அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் மாணவி!
தமிழகத்தில் ஆதரவற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனாதையாக இறக்கும் தருவாயில் அவர்களுக்காக இரக்கப்படுகிற மனம் எல்லார்க்கும் இருக்கோ இல்லையோ இதோ நான் இருக்கேன் என ஒரு மாணவி ஓடோடி வருகிறார்.
திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்த யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார். இவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார். இருவரும் இணைந்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை மூலமாகப் பல்வேறு தொண்டு செய்து வருகிறார்கள்.
இதில் கடந்த ஆறு வருடமாக ஆதரவற்ற நிலையில்
தெருவோரங்களில் சுற்றித் திரிபவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் வாழும் போதும் ஒரு வேளை அவர்கள் இறந்தால் இறுதிச் சடங்குகள் உள்பட நல்லடக்கமும் செய்து திருச்சி முழுவதும் பேசப்படும் தம்பதிகளாக பெயரெடுத்திருக்கிறார்கள்.
இவர்களது 17 வயது ஒரே மகள் வி.கீர்த்தனா பெற்றோருக்கு உதவியாக அனாதைப் பிரேதங்களை நல்லடக்கம் செய்யும் சடங்கில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு சேவை செய்து வருகிறார்.
அனாதைப் பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகிற மாணவி கீர்த்தனாவுடன் பேசினோம்.
அப்பாவின் சமூக சேவையை பற்றி எப்படி புரிந்து கொண்டீர்கள்?
“நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து அப்பா அம்மா செய்து வரும் சமூக சேவையில் ஈடுபாடு கொண்டு நானும் சேவையினை செய்து
வருகின்றேன்” எனக்கு செய்றதுக்கு அப்பா அம்மா இருக்காங்க.
ஆனால் ரோட்டு சைட்ல வாழுப்வர்கள் யாருமில்லாதவர்களாக இருக்காங்க. அப்ப நாமதான் செய்யணும்னு தோனுச்சு. மேலும் நாம் ஆங்காங்கே பார்க்கிற ஆதரவற்று இருப்பவர்களுக்கு உதவுவது எனக்கும் பிடிக்கும். என்னால் முடிந்த அளவு அப்பா அம்மாவுடன் இணைந்து ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்கிறேன்.”
உங்களுக்கு இதனால் பெற்றோர்களின் அன்பு, பாசம், அரவணைப்பு குறைந்துள்ளதா?
இல்லை! குழந்தையிலிருந்து எப்போதும் போல பாசமா இருக்காங்க,
அப்பா அம்மாவுடன் சினிமாவுக்கு அல்லது கோயில், உறவுக்காரர்கள் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலயேன்னு வருத்தமாக இல்லையா?
அம்மா வீட்டுல இருந்தால் அப்பா அங்க சேவை செய்யப் போயிருப்பாங்க. அப்பா இருந்தால் அம்மா இருக்க வாய்ப்பில்லை. எனக்கும் கொஞ்சம்
வருமாகத்தான் இருக்கும். இதை நான் பெருசா எடுத்துக்க மாட்டேன்.”
உங்கள் தோழிகளுக்கு அப்பாவின் சேவை செய்றத பற்றி கேள்விப்பட்டோ அல்லது நீங்களே சொல்லியிருந்தால் அவர்கள் கேலி கிண்டல் பண்ணியிருக்கிறார்களா?
“அவுங்களும் கேள்விப்பட்டிருக்காங்க. நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால் பாராட்டியிருக்கிறார்களே தவிர யாரும் கேலி கிண்டல் பண்ணதில்லை. எங்க டீச்சர்ஸ் ‘சூப்பர் இன்னும் நல்லா செய்யுமா’ என்றார்கள்.”
உங்களுக்கு இதுபோன்ற சவ அடக்கம் செய்யும் இடங்களுக்குப் போவது ஆரம்பத்தில் எப்படி இருந்தது?
“இல்ல எனக்கு எதுவும் தோணல!”
இப்ப நீங்களும் சமூக சேவையில் ஈடுபடுகிறீர்கள். நாமும் பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கலாம் என்று நீங்களா நினைச்சீங்களா?
“ஆமாம். அப்பா அம்மாவைப் பார்த்து நானாக ஆர்வம் வந்து செய்றேன்.”
நீங்கள் தனியாகச் சென்று நல்லடக்கம் செய்யும் வேளையில் ஈடுபட்டதுண்டா? அல்லது பெற்றோருடன் சேர்ந்ததானா?
