இளையராஜா நடத்திய பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ‘ராக் வித் ராஜா’

 இளையராஜா நடத்திய பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ‘ராக் வித் ராஜா’

சென்னை தீவுத்திடலில் Rock with Raja எனும் பெயரில் இசையமைப்பாளர் இளைய ராஜா பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக் கும்மேல் கொரோனாவால் மகிழ்ச்சியைத் தொலைத்திருந்த தமிழக மக்களுக்கு கடந்த 18ம் தேதி தீவுத்திடலில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தி மகிழ்ச்சி அளித்தார் இளையராஜா.

மதியம் 3 மணியிலிருந்தே சென்னையின் எல்லா சாலைகளும் கச்சேரி நடக்கும் இடத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தன. நகரப் போக்குவரத்துக் காவலர்கள்  பாதையை மாற்றிவிடும் சூழ்நிலை ஏற்பட்டது.

பார்வையாளர்களால் நிரம்பிய இசையரங்கில் ஊழியர்கள் நாற்காலியைச் சுத்தம் செய்யும்வரைகூட காத்திருக்காமல் ‘‘பரவாயில்ல நாங்க துடைச்சிக்குறோம்” என்று அந்த இசை மாயக்கரங்கள் கொடுக்கும் மருத்துவச் சிகிச்சைக்காகக் காத் திருக்க ஆரம்பித்தார்கள் ராஜாவின் ரசிகர்கள்.

இணையத்தில் டிக்கெட் பெறமுடியாதவர்களுகாக நேரடியாகப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேடையை அழகாக, பிரம்மாண்டமாக அமைந்திருந்தனர். சரியாக 7.20 மணிக்கு மேடைக்கு வந்தார் இளையராஜா. லேசான குரல் கனைத்து “சிவ சத்யா…” என்று பாட ஆரம்பிக்க, மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்தது.

பாடல்களின் இடை இடையே திரைஇசைப் பயணத்தில் தனது அனுபவம் குறித்து பேசிய இளையராஜா, தீவுத் திடலில் இசைக் கச்சேரி நடத்த அனுமதி வழங்கிய தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், “பாடகர் எஸ்.பி.பி.யை நினைவுகூர்வதற்கு வார்த்தை வரவில்லை. ஆந்திரா , மேற்கு வங்கம் , மகாராஷ்டிரா என பல மாநிலங்களுக்கு ஆர்மோனியப் பெட்டியுடன் சென்று நானும் பாலசுப்ரமணியனும் பாடினோம். லதா மங்கேஷ்கர் மறைவும் வருத்ததிற்குரியது “என்று கூறினார்.

மேடையில் தனுஷை கிண்டலடித்த இளையராஜா, ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடலைப் பாடிவிட்டு, “பாட்டு பிடிச்சிருக்கா.. இந்தப் பாட்டு சிறப்பாக வர உங்கள் மாமனார்தான் காரணம்” என்றார். தனுஷ் எழுந்திருந்து அமோதித்தார்.

கங்கை அமரன், பாடகர் மனோ, எஸ்.பி.பி. சரண், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர்.

இளையராஜாவுடன் உஷா உதுப், ஸ்வேதா மோகன், கார்த்திக், தேவி ஸ்ரீ பிரசாத், ஹரிஷ் ராகவேந்திரா, வெங்கட் பிரபு, பிரேம்கி அமரன், சைலஜா, பவதாரிணி மற்றும் பலர்  கலந்து பாடினார்கள்.

இரண்டாவதாக “இளமை இதோ… இதோ…” மனோ பாடிக்கொண்டிருக்கும்போதே ராஜா சார், “சரண்…” என்று குரல் கொடுக்கவே ஓடிவந்து மனோவோடு இணைந்து கொண்டார் எஸ்.பி.பி. மகன் சரண். மனோ, சரண் இருவரும் பாடி முடித்தபோது தான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் அருமை நமக்குத் தெரிந்தது.

