சுதந்திரப் போராட்ட வீராங்கனை, பெண் பகத் சிங் பினா தாஸ்
நம் நாட்டுக்காகப் பாடுபட்ட ஒரு பினா தாஸ் பற்றி ஆராய ‘Women’s history month’ பற்றி ஆராய்ந்து படிக்க நேர்ந்தது. அசந்து போனேன். என்ன ஒரு தைரியசாலி! பெண் பகத் சிங் என்று சொல்லலாம்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் கடைசி காலத்தில் கணவருடன் ரிஷிகேஷில் வாழ்ந்து வந்தார். 1986 டிசம்பர் 26ஆம் தேதி ரிஷிகேஷில் இவரின் அழுகிய உடல் ஒரு சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடலை அடையாளம் காண ஒரு மாதம் ஆனது. இது பினா தாஸ் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் என்று கண்டெடுக் கப்பட்டது. யார் இந்த பினா தாஸ்?
பினா தாஸ் (1911-1986) வங்காளத்தைச் சேர்ந்த பெண் புரட்சியாளர். பிரம்ம சமாஜ ஆசிரியரான பெனி மாதாப் தாஸ் மற்றும் சமூக சேவகரான சரளாதேவி ஆகி யோரின் மகளாவார். இவரது அக்காள் கல்யாணி தாஸும் ஒரு விடுதலைப் போராட்ட வீராங்கனைதான்.
பினா தாஸ் கொல்கத்தாவில் உள்ள பெண்களுக்கான புரட்சிகர அமைப்பான சத்ரி சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். இவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து, 1932ஆம் வருடம் பிப்ரவரி 6 ஆம் தேதி தன் ஸ்கர்ட்டுக்குள் மறைத்து வைத் திருந்த 5 குண்டுகள் அடங்கிய துப்பாக்கியுடன் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வங்காள ஆளுநர் ஸ்டான்லி ஜாக்சனை கொலை செய்ய திட்டம்போட்டு கான்வகேசன் ஹாலில் நுழைந்து உள்ளே வருகிறார்.
பொறுமையாக, கவர்னர் இருக்கும் இடத்தை நோக்கி முன்னேறி வந்து, இரண்டு முறை சுடுகிறார். ஆனால் குண்டு அவர் மேல் பாயவில்லை. கவர்னரை பாது காவலர்கள் மறைத்துக்கொள்ள, இவரை எல்லாரும் சூழ்ந்து பிடிக்க, மீண்டும் மூன்று முறை சுட, மறுபடியும் கவர்னர் தப்பிவிட, இவரைப் பிடித்துவிடுகிறார் கள்.
இந்தக் குற்றத்துக்காக இவருக்கு ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பிற்காக கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன் நின்றிருந்தாலும், கடவுளின் தீர்ப்புக்காகத்தான் பினா உண்மையிலேயே காத்திருந்தார். அவரது மத நம்பிக் கைகள் மற்றும் ஒழுக்கநெறிகள் அரசியல் சுதந்திரத்திற்கான அவரது விருப்பத் துடன் பிணைக்கப்பட்டிருந்தன. பல கொடுமை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கு, கிறிஸ்தவ கொள்கைகளைக் கொண்ட பிரிட்டிஷ் அமைப்பு பின்பற்றவில்லை என்று அவர் மனக்கசப்புடன் குறிப்பிட்டார். அரசியல் சுதந்திரம் இல்லாததால் பினா மிகவும் பாதிப்புக்குள்ளானார். நாட்டின் விடுதலைப் போராட் டத்திற்குப் பங்களிப்பதற்காகத் தனது உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தார்.
தனது அறிக்கையில், பினா ஒரு நபராக ஆளுநரான ஸ்டான்லி ஜாக்சனுக்கும் தனக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான வேறுபாட்டைக் காட்டினார். அவரது வெறுப்பு ஒருபோதும் தனிப்பட்டதல்ல. மேடையில் வங்காள ஆளுநர் பதவியை வகித்த எந்தவொரு நபர் மீதும் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பார் என்று அவர் கூறினார். அவரது நடவடிக்கை பிரிட்டிஷ் காலனித்துவ முறைக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக இருந்தது. “இது எனது நாட்டு மக்களையும், நாட் டுப் பெண்களையும் 300 மில்லியன் அடிமைகளாக வைத்திருக்கிறது” என்றார்.
விடுதலைக்குப் பிறகு 1939 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தாஸ் காங்கிரசு கட்சியில் இணைந்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு, 1942 முதல் 45 வரை மீண்டும் சிறையில் இருந்தார். 1946-47 வரை, வங்காள மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், 1947-51இல் மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 1947ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்க செயற்பாடாடாளரான, யுகாந்தர் அமைபில் இருந்த ஜதீஷ் சந்திர பவுமிக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
பினா தனது ஒன்பது ஆண்டுகள் தண்டனைக்குப் பின்னர், 1947 இல் சுதந்திரம் பெறும் வரை தனது செயல்பாட்டைத் தொடர்ந்தார். 1960 இல், இவரது சமூகப் பணிகளைப் பாராட்டி பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது.
சுதந்திரப் போராட்ட வீரரான தன் கணவரின் மரணத்திற்குப் பிறகு, அவர் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற்று ரிஷிகேஷல் வாழ்ந்தார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அரசாங்கம் வழங்கிய ஓய்வூதியக் கட்டணத்தையும் கூட மறுத்து அவர் தனது வாழ்க்கையைக் கழித்தார்.
1986 டிசம்பர் 26ஆம் தேதி ரிஷிகேஷில் இவரின் அழுகிய உடல் ஒரு சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடலை அடையாளம் காண ஒரு மாதம் ஆனது. இது பினா தாஸ் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் என்று கண்டெடுக்கப்பட்டதும் நாடே சோகத்தில் மூழ்கியது.
பினா தாஸ் வங்காள மொழியில் இரண்டு சுயசரிதை படைப்புகளை எழுதியுள் ளார் அவை: ஸ்ரீநிகல் ஜங்கர் மற்றும் பிட்ரிதன்.
பினா தாஸ் நினைவுக் குறிப்பை மொழிபெயர்த்து, ஜுபான் புக்ஸ் வெளியிட்டது. இது தவிர, அவரது சகோதரிகல்யாணி, 1944 இல் ‘பெங்கால் ஸ்பீக்ஸ்’ என்ற புத்தகத்தைத் திருத்தி பினாவுக்காக அர்ப்பணித்தார்.