“இல்லை தனியாகச் சென்றதில்லை. கொரோனா பெருந்தொற்று காலங்களில் எனது அப்பாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்பொழுது முதல் அம்மாவுடன் சேர்ந்து மயானத்திற்குச் சென்று அனாதைப் பிரேதங்களை நல்லடக்கம் செய்யும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.”
இவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியர்களால் கைவிடப்பட்டு உற்றார்,
உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் முதியோர்கள், வழிதவறி வந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். இப்போது எப்படி உணருகிறீர்கள்?
“இந்த மாதிரி சமூக சேவைகள் செய்றது நம்ம ஒவ்வொருவரின் கடமையாகப் பார்க்கிறேன். மனசும் சந்தோசமாக இருக்கிறது.
ஒருநாள் தெருவோரம் உள்ள ஒரு குப்பைத் தொட்டி பக்கத்திலேயே ஒரு
வயது குழந்தை இருந்தது. பார்த்ததும் மனசு என்னவோ போல ஆயிற்று. குழந்தை வேணும்னு கோயில் கோயில்லா போறாங்க; குழந்தை
இல்லையேன்னு தவம் இருக்காங்க ஆனால் இப்படி குப்பைத் தொட்டியில ஏன் கொண்டு வந்து போடணும்?”
இவர்களை எப்படி அணுகுகிறீர்கள்?
“ஒவ்வொரு நகரங்களிலும் பேருந்து நிறுத்தம், கோவில்கள் முன்பு, சாலை ஓரங்களில் பலர் கிழிந்த அழுக்கு உடையுடன், ஒட்டிய வயிறு, குழி விழுந்த கண்கள், கறை படிந்த பற்களுடன் சக மனிதர்களிடம் கையேந்தி கிடைத்த இடத்தில் உண்டு, உறங்கி, பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி வருகிறார்கள்.
சாலைகளில் முதியவர்கள் யாராவது ஆதரவின்றித் திரிவதைக் கண்டால், அவர்களிடம் சென்று பேசுவோம். அவர்களுக்கு உற்றார், உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள் இருக்கிறார்களா என்பதை விசாரித்து, அவர்களிடம் ஒப்படைக்க முயற்சி எடுப்போம்.
ஆதரிக்க யாரும் இல்லை என்றால், காவல் துறையினர் உதவியுடன்
அவர்களை அரசு அனுமதி பெற்று நடைபெறும் காப்பகத்தில் சேர்ப்போம்.
நல்லடக்கம் செய்வதற்கு சவக்குழி தோண்டிய பின்பு சடலங்களைச்
சம்பந்தப்பட்ட சரக காவல்நிலையக் காவலர்கள் முன்னிலையில் பெற்றோர், உற்றார், உறவினர்கள் முன் நின்று எவ்வாறு இறுதி மரியாதை
செய்வார்களோ அதே போல உடன்பிறவா சகோதர, சகோதரிகளாக தம்பதி சகிதமாக அப்பா அம்மாவுடன் நானும் முன்நின்று மாலை மரியாதையுடன் வாய்க்கு அரிசியிட்டு நல்லடக்கம் செய்து வருகிறோம்.”
கீர்த்தனா கல்லூரியில் சேரப் போறீங்க அடுத்து?
ஆமாம் சட்டக் கல்லூரியில் சேர கவுன்சிலிங் தயாராகி வருகிறேன். எங்க வீட்டுல தினமும் சாப்பாடு போடுகிறோம். நிறையா பேர் வந்து
சாப்பிடுவாங்க ஹோட்டல்காரங்ககிட்ட சொல்லி வச்சிருக்கோம். மீதம் இருந்தால் கொண்டுவந்து தருவார்கள். அல்லது அன்னதானம் வழங்குபவர்கள். அல்லது அக்கம் பக்கம், நண்பர்கள் உதவி செய்வார்கள். நாங்களே சாப்பாடு செஞ்சு போடுவோம். அந்த உணவினை நானும் வழங்குவேன்.
மேலும் எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் மக்கள் மற்றும் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாகப் படிப்பதற்காக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட நூலகம் அமைத்துள்ளோம்.
அப்பா அம்மாவுடன் இணைந்து எதுவுமே இல்லாமல் இருப்பவர்களுக்குச் செய்கிற உதவி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் அவர்களுக்கு உதவுகிற பொழுது அந்தச் சந்தோசமே நெஞ்சம் நிறைந்து விடுகிறது” மாணவி கீர்த்தனா.