கோமேதகக் கோட்டை | 4 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
மன்னருக்கு வித்யாதரனை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு! ஆனாலும் அவனது அறிவுக் கூர்மையைச் சோதிக்கணும்னு நினைச்சாரு. அதனாலதான் அவனுக்கு மூன்று போட்டியை வைச்சாரு.
வித்யாதரனும் போட்டிக்குத் தயாராவே இருந்தான். கொஞ்சம் கூட்த் தயங்காம, “என்ன போட்டி சொல்லுங்க மஹராஜா! இந்த போட்டியில் ஜெயிச்சு காட்டி என் திறமையை நிரூபிக்கிறேன்”னு சவால் கொடுத்தான்.
வித்யாதரனின் ஆர்வமும் அறிவும் மன்னரின் மனசுக்குள் ஒர் நம்பிக்கையை ஏற்படுத்திருச்சு! “நம்ம பொண்ணை ராட்சசன் கிட்டே இருந்து மீட்டு வர இவந்தான் சரியான ஆளு!”ன்னு மனசுக்குள்ளே சொல்லிகிட்டாலும் கெத்தை விடாம, “வித்யாதரா இது நான் உனக்கு வைக்கும் அறிவுப் போட்டி! விக்கிரமாதித்த மஹாராஜா கூட இந்த போட்டியிலே ஜெயிக்க முடியாம தோத்துப் போயிட்டாரு. இதுலே நீ ஜெயிச்சிட்டேன்னா உன் புத்தி கூர்மையை நான் பாராட்டுவேன். இப்ப நான் ஒரு புதிர்க் கதை சொல்லப் போறேன்! அதுலே உள்ள புதிரை நீ விடுவிக்கணும்”ன்னு சொன்னாரு.
வித்யாதரனும், “சொல்லுங்க மஹராஜா”ன்னு கதையைக் கேட்க ஆர்வமானான். மன்னர் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
முன்னொரு காலத்தில் புரந்தரபுரி என்றொரு நகரம் இருந்தது. அங்கே மிகப்பெரிய வசதி படைத்த செல்வந்தனான வியாபாரி ஒருவர் வசித்துவந்தார். அவருக்கு நான்கு மகன்கள். அவர் முதுமை எய்தி இறக்கும் தருவாயில் தன் மகன்களை அழைத்து, “மைந்தர்களே! என்னுடைய மரணத்திற்கு பின் உங்களுக்குள் சச்சரவு வரக்கூடாது. என்னுடைய சொத்துக்களை நீங்கள் பாகம் பிரித்துக் கொள்ள ஏதுவாக நான்கு பாகங்களாகப் பிரித்து என்னுடைய கட்டிலின் கீழே நான்கு அடி ஆழத்தில் நான்கு கால்களின் அடியில் புதைத்து வைத்து உள்ளேன். பெரியவனிலிருந்து சிறியவன் வரை முறைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார்.
சிலநாட்களில் வியாபாரி இறந்துவிட்டார். அவர் சொல்லியபடி கட்டிலின் அடியில் தோண்டியபோது நான்கு கால்களின் அடியிலும் நான்கு செப்புக் குடங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த குடங்களில் பொன்னோ நகையோ வைர வைடூரியங்களோ எதுவும் இல்லை. முதல் குடத்தில் மண்ணும் இரண்டாவதில் வைக்கோலும் மூன்றாவதில் எலும்புத்துண்டுகளும் நான்காவதில் கரியும் இருந்தன.
இதை வைத்துக் கொண்டு எப்படி பாகம் பிரிப்பது என்று அவர்களுக்குப் புரியவில்லை. எனவே பஞ்சாயத்தார் வசம் சென்று பிரித்துத் தரும்படி கூறினர். அவர்களுக்கும் இதை எப்படி பாகம் பிரிப்பது என்று புரியவில்லை! எனவே விக்கிரமாதித்த மன்னனிடம் அனுப்பினர்.
விக்கிரமாதித்தனுக்கும் அவனது சபையில் இருந்தோருக்கும் கூட இந்த வழக்கின் தீர்ப்பை சொல்ல முடியவில்லை! கரி, மண், வைக்கோல், எலும்புத்துண்டுகள் இதை எப்படி பாகம் பிரிப்பது என்று அறிஞர்களும் கைவிரித்துவிட நான்கு சகோதரர்களும் மிகவும் விசனத்துடன் ஊர் திரும்பினர்.
அவர்கள் திரும்பி வரும் வழியில் பிரதிஷ்டானம் என்ற ஊரில் தங்கினார்கள். அங்கே ஏழை மண்பாண்டத்தொழிலாளி ஒருவனுடைய வீட்டில் சாலிவாகனன் என்பவன் இருந்தான். அவன் சிறந்த அறிவாளி. அவனிடம் தங்கள் வழக்கைக் கூறினர் நால்வரும்.
அவன், “உங்கள் தந்தை செலவந்தர் மட்டுமல்ல! அறிவாளியும் கூட. அதனால்தான் இவ்வாறு பிரித்து வைத்துவிட்டு போய் உள்ளார். தன்னுடைய சொத்துக்களை உங்கள் நால்வருக்கும் அவரவருக்கு தகுந்தவாறு பிரித்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.” என்று கூறி நால்வருக்கும் அந்த வியாபாரியின் சொத்தைப் பிரித்துக் கொடுத்தான். அந்த பிரிவினையில் யாருக்கும் வருத்தமில்லை! அனைவரும் மகிழ்ச்சியுடன் அந்தச் சொத்துக்களை எடுத்துக் கொண்டு சாலிவாகனனை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
சாலிவாகனன் எவ்வாறு அந்த சொத்துகளை பிரித்துக் கொடுத்தான். அந்த வியாபாரி குறிப்பால் உணர்த்தியது எதை? இதைத்தான் நீ விடுவிக்க வேண்டும்.” என்றார் மன்னர் விஜயேந்திரன்.
