பாதுகாப்பான தீபாவளிப் பண்டிகை! -மருத்துவ ஆலோசனை

 பாதுகாப்பான தீபாவளிப் பண்டிகை! -மருத்துவ ஆலோசனை

தீபாவளி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பு. பல வர்ணங்களில் பல வகையான இனிப்பு வகைகள் நம் கண் முன்னே, எதனை சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது என்ற குழப்பத்தினை ஏற்படுத்துவது வ ழக்கம். மிக அதிக அளவில் பரம்பரை ரீதியாக இந்தியர்கள் நீரிழிவு பிரச்சினைகளை உடையவர்கள். எனவே இதனை கருத்தில் கொண்டு இனிப்பு வகைகளை அளவோடு ஏற்றுக்கொண்டு செயல்படுவது நல்லது.

நீண்டநாள் கெடாமல் இருப்பதற்காகவும் நிறத்திற்காகவும் ருசிக்காகவும் சேர்க்கப்படும் ரசாயனப்  பொருட்களான ப்ரிசெர்வேட்டிவ்கள் கலக்காத இனிப்பு வகைகளை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் இவை நமது கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிப்பதோடு, ஆஸ்துமா மற்றும் புற்று நோய்க்கும் காரணமாகின்றன.
வெள்ளி நிற சாயம் பூசப்பட்ட இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. அந்த சில்வர் ஃபாயில்கள் அலுமினியத்தின் அவதாரமே. அந்த அலுமினிய தாது நமது திசுக்களில் சேர்த்து வைக்கப்பட்டு மூளையையும் நரம்பு மண்டலத்தினை தாக்கும் வலிமை கொண்டது.

தீபாவளி அன்று மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியை குதறிவிடும் மதுபானங்களை அது பீராக இருந்தாலும் சரி, ஒயினாக இருந்தாலும் சரி தவிர்த்து விட்டால் அதுதான் உண்மையிலேயே மகிழ்ச்சியான தீபாவளி.
தீபாவளி வந்துவிட்டாலே எண்ணெய் பலகாரங்கள் இல்லாத வீடே இருக்காது. குழந்தைகள், பெரியவர்கள் யாரையும் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால் தீபாவளி அன்று எண்ணெய்க்குளியர் முடித்து தீபாவளி லேகியத்தினை நெல்லிக்காய் அளவு சாப்பட்டு விட்ட பின்பு தீபாவளி பலகாரங்களை சாப்பிடுவது  ஒரு வகையில் வரும் முன் காக்கும் வரப்பிரசாதம்தான்.

குழந்தைகள் பெரியோர்கள் அனைவரும் விரும்பும் தீபாவளியில் பட்டாசுகளுக்கும் மத்தாப்புகளுக்கும் ஓர் முக்கிய இடம் உண்டு. அதனாலே தீபாவளி ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான தீபாவளியாக அமைந்திட சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் உங்களுக்கு வழங்கும் சில முக்கியமான ஆலோசனைகள்…
முதலில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற  பட்டாசுகளை வாங்கவும்.
அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமே வாங்கவும். சீனப் பட்டாசுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளிகளில் பட்டாசுகளை பயன்படுத்துவதே நல்லது. ராக்கெட்டுகளை குடியிருப்பு பகுதிகளில் உபயோகிப்பதையும் மாணவர்கள், முதியோர்கள் தங்கியிருக்கும் பகுதிகளை நோக்கி செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும். ராக்கெட்டை பாட்டிலில் வைத்து கொளுத்துவதும் ஆபத்தானதே.
தண்ணீர் இது நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல ஒரு வேளை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக்கூடிய முதல் உதவி மருந்தும்கூட. எனவே ஒரு பக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
த்ரில்லுக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தக்கூடாது.
நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒரு போதும் அதனை கையில் எடுக்க முயற்சி செய்யக்கூடாது. அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.
குழந்தைகள் தைரியசாலிகள்தான். ஆனாலும் குழந்தைகள் எந்த பட்டாசினையும் தனியே கொளுத்து அனுமதிக்கக்கூடாது.
ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்வதும் நல்லது.

பட்டாசுகள் வெடித்து முடித்துவிட்டு, நன்றாக முகம் குறிப்பாக கண்கள் கைகால்களை குளிர்ந்த நீர் விட்டு கழுவிக்கொள்வது மிக மிக சிறந்தது.
முதல் உதவி குறிப்பு
எதிர்பாராதவிதமாக பட்டாசினால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம்பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும்ட. தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும். தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள தீசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. பின்னர் ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம்பட்ட இடத்தைச் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர்விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனாமை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவிற்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகத் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும். மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...