பேய் ரெஸ்டாரெண்ட் – 28 | முகில் தினகரன்
அடுத்த வாரத்தில் ஒரு நாள்,
காலை நேரம்.
ரெஸ்டாரெண்ட்டில் தனது அறையில் அமர்ந்து லாப்டாப்பில் மூழ்கியிருந்தான் ஆனந்தராஜ்.
“என்ன நண்பா பிஸியா?” கேட்டவாறே உள்ளே நுழைந்தனர் திருமுருகனும், விஜயசந்தரும்.
“பிஸியெல்லாம் ஒண்ணுமில்லை!…ஆடிட்டர் ஸ்டேட்மெண்ட் அனுப்பியிருந்தார்…அதைத்தான் பார்த்திட்டிருந்தேன்” லாப்டாப்பை மூடியபடி சொன்னான் ஆனந்தராஜ்.
“என்ன சொல்லுது ஆடிட்டர் ஸ்டேட்மெண்ட்?” விஜய்சந்தர் கேட்க,
“வழக்கம் போல் லாபக் கணக்குதான்!…அதிலும் இந்த வருஷம் போன வருஷத்தை விட இரு மடங்கு லாபம்”
“வாவ்…பாராட்டுக்கள் ஆனந்த்” என்று இருவரும் சொல்ல,
“டேய்…என்ன என்னை மட்டும் பாராட்டறீங்க?…இது நம்ம மூணு பேரோட உழைப்பு….அதிலும் திருமுருகா…உன் ஆவிக் காதலியின் சப்போர்ட் நமக்கு நல்ல எனர்ஜியாயிருந்திச்சு!…” என்றான் ஆனந்தராஜ்.
“அவனோட ஆவிக் காதலி நமக்கு மட்டுமா ஹெல்ப் பண்ணிச்சு!…வாழ்க்கைல தனக்கு கல்யாணம்!னு ஒண்ணு நடக்கவே வாய்ப்பில்லை!ன்னு நொந்து போய்க் கிடந்த குள்ள குணாவுக்கு ஆவியுலகத்திலேயே ஒரு தரகரைப் பிடிச்சு….அவனுக்கு ஒரு கல்யானத்தையும் பண்ணி வெச்சிருக்கு!…ரியலி கிரேட்…” வாய் விட்டுப் புகழ்ந்தான் விஜயசந்தர்.
அந்த வினாடியில் திருமுருகனின் முகத்தில் லேசாய் சோகம் இழையோட, அதைப் படித்து விட்ட ஆனந்தராஜ், “என்ன முருகா உன் முகம் சட்டுன்னு சுண்டிப் போச்சு?…என்ன விஷயம்?…ஏதாச்சும் பிரச்சினையா?” கேட்டான்.
“ஒண்ணுமில்லை” சுரத்தேயில்லாமல் சொன்னான் திருமுருகன்.
“டேய்…முருகா…நீ சொல்ற தொணியிலேயே தெரியுது…நீ எதையோ மனசுக்குள்ளார போட்டுக் குழப்பிக்கிட்டிருக்கே!ன்னு…என்ன?ன்னு சொல்லித் தொலை” செல்லமாய்க் கண்டித்தான் ஆனந்தராஜ்.
“வந்து…என்னோட சங்கீதா கூடிய சீக்கிரத்துல என்னை விட்டுப் போயிடுவா” எங்கோ பார்த்துக் கொண்டு திருமுருகன் சொல்ல,
அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தான் விஜயசந்தர், “டேய் லூசு…அவ உன்னை விட்டுப் போய்…வருஷக் கணக்காச்சுடா”
“ம்ம்ம்…உண்மைதான்!…அவ…இந்த உலகத்தைப் விட்டுப் போனாலும் ஆவியுலகத்திலிருந்து என் கூட தொடர்பில்தானே இருந்திட்டிருக்கா!”
“ஆமாம்”
“இன்னும் கொஞ்சம் நாள்ல அங்கிருந்தும் போயிடுவா” கண் கலங்கினான் முருகன்.
முருகனின் சோகம் நண்பர்களை வெகுவாய்ப் பாதித்து விட, “டேய்…என்னடா?…என்னாச்சு உனக்கு?…என்னென்னமோ பேசறியே…ஏன்?” ஆனந்தராஜ் கேட்டான்.