இவ்வளவு கஷ்டமான பாடலை எப்போது பாடினாலும் ரெக்கார்டிங் ஸ்டூடியோ வில் இருக்கும் அதே எனர்ஜியோடு எஸ்.பி.பி.யால் மட்டும் எப்படி பாட முடிந் தது?

நமக்குத் தோன்றிய அதே உணர்வு இசைஞானிக்கும் வந்ததோ என்னவோ… ‘‘என் பால்ய சினேகிதன் பாலுவை நான் இந்த மேடையில் மிஸ் பண்றேன். கொரோனா அநியாயமாக அவனைக் கொண்டுபோய் விட்டது. நானும் பாலுவும் போகாத ஊர்கள் கிடையாது. ஆந்திரா, பாம்பே, கல்கத்தா என்று பல ஊர்களுக்குப் பயணம் செய்தோம்” என்று வருத்தப்பட்டார்.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கும், எஸ்.பி.பி.க்கும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அடுத்ததாக ‘எஜமான்’ படத்தின் ‘ராக்கு முத்து ராக்கு’ பாடலை ராஜா சாரே மாற்றி எழுதி, ‘ராக்கு வித் ராஜா’ என்று பாட வைத்தார். எஸ்.பி.பி.சரண் ‘நிலாவே வா’ பாடலைப் பாடினார். பல்லவி முடிந்ததும் வரும் ட்ரம்பட் இசை ஒலித்தபோது கூட்டம் “ஓ…ஓ….ஓ…” என்று உற்சாகக் குரல் கொடுத்தது.

‘மேகம் கொட்டட்டும்’ பாடலின்போது ஒலிபெருக்கியில் சரியாகக் கேட்க வில்லை. கூட்டத்திலிருந்து ஆடியோ… ஆடியோ… என்ற குரல் எழுந்தது.

தேவிஸ்ரீ பிரசாத், அனிதா இருவரும் ராஜா சாரிடம் கேள்வி கேட்டனர். “ஒரு ஹை பிட்ச் பாடலை வேற மாதிரி பாடமுடியுமா?” என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்வது போல ‘ஏ… ஆத்தா ஆத்தோரமா வாறீயா… நான் பார்த்தா பார்க்காமலே போறீயா…’ பாடலை வேறு வேறு இசைக் கருவிகளை வைத்து வேறு டெம்போ வில் பாட வைத்தார். பிறகு “இப்ப பாரு” என்று சொல்லிவிட்டு கையசைக்க ஒரிஜினல் டியூன் ஒலித்தது. இப்போது ரசிகர்களைக் கேட்கவா வேண்டும்… ஆளாளுக்கு ஆட ஆரம்பித்தனர்.

கச்சேரிகளில் எப்போதும் கேட்டிராத ‘எல்லாம் இன்பமயம்’ படத்தில் இடம் பெற்ற, ‘மாமன் வூடு மச்சு வூடு பரிசம் போட்டது குச்சு வூடு..’ என்ற பாடலை அரங்கேற்றியது சுவாரஸ்யம். பாடலில் வருவது போல பாடகி அனிதா எல்லா ரையும் பார்த்து, ‘டேய் நிறுத்துங்கடா நிறுத்துங்கடா’ என்று சொன்னது பார்வை யாளர்களை ரசிக்க வைத்தது.

அடுத்ததாக ராஜா சார் ‘வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன்…’ பாட, பவதாரிணி தென்றல் வரும் தெருவை பூக்களறியாதா.. பாடினார். பிரம்மகமலம் பூப்பதுபோல ரொம்பவும் அபூர்வமான குரல் பவதாரிணிக்கு. ஆனால்  அவர் குரலை ரசிகர்கள் யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதில் என்ன தான் பிடிவாதமோ தெரிய வில்லை. பாட மாட்டேன் என்று சபதம் போட்டுள்ளார்.

