கால், அரை, முக்கால், முழுசு | 4 | காலச்சக்கரம் நரசிம்மா

 கால், அரை, முக்கால், முழுசு | 4 | காலச்சக்கரம் நரசிம்மா

4. ஒரு கூட்டில் பல பறவைகள்

”எங்களுக்கு மேலதிகாரியாக வரும் அந்த பெண்ணை விட நான் திறமையானவன்னு ஒரு மாசத்திலேயே நிரூபிக்கிறேன்” –என்று பிரதீப்பிடம் சவால் விட்டுவிட்டு ஆதர்ஷ் வெளியேற, அவனைப் பின்தொடர்ந்தனர் மற்றவர்கள்.

”ஆதர்ஷ், என்ன இவன்..? திடீரென குண்டு வீசுறான்! இப்பதான் ‘கருப்பு அசுரர்கள்’னு இயக்கம் ஆரம்பிச்சிருக்கோம். அதற்குள்ளே நமக்கு இப்படி ஒரு சோதனையா..?” –ரேயான் கேட்க, ஆதர்ஷ் தீவிர யோசனையில் இருந்தான். பிரதீப் கூறியதை அவன் ரசிக்கவில்லை என்பது அவனது முகபாவத்திலேயே தெரிந்தது.

”கிரியேட்டிவ் ஹெட்-டை தமிழ்ல எப்படிச் சொல்றது, தினேஷ்..?” –ஆதர்ஷ் கேட்டான்.

”கற்பனைத் தலைன்னு நினைக்கிறேன்.. இல்லை படைப்புத் தலைவர்..!” —தினேஷ் கூற, கார்த்திக் தலையசைத்தான்.

”படைப்புத் தலைவர் இல்லை..! படைப்புத் தலைவி.. ! தலைவிங்கிறதால மரியாதையா அம்மான்னு கூப்பிட்டு, படைப்பைப் பார்த்துக்கப் போறதால, படையம்மா-ன்னு கூப்பிடலாம்..!” –ரேயான் சிரிக்க, ஆதர்ஷ் எரிச்சலுடன் தொலைவில் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சஞ்சனாவைப் பார்த்தான்.

”படையம்மாவோ, நீலாம்பரியோ..! ஒரே மாசம் தான் டைம்..! அதுக்குள்ளே அந்த கங்கணாவை வேலையை ரிசைன் பண்ணிட்டு திரும்பி மைசூருக்கு ஓட வைக்கிறேன் பாரு..!” –ஆதர்ஷ் சொன்னான்..!

”அவளை அப்புறம் கவனிக்கலாம்..! முதலில் இந்த நீரூற்று நாயகியைக் கவனிக்கணும். ரொம்பத் தான் ரவுசு பண்றா..!” –தினேஷ் அவர்களை நோக்கி நகர்ந்து வந்த சஞ்சனாவை நோக்கித் தலையசைத்தான்.

நால்வரும் கான்பரன்ஸ் அறையிலிருந்து வெளி வருவதைப் பார்த்து விட்ட சஞ்சனா, அவர்களை நோக்கி நக்கலாகச் சிரித்தபடி வந்தாள்..!

”ஹலோ கய்ஸ்..! சிஇஓ கிட்டே நாலு பேரும் ‘டூஸ் அண்ட் டோண்ட்ஸ்’ பத்தி கேட்டுக்கிட்டீங்களா..? மகேசு… சாரி சாரி. ரமேஷு…. சாரி சாரி…. தினேச்சு பையா..! உச்சாபோயிட்டு வரணும்ன்னா போயிட்டு வா..! நாளையிலிருந்து உங்களுக்கெல்லாம் பொம்பளை பாஸ்..! ஹா… ஹா…” –குண்டு சஞ்சனா வேண்டுமென்றே நக்கலாகச் சிரிக்க, டார்க் டெமென்சுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது .

கான்பரன்ஸ் அறையில், தான் அவளை ‘அஞ்சு …..சாரி சாரி மஞ்சு…சாரி சாரி சஞ்சு’ –என்று அழைத்ததற்கு பழி வாங்கும் விதமாக அவள் தன்னை தினேச்சு என்று அழைப்பதைப் புரிந்துகொண்டான், தினேஷ். அவனிடம் எந்த ஒரு பெண்ணும் இப்படிப் பேசியதில்லை. அவள் தவடையில் ஓங்கி ஓர் அறை கொடுத்து, அவளைத் தரையில் உருட்டி ஏறி மிதித்தான்..! மனதில்தான்…

சஞ்சனா அவனது கோபத்தை ரசித்தபடி, ”டேய் தினேஷ்” –என்று குரல் கொடுக்க, நால்வரும் திடுக்கிட்டு அவளை முறைத்தனர்.