“டேய்… மனிதன் இறந்த பின்னால் அவனுக்குள்ளிருந்து அவனை இயக்கிய “ஆன்மா”ங்கிற உள்ளுயிர் வாழ்ந்திட்டேதான் இருக்கும்!…மறுபிறவியும் எடுக்கும்!…அந்த மரணத்திற்கும்…மறுபிறவிக்கும் இடையில் கர்ம வினைகளுக்கேற்ப குறிப்பிட்ட காலம் வரை பொறிகளும்…புலன்களும் அற்ற ஆவியாக சூக்குமத்துடன் ஆவியுலகில் வாழும்…அதுக்கப்புறம் ஆவியுலகில் முக்தியடைந்து மறு பிறவி எடுக்கும்” முருகன் சொல்லிக் கொண்டே போக, நண்பர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நான் சொல்றது உங்களுக்கு புரியலை!ன்னு நெனைக்கறேன்!…நல்லா தெளிவா சொல்றேன் கேட்டுக்கங்க…ஆவிகளுக்கு அந்த ஆவியுலகிலும் ஒரு மரணம் உண்டு அதை “ஆவியுலக முக்தி”ன்னு சொல்லுவாங்க!…சங்கீதாவோட ஆவி…தன்னுடைய முக்தி நாடும் திறன் வளர்ச்சிக்குத் தேவையான நல்ல செயல்களையும், நல்லியல்புகளையும், இறையுணர்வையும் போதுமான அளவுக்கு வளர்த்துக் கொண்டு விட்டாள்!…அதனால்…விரைவிலேயே முக்தியடைந்து விடுவாள்!…அப்புறம் மறு பிறவி எடுத்து மண்ணுலகில் பிறப்பாள்!.”
“நீ சொல்றதைக் கேட்கும் போது…அவளை இனிமேல் தொடர்பு கொள்ள உன்னால் முடியாதா?” ஆனந்தராஜ் கேட்டான்.
முதலில் இடவலமாய்த் தலையாட்டி விட்டு, அடுத்த நிமிடமே மேலும் கீழும் தலையாட்டினான் முருகன்.
“டேய்….ஒண்ணு “இல்லை”ன்னு தலையாட்டு!…அல்லது “ஆமாம்”னு தலையாட்டு…இப்படி ரெண்டு மாதிரியும் ஆட்டினா…எப்படிடா?” விஜயசந்தர் கேட்க,
“எனக்கே தெரியலைடா!…நான் நேத்திக்கு ராத்திரி ரொம்ப நேரம் அவள் வரவுக்காக காத்திட்டிருந்தேன்!…அவள் வரலை!…” கரகரத்த குரலில் முருகன் சொல்ல,
“ஓ…அதை வெச்சு நீயே இப்படியொண்ணை கற்பனை பண்ணிக்கிட்டியா?”
“இது கற்பனை இல்லை!…உண்மை!…நம்ம குணாவும், அவன் மனைவி சுமதியும் ஃபர்ஸ்ட் நைட்ல…..அவங்களுக்கு திருமண ஏற்பாடு செஞ்சு வெச்ச பெரியவர் ஆவிக்கு நன்றி சொல்ல வேண்டி விடிய விடிய ட்ரை பண்ணியிருக்காங்க!…வரவேயில்லை!…கடைசில வேற ஒரு ஆவி வந்து “அந்தப் பெரியவர் ஆவி முக்தி அடைஞ்சிடுச்சு!”ன்னு சொல்லிட்டுப் போயிருக்கு!”
சில நிமிடங்கள் அமைதியாய் முருகனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தராஜ், “ஒருவேளை சங்கீதா ஆவியும்…அப்படி முக்தி அடைஞ்சிருக்குமோ?ன்னு சந்தேகப்படறியா?” கேட்டான்.
“ஆமாம்டா”
“கவலைப்படாதே!…மறுபடியும் இன்னிக்கு முயற்சி பண்ணிப்பாரு…நிச்சயம் வருவா!” நம்பிக்கையூட்டினான் விஜயசந்தர்.
நண்பன் கொடுத்த நம்பிக்கையில் அநத நாள் முழுவதையும் மகிழ்ச்சியோடு கழித்த முருகன், இரவானதும் முதல் வேலையாய் சங்கீதாவின் ஆவியை வரவழைக்க வேண்டி, கண்களை மூடிக் கொண்டு, “சங்கீதா…சங்கீதா” என்று முணுமுணுத்துக் கொண்டேயிருந்தான்.
