தலம்தோறும் தலைவன் | 3 | ஜி.ஏ.பிரபா
3.காஞ்சிபுரம்ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டு கொண்டாய்
கன்றால் விளைவு எறிந்தான் பிரமன் காண்பு அரிய
குன்றாத சீர்த் தில்லை அம்பலவன் குணம் பரவித்
குன்று ஆர் குழலினீர் தோள் நோக்கம் ஆடாமோ
திருவாசகம்
மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது.
கரையை முட்டி மோதும் அலைகள் போல் ஆசைகள் மனதை அமைதியாக இருக்க விடாமல் அசைத்துக் கொண்டே இருக்கிறது. அது உள்ளிருக்கும் ஆத்மாவை இறைவனுடன் ஒன்ற விடாமல் உலகாயுத விஷயங்களில் சிக்க வைத்து, நம்மை மேலும், மேலும் கர்ம வினைகளில் சிக்க வைக்கிறது.
ஆசைக்கடலில் அகப்பட்டு அந்தகன் கை பாசக் கயிற்றில் அல்லல்பட வைக்கிறது. அந்த இருட்குழிக்குள் விழுந்து கண் ஒளி இன்றி தவிக்கும் நம்மைக் காக்கவே ஈசன் வெவ்வேறு தலங்களில் அபாரக் கருணையுடன் காட்சி தருகிறார். ஐயனையே நினைந்து உருகும் அடியார்களின் வினை தீர்க்கவே இறைவன் ஓடோடி வருகிறார்.
“படைக்கலமாக உன் நாமத் தெழுத்தஞ்சென நாவிற் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்காட் செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூநீறணிந்துன்
அடைக்கலம் கண்டாய் அணி தில்லைச் சிற்றம்பலத்தானே”
எனத் துதிக்கிறார்கள் அடியார்கள்.
சிவாய நம ஓம் என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் என்றும் இல்லை என்கிறது வேதம். ஈசன் இருக்கும் தலங்கள் எல்லாம் அருள் நிறைந்த இடங்களே என்றாலும் அம்பிகையுடன், அன்னைக்காக ஈசன் வரும் இடங்கள் மிகவும் சக்தி வாய்ந்த தலங்களாக இருக்கிறது. தேவியின் கரங்களால் நிறுவப் பட்ட ஈசனின் உருவம் எல்லையற்ற ஆகர்ஷண சக்தியுடன் விளங்குகிறது.
பஞ்சபூதத் தலங்கள் என்று போற்றப்படும் இடங்கள், திருவண்ணாமலை, காளஹஸ்தி, திருவானைக்காவல், சிதம்பரம், காஞ்சிபுரம். இதில் காஞ்சி பிருத்வி தலம். இங்கு ஈசன் மண்ணால் ஆனவர். சுயம்பு லிங்கம். எனவே இவருக்கு அபிஷேகம் இல்லை. அம்பிகை தன் கையில் பிடித்து பூஜை செய்த மண் லிங்கம்.
தொண்டை நாட்டு சிவத்தலங்களில் முதலாவதாக இருப்பது காஞ்சிபுரம். நகரேஷு காஞ்சி என்று மகாகவி காளிதாசனால் பாடப் பெற்றது. கோவில் நகரம் என்று புகழப்படுகிறது. பல்லவர்களால் கட்டப்பட்ட இக்கோயில் சிற்பக் கலையின் அழகுக்கு ஒரு சிறந்த உதாரணம். இந்த ஆலயத்திற்குள்ளேயே நூற்று எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத் துண்ட பெருமாள் சன்னதி அமைந்திருக்கிறது.
ஒருமுறை திருக்கயிலாயத்தில் இறைவன் யோகத்தில் இருக்கும்போது பார்வதி தேவி விளையாட்டாக அவர் கண்களை மூட உலகம் இருண்டது. ஈசன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகின் இருள் அகற்றினார். விளையாட்டுதான் என்றாலும் அன்னையின் செய்கையினால் ஜீவராசிகளுக்குச் சிரமம் ஏற்பட்டது. இதற்குப் பிராயசித்தமாக அம்பிகையை பூலோகம் சென்று தன்னை நோக்கித் தவம் செய்யும்படிக் கூறுகிறார் இறைவன்.
இங்கு வந்த அன்னை கம்பா நதிக்கரையில், மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கி பூஜை செய்து வந்தார். பார்வதியின் த்வப்பெருமையை உலகுக்கு உணர்த்த கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வரச் செய்கிறார் ஈசன். லிங்கம் கரைந்து விடுமோ என்ற பயத்தில் அன்னை மணல் லிங்கத்தை தழுவிக் கொள்கிறார்.
அம்பிகையின் வலைத் தழும்பையும்,மார்பின் சுவடுகளையும் ஏற்று குழைகிறார். எனவே இறைவன் தழுவக் குழைந்த நாதர் என்று அழைக்கப்படுகிறார். இதனைச் சுந்தரர்…
எள்கல் இன்றி இமையவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருண்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே.”
என்று பாடுகிறார்.
மாமரத்தின் அடியில் அம்பிகைக்கு காட்சி கொடுத்த இறைவன் அன்னையைத் திருமணம் செய்து கொண்டு அங்கிருந்து முப்பத்திரண்டு அறங்களைச் செய்யப் பணித்தார். அம்பிகையும் காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறாள். வேதமே நான்கு கிளைகளாக மாமரமாக இங்கு இருக்கிறது. இதன் வயது மூவாயிரத்து ஆறுநூறு ஆண்டுகளுக்கு மேல் என்று புவியியல் வல்லுனர்கள் நிர்ணயித்துள்ளார்கள்.