”இந்த ஆபீஸ் அட்டெண்டர் பெயர்கூட தினேஷ்தான்.” –திமிருடன் சஞ்சனா கூற, ஒரு அட்டெண்டர் வந்தான்.

”அம்மா..! தினேஷ் ஸ்டுடியோவுக்கு போயிருக்கான். என்ன வேணும்ம்மா..?” –பஞ்சு என்கிற அட்டெண்டர் பயந்தபடி கூறினான்.

”பஞ்சு..! உன்னை நானா மேன் என் வயித்துக்குள்ள பத்து மாசம் வச்சிருந்தேன்..? அம்மான்னு கூப்பிடுறே..? இடியட்..! கால் மீ மேடம்..! இந்த நாலு பேரையும் அழைச்சுக்கிட்டு, நம்ம திருவான்மியூர் LOVERS NEST –ஃபிளாட்டைச் சுத்திக் காட்டு..! அப்படியே கீழே இருக்கிற ஓனர் பூதத்தையும் அறிமுகம் செய்துடு..! பூதம் கிட்டே சிக்கிட்டா தான் இவனுக வழிக்கு வருவாங்க..!” என்றாள்.

”லவ்வர்ஸ் நெஸ்ட்டா..? ஃபிளாட் பெயரே வில்லங்கமா இருக்கே..?” கார்த்திக் கிசுகிசுக்க, சஞ்சனா நால்வர் அணியைப் பார்த்தாள்.

”அது ரெசிடென்ட்டியல் ஏரியா..! டோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்..! ஒழுங்கா இருங்க..!” –என்று கூறியபடி நான்கு பேரின் ஸ்வைப் கார்டுகளை பெயரைப் பார்த்து, கையில் எடுத்தாள்..!

”இந்தா மேன் பஞ்ச்..! அவங்களுக்கு எல்லாம் ஆபிஸ் தாலியைக் கட்டி விடு மேன்..! ஆபிஸ்ல தாலியைக்கூடக் கழட்டலாம்..! ஐடி கார்டைக் கழட்டவே கூடாது . புரிஞ்சுதா..! ‘அந்த காலத்துல நீங்க எங்க கழுத்துல தாலியைத் தொங்க விட்டீங்க..! இப்ப நாங்க ஆபீஸ்ல உங்களுக்கு தாலியைத் தொங்க விடறோம்…” –என்று தனது ஜோக்கை ரசித்து, தனக்குத் தானே கலகலவென்று சிரித்துக் கொண்டு திருவாரூர் தேர் நகர்ந்து செல்வது போல நடந்து சென்றாள், சஞ்சனா.

”இந்த பொம்பளைக்கு ஆம்பளைங்களக் கண்டாலே பிடிக்காது. திட்டிகிட்டே இருக்கும்..!” –பஞ்சு அவள் பின்னாடி முறைத்தபடி கூறினான்.

”கவலைப்படாதே பஞ்சு..! சீக்கிரமே சஞ்சுவை அடக்கி மிஸஸ் பஞ்சுவாக்கிடறேன்..!” –தினேஷ் கூற, நீண்ட மௌனத்திற்கு பிறகு ஆதர்ஷ் பேசினான்.

”பிரெண்ட்ஸ்..! டோன்ட் ஒர்ரி..! நம் கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது. நம்ம மேலதிகாரியாக வர்ற கங்கணாவோ பங்கணாவோ… ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தி, அவளை ஓட ஓட விரட்டி, கிரியேட்டிவ் ஹெட்டை, கிரியேட்டிவ் டெயிலைச் சுருட்டிக்கிட்டு ஓட வைக்கலை, என் பெயரை மாத்திக்கிறேன்.” –ஆதர்ஷ் மீண்டும் உறுதியுடன் கூற, தினேஷ் அவனை நோக்கி சல்யூட் ஒன்றை வைத்தான்.

”செஞ்சு காட்டிடு ஆதர்ஷ்..! அப்புறம் நீங்க சாதாரண ஆதர்ஷ் இல்லை..! எங்களோட ஆதர்ஷ் வித்யாலயா..!” –தினேஷ் கூற, மற்றவர்கள் சிரித்தபடி வெளியே நடந்தார்கள்.

கார்த்திக் தனது ஹ்யுண்டாய் அல்கசார் காரை பெருமையுடன் காட்டினான். ”புதுக்கார்..! ஊருக்குக் கிளம்பும் முன்னாடிதான் டெலிவரி எடுத்தேன்.!”