அரை மணி நேரம்…
ஒரு மணி நேரம்….
இரண்டு மணி நேரம்…
அதிகாலை நான்கு மணி வரை அவன் செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போய் விட,
உடல் மற்றும் மனச் சோர்வு அவனைப் படுக்கையில் தள்ளி விட, உறங்கிப் போனான்.
அடுத்து வந்த முன்று நாட்களும் அவனுக்கு சங்கீதாவுடனான ஆவித் தொடர்பு கிடைக்காமலே போய் விட, நடைப் பிணமானான். உணவும், உறக்கமும் தொலைந்து போனதால், உருக்குலைந்து போய்க் கொண்டிருக்கும் முருகனைப் பார்த்து அவன் நண்பர்கள் மிகுந்த கவலைக்குள்ளாயினர்.
“ஆண்டவா!…இந்தப் பூவுலக வாழ்வில்தான் அவங்க ரெண்டு பேரையும் சேர்ந்து வாழ விடாமல் தடுத்தே!…ஆறுதலாய்க் கிடைத்த ஆவித் தொடர்பையும் இப்படி பாதியிலேயே அறுத்து விட்டாயே?…இது என்ன நியாயம்?” ஆனந்தராஜ் ஆண்டவனிடம் கேள்வி கேட்டான்.
நான்காம் நாள் இரவு, தன் கவலையை மறக்க, வழக்கமாய் எல்லோரும் கையாளும் மதுப் பழக்கத்தைத் தானும் கையிலெடுத்தான் திருமுருகன்.
“என்னை மன்னிச்சிடு சங்கீதா….என்னால் உன்னை மறக்க முடியலை!…என் நெஞ்சே வெடிச்சிடும் போலிருக்கு!…” வாய் விட்டுச் சொல்லியபடியே பொன்னிற திரவம் நிறைந்திருந்த அந்த பாட்டிலைத் திறந்து, கண்ணாடி டம்ளரில் மதுவைச் சாய்த்தான்.
“க்ளக்…க்ளக்” என்ற சத்தத்தோடு டம்ளரில் நிறைந்த மதுவிற்குள் ஐஸ் கட்டிகளைப் போட்டான்.
நிதானமாய் அந்த டம்ளரைக் கையிலெடுத்து, “என்னை மன்னிச்சிடு சங்கீதா….”என்று உரக்கக் கத்தியவாறே தன் வாயருகே அவன் அதைக் கொண்டு போக,
யாரோ தட்டி விட்டது போல் அந்த டம்ளர் அவன் கையிலிருந்து தெறித்துப் போய் விழுந்தது.
“எப்படி…எப்படி…என் கையிலிருந்த டம்ளர் அங்கெ போய் விழுந்தது?” சுற்றும்முற்றும் பார்த்தான்.
யாருமேயில்லை.
மீண்டுமொரு முறை வேறொரு டம்ளரில் மதுவை நிரப்பிக் குடிக்கப் போனான்.
மறுபடியும் முன்பு போலவே டம்ளர் தூரப் போய் விழ,
அவனுக்குள் அந்த சந்தேகம் எட்டிப் பார்த்தது. “ஒரு வேளை சங்கீதாவின் ஆவிதான் என்னைத் தடுக்குதோ?…அப்படியிருந்தா…அவ நேரில் வருவாளே?” யோசனையுடன் நாலாப்புறமும் திரும்பித் திரும்பி, “சங்கீதா…சங்கீதா” அழைத்தான்.
“சொல்லுங்க” என்ற குரல் அவன் காதோரம் கேட்க,
“என்னம்மா?…எங்கேம்மா போனே இத்தனை நாளா?…உன்னைப் பார்க்காம நான் துடிச்சுப் போயிட்டேன் தெரியுமா?” தழுதழுத்த குரலில் சொன்னான்.
“தெரியும்ங்க!…நான் கடந்த மூணு நாளா…ஒரு முக்கியமான வேலையை முடிப்பதற்காக ஊட்டி வரை போயிருந்தேன்” ஆவியின் குரல் மட்டுமே வந்தது.
“ஊட்டிக்கா?…எதுக்கு?…என் கிட்டே சொல்லவேயில்லை” என்றவன், “அது செரி…என்ன இன்னிக்கு நேர்ல வராம குரல் மட்டும் குடுக்கறே?…என்னாச்சு?…என் மேல் கோபமா?” வெற்றிடத்தைப் பார்த்துக் கேட்டான்.
