கவிதைக்காரன் | ஆர்னிகா நாசர்

 கவிதைக்காரன் | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 5

கிபி 2042ஆம்

தேநீர் கோப்பையை கொண்டு வந்து வைத்தாள் மனைவி லுப்னா. பூக்கள் வரையப்பட்ட சிவப்புநிற சட்டை அணிந்திருந்தான் வலங்கைமான் நூர்தீன்.

தீனுக்கு வயது முப்பது. 170செமீ உயரம். ரோஜா நிறத்தன். அடர்ந்த கருகரு கேசம். அடர்புருவங்கள். கலீல் கிப்ரான் கண்கள். பாரசீக மூக்கு. அகலமீசை. சூபித்துவ உதடுகள். காந்தர்வக்குரல். கவிதைகளுடன் பிறந்து கவிதைகளுடன் வளர்ந்து கவிதையாய் வாழ்பவன். நூர்தீனின் கவிதைகளில் படிமங்களும் உவமைகளும் உவமானங்களும் கூடி திருவிழா நடத்தும். அவனுடைய பூனை, மீன் மற்றும் யானை பற்றிய கவிதைகள் சிறுவர் சிறுமியரிடையே பிரபலம். மகள் பைஹா தேநீர் உறிஞ்சும் தந்தையிடம் ஓடி வந்தாள் “அத்தா! நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்… கேட்கிறீர்களா?”

“சொல்!”

“காய்த்த மரமாகி நிற்கிறேன்
பல்லடிபடாமல்
எக்கி பறிக்கிறாய் ஞானக்கனியை
பழம் நழுவி பழத்தில் விழுகிறது!”

“ஆறு வயது கவிதாயினி நீ! தொடர்ந்து எழுது மகளே!” மகளை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் நூர்தீன்.

ஹோலோகிராம் டிவியில் பூமியரசின் செய்திகள் வாசிக்கப்பட்டன. “கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி. பூமி அதிபரின் பருவ வயது மகள் ஜிப்ஷா கவிதைகள் எழுதுவதிலும் வாசிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பது நீங்கள் அறிந்ததே. அவர் பூமியரசின் கவிதைக்காரர்களுக்கு ஒரு போட்டி வைக்கிறார். ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். இன்றிலிருந்து ஒருமாதம் அவகாசம். எழுதும் கவிதைகளை பூமி அரசின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும். சிறந்த கவிதையை எழுதிய கவிஞர் திருமணமாகாதவராய் இருந்தால் அவரை பூமி இளவரசி திருமணம் செய்து கொள்வார். திருமணமானவராய் இருந்தால் பத்து மில்லியன் மதிப்புள்ள தங்கக்காசுகள் பரிசளிக்கப்படும். பூமி இளவரசிக்கு வெறுப்பூட்டும் கவிதைகள் எழுதி அனுப்பினால் அவர்களின் வலதுகை மணிக்கட்டுடன் துண்டிக்கப்படும். அக்கவிஞர்கள் அவர்களின் மீதி வாழ்நாளில் கவிதைகளே எழுதக்கூடாது என எச்சரிக்கப்படுவார்கள்!”

லுப்னா ஒன்றரைவயது இரட்டை ஆண் குழந்தைகள் முகம்மது ரனானையும் அஹமது நிஹானையும் இருபக்க தோள்களில் தூக்கி வந்தாள்.

“கவிதை போட்டியில் கலந்து கொள்ள போகிறீர்களா தீன்?”

“யோசிக்க வேண்டும்!”

“பூமி இளவரசியை நீங்கள் புகைப்படங்களிலாவது பார்த்திருக்கிறீர்களா?”

“இல்லை!”

“ரோஜா குல்கந்து பேரழகி அவள்! கவிதை எழுதுவது மட்டுமல்ல ஒவியம் வரைவதிலும் நடனம் ஆடுவதிலும் வித்தகி. வாராவாரம் நிலா காலனியில் நடக்கும் கவியரங்கங்களில் கலந்து கொள்வாள். அவளை ஒருமுறை பார்த்துவிட்டால் உங்களுக்கு நூறுகவிதைகள் ஊற்றெடுக்கும்”

சிரித்தான் நூர்தீன்.

“நான் புறஅழகுகளை கண்டு மயங்குவதில்லை. உனது அழகுக்கு சமமாக இந்த பிரபஞ்சத்தில் பெண்கள் இல்லை!”

“என்னை புகழ்ந்தது போதும். என்னை புகழ்ந்து மூன்று குழந்தைகள் பெற்றுவிட்டீர்கள் எது எப்படியோ நீங்கள் இந்த கவிதை போட்டியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்!”

“தங்களின் கட்டளையை சிரமேற் கொள்கிறேன் தேவி!”

உதடுகளை கேலியாய் சுழித்தபடி நகர்ந்தாள் லுப்னா.

நள்ளிரவு. மோனநிலையில் ஆழ்ந்து கவிதைகளை எழுத ஆரம்பித்தான் வலங்கைமான் நூர்தீன்.

‘துகள் துகளாக காதல்’ என தலைப்பிட்டான்.

