நடிப்புக்கு முக்கியத்துவம் தந்த நடிகை சிம்ரன்
தமிழ் சினிமா வரலாற்றில் டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி என உச்ச நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்த நடிகைகளின் பட்டியல் மிகப் பெரியது. 1980களில் ரேவதி, ராதிகா, அம்பிகா, ராதா, மாதவி, நதியா, ரேகா, சீதா எனப் பல நடிகைகள் தம் திறமையை வெளிப்படுத்திக் கோலோச்சிக் கொண்டிருந்தனர். 1990களிலும் ரசிகர்களால் கோயில் கட்டப்பெற்ற முதல் இந்திய நடிகையான குஷ்பு, மீனா, ரோஜா, சங்கீதா, சங்கவி எனப் பல நடிகைகள் போட்டிப் போட்டுக்கொண்டிருந்தனர்.
ஆனால் இதே 90களில்தான் கதாநாயகனை மட்டும் முன்வைக்கும் சூப்பர் ஹீரோ வகை மசாலா திரைப்படங்கள் அதிகரிக்கத் தொடங்கின. கதாநாயகிகள் அழகுப் பதுமைகளாகவும் கவர்ச்சிக் கன்னிகளாகவும் சுருங்கத் தொடங்கினர். கவர்ச்சிப் பாடல்களுக்கு என்று தனி நடிகைகள் இருந்த காலம் மறைந்து முன்னணி கதாநாயகிகளே கவர்ச்சிப் பாடல்களில் தோன்றத் தொடங்கினர்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் நடிப்புத் திறமை கொண்ட நடிகைகளுக்கான பெருமையை மீட்டெடுத்தவர்தான் சிம்ரன். பத்தாண்டுகளுக்குக் குறைவான காலமே முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தார் என்றாலும் அழகு, கவர்ச்சி ஆகியவற்றைத் தாண்டி நடிப்புத் திறமையிலும் நடனத்திலும் அவரை மிஞ்ச ஆளில்லை என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களின் ஏகோபித்த மரியாதையையும் ஆதரவையும் பெற்றவராக இருந்தார்.
செவ்வியல் நடனம் முதல் குத்தாட்டம் வரை அனைத்து வகையான நடனங்களிலும் பட்டையைக் கிளப்புபவராக இருந்தார் சிம்ரன். இவற்றுக்கிடையே இடுப்பை வளைத்தும் ஆடுதல், அரிய நடன அசைவுகளை அனாயசமாகச் செய்துகாட்டுதல் ஆகியவை அவரது தனிச் சிறப்புகளாக இருந்தன. ‘தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா’ (எதிரும் புதிரும்), ‘ஆல்தோட்ட பூபதி நானடா’ (யூத்) பாடல்கள் மூலம் அசாத்திய நடனத்தால் ரசிகர்களை சிம்ரன் கட்டிப்போட்டார்.
இவ்வளவு திறமைகள் இருந்தும் முன்னணி நட்சத்திரமாக இருந்தபோதே திடீரென்று 2004இல் திருமணம் செய்துகொண்டு திரைப்படங்களிலிருந்து விலகிவிட்டார். ஆனாலும் அந்த ஆண்டு ரஜினிகாந்துடன் நடிப்பதற்கான வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. ஆம் 2005இல் வெளியாகி 800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த ‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் சிம்ரன்தான். அப்போது அவர் கருத்தரித்திருந்ததால் நடனக் காட்சிகளில் நடிப்பது ஆபத்து என்று கருதி அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டது அவருக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்புதான்.
சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த சிம்ரனுக்குக் குணச்சித்திர வேடங்களையும் வில்லி வேடங்களையும் மட்டுமே கொடுத்துவருகிறது தமிழ் சினிமா. அதிலும் ‘வாரணம் ஆயிரம்’ போன்ற ஒரு சில படங்களே அவருடைய ஆளுமைக்கு நியாயம் செய்தவை. 2019இல் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்ததில்லை என்ற குறை நீங்கியது. அதோடு அந்தப் படத்தில் மிக அழகாகவும் இளமையாகவும் தோன்றினார் சிம்ரன்.
சிம்ரனின் திரை வாழ்க்கை முடிந்துவிடவில்லை. அதுவும் ரசனை மாற்றம், பெண்களை மையப்படுத்திய கதைகளுக்கான வரவேற்பு அதிகரித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் சிம்ரனைச் சிறப்பாக பயன்படுத்தி மறக்க முடியாத படைப்புகளை வழங்க ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதைச் செய்வது நம் திரைப் படப்பாளிகளின் கைகளில்தான் உள்ளது.
சிம்ரனுக்கு இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் அமைய வேண்டும். ரசிகர்கள் மனதில் அவர் எப்போதும் நீங்கா இடம்பிடித்திருக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.
- ஆந்தை குமார்