ஒரு நீண்ட அமைதிக்கு பின், “அது…வந்து…நான் உருவம் காட்டும் தகுதியை இழந்து விட்டேன்!…என் சூக்கும உடல் கரைந்து போய் விட்டது…இனி நான் குரல் மட்டுமே குடுப்பேன்” என்றது குரல்.
“சங்கீதா…நீயும் அந்த பெரியவர் மாதிரி ஆவியுலக முக்தி அடைஞ்சிட்டியா?” கேட்டான் திருமுருகன்.
“இல்லைப்பா…நான் அந்த ஆவியுலக முக்தி அடையும் தகுதியையும் இழந்து விட்டேன்” என்று ஆவி சொல்ல,
“ஏன்?…நீ ஆவியுலகில் இருந்தாலும் நல்லவைகளை மட்டும்தானே செய்தாய்?…அப்புறம் ஏன் உனக்கு தகுதியில்லைன்னு சொல்றே?” சந்தேகமாய்க் கேட்டான் முருகன்.
“இருந்தேன்…அப்படித்தான் இருந்தேன்…ஆனா…நாலு நாளைக்கு முன்னாடி…என்னைச் சிதைச்சு…தற்கொலை பண்ண வெச்சு…இன்னிக்கு நான் ஆவியுலகத்தில் திரியறதுக்குக் காரணமாயிருந்த அந்த மூணு பேரையும் பார்த்தேன்!…”
“அதாவது…அந்த ஆட்டோ டிரைவரையும்…அந்த ரெண்டு இளைஞர்களையும்…அப்படித்தானே?” முருகன் கேட்டான்.
“ஆமாம்…அந்த மூணு பேரும் இன்னும் நண்பர்களாய்த்தான் இருக்காங்க!…என்னை ஏமாற்றிய மாதிரியே ஒரு சின்னப் பெண்ணை ஏமாற்றி…நைஸா பேசி ஊட்டிக்கு…காரில் கூட்டிட்டுப் போனான் அந்த ஆட்டோ டிரைவர்!…அவன் நண்பர்களும் அவனைப் பின் தொடர்ந்து பைக்கில் போனார்கள்!…அந்த விஷயம் எனக்குத் தெரிய வந்ததும் நான் துரத்திட்டுப் பின்னாடியே போனேன்” ஆவி சொல்ல,
“எனக்கொரு தகவல் சொல்லியிருந்தா…நானும் உன் கூட வந்திருப்பேனல்ல?” என்றான் திருமுருகன்.
“இல்லை…அவனுகளுக்கு நானே என் கையால் தண்டனை கொடுக்கணும்!…அதனால் நான் மட்டுமே போனேன்” என்றது ஆவி.
“என்னாச்சு?…தண்டனை குடுத்திட்டியா?”
“ம்…காரில் போன ஆட்டோக்காரனை ஒரு ஆக்ஸிடெண்ட் உருவாக்கி விபத்து நடந்த இடத்திலேயே மரணிக்க வெச்சேன்”
“அய்யய்ய…அந்தப் பொண்ணு?” அவசரமாய்க் கேட்டான் முருகன்.
“அந்தப் பொண்ணு லேசான அடியோட தப்பிச்சுக்கிச்சு!…அதே மாதிரி பைக்ல வந்த ரெண்டு பேருக்கும்…பைக்கை பஞ்சராக்கி…சாலையோர பள்ளத்தாக்கில் விழ வெச்சு மரணப் பரிசு கொடுத்தேன்” சொல்லி முடிக்கும் போது சங்கீதா ஆவியின் குரல் மிகவும் பலகீனமாய் ஒலிக்க,
“ஆமாம்…நீண்டநாள் பழி வாஅங்கும் உணர்ச்சியை நீ தீர்த்துக்கிட்டதும் உன் குரலில் சந்தோஷம் தானே இருக்கணும்?…அதுக்குப் பதிலாக சோகம் வெளிப்படுதே….ஏன்?”
“ஆவியுலக வாழ்க்கைல…இது வரைக்கும் நல்லவைகளையே செஞ்சு…ஆவியுலக முக்திக்கு தயாராயிருந்த நான்…இப்ப இந்த மூணு பேரைப் பழி வாங்கியதில்…என்னுடைய நல்ல பெயரை இழந்துட்டேன்!…இனி எனக்கு முக்தி கிடையாது…காலம் பூராவும் இப்படியே ஆவியாய் உலாத்திக்கிட்டேயிருக்க வேண்டியதுதான்” சொல்லி விட்டுத் தேம்பியது ஆவியின் குரல்.