கதை முழுவதையும் கேட்ட வித்யாதரன் சிறிது நேரம் யோசித்தான். பின்னர், “மன்னர் பெருமானே, எனக்கு விடை தெரிந்துவிட்டது” என்றான்.
“அப்படியா..? எப்படி அந்த வியாபாரி வைத்துவிட்டுச் சென்ற சொத்துக்களைப் பிரிப்பாய்..?” என்று கேட்டார்.
“மன்னா! அந்த வியாபாரி கட்டில் அடியில் விட்டுச்சென்றது என்ன?நான்கு செப்புக்குடங்கள்! அந்த குடங்களில் ஒன்றில் மண்ணும் இன்னொன்றில் வைக்கோலும் அடுத்ததில் எலும்புத்துண்டங்களும் கடைசி குடத்தில் கரித்துண்டுகளும் இருந்தன. இதை எப்படி நால்வரும் எடுத்துக் கொள்வது? இதுதான் கேள்வி.
மன்னா! வயதில் மூத்தவன் மண் நிறைந்த குடத்தையும், இரண்டாமவன் வைக்கோல் இருந்த குடத்தையும், மூன்றாமவன் எலும்புத் துண்டுகள் இருந்த குடத்தையும், கடைசிநபர் கரித்துண்டுகள் நிறைந்த குடத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.”
“சரி அப்படி எடுத்துக் கொள்வதால் அவர்கள் அடையும் பலன் தான் என்ன? வெறும் மண்ணும் கரித்துண்டுகளும் வைக்கோலும் எலும்பும் அவர்களை திருப்திப்படுத்தி விடுமா?”
“அப்படியில்லை மன்னா…”
“எப்படி இல்லை? விளக்கமாகச் சொல்லு..!”
“வியாபாரி ஒவ்வொரு குடத்திலும் ஒரு பொருளை குறிப்பால் உணர்த்தியுள்ளார். அதன் பொருள் என்னவென்றால், மண் என்பது நிலத்தையும், வைக்கோல் என்பது தானியத்தையும், எலும்புத்துண்டுகள் கால்நடைகளையும், கரி என்பது தங்கள் வெள்ளி வைரங்களையும் குறிக்கிறது.” என்றான்.
“அப்படியானால்..?”
“மூத்தமகன் வியாபாரியின் நிலங்களையும், இரண்டாவது மகன் அவர் சேமித்து வைத்துச்சென்ற தானியங்களையும், மூன்றாவது மகன் கால்நடைகளையும், நான்காவது மகன் தங்க வைர நகைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.” என்றான். “அவை ஒவ்வொன்றும் சமமாகவே இருக்கும். எனவே அவர்களுக்குள் வேற்றுமை வராது மகிழ்ச்சியே நிறைந்திருக்கும்” என்றான் வித்யாதரன்.
அரசரின் முகத்தில் புன்னகை மிளிர்ந்தது. “சபாஷ்! விக்கிரமாதித்த மஹராஜாவினால் கூட விடுவிக்க முடியாத இந்த புதிரைச் சில நிமிடங்களில் விடுவித்துவிட்டாய். நீயும் வருங்காலத்தில் சாலிவாகன மஹாராஜாவைப் போல் புகழ் பெறுவாய்! வாழ்த்துகள்!” என்றார்.
“மஹராஜா! தங்கள் வார்த்தைகள் என்னைக் கூச்சத்தில் ஆழ்த்துகிறது! விக்கிரமாதித்தன், சாலிவாகனன் போன்றவர்கள் பெரும் சக்ரவர்த்திகள்! நானோ சிறு பையன். இன்னும் அவர்களைப் போல வளர பல படிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. என் சிற்றறிவுக்குப் புலப்பட்டதைக் கூறினேன். அது சரியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களது அடுத்த போட்டி என்ன? அதைச் சொன்னால் வெற்றிபெற காத்திருக்கிறேன்” என்றான்.
“வித்யாதரா உன் புத்திக் கூர்மையை சோதித்தேன். சமயோசித அறிவும் போர்க்கலையில் மிகவும் முக்கியமானது. அந்த சமயோசித புத்தி பெரும் வீரர்களைக் கூட எளிதாக வீழ்த்தி சாமானியனை வெற்றிபெற வைத்திருக்கிறது. அந்த புத்தி உன்னிடம் இருக்கிறதா என்று சோதிக்கப் போகிறேன்.” என்றார் மன்னர் விஜயேந்திரன்.
“சோதனைக்குத் தயாராக இருக்கிறேன் மன்னா!” என்றான் வித்யாதரன்.
மன்னர் அடுத்து என்ன சோதனை வைத்தார்?
2 Comments
அம்புலிமாமாவில் வேதாளம் சொல்லும் கதை படித்த ஒரு ஃபீல் இருந்தது.
இந்த இதழில் உள்ள கதையும் கதைக்குப் பின்னால் உள்ள தத்துவங்களும் அருமை.
அடுத்த அத்தியாயத்தில் அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
வாழ்க வளமுடன்
ஜூனியர் தேஜ்
கொஞ்சம் கூட தொய்வில்லாமல் சுவாரசியமாக கதை போகிறது.
படிக்கும் ஒவ்வொருவரும் சிறுவர்கள் ஆகிவிடுகிறோம்
வளர்மதி ஆசைத்தம்பி