தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 20 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 20 | தனுஜா ஜெயராமன்

ல மாதங்களாக தொடர்ந்த மன உளைச்சல் மற்றும் நிகழும் பயங்கரங்கள் என பலநாட்களாக டென்ஷனாக இருந்து, தற்போதைய கோகுலின் மிரட்டலில் பயந்து மயக்கத்துக்குப் போன முகேஷை முகத்தில் நீர் தெளித்து எழுப்பினார் ஏட்டு ஏகாம்பரம்.

அதற்குள் லாக்கப்பில் ஹரிஷிற்கு மாமனார் வீட்டு மரியாதை ஏராளமாய் கிடைக்க… உண்மையை சொல்லத் தொடங்கினான்.

“எனக்கு திருச்சியில் இருந்த போதே அம்ரிதாவை பழக்கம். முகேஷ் வீட்டிற்கு வரப்போக அவளை நிறைய முறை பார்த்திருக்கேன். அப்போதிலிருந்து அவமேல ஒரு சபலம் இருந்துகிட்டிருந்தது. அவள் புருஷன், கொழந்தைன்னு எல்லாமே ஒரு செட்டப்… ஊர் ஊராகப் போய் ஏமாந்தவங்களை வலையில் வீழ்த்தி பணம் பறிக்கிறது தான் அவளோட வேலை. அவன் புருஷன்னு சொன்னவன் அவளோட கூட்டாளி.. ஆரம்பத்துல முகேஷைப் போலவே அவளிடம் சபலபட்டு நான் ஏமாந்தது உண்மை தான். அவன் புருஷனா நடிச்சவன் அவகிட்ட இருந்த பணத்தை பிடுங்கிட்டு அவளை ஏமாத்திட்டு ஓடிட்டான். இது எல்லாத்தையும் அவளைக் கண்காணிச்சி தெரிஞ்சிகிட்ட நான், ஒரு நாள் அவளை மிரட்டி விசாரிக்க… எல்லாத்தையும் அழுதுகிட்டே ஒத்துக்கிட்டா… எனக்கும் அவமேல ஒரு சபலம் இருந்ததால அவளை மன்னிச்சி ஏத்துகிட்டேன். இது பத்தி யார்கிட்டயேயும் சொல்லலை”.

“சென்னையில் அம்ரிதாவுக்கு முகேஷ் பத்தி தெரிஞ்சது எப்படிடா?” என உதைத்தார் கோகுல்

“முகேஷூம் நானும் சின்ன வயசுலயிருந்து ஒண்ணா படிச்சி வளர்ந்தாலும் இயல்பிலேயே எனக்கு அவன்மேல ஒருபொறாமை மனசுக்குள் கழன்றுகிட்டேயிருந்தது. அவன் நல்லா படிச்சி நல்ல வேலை கிடைச்சு சென்னையில் செட்டிலாகிட்டான். எனக்கு படிப்பு, வேலைன்னு எதுவுமே சரியா அமையலை. சும்மாவே திருச்சியில சுத்திகிட்டிருந்த நான் அம்ரிதாவோட வலையில் முழுவதுமா விழ ஆரம்பிச்சிட்டேன். அவ தான் இதுல சுலபமா நிறைய பணம் சம்பாதிக்கலாம்னு ஆசை காட்டினா.. திருச்சியில் ஏமாந்தவங்களை மிரட்டி பணம் சம்பாதிச்சிகிட்டிருந்தோம். ஒரே ஊரில் தொடர்ந்து செய்தா மாட்டிக்குவோம்னு இடத்தை, ஊரை மாத்த ஆரம்பிச்சோம்”.

“அப்படி சென்னைக்கு வந்ததும் ஒரு நாள் என்னோட இருந்த முகேஷை எதேச்சையாக பார்த்த அம்ரிதா… முகேஷை பற்றி என்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். ஆனால் அவன் அம்ரிதாவைக் கவனிக்கலை. நாங்க அப்ப தான் முகேஷை மிரட்டி பணம் பறிக்க திட்டம் போட்டோம்.. ”

“முகேஷின் வசதி வாய்ப்பு பத்தி எனக்கு நல்லா தெரிஞ்சதால அவனை அவ்வ்போது கண்காணிச்சி அம்ரிதாவிற்கு தகவல் தருவேன்.. அவ அவன்கிட்ட மிரட்டி காசு கேட்டா…ஆனா…”

“என்னடா ஆனா!… ஒழுங்கா சொல்லுடா எல்லாத்தையும்…” என கழுத்தில் அடியை இடியாக இறக்கினார் கோகுல். “…ஸ்..ஸ்… அம்மா…” என அலறியவன் தொடர்ந்தான்.