அதைக் கேட்டு மிகவும் மனம் நொந்து போன திருமுருகன், “சரி…அதுக்காக…என் கண் பார்வைக்குக் ம்கூடவா நீ வரக் கூடாது?” கேட்டான்.
“வர முடியாதுப்பா…அந்த தகுதியும் இந்தப் பழி வாங்கலில் போய் விட்டது”
“அப்ப…நான் இனிமேல் உன்னைப் பார்க்கவே முடியாதா?” கரகரத்த குரலில் கேட்டான் முருகன்
“ம்ம்ம்…பார்க்க முடியும்!…”
“எப்போ?…எப்படி?” பரபரத்தான் திருமுருகன்.
“நீ உன் ஆயுள் முடிந்து, இந்த ஆவியுலகத்திற்கு வரும் போது…என்னை இங்கே பார்க்கலாம்…பேசலாம்!…அதுவரைக்கும் உனக்காக நான் இங்கே காத்திருப்பேன்” என்றது ஆவி.
சில நிமிடங்கள் யோசித்த முருகன், “அதுவரைக்கும் ஏன் காத்திருக்கணும்?…இப்பவே…இந்த நிமிஷமே நான் செத்திட்டா…உன் கூட வந்து சேர்ந்திடுவேனல்ல?” கண்களைப் பெரிதாக்கிக் கொண்டு திருமுருகன் சொல்ல,
“முட்டாள்தனமாய்ப் பேசாதே!…இந்த ஜென்மத்தை பூரணமாய் முடித்து விட்டு வா!…காத்திருக்கேன்”
“இல்லை…நான் உடனே உன்னைப் பார்க்கணும்” அடம்பிடித்தான்.
அவன் பிடிவாதத்தைக் கண்டு நொந்து போன சங்கீதாவின் ஆவிக்கு “ஏண்டா இவனுக்கு அதைச் சொன்னோம்?” என்றாகி விட்டது.
“வேண்டாம் முருகா…தப்பா பேசாதே!…நாந்தான் உனக்காக காத்திட்டிருகேன்!னு சொல்றேனல்ல?…அதுக்குள்ளார என்ன அவசரம்?” கோபமாய்க் கேட்டது ஆவி.
“சொல்லட்டா?…ஊட்டில வெச்சு நீ பழி வாங்கிய அந்த மூன்று பேரோட ஆவியும்…ஆவியுலகத்தில் வெச்சு உன்னை தொந்தரவு பண்ணினா…உன்னை யார் காப்பாத்துவாங்க?” கேட்டான்.
“அதை நான் பார்த்துக்கறேன்…நீ அமைதியாயிரு”
“இல்லை சங்கீதா!…ஐ வாண்ட் டு ஸீ யூ இம்மிடீயட்லி!…நான் உடனே உன்னைப் பார்த்தாகணும்” வெறி பிடித்தவன் போல் கத்தியவன், “விடு….விடு”வென்று அறைக்கு வெளியே வந்து மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் மின்னல் வேகத்தில் ஏறினான்.
அவனைத் துரத்திக் கொண்டே வந்த ஆவி, “அய்யோ…முருகா…வேண்டாம்!…வேண்டாம்!” என்று கத்திக் கொண்டே வந்தது.
மொட்டை மாடியை அடைந்து அதன் கைப்பிடிச் சுவரில் ஏறி நின்ற திருமுருகன், “மனிதன் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல!…அதையும் தாண்டிப் புனிதமானது” என்று சொல்லிக் கொண்டே, கீழே குதித்தான்.
மெல்ல…
மெல்ல…
மெல்ல…
தரையை நோக்கிப் பறந்து வந்த முருகன், தரையில் பட்டுச் சிதறிய வேகத்தில் அவனுள்ளிருந்த உயிர்ப் பறவை, “ஜிவ்”வென்று விண்ணிலேறி, ஆவியாய்க் காத்துக் கொண்டிருந்த சங்கீதாவின் அருகில் நிற்க,
உயிரை விடக் காதலே பெரிதென்று நிரூபித்த அந்த இளைஞனுடன் கை கோர்ந்துக் கொண்டு உற்சாகமாய் மிதந்தது சங்கீதாவின் ஆவி.
(முற்றும்)