மீண்டும் கௌரவம் பெறுகிறது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’

 மீண்டும் கௌரவம் பெறுகிறது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழிபெயர்த்து வருகிறது. இந்தி – உருது -மலையாளம் – கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இப்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கிறது; கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்திருக்கிறார்.

துபாயில் நவம்பர் 9, புதன்கிழமை அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறும் ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ என்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்படுகிறது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32நாடுகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொள்கிறார்கள்.

மாநாட்டின் தலைவர் தொழிலதிபர் சிவகுமார், ரைஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், துணைத் தலைவர்கள் ஆல்பிரட் பெர்க்மென்ஸ், ஜோஸ் மைக்கேல் ராபின், சாகுல் ஹமீது, பஷீர் கான் ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள்.

வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத்தரம் வாய்ந்த நாவல்  கள்ளிக்காட்டு இதிகாசம். இது 2003ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு கள்ளிக்காட்டு இதிகாசம். இது வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதை.

கள்ளிப்பட்டி என்ற ஊரையே சுத்திச்சுத்தி வரும் கதை கிளைமேக்ஸில் திடீரென்று வைகை அணைக்கட்டு கட்டப்படுவதால் கள்ளிப்பட்டியும் அதில் பேயத்தேவரும் மூழ்குவதை உணர்ச்சிபொங்க விவரித்து முடிந்துவிடுகிறது.

ஒரு சுவாரஸ்யமான கிராம வாழ்க்கைத் தகவற்களஞ்சியம், சொற்களஞ்சியம், அருஞ்சொற்பொருள் அகராதி, சொலவடைத்தொகுப்பு என்று பல நிறங்கள் இந்நாவலுக்குண்டு. அந்தஅளவில் வாசிக்கச் செலவிடும் நேரம் நிச்சயம் பயனுள்ளதே.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...