“ஆனா!… முகேஷ் உதவி கேட்டு என்கிட்டயே வந்தது நானே எதிர்பார்க்காத டிவிஸ்ட்”

“நான் உதவலன்னா அவன் வேற யார்கிட்டயேயும் போயிடுவான்.. அவனோட அடுத்தகட்ட நடவடிக்கை நமக்கு தெரியாதுன்னு அம்ரிதா சொன்னதால நானே உதவுகிற மாதிரி நடிச்சேன்”..

“என் ப்ரண்ட் அசோக்கிட்ட அறிமுகபடுத்தி முகேஷின் நம்பிக்கையை எப்படியோ பெற்றுவிட்டேன். எப்படியும் டிஎன்ஏ ரிப்போர்ட் வந்தா முகேஷ் இன்னமும் பயந்துடுவான்… போலிஸ்க்கு போகமாட்டான்.. பணம் பறிக்க ஈஸியாயிருக்கும்னு கணக்கு போட்டேன்”.

“ஆனா!….டிஎன்ஏ ரிப்போர்ட் நான் எதிர்பார்க்காத டிவிஸ்ட். அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்குற நேரத்துல அம்ரிதா என்கிட்டயே டபுள்கேம் ஆட ஆரம்பிச்சா… அன்னைக்கு முகேஷோட ப்ரண்ட் பார்ட்டியில் இருக்கும்போது அம்ரிதா மேலே யார்கூடவோ பேசிகிட்டிருந்ததா முகேஷ் சொன்னான். நாங்க அவளை அன்னைக்கு மிஸ் பண்ணிட்டாதா முகேஷை நம்ப வைச்சேன். முகேஷை அனுப்பிட்டு அம்ரிதாவை பின்தொடர்ந்து போனேன். அப்ப தான் தெரிஞ்சது அவன் அம்ரிதாவோட புது பார்ட்னர்னு. அம்ரிதா அவ தொழில் செய்யுற ஊரையும் ஆளையும் அடிக்கடி மாத்துறா மாதிரி பார்ட்னரையும் அடிக்கடி மாத்துவாங்குறதை தெரிஞ்சிகிட்டேன். அவகிட்ட கேட்டதுக்கு என்கிட்ட மழுப்பினா.. இது சம்பந்தமா அடிக்கடி எங்களுக்குள்ள சண்டை வரும்.

கொலை நடந்த அன்னைக்கு எனக்கு சேரவேண்டிய பணத்தை கேட்டு சண்டை போட்டேன். அவ ரொம்ப நாளாவே சரியா பணத்தை தராம ஏமாத்திகிட்டிருந்தா.. அவ புதுபாட்னரைப் பத்தி கேட்டதுக்கும் சரியான பதிலில்லை. சண்டை முத்தி கோபத்துல ஆத்திரத்துல அவளை கொன்னுட்டேன் சார்… ப்ளான் பண்ணியெல்லாம் பண்ணலை சார்..” எனக் கதறினான் ஹரிஷ்.

“ஏண்டா!…ப்ளாக்மெயில் பண்றது பணம் பிடுங்குறது மிரட்டுறதெல்லாம் உங்களுக்கு தப்பாவே தெரியலையா? சாதாரணமாக போச்சாடா”…என நாலு மிதிமிதித்தார் கோகுல்.

“ஏண்டா!… உன்னை எவ்வளவு நம்புனேன். கடைசியில இப்படி துரோகம் பண்ணிட்டயே… கூட இருந்தே குழிபறிச்சிட்டயே. ச்சீ.. நீயெல்லாம் ஒரு ப்ரண்டா”… என ஹரிஷை பார்த்து கத்தினான் முகேஷ்.

