அமெரிக்காவில் கர்நாடகப் பாடகி சுதா ரகுநாதனுக்குப் பாராட்டு
இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுதா ரகுநாதனின் திறமை, சேவையைப் பாராட்டி, நியூயார்க்கில், ஜூன் 19ம் தேதி, ‘சுதா ரகுநாதன் தினமாக’ அறிவிக்கப்பட்டது.
பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் இசை கச்சேரிகள் வாயிலாக, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவரது இசை அறிவு, சமூக சேவை உள்ளிட்டவற்றைப் பாராட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார். இன்று 19-6-2022 ‘சுதா ரகுநாதன் தினம்’ என அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை நியூயார்க் மேயர் எரிக் ஆடம் வெளியிட்டார். சுதா ரகுநாதன் குறித்து, நியூயார்க் மேயர் எரிக் ஆடம் பேசினார்.
“தன் இனிய குரல் வளத்தால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சுதா ரகுநாதன், கடல் கடந்து பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் நடத்தும் அறக்கட்டளை வாயிலாகப் பலருக்கு நன்மை கிடைத்துள்ளது. அமெரிக்காவின், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்திய – அமெரிக்கர்களின் பங்களிப்பு முக்கியமானது” என்றார்.
சுதா ரகுநாதன் தினம் ஆவணத்தை, சுதா ரகுநாதனிடம், நியூயார்க் மேயர் அலுவலக வர்த்தகம், முதலீடு மற்றும் புதுமை துறைக்கான துணை கமிஷனர் திலீப் சவுகஹான் வழங்கினார்.
இசைக்கலைஞர் சுதா ரகுநாதன் அவர்கள், அழகான பட்டுடுத்தி தேவதைபோல் மேடையில் அமர்ந்து தெய்வீகப் பாடல்களைப் பாடுகையில் மெய் மறக்காதவர் யாருமில்லை.
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரால் வழங்கப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குச் சொந்தக்காரர். பத்மஸ்ரீ, பத்மபூஷண், கலைமாமணி உள்ளிட்ட பல பெருமைக்குரிய பட்டங்கள் உள்ளிட்ட100க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்ற நட்சத்திரப் பாடகி சுதா ரகுநாதன்.
கலைத் தொண்டு மட்டுமின்றி, சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டவர் சுதா. முதியோர் இல்லங்கள், அரசுப் பள்ளிகள் இங்கெல்லாம் தனது கர்நாடக இசையை இலவசமாகக் கொண்டுசேர்த்தவர்.
மேடைக் கச்சேரிகளின் மூலம் தான் ஈட்டிய பொருளைப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனது சமூகப் பணிகளை 1999ஆம் ஆண்டிலேயே ‘சமுதாயா’ என்ற அறக்கட்டளையின் வாயிலாகத் தொடங்கினார். சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் இருக்கின்ற ஆதரவற்ற குழந்தைகளை குறிப்பாகத் தினமும் பிச்சை எடுப்பதற்கு அடித்துத் துன்புறுத்தப்படுகிற குழந்தைகளை மீட்டெடுத்து, அவர்களின் மறுவாழ்வுக்கான செயல்பாடுகளை இந்த அறக்கட்டளை செய்து கொண்டிருக்கிறது.
இவர் சமீபத்தில் வஸ்திராபரணம் என்ற பெயரில் தனது இணைய வழி விற்பனை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்தத் தளம் வழியே, தன்னிடம் உள்ள காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை விற்று அதில் கிடைக்கும் வருவாயை, அறக்கட்டளைக்கு நிதியாகத் திரட்டும் முடிவை எடுத்துள்ளார். மிகவும் வரவேற்கத்தக்க முடிவு.