மர்மக் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

51 ஆண்டுகளுக்கு முன் ‘உன்னை விட மாட்டேன்’ என்று எழுதத் தொடங்கினார் மர்மக்கதை மன்னன் ராஜேஷ்குமார். அன்று தொட்ட எழுத்து இன்று வரை அவரையே இறுகப் பற்றிக்கொண்டுவிட்டது. ராஜேஷ்குமார் கதைக்கு இன்றைள வும் ஒரு கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. பத்திரிகைகள் எழுத்தாளர்களைப் பயன்படுத்திவிட்டு சரக்குத் தீர்ந்தவுடன் தூக்கி எறிந்துவிடுவது வழக்கம். ஆனால் ராஜேஷ்குமார் அவர்களிடம் சரக்கு தீர்ந்ததே இல்லை.

அவர் கதைகள் மர்மக் கதைகள் என்றாலும் அதில் வரும் உவமைகள் இலக்கிய நயமானது. அதில் வரும் உவமைகளையும் உருவகங்களையும் தொகுத்தாலே ஒரு நூலைச் சிறப்பாக உருவாக்கிவிட முடியும். அவ்வளவு கவித்துவமான வர்ணனைகள் கொண்டவை அவர் கதைகள் என்றால் மிகையில்லை. அதோடு அவர் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். அவர் களின் மனநிலையைத் தன் எழுத்து வன்மையால் நம்மோடு ஒட்டி உறவாட வைத்துவிடுவார் ராஜேஷ்குமார்.

இன்று வரை ராஜேஷ்குமார் பத்திரிகைகளில் நாவல், தொடர்கதை என்று அடித்து விளாசிக் கொண்டிருக்கிறார். மாத நாவல் இதழ்களில் ராஜேஷ்குமார் நாவல்கள் தான் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கின்றன.அவருடைய நாவல் எத்தனை முறை பிரசுரித்திருப்பார்கள் என்றே அவருக்கே தெரியாது. பத்திரிகைகளுக்கும் தெரியாது ஏன் வாசகர்களுக்கும் தெரியாது. அந்தளவுக்கு படிக்கப் படிக்கப் புதுமை, இனிமை, அருமை.  படிக்கப் படிக்கச் சலிக்காத அவரது எழுத்து நடை இறைவனின் கொடை.

தனது தொடர்கதைகளால் பல பத்திரிகைகளின் விற்பனை அதிகரிக்கக் காரண மாக இருந்தவர். புதிதாக ஆரம்பிக்கும் ஒவ்வொரு தமிழ் இதழும் ராஜேஷ்குமா ரிடம் கதை கேட்டு வாங்கிப் பிரசுரிப்பது வழக்கம். க்ரைம் கதைகளை ஸ்டெம் செல், உடலுறுப்பு தானம், அணுவியல், க்ரோமோசோம் என்றெல்லாம் புதிய பல விஞ்ஞான விஷயங்களை இணைத்து எழுதுபவர் ராஜேஷ்குமார்.

1500க்கும் மேற்பட்ட நாவல்கள், 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகள் என்று அவரது பட்டியல் தொடர்கிறது. தனது எழுத்துச் சாதனைக்காகத் தமிழக அரசின் கலை மாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர் ராஜேஷ்குமார். இவர் எழுதாத இதழ்களே இல்லை.

இவரது சாதனையைப் பாராட்டி ராமு நினைவு அறக்கட்டளை மற்றும் டேக் குழுமம் சார்பில் அனுபவமிக்க மூத்த தமிழ் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கொளரவித்திருக்கிறது.

இந்த அமைப்பின் மூலம் ஏற்கெனவே எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், சிவசங்கரி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு இந்த ஆண்டு தமிழ் புத்தக நண்பர் கள் அமைப்புடன் இணைத்து எழுத்தாளர் ராஜேஷ்குமார், டாக்டர் தாமரை ஹரிபாபு ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது.

இதற்கான நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று (24-7-2022) நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆர். வி.ராஜன் ‘கலைமகள்’ இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிமணியன், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ இதழ் ஆசிரியர் கிரிஜா ராகவன், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்,  தன்னம்பிக்கை எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், ஆர்.டி.சாரி, மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் மர்மக்கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் ரூ.75 ஆயிரம் பரிசுத் தொகையும் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விருதைப் பெற்றுக்கொண்டு ராஜேஷ்குமார் பேசும்போது, “கல்லூரியில் படிக்கும் போது, என் தமிழ்ப் பேராசிரியர் வகுப்புக்கு வந்து, ‘யாராவது கதை எழுதிக் கொடுங்கள்’ என்றார். அப்போது ஒரு நண்பன், ‘இவன் நன்றாகக் கதைகள் எழுது வான்’ என்று கூறி என்னை மாட்டி விட்டான்.

மறுநாள் வகுப்புக்கு வந்த பேராசிரியர், ‘கதை எங்கே?’  என்று என்னைக் கேட்டார். தயக்கத்துடன் ‘இல்லை’ என்றேன். அதற்கு அவர், ‘நாளைக்கு வரும்போது கதை யுடன் வரவேண்டும்’ என்றார் கண்டிப்புடன். ஒரு கதை எழுதிக்கொடுத்தேன்

1969ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையில் சிறுகதை எழுதிப் பிரசுரமானது. அதற்குப் பத்து ரூபாய் பரிசு கிடைத்தது. அன்று தொடங்கி இன்று வரை விடாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்கள் வீட்டில் யாருக்காவது கதை எழுதும் ஆர்வம் இருந் தால், அவர்களை முடக்கிவிடாதீர்கள். எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல. அது ஒரு வரம்.

தமிழில் க்ரைம் நாவல் எழுதுபவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. உண்மையிலேயே ஒரு சமூகக் கதை, சரித்திரக் கதை எழுதுவதைவிட க்ரைம் கதை எழுதுவதுதான் மிகவும் கடினம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!