முகேஷின் கண்களை நேருக்கு நேர் சந்திக்காமல் தலைகுனிந்திருந்தான் ஹரிஷ்.

“சீக்கிரம் கிளம்புங்க!.. மணியாச்சு.. எவ்வளவு நேரம்?…” என அவசரபடுத்தினார் வேதமூர்த்தி.

சுதாவும், தனலட்சுமியும் பட்டுபுடவை சரசரக்க நிதானமாக காரில் ஏற…

“பரவாயில்லை விடுங்கப்பா!”… என அம்மாவிற்கும் மனைவிக்கும் வரிந்து கட்டி பரிந்து பேசினான் முகேஷ். கைகளால் ஸ்டியரிங்கை தாளமிட்டபடி அமர்ந்திருந்திருந்தான். அருகிலிருந்த சுதா தனது கணவனை பார்த்து சிரித்து வைக்க…

பின்சீட்டில் வேதமூர்த்தியும் தனலட்சுமியும் பேத்தி தியாவோடு அமர்ந்திருந்தனர்.

“தாத்தா!.… எங்க போறோம்?..” என தியா மழலைகுரலில் கேட்க…

“நம்ம குலதெய்வம் பச்சையம்மாளை பார்க்க இந்த பச்சையம்மாளோடு போகிறோம்…” என பேத்தியின் பட்டுக் கன்னத்தை செல்லமாக கிள்ளினார் வேதமூர்த்தி.

கார் காஞ்சிபுரம் கிளைசாலையில் பிரிந்து பச்சையம்மன் ஆலய வளாகத்தில் நுழைந்தது.

இவர்களை பார்த்ததும் “வாங்கோ வாங்கோ” என ஐயர் புன்னைகைக்க… அர்ச்சனைத் தட்டை ஐயரிடம் தந்தார் வேதமூர்த்தி.

“முகேஷ் & சுதா, தியா பேருக்கு தானே”… என ஐயர் கேட்க..

“இல்லை இந்த முறை சாமி பேருக்கே பண்ணிடுங்க”.. என சிரித்தார் வேதமூர்த்தி.

பச்சை பட்டு புடவையில் அலங்கார பூஷிதையாக வீற்றிருந்த பச்சையம்மன் பெயரில் அர்ச்சனை நடைபெற, குடும்பமாய் கையெடுத்து கும்பிட்டனர்.

சுதாவும் முகேஷூம் கோவிலை சுற்றிவரக் கிளம்ப…

ப்ரகாரத்தில் ஓடி விளையாடி கொண்டிருந்த பேத்தியின் ஒட்டத்திற்கு ஈடுதரமுடியாமல் திணறி கொண்டிருந்தாள் தனலட்சுமி.

“என்ன வேதமூர்த்தி சார்.. எல்லாம் சுமுகமா போகுதா?”… என ஐயர் கேட்க..

“இந்த பச்சையம்மன் தயவில ஒரு குறையுமில்லை” என கையெடுத்து கும்பிட்டார் வேதமூர்த்தி.

“ஏங்க!… உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?” என தயங்கினாள் சுதா..

கோவிலை வலம்வந்து கொண்டிருந்த முகேஷ்… சடாரென நின்று பயத்துடன் திரும்பிப் பார்த்தான் சுதாவை… ‘என்ன கேட்கப் போகிறாளோ? என்ன சொல்வது எப்படி சொல்வது’ என தயக்கம் மனதை பிசைந்தது..

“ஏங்க!… நீங்க பயப்படுற அளவு அப்படி என்ன கேட்க போகிறேன்… ஏன் இப்படி வேர்த்து வழியுது…” என புடவைத் தலைப்பால் அவன் முகத்தை ஆதுரமாக துடைத்தவள்… “உங்களுக்கு பொண்ணு வேணுமா? பையன் வேணுமா?” எனச் சிரித்தாள். புரியாமல் பார்த்தவனை…

‘இரண்டு மாதம்…’ என சைகைகாட்டியவளை அன்புடன் அணைத்துக் கொண்டான் முகேஷ். உள்ளே பச்சையம்மன் புன்னகையுடனும் பொன்னகையுடனும் கம்பீரமாக வீற்றிருந்தாள்.

–நிறைந்தது–

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...