நீயும் நானும்
மணற்கடிகைக்குள்
அடைபட்டிருக்கும்
மணற்துகள்கள்
என்னை மல்லாத்தி
வைக்கும் போது
துகள்துகளாக என்னை
நிரப்புகிறேன்
என்னை கவிழ்க்கும் போது
துகள்துகளாக உன்னையும்
நிரப்புகிறேன்
மணற்துகளின் வண்ணத்துக்காக
செயற்கை நீலம் சேர்த்துள்ளதால்
கண்ணாடி கூண்டிலிருக்கும் நமக்கு
சிறுவானம் போலிருக்கிறது அது
ஆனாலும் கடிகைக்குள்ளேயே
கிடக்கிறோம்
காதல் கைதிகளாக
காலம் நேரமற்ற பெருவெளியில்

– எழுதி முடித்த கவிதையை இருபதுக்கும் மேற்பட்ட தடவைகள் வாசித்து பார்த்து திருப்தியானான் வலங்கைமான் நூர்தீன்.

இன்னும் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதி குவித்தான் தீன். அத்தனை கவிதைகளையும் திருக்குர்ஆனின் மீது இரண்டு நாட்கள் வைத்தெடுத்தான். மூன்றாவது நாள் கவிதைகளை பூமி இளவரசி ஜிப்ஷாவுக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.

ஒருமாதத்திற்கு பின்….

ஒரு மின் காந்தக்கார் வந்துநின்றது. அதிலிருந்து நான்கு ரோபோ அதிகாரிகள் வந்திறங்கினர்.

அறுபதாவது தளத்திலுள்ள வீட்டுகதவின் அழைப்புமணியை அமுக்கினர்.

திறந்தான் வலங்கைமான் நூர்தீன்

“வணக்கம். தாங்கள் தானே வலங்கைமான் நூர்தீன்?”

“ஆம்!”

“உங்களை உடனே அழைத்துவர பூமி அரசாங்கம் உத்திரவிட்டுள்ளது!”

மனைவியின் தலையசைப்புடன் நூர்தீன் கிளம்பினான்.

அந்த மணிமண்டபம் பிரமாண்டமாய் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாள் ஜிப்ஷா. மார்பு கச்சையை மீறி வெளிவர துடித்தன மார்பகங்கள்.

மயக்கும் ஸாம்பெய்ன் கண்களால் நூர்தீனை கிறங்கடித்தாள்.

“உன்னுடைய கவிதைகள் என்னுடைய பெண்மையை மலர்த்திவிட்டன. நீ ஒரு உமர் கய்யாம். உன்னுடைய கவிதைகளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மயிலிறகாய் என் பொன்னுடலை வருடி விட்டன. உன் மீது காதலாய் கசிந்துருகி விட்டேன் கண்ணாளா?”

“மன்னிக்க வேண்டும் இளவரசி. எனக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன!”

“அதனாலென்ன? மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வா. என்னை மணந்து பூமி அதிபரின் மருமகனாகு!”

“என்னுடைய கவிதைகள் அனைத்தும் என் மனைவியை வர்ணித்தே எழுதப்பட்டவை. என் கவிதைகளின் கச்சாப் பொருள் என் மனைவி மீதான காதல். அவளை கனவிலும் பிரியமாட்டேன்!”

“என்னை எதிர்த்தா பேசுகிறாய்?”

“கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறேன்!”

“என்னை எதிர்த்து பேசினால் உனக்கு மரணதண்டனை கிடைக்கும்!”

“பரவாயில்லை… என்மனைவி மீதான காதலுடன் ஆனந்தமாய் மரிக்கிறேன்!”

“சபாஷ்!” கைதட்டினாள் ஜிப்ஷா. “உன்னுடைய மனஉறுதியை பாராட்டுகிறேன். பரிசுபணம் பத்து மில்லியன் தங்கக்காசுகளை வாங்கிப் போ!”

“நானும் எனது குடும்பமும் திருப்தியாக வாழ்கிறோம். கூடுதல் பணம் தேவையில்லை. இந்த பரிசு பணத்தை வைத்து இலக்கியம் சார்ந்த அறக்கட்டளை நிறுவுங்கள். இலக்கியம் செழிக்கட்டும். ஒரேஒரு தங்கக்காசு மட்டும் கொடுங்கள். பரிசு பெற்ற நினைவாக பாதுகாத்துக் கொள்கிறேன்!”

“உனது வலது கையை கொடு!” நீட்டினான். முத்தமிட்டாள். ஜிப்ஷாவிடமிருந்து ஒரு தங்கக்காசை வாங்கிக்கொண்டு விடை பெற்றான் வலங்கைமான் நூர்தீன்.

மணிமண்டப வாசலில் இருபதடி உயர ஜின் நின்றிருந்தது. “அஸ்ஸலாமு அலைக்கும் நூர்தீன்!”

“வஅலைக்கும் ஸலாம்…யார் நீங்கள்?”

“நான் ஜின்கள் கூட்டத்தின் தலைவன்… என் பெயர் சுபைர் ஜமால்!”

“என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்?”