”என்னோட பென்ஸ் இருக்கு..!” –ஆதர்ஷ் சொல்ல, கார்த்திக் அனைவரையும் தனது காரில் வருமாறு அழைக்க, அதற்குள்ளாக தினேஷ், காரின் பின் கதவை திறந்து அதில் ஏறிக் கொண்டான்.

பஞ்சு அவர்களை நட்புடன் நோக்கினான். ”சார்..! நான் முன்னாடி என்னோட ஸ்கூட்டில போறேன். நீங்க பின்னாடி காரை ஓட்டிக்கிட்டு வாங்க..!” – என்றபடி தனது ஸ்கூட்டியை நோக்கிச் சென்றான்.

பின் சீட்டில் தினேஷ், பக்கத்தில் ரேயான் ஏறிக்கொள்ள, கார்த்திக் ஆதர்ஷுக்காக முன் கதவை திறந்து வைத்து காத்திருக்க, ஆதர்ஷ் வண்டியில் ஏறாமல் காரையே வெறித்தான்.

”இந்த வண்டியில நான் ஏற மாட்டேன்..!” –ஆதர்ஷ் சற்றுக் கடுப்புடன் கூற, மற்றவர்கள் அவனைத் திகைப்புடன் பார்த்தனர்.

”ஏன் ஆதர்ஷ்..?” –அவர்களிடையே அன்னியோன்னியம் தொடங்கியதற்கு அடையாளமாக, ஒருவரை ஒருவர் இப்போது ஒருமையில் அழைத்தனர்.

”சாரி..! நான் டார்க் டெமன்ஸ் அமைப்பின் தலைவர். அப்படியிருக்க இந்தக் காரில் எப்படி ஏறுவேன்..?” –ஆதர்ஷ் கேட்க, கார்த்திக் திகைத்தான்.

”ஏறினா என்ன..?”

ஆதர்ஷ் சிரிக்காமல் சொன்னான் : ”உன் புதுக்கார் ரிப்பன் கட்டிக்கிட்டு இருக்கு… ரிப்பன் கட்டிய எதுவும் நம்ம எதிரியாச்சே..!” -ஆதர்ஷ் கூறியதும், குபீர் என்று மற்ற மூவரும் சிரிக்க, அவர்களிடையே நட்பு முழுவதும் பூத்தது. காரைக் கிளப்பி அதற்கு வேகம் கொடுக்க, அவர்களுடைய நட்பும் வேகம் எடுக்கத் தொடங்கியது.

”என்ன ஆனாலும் சரி..! வரப்போகும் அந்த கங்கணா ஒரு வாரத்துக்கு மேல அந்த பதவியில் இருக்கக் கூடாது. நம்ம ஆதர்ஷ்ஷையே ப்ரோமோஷன் கொடுத்து அந்த பதவியில் உட்கார வைக்கணும். நான் நிச்சயம் அவளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப் போவதில்லை” –கார்த்திக் சொல்ல, ”நாங்கள் அதை வழிமொழிகிறோம்..!’ –என்று ஒன்றுசேரக் கூறினர், தினேஷும், ரேயானும்.

ஸ்கூட்டியை எளிதாக ஓட்டி கொண்டு பஞ்சு முன்னால் போய்விட, ஒரு ஆன்ட்டி, ஆல்டோ ஒன்றில் ஜானவாச கார் செல்வது போன்று சென்று கொண்டிருந்தாள். கார்த்திக் எவ்வளவு முறை ஹார்ன் அழுத்தினாலும், தனது வேகத்தை அதிகரிக்கவில்லை. எரிச்சலுடன் மீண்டும் மீண்டும் ஹார்ன் அழுத்தியும் பிரயோஜனம் இல்லாமல் போக, ஒரு சிறிய இடைவெளியில் ஆல்டோவைக் கடந்தான், கார்த்திக்.

அந்த ஆன்ட்டி ஸ்ப்ரிங் ரோல் ஒன்றை கடித்தபடி, மற்றொரு கையால் நிதானமாக காரைச் செலுத்தி கொண்டிருந்தாள்.

”சனி….லியோன் பாட்டி..! ஆல்டோவை எடுத்து உன்னோட ஹான்ட் பாக்ல போட்டுக்கிட்டு, நடந்து போ..!” –என்று குரல் கொடுத்தான், தினேஷ்.

ஆன்டி அதிர்ந்து போய் காரை நிறுத்தி விட, நால்வரும் கூக்குரலிட்டுச் சிரித்தபடி பயணத்தை தொடர்ந்தார்கள்.

