ஓம்பிரகாஷ் சௌதாலா கைதும் பின்னணியில் இருந்த ஒரு I.A.S.ம்
நாலு மீட்டர் துணியை வைத்து ஒரு மாநிலத்தின் ஹரியானா முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவை ஜெயிலுக்கு அனுப்பிவைத்த ஒரு IAS பற்றி தெரியுமா? அவர்தான் ரஜ்னி சேக்ரி சிபல் IAS
1999 – 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் பேசிக் டிரெய்னிங் பரிட்சை எழுதி, அதில் வெற்றி பெற்ற 3200 பேரின் ரிசல்ட் கதி இவரின் கை வசம் இருந்தது.
வெளியிடத் தயாராக இருந்தபோது, மேலே இருந்து அழுத்தம், 3200 பேரின் ரிசல்ட்டைமாற்றி முதல்வருக்குச் சாதகமான வேறு பெயர்களைப் போட வேண்டும். ஆனால் ஐ.ஏ.எஸ். ரஜ்னி ஒரே வார்த்தையில் கூறிவிட்டார்கள், ‘இது முடியாது’. விடுவார்களா? உடனே வந்தது டிரான்ஸ்ஃபர் ஆர்டர். அந்த அழுத்தம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.
பின்னர் என்ன செய்தார் தெரியுமா?
ரிசல்ட் இருந்த அலமாரியைப் பூட்டி, அதன் சாவியை ஒரு கவரில் வைத்து அதை சீல் செய்து விட்டார். பின்பு அலமாரியை, கிடைத்த 4 மீட்டர் துணியைக் கொண்டு கட்டி, அந்தத் துணியில் , அங்கே தன்னுடன் வேலை செய்த ஐந்து பேரின் கையெழுத்தை அதன் மீது போடச் செய்தார். இனி அதைத் திறந்து, மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை.
இது பின்பு ஜே.பி.டி. recruitment scam என்று பெரிய விஷயமாக வெடித்து, ஹரியானா முதல்வர், அவரின் பையன் மற்றும் 51 பேர் தற்போது, திகார் ஜெயிலில் களி தின்று கொண்டு இருக்கிறார்கள்.
2000-ம் ஆண்டு 3 ஆயிரம் இளநிலை ஆசிரியர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சௌதாலா, அவரது மகன் அஜய் சௌதாலா மற்றும் 8 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.
சரி இந்த ரஜ்னி சேக்ரி சிபல் யார்?
1986 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடம் பிடித்த முதல் பெண்மணி ரஜ்னி சேக்ரி சிபல். முதலில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக (பேரழிவு மேலாண்மை) நியமிக்கப்பட்டார். அவர் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை கொள்கை உருவாக்கம் மற்றும் நாட்டில் கடுமையான பேரழிவு ஏற்பட்டால் நிவாரணத்தை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பானவர். கேரளா வெள்ளம் மற்றும் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டிட்லி, கஜா, பாபுக் மற்றும் பெத்தாய் புயல்கள் போன்ற பிற பேரிடர் சூழ்நிலைகளின்போது மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை அவர் வெற்றிகரமாக கையாண்டார்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் குஜராத்தில் வறட்சி மற்றும் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மணிப்பூர், திரிபுரா, ஹிமாச்சல பிரதேசம், அசாம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பை வகித்தார் ரஜ்னி.
1986-இன் பேட்ச் இந்திய நிர்வாக சேவைகள் (IAS) அதிகாரியான ரஜினி, மீன்வளத்துறை அமைச்சகத்தின் முதல் செயலாளராகப் பணியாற்றிய பிறகு சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார்.
உளவியல் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டதாரியான ரஜ்னி சேக்ரி சிபல் பிரெஞ்சு மொழியில் டிப்ளமோ பெற்றவர். 53 வயதான இந்த அதிகாரி, குர்கானில் உள்ள ஹரியானா இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலாக இருந்தவர். கடந்த ஆண்டு மத்தியப் பிரதிநிதியாக யூனியன் கால்நடை வளர்ப்புத் துறையில் இணைச் செயலாளராகப் பணியாற்றினார்.
ஓம்பிரகாஷ் சௌதாலாவைப் பற்றி…
ஓம்பிரகாஷ் சவுதாலா கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவராக இருந்து ஹரியானா மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவரின் ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக கடந்த 2005ஆம் ஆண்டு சி.பி.ஐ. இவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி விகாஷ்துல் விசாரித்து வந்தார்.
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என அறிவித்துள்ள நீதிமன்றம், அவருக்கு ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. அத்துடன் அவரின் 4 சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இதனிடையே ஆசிரியர்கள் தேர்வாணைய முறைகேடுகள் தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2017ஆம் ஆண்டு தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்ற அவர், ஹரியானா தேசிய திறந்தநிலை வாரியத்தின் கீழ் 12ஆம் வகுப்புகளில் தேர்வுகளையும் எழுதி இருந்தார். ஆனாலும் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் 87 வயதில் பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி அடைந்த அவர், 12ஆம் வகுப்பு தேர்விலும் வெற்றி பெற்றார்.
அரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ஓம்பிரகாஷ் சௌதாலா அரியானா மாநில முதல்வராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய அரசின் முன்னாள் துணைப் பிரதமரும், அரியானா மாநில முன்னாள் முதல்வருமான தேவிலாலின் மகன்தான் இந்த ஓம்பிரகாஷ் சௌதாலா.
அஜய்சிங் மற்றும் அபய்சிங் ஆகியோர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் மகன்கள். பேரன்களில், துஷ்யந்த்சிங் சௌதாலா 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். திக்விஜய் சௌதாலா என்ற பேரன், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தேசியத் தலைவராக உள்ளார். கரன் சௌதாலா மற்றும் அர்ஜுன் சௌதாலா ஆகிய பேரன்கள் அரியானா அரசியல் களத்தில் உள்ளனர்.