“பூமி இளவரசி ஜிப்ஷா உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது நானும் நின்று வாசித்தேன். அற்புதம். இளவரசியை மணந்து கொள்ளும் வாய்ப்பையும் மறுத்துவிட்டீர்கள் மில்லியன் தங்க காசுகளையும் வேண்டாம் என்று விட்டீர்கள். பணத்தாசையும் பெண்ணாசையும் இல்லாத ஒரு முஸ்லிமை பார்ப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!”

முறுவலித்தான் வலங்கைமான் நூர்தீன்.

“உங்களுக்கு எதாவது ஒன்றை பரிசளிக்க விரும்புகிறேன். நீங்கள் மறுதலிக்கக் கூடாது. நாள் பரிசளிக்க போவது பொருளல்ல உணர்வை. ஆயிரம் வருட காதலை உங்களுக்கு பரிசளிக்கிறேன். அந்த பரிசுத்தமான காதல் உணர்வை நீங்கள் ஒருவருக்கோ அல்லது பலருக்கு பகிர்ந்தோ கொடுக்கலாம். நீங்கள் யாருடன் காதல் உணர்வை பகிர்ந்து கொண்டீர்களோ அவரும் நீங்களும் பரஸ்பரம் பிரபஞ்சம் மீறிய அன்பில் பிரேமையில் பாசத்தில் நீந்தி களிப்பீர்கள்!”

“கொடுங்கள்… வாங்கிக்கொள்கிறேன்!”

சுபைர்ஜமால் எதனையோ கையில் எடுத்து வலங்கைமான் நூர்தீனின் இதயத்தை மெழுகிவிட்டது.

வீட்டுக்கு வந்தான். நடந்ததை மனைவியிடம் விவரித்தான்.

“சரியான காரியத்தைதான் செய்து வந்திருக்கிறீர்கள்!”

“இறைவனே! ஜின் தலைவன் கொடுத்த காதலை நான்கு பங்குகளாக பிரித்து ஒன்றை என் மனைவிக்கும் மீதி மூன்றை என் மகள் மகன்களுக்கும் பரிசளிக்கிறேன்!” மனைவி மகள் மகன்கள் இதயங்களை முயல் குட்டியை போல நீவிவிட்டான்.

காதல் விஸ்வரூபித்தது. மனைவி கணவனை ஆலிங்கனம் செய்தாள். குழந்தைகள் தந்தையை கட்டிக்கொண்டு முத்தம் சொரிந்தன.

ஜில்லியன் ஜில்லியன் காதல்கவிதைகள் ஒன்று சேர்ந்து கும்மியடித்தன. ●

கமலகண்ணன்

1 Comment

  • பூமி அதிபரின் பருவ மகள் ஜிப்ஷா, கவிதைகள் எழுதுவதிலும், வாசிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். அப்படிப்பட்டவர் கவிதைக்காரர்களுக்கு ஒரு போட்டி வைக்கிறார். ‘ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு மாதம் அவகாசம். சிறந்த கவிதையை எழுதிய கவிஞர் திருமணமாகாதவராய் இருந்தால் அவரை பூமி இளவரசி திருமணம் செய்து கொள்வார். திருமணமானவர் என்றால் பத்து மில்லியன் மதிப்புள்ள தங்க காசுகள் பரிசளிக்கப்படும் …அப்போ வெறுப்பூட்டும் கவிதைகள் எழுதினால்?

    வலது கை மணிகட்டுடன் துண்டிக்கப்படும். அவர்கள் மீதி வாழ்நாளில் கவிதைகளே எழுதக்கூடாது இது தான் உத்தரவு.

    இதையும் மீறி யார் அருமையான கவிதைகள் எழுதி கொண்டு செல்கிறார்? அதற்கு பூமி இளவரசியின் பதில் என்ன? அவரது பரிசு பாராட்டை கவிதை எழுதுபவர் பெற்றுக் கொள்கிறாரா என சில கேள்விகளை கொடுத்து அதற்கான பதிலையும் அருமையாக கொடுத்திருக்காங்க.

    சிறுகதையில் இடம் பெற்ற கவிதை வரிகள் ரொம்ப நன்றாக இருந்தது சார்.

    நீயும் நானும்
    மணற்கடிகைக்குள்
    அடைபட்டிருக்கும்
    மணற்துகள்கள்
    என்னை மல்லாத்தி
    வைக்கும் போது
    துகள்துகளாக என்னை
    நிரப்புகிறேன்
    என்னை கவிழ்க்கும் போது
    துகள்துகளாக உன்னையும்
    நிரப்புகிறேன்
    மணற்துகளின் வண்ணத்துக்காக
    செயற்கை நீலம் சேர்ந்துள்ளதால்
    கண்ணாடி கூண்டிலிருக்கும்
    நமக்கு
    சிறுவானம் போலிருக்கிறது அது
    ஆனாலும் கடிகைக்குள்ளேயே
    கிடக்கிறோம்
    காதல் கைதிகளாக
    காலம் நேரமற்ற பெருவெளியில்

    அழகான வரிகள், அருமையான சிறுகதை. மனமார்ந்த வாழ்த்துகள் சார்💐💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...