இங்கு பிரம்மா, விஷ்ணு, ருத்திரர் என்று மூவரும் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. சுவாமி சன்னதி கோடி மரத்தின் முன் கச்சி மயானம் என்னும் ஒரு தேவார வைப்புத் தலமும் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், தொண்டை நாடு தலத்தில் முதல் தலமாகும். 192 அடி உயரம், 9 அடுக்குகள், 11 கலசங்கள், 4 பெரிய பிரகாரங்கள் கொண்ட பிரம்மாண்டமாக கம்பீரமாக நிற்கிறது கோயில் ராஜகோபுரம், கி.பி.1509 ல் கிருஷ்ண தேவராயரால் நிறுவப் பட்ட ராஜகோபுரமாகும். பல்லவர்களால் பட்ட இக்கோயில் பின்னர் சோழர்களால், புனரமைக்கப் பட்டது. இங்குள்ள சிற்பங்கள் கலை அழகுக்கு ஒரு சான்று.
ஆயிரங்கால் மண்டபம், அதில் உள்ள சிற்பங்கள், பல்லவ கோபுரம், உள்ளே உள்ள விகட சக்கர விநாயகர் சன்னதியும் பார்க்க வேண்டிய ஒன்று. சுந்தர மூர்த்தி நாயனார் தன் இடது கண் பார்வையை இங்குதான் அடைந்தார்.
சுந்தரர் திருவாரூரில் பரவை நாச்சியாரை முதல் திருமணம் செய்தார். திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை ‘உன்னைப் பிரியேன்’ என்று மகிழ மரத்தின் அடியில் சத்தியம் செய்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் திருவாரூர் ஈசனை தரிசனம் செய்ய விரும்பி, சத்தியத்தை மீறிச் சென்றதால் கண் பார்வையை இழந்தார்.
பார்வையில்லாத நிலையில் இருந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்று கோலும், இத்தலத்தில் இடது கண் பார்வையும் கொடுத்தார் ஈசன். எனவே இங்கு ஈசனை வேண்டிக் கொண்டால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளை காத்து அருள்வார்.
தை மாதம் ரத சப்தமி அன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. அன்று ஈசனை தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்குகிறது என்பது ஐதீகம். மாமரத்தின் அடியில் ஈசன், அம்பாளுடன்அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அம்பாள் நாணத்துடன் தலை குனிந்தபடி, சிவபெருமானை நோக்கியபடி திரும்பி இருக்கிறார். இது இறைவனின் திருமணக் கோலம் என்கிறார்கள்.
மாமரத்தின் கீழ் காட்சி அளித்ததால் அதே பெயரில் “ஏகாம்பரேஸ்வரர்” என்று அழைக்கப் படுகிறார். இந்த மரம் நால்வகைச் சுவையுள்ள கனிகளைத் தருகிறது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் மாணிக்கவாசகர் என்று நால்வராலும் பாடப்பட்ட தலம். சகல விதமான பிரார்த்தனைகளும் சித்தி அடையும் இடம் காஞ்சிபுரம்.
பங்குனி உத்திரப் பெருவிழா 13 நாட்கள் நடைபெறும். வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேவை, தங்க ரிஷபம் இங்கு மிகவும் சிறப்பு. அம்பாளுக்குப் புடவை, இறைவனுக்கு வேஷ்டி அணிவித்து, அபிஷேக ஆராதனைகளும், அன்னதானமும் பிரார்த்தனையாக நிறைவேற்றப்படுகிறது.
பண்டைக் காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய இந்நகரில் இறைவன் விரும்பி உறைகிறார். பல பக்திரசம் ததும்பும் பாடல்கள் இறைவன் மேல் பாடியிருக்கிறார்கள். இசை மும்மூர்த்திகளான சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர், தியாகராஜர் போன்றோரும் புகழ்ந்து பாடப்பட்ட தலம் காஞ்சிபுரம்.
சுந்தரர் பாடிய “ஆலம்தான் உகந்து அமுது செய்தானை’ என்ற பாடலை தினந்தோறும், பாராயணம் செய்வதன் மூலம் கண் கோளாறுகள் நீங்கும். இங்குள்ள சபா நாதர் மண்டபத்துக்கு எதிரில் உள்ள தூணில் சனகாதி முனிவர்கள் கீழே அமர்ந்திருக்க, அன்னை இறைவனுக்கு போட்டு இடுவது போல் உள்ள சிரபத்தைக் கண்டு வழிபட்டால், தம்பதிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் சேர்வார்கள்.
தன்னை ஏகாம்பர நாதன் என்று அழைப்பதையே இறைவன் விரும்புகிறார். இப்பெயர் சொல்லி அவரை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்கிறார்கள்.
கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைகே கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை அரவாடச் சடைதாழ
அங்கையினில் அனலேந்தி இரவாடும் பெருமானை
என் மனத்தே வைத்தேனே”– என்கிறது நான்காம் திருமுறை.
இங்குள்ள இறைவனை வேண்டி, சுந்தரர் பாடிய பதிகத்தைப் படித்தால் இழந்த கண் பார்வையையே பெற முடியும் என்று அருளி இருக்கிறார் காஞ்சி மகான்.
“பெற்றம் ஏறுகந் தேற வல்லானைப் பெரிய எம்பெருமான் என்றெப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக் காணக் கண் அடியேன் பெற்றதென்று
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக் குளிர்பொழில் நாவல் ஆரூரான்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார் நன்னெறி உலகேய்துவர் தாமே”
என்று சுந்தரர் பாடுவது போல் ஈசனை மனதார வேண்டினால் அவர்கள் விரும்புவன எல்லாம் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
1 Comment
காஞ்சி ஏகாம்பர நாதர் கோயிலைப்பற்றிய செய்திகள் பிரமிக்க வைத்தன. அருமை!