சிரிப்பும் கும்மாளமுமாக இனி ஒன்றாக ஒரே இடத்தில் தங்கி இருக்கப் போகிறோம் என்கிற நினைப்பே அவர்களுக்கு உற்சாகத்தைத் தந்தது. ஆனால், ஆதர்ஷின் அடிமனதில் வரப்போகும் கங்கணாவை எப்படித் தொடக்கத்திலேயே வெட்டி விடுவது என்கிற யோசனை நிலவிக் கொண்டிருந்தது.

”அதோ பாரு, கார்த்திக்..! அட்டெண்டர் பஞ்சு கை காட்டறான்..” –ரேயான் தான் அவனைக் கவனித்தான். பஞ்சு அடையார் பாலத்தில் ஒரு ஓரமாக நின்று அவர்கள் காரை நோக்கிக் கைகாட்டினான்.

”சார்..! கேப் விடாம கொஞ்சம் சீக்கிரமா வாங்க.! அந்த மைசூர் மேடம் வீட்டுக்கு வந்துட்டாங்க.! நமக்காகக் காத்திருக்காங்க..!” –என்றவுடன் தூக்கிவாரிப் போட்டது, டார்க் டெமன்ஸ்-களுக்கு..

”யாரு..? அந்த கங்கணா பார்ட்டியா..? எங்க வீட்டுலயா அவளும் தங்கப் போறா..?” –அதிர்ச்சியுடன் கேட்டான் ஆதர்ஷ்.

”அது உங்க வீடு இல்லீங்க..! அந்த கட்டிடத்தின் மேல் இரண்டு மாடிகளை நம்ம ஆபிஸ் லீஸ் எடுத்திருக்கு. நீங்க மூணாவது மாடி ஃபிளாட்..! அவங்க இரண்டாவது மாடி ஃபிளாட்..! முதல் மாடி ஃபிளாட்ல ஹவுஸ் ஓனர் இருக்காரு. கீழே சூப்பர் மார்க்கெட்டுக்கு வாடகைக்கு விட்டிருக்கார். எல்லாத்தையும் அங்கே போய் சொல்றேன். என் பின்னாடியே வாங்க..!” –என்ற பஞ்சு ஸ்கூட்டியைக் கிளப்பிக்கொண்டு போக, வேண்டாவிருப்பாக தனது காரை அவன் பின்பாகச் செலுத்தினான், கார்த்திக்.

”எனக்கு இன்ட்ரெஸ்ட்டே போச்சு..! நம்ம நாலு பேருக்கும் ஒரு பொண்ணு பாஸ்..! அவ நம்ம வீட்டுல தான் கீழ் போர்ஷன்ல இருக்கப் போகிறா..! மைசூர்க்காரன் காவிரித் தண்ணியை அனுப்ப மாட்டேங்கிறான். ஆனால் இந்த பாடாவதிப் பொண்ணுங்களை எல்லாம் அனுப்புறான்..!” –தினேஷ் கூற, ஆதர்ஷ் மௌனமாக இருந்தான். சென்னைக்கு வரும்போது இருந்த உற்சாகமும், ஆர்வமும் இப்போது அவனுக்கு முழுவதும் வடிந்து விட்டிருந்தது.

”பார்க்கலாம்..! எப்படியும் அந்தப் பொண்ணை விரட்டப் போறோம்..! எப்படி இருந்தாலும், நாம நாலு பேரும் கிடைச்சிருக்கும் இந்த வேலையை ரிசைன் பண்ணக் கூடாது..!” –கார்த்திக் கூற, தினேஷும், ரேயானும் அவன் கூற்றை ஆமோதித்துத் தலையசைத்தனர்.

திருவான்மியூர் மூன்றாவது சீ வார்ட் ரோட்டில் இருந்த லவ்வர்ஸ் நெஸ்ட் குடியிருப்பின் முன்பாக தனது அல்கஸார் காரை நிறுத்தினான், கார்த்திக். நால்வரும் காரை விட்டு இறங்க, குடியிருப்பின் முன்பாக இருந்த ஒரு குல்மோஹர் மரத்தின் கீழே அந்தப் பெண் நின்றிருந்தாள்.

”அதோ கங்கணா ஆனந்த்..! நம்ம டீம் லீடர்..,! நம்ம எதிரி..! அதோ சூர்ப்பனகை..! லட்சுமணா..! எடு வாளை..! கட் பண்ணு அவள் மூக்கு, காதுகளை…” –கார்த்திக் கூற, நால்வரும் குரோதத்துடன் கங்கணாவை நோக்க, அவர்கள் கண்கள் வியப்பால் விரிந்தன.

–தொடரும்…

3வது அத்தியாயம்….

ganesh

2 Comments

  • Nice

  • யாருங்க அந்த கங்கனா? வேகம் பிடிக்குது தொடர்! வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...