாள். இரண்டாவது மாடிக்குப் போய் ஐசியூவில் இருந்த அப்பாவை வாசல் கண்ணாடி வழியே பார்த்து விட்டு மீண்டும் தரைத் தளத்தில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு வந்தாள். அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தவள் பக்கத்தில் யாரோ வந்து அமர்ந்து தன்னைத் தொடுவதை உணர்ந்து..
“கிருஷ்ணை!” என்றாள்.
“ஆம்.. நான் தான். டாக்டர் கூப்பிட்டதும் என்னை விட்டுட்டு ஓடியே போயிட்டியே. பின்னும் என் ஞாபகம் வரவே இல்லையே உனக்கு.” உதடு சுழித்துக் குறைபட்டாள் கிருஷ்ணை.
“கிருஷ்ணை..என் அப்பா..!”
“ஒண்ணும் ஆகாது அவருக்கு. நான் தான் உன் கூடவே இருக்கேனே.”
“அப்புறம் ஏன் அட்டாக்.. ஆஸ்பத்திரின்னு? உன்னால் இதையெல்லாம் தடுத்து இருக்க முடியாதா?”
“உன் வினையை நீ அறுவடை செய்ய நானென்ன நடுவில் அகல்யா? அவரவர் வினைப்பயன் அவரவரே அனுபவிக்க வேண்டும். விதிப்பயன் என் கையில். நான் பார்த்துக் கொள்வேன். கவலைப் படாதே.” கிருஷ்ணை சொன்னாள்.
“நெஞ்சில் வலி வரும் அளவுக்கு..” அகல்யா இன்னும் அந்த வேதனையில் இருந்து மீளவில்லை.
“வரட்டும். வலியில் தானே வழி பிறக்கும்!”
“அது எப்படி கிருஷ்ணை.? வலியில் என்ன வழி?”
“வலியில் தான் வழி. அம்மாவுக்கு வலி எடுத்தால் அது குழந்தைக்கு வழி. அதுபோல் அவரவர் வலிக்கு நிவாரணமாக வழியைத் தான் முதலில் தேடுவர். இப்போ உன் அப்பாவுக்கு வந்திருக்கும் வலி உனக்கான புது வழியாகக் கூட இருக்கலாம். இனி நீ தயாராய் இருக்க வேண்டும் அகல்யா.” என்ற கிருஷ்ணையின் பார்வை அகல்யாவைத் துளைத்து நின்றது.
“என்னவோ சொல்கிறாய். எனக்குப் புரியலைன்னாலும் நீ என்கூட இருக்கே. அது போதும் கிருஷ்ணை!”
“ம்ம். பிடிச்சுக்கோ. கெட்டியாப் பிடிச்சுக்கோ. காலக் கடலைக் கடந்து விடலாம் சுலபமாய்.” சிரித்தாள் கிருஷ்ணை.
தனியே அமர்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருப்பவளை அவ்வழியே சென்ற பலரும் பாவம் என பார்த்துக் கடந்தனர். உள்ளிருக்கும் நோயாளிக்கான புலம்பலோ இது என நினைத்துக் கடந்தனர்.
கேண்டீனில் காஃபி வாங்கிக் கொண்டிருந்த கறுப்புக்குடை பெரியவர் ஆஸ்பத்திரியின் மெயின் வாசலில் நுழையும் அந்த நெடுவளந்தானைப் பார்த்து விட்டார்.
“அட! நம்ம பெரிய வீட்டு வாசஸ்பதி தம்பி. இருக்கற சோலியெல்லாம் விட்டுப்புட்டு இங்கன என்ன வராரு? ஆருக்கும் மேலுக்கு சொகமில்லையோ? என்னாச்சுன்னு தெரிலயே.” தனக்குள் பேசிக் கொண்டவர் அவசர அவசரமாகக் காஃபியைக் குடித்து விட்டு அதற்கான காசைக் கொடுத்து விட்டு ஓடிச் சென்றார்.
வாசஸ்பதி.. பெரியவீட்டம்மா அலமேலுவின் கடைசி மகன். பணத்தில் பிறந்து பணத்தில் வளர்ந்தவன். இருக்கும் அத்தனை தொழிலையும் இவன் தான் பார்த்துக் கொள்கிறான். அத்தனை செல்வாக்குள்ளவன் ஒரு கையால் வேட்டியைத் தூக்கிப் பிடித்த படி இவ்வளவு வேகமாக இங்கு வரக் காரணம் என்ன?
கறுப்புக்குடைப் பெரியவர் வேகநடை நடந்து வாசஸ்பதியைத் தொட்டார்.
1 Comment
அருமை.! கதையாசிரியர் திருவாடானையா?