இந்த இரண்டு பாடல்களும் லேசான சோர்வை ஏற்படுத்தின. ரசிகர்கள் நடமாட் டம் ஏற்பட்டதைக் கவனித்த இளையராஜா ‘மச்சானைப் பார்த்தீங்களா…’ பாடலை வங்காளப் பாடகி விபாவரியை அழைத்துப் பாட வைத்தார். மீண்டும் உற்சாகத் திற்கு வந்தது கூட்டம். ஒரு தமிழ்ச் சொல் கூடத் தெரியாது இவருக்கு. ஆனால் சிறு பிசகு இல்லாமல் பாடியது அழகு. காட்டுக் குயிலு மனசுக்குள்ள, ஆசை நூறு வகை, ஆசையக் காத்துல தூதுவிட்டு ஆகிய பாடல்கள் ஒலித்தன.

கார்த்திக் ராஜா வந்து ‘காதல் ஓவியம் பாடும் காவியம்’ என்று ஆரம்பித்தபோது, வழக்கம் போல் இடது ஸ்பீக்கர் மைக் எல்லாம் மக்கர் செய்தன. ராஜா சார், ‘பாடுறதா உன் பீட் பேக் கேட்குறதா?’ என்று லேசான கோபத்துடன் கேட்டார். அப்போதைக்குச் சரி செய்யப்பட்டது.

இரண்டு நாட்களாக ஒலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது நாய்ஸ் அண்ட் க்ரைன்ஸ். பத்திரிகையாளர்களை நிகழ்ச்சிக்கு அழைக்கக்கூடாது என்ப தில் காட்டிய அக்கறையை நிகழ்ச்சிக்கு முக்கியமான ஸ்பீக்கரை சரி செய்வதில் காட்டியிருக்கலாம்.

அடுத்தடுத்து ஒலித்த பாடல்கள் எல்லாம் அல்டிமேட் ரகம். நேரம் ஆக ஆக எண் பதுகளின் மெலடிகளைக் காற்றில் பரவவிட்டார். இத்தனை நாட்களும் எவ்வளவு துயரங்கள், மனஉளச்சல்கள், நிராகரிப்புகள், உறவில் பிரிவுகள், உயிர் இழப்புகள், இறுகிப்போயிருந்த இதயத்தில் இலவம் பஞ்சால் ஒத்தடம் கொடுத்தார் இசை ஞானி இளையராஜா.

மேடையில் கருவியை வாசித்த கலைஞர்கள் யாரும் தனி நபர்கள் அல்ல. ராஜா சார் கொடுத்த குறிப்புகளை வாசிக்கும் அவர்கள் இளையராஜாவின் இன்னொரு உருவங்களே. வயதில் எண்பதை நெருங்கும் ஒரு மனிதர் நான்கு மணிநேரம் இடைவிடாமல் மேடையில் நின்றுகொண்டும், பாடிக்கொண்டும், 15,000 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ரசிகர்களைத் தன் விரல் நுனியில் கட்டுப்படுத்திக்கொண்டும் இருந்தார்

இந்த நிகழ்ச்சிக்கு தனுஷுடன் அவரது இரு மகன்களும் வருகை தந்திருந்தனர். ஸ்பீக்கர்கள் அவ்வப்போது சரியாக இயங்காததால் ஒருமுறை பாதி பாடலி லேயே இளையராஜா பாடலை நிறுத்தி பாடகர்களை மீண்டும் முதலிலிருந்து பாட வைத் தார்.

இந்த நிகழ்ச்சியை நடத்திய நாய்ஸ் அண்ட் க்ரைன்ஸ் நிறுவனம் மூலம்  இளைய ராஜாவுக்கு 5 கோடி பேசப்பட்டதாம். அதில்லாமல் ஆர்கெஸ்டரா செலவு, இடம் தமிழக அரசு இலவசதாக வழங்கியிருக்கிறது, ஒளிபரப்பு உரிமையை சன் குழுமம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

பார்வையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். பாப் கார்ன் ஒன்று 100 ரூபாய்க்கும் , தேநீர் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சரியாக  இரவு 1.30 மணிக்கு நிகழ்ச்சியை நிறைவு செய்தார் இளையராஜா.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...