தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் வி.என். ஜானகி நினைவு நாள்
வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி தமிழகத்தின் முதல் தமிழக முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புரட்சித்தலைவர் என்று மக்க ளால் அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி. வி.என் ஜானகி அம்மாள் வரலாற்றை எழுதும்போது முன்னாள் முதல்வர், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரையும் சேர்த்து எழுதாமல் இருக்க முடியாது.
வி.என். ஜானகி கேரள மாநிலம் திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மா விற்கு 1924 செப்டம்பர் 23 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு மணி என்ற நாராயணன் என்னும் தம்பி இருந்தார்.
சூதாட்டம் கேளிக்கை பழக்கங்களால் முன்னோர்கள் சொத்தை எல்லாம் இழந்த னர். அதனால் வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். எனவே ஜானகி தனது 12 ஆவது வயதில், 1936ஆம் ஆண்டில், தன் தாயாருடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார்.
அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் பாபநாசம் சிவனுக்கு தம்பியான இராசகோபலய்யர். சிறிது காலத்திற்குள்ளாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபலய்யருக்கு துணைவி ஆனார்.
1936ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மெட்ராஸ் மெயில்’ திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபலய்யருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத் தினருடன் சென்னைக்குக் குடியேறினார்.அதனால் ஜானகியும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
ஜானகி சென்னைக்கு வந்த பின்னர் திரைப்படங்களில் நடிக்க விரும்பினார். ஆனால் நாராயணி அம்மாளுக்கு அதில் விருப்பம் இல்லை. இருப்பினும் இராச கோபாலய்யரின் ஊக்குவிப்பால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
“அனந்த சயனம்’ திரைப்படத்தை இயக்கிய கே. சுப்பிரமணியம் நடன கலா சேவா என்னும் நாட்டியக் குழுவை அமைத்திருந்தார். இக்குழுவில் 1942 ஆம் ஆண்டில் இணைந்தார் ஜானகி. இக்குழுவில் ஜானகி கே. சுப்பிரமணியத்தின் மனைவியும் நடிகையுமான எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு அடுத்த நிலையில் இருந்தார். அவரோடு இணைந்து நடன கலா சேவா குழுவும் இந்தியா முழுவதும் பயணம் செய்து நாட்டிய நாடகங்களை நடத்தினர். ‘வள்ளி திருமணம்’ நாடகத்தில் ஜானகி முருக னாகவும் சுப்புலட்சுமி வள்ளியாகவும் நடித்தனர்.
‘சகடயோகம்’ என்ற திரைப்படத்தில்தான் முதன்முதலில் கதையின் நாயகியாக முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து சித்ர பகாவலி, தியாகி படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்தன. நடிக்கத் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பின், அவரது 18-வது படத்தில்தான் பிரதான கதாநாயகி வேடம் ஜானகிக்கு கிடைத்தது.
‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’ என்ற திரைப்படம் ஜானகிக்கு பெயரும் புகழும் தேடிக் கொடுத்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், இன்றும் திரைப்பட ரசிகர்களால் பேசப்படும் திரைப்படமாகத் திகழ்கிறது. படத்தின் கதாநாயகன் பி.எஸ்.கோவிந்தன், கதா நாயகி ஜானகி.
ஜானகி திரையுலகில் நுழைந்த சில காலத்திற்குள் நடிகரும் ஒப்பனையாளரு மான கண்பதிபட் என்னும் கன்னடமொழிக்காருக்கு அறிமுகமானார். அதுவே காதலாக மாறி, திருமணமாக முடிந்தது. இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என்னும் ஆண் குழந்தை பிறந்தது. ஜானகி ‘இராஜ முக்தி’ என்கிற திரைப்படத்தில் கதைத் தலைவியாக நடித்தபொழுது, இரண்டாவது கதைத் தலைவனாக எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆருக்கு முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலில் ஜானகி இருந்ததால், எம்.ஜி.ஆருக்கு ஜானகி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பு ‘மோகினி’ படத்தில் சேர்ந்து நடித்த பொழுது இருவரும் நெருங்கிப் பழகினர்.
1950 ஆம் ஆண்டில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் ஜானகியும் எம்.ஜி.ஆரும் காதலிக்கத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆரால் ஜானகிக்கு எழுதப் பட்ட காதற்கடிதங்கள் ஜானகிக்கு முதற்கணவரான கண்பதிபட்டின் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். வந்தாரை வாழ வைக்கும் எம்.ஜி.ஆர். அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலை யில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர்.
ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை எம்.ஜி.ஆர். .தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். இத்திருமணத்தை எம்.ஜி.ஆருக்கு அண்ணனும் நடிகருமான சக்ரபாணியும் குடும்ப நண்பரும் நடிகருமான சி.டி.இராஜகாந்தமும் ஏற்க மறுத் தனர்.
சுமார் 12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் 1962 ஜூன் 14 ஆம் தேதி எம்.ஜி.ஆரும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்ஸ் சாலை வீட்டி லிருந்து கிளம்பி ராமவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.
ஜானகிக்கு அப்பு என்கிற சுரேந்திரனைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. எனவே தன் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா, கீதா, சுதா. ஜானு, தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.
ஜானகி தன் கணவர் எம்.ஜி.ஆர். மும்முரமாக அரசியலில் ஈடுபட்டிருந்த காலங் களில் அதன் நிழல்கூட தன்மீது படாத அளவிற்கு விலகி இருந்தார். எம்.ஜி.ஆர். 1984ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட பின்னர் அவருக்குத் துணையாக அவரோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.
எம்.ஜிஆர் 1987 டிசம்பர் 24 ஆம் தேதி மரணமடைந்த பின்னர் ஜானகி 1988 ஜனவரி 7 ம் தேதி ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். இதனால் தமிழகத் தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்ற வி.என்.ஜானகி. ஆனால் சட்டமன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக் கையை நிரூபிக்க இயலாததால் 1988 ஜனவரி 30 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை இழந்தார். ஆக 23 நாட்களே தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் என்கிற பெருமையும் ஜானகியைச் சாரும்.
ஜானகி அரசியலில் இருந்து விலகி எம்.ஜி.ஆரின் ராமவரம் தோட்டத்தில் தன் மகனோடும் வளர்ப்புப் பிள்ளைகளோடும் வாழ்ந்தார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய காது கேளதாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக் காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், கடந்த 1996 மே மாதம் 19-ம் தேதி தனது 73- வது வயதில் மறைந்தார்.
ஜானகி அம்மாள் நடித்த திரைப்படங்கள்
1937 | இன்பசாகரன் |
1939 | மன்மத விஜயம் |
1940 | கிருஷ்ணன் தூது |
1941 | கச்ச தேவயானி |
மும்மணிகள் | |
1941 | சாவித்திரி |
1942 | அனந்த சயனம் |
1942 | கங்காவதார் |
1943 | தேவ கன்யா |
1944 | ராஜா பர்த்ருஹரி |
1945 | மான சாம்ரட்சனம் |
1946 | பங்கஜவல்லி |
1946 | சகடயோகம் |
1947 | சித்ர பகாவலி |
1947 | தியாகி |
1947 | ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி |
1948 | சந்திர லேகா |
1948 | ராஜ முக்தி |
1948 | மோகினி |
1949 | லைலா மஜ்னு |
1949 | வேலைக்காரி |
1950 | மருதநாட்டு இளவரசி |
1951 | தேவகி |
1953 | நாம் |