அஷ்ட நாகன் – 23| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 23| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

நாகங்கள் கனவில் வந்தால் என்னன்ன பலன் என்பதை இதற்கு முந்தைய அத்தியாயங்களில் “நாக சாஸ்திர ஏடுகளின்” மூலம் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் நாகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை மேலும் விளக்கிக் கூறுகிறேன். அவை,

1. ஒரு நாகப்பாம்பு படமெடுத்த நிலையில் ஒருவரின் கழுத்தை சுற்றுவது போல் கனவு கண்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். மிகப்பெரிய செல்வ செழிப்பு ஏற்படும்.

2. ஒருவரின் உடலையோ அல்லது காலையோ நாகம் சுற்றுவது போல் கனவு கண்டால் கஷ்ட காலம் வரப் போகிறது என்று அர்த்தமாகும். எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல் படவும்‌‌.

3. ஒருவர் நாகத்தை விரட்டுவது போல கனவு கண்டால் கஷ்ட காலம் என்று அர்த்தமாகும். இதனை தவிர்க்க லட்சுமி பூஜை அல்லது கணபதி ஹோமம் செய்து நன்மை அடையலாம்.

4. ஒரு நாகமானது ஒருவரைத் தீண்டி குருதி வெளியேறுவது போல் கனவு கண்டால் நல்ல காலம் பிறக்க போகிறது என்று பொருளாகும்‌.

5. நாகங்களை கொல்வது மாதிரி கனவு கண்டால் எதிரிகள் தொல்லை அகலும் (நிஜத்தில் நாகத்தை கொல்வது மிகப் பெரிய பாவமாகும். நாக தோஷம் ஏற்படும்).

6. கரு நாகம் தீண்டுவது போல கனவு கண்டால் கண்டம் ஏற்படும்.இதனை போக்க சிவன் கோயிலுக்குச் சென்று சிவன் சன்னதிக்கு பின் விளக்கு ஏற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும்.

7. கனவில் தங்க நிற நாகத்தை காண்பது மிகவும் புண்ணியமாகும்‌.தெய்வீக சக்தி நிறைந்தவர்களுக்கு மட்டுமே சொர்ண நாகத்தின் தரிசனம் கிடைக்கும்.

8. இரண்டு நாகம் படமெடுத்து ஆடுவது போல் கனவு கண்டால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

9. படமெடத்த நிலையில் ஒரு நாகத்தை கனவில் கண்டால் எதிரிகளால் தொல்லை ஏற்படும். எதிலும் எச்சரிக்கையும் நிதானமும் தேவை.

10. நாகங்களை வழிபடுவதன் மூலம் நம்மை நாமே உணர்ந்து முக்திக்கான சித்திகளை அடைய முடியும்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் பாதி தூரம் சென்றதும் ஒரு வழி பிரிகிறது.அந்த வழியில் பயணித்தால் ஒரு அடர் வனம் தென்படும்.அந்த அடர் வனத்தில் சிறிது தூரம் பயணித்தால் “அகத்திய முனிவர்” தவம் செய்த பாறையும் குகையும் உள்ளது.

அகத்தியர் சித்தர்களின் முதன்மை சித்தராக கருதப்படுகிறார். போகர் பிரானிடம் கிரியா யோகத்தின் அடிப்படைகளைக் கற்ற இமயத்து மகான் மகா அவதார் பாபாஜி அவர்கள் பொதிகை மலையில் அகத்தியரிடம் கிரியா யோக தீட்சை பெற்று ஒளி உடம்பை பெற்று இன்றளவும் இமயமலையில் வாழ்ந்து வருகிறார்.

அகத்தியர் குகை !

அகத்தியர் குகைக்கு சற்று அருகில் ஒரு பாறை மீது அமர்ந்த நிலையில் கண்களில் மிரட்சி பொங்க பெளர்ணமி நிலவை பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்தன்.

கொல்லிமலை காட்டில் தான் எங்கிருக்கிறோம் என்றே அரவிந்தனால் கணிக்க முடியவில்லை.ஒருவேளை, இந்த இரவு தான் தன் கடைசி இரவாக இருக்குமோ என்று கேள்வி அவன் மனதை குத்தி கிழித்தது.

இனி தன் வாழ்வில் நந்தனையும் யோகினியையும் சந்திக்க முடியுமா? முடியாதா? என்பதை எண்ணி எண்ணி அரவிந்தன் ஒரு புழுவாக துடித்தான்‌.உதவிக்கு அழைக்கலாம் என்றால் அவனருகாமையால் மனித நடமாட்டம் இருப்பதாகவே தெரியவில்லை. அதுசரி, இந்த அடர்ந்த காட்டில்! அதுவும் இந்த இரவு நேரத்தில் யாருக்குத்தான் துணிந்து நடமாட தைரியம் வரும்.பயத்தில் அரவிந்தனின் தொண்டை அடைக்க ஆரம்பித்தது.

ஒரு ஆண் எக்காரணம் கொண்டும்,எந்த சூழலிலும் எதற்காகவும் அழக் கூடாது என்று சொல்லி சொல்லி இச்சமூகம் அவனது உணர்வுகளுக்கு மிகப்பெரிய பூட்டு போட்டுள்ளது.அதனால் தான் பல ஆண்கள் தங்கள் கண்ணீரை தங்களுக்குள்ளே பதுக்கிக் கொண்டு ஒரு சுமைதாங்கி போல வாழ்ந்து வருகின்றனர். இதற்கு அரவிந்தனும் விதிவிலக்கல்ல !

தனிமை மற்றும் பயம் அப்பிக் கொள்ள அரவிந்தனின் கண்கள் அவனை அறியாமலே கண்ணீரை உதிர்த்தது.

அவனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காற்றில் கலந்து வந்த புல்லாங்குழலின் இசை அரவிந்தனுக்கு கிலி மூட்டியது.

ஆம் ! ஆம் ! இது புல்லாங்குழல் சித்தரின் வருகைக்கான முன் அறிவிப்பு’ என்று அரவிந்தனின் ஆறாவது அறிவு அறிவுறுத்தியது.

அவனின் யூகத்தை மெய்ப்பிக்கும் வகையில் புல்லாங்குழல் சித்தரும் சில நொடிகளில் அரவிந்தன் முன் ஜம்பமாய் வந்து நின்றார்‌.

“என்ன அரவிந்தா ரொம்ப குழப்பமா இருக்குற மாதிரி இருக்கு?” என்று புல்லாங்குழல் சித்தர் அரவிந்தனிடம் ஒரு புதிர் போட்டார்.

‘புல்லாங்குழல் சித்தர் எப்படி தன் பெயரை சரியாக கூறுகிறார்’ என்று அரவிந்தன் தன் மனதில் எண்ணி பேராச்சர்யம் அடைந்தான்.

“சாமீ… நீங்க… நீங்க… நீங்க எப்படி இங்க?” என்ற திக்கித்தினறி அரவிந்தனிடம் புல்லாங்குழல் சித்தரிடம் கேள்வி எழுப்பினான்.

“அரவிந்தா… நான் இந்த கொல்லிமலை காடே கதின்னு பல காலமாக சுத்தி திரிஞ்சிக்கிட்டு இருக்கேன். இந்த கொல்லிமலையில இருக்குற நாக சாஸ்திர ஏடுகளை அடையறது தான் என் நோக்கம்.அந்த ஏடுகள் மட்டும் எனக்கு கிடைச்சிடிச்சின்னா, மாந்திரீகம், மருத்துவம் எல்லாம் எனக்கு சித்தி ஆயிடும் அதுமட்டுமில்லாமல், நான் நித்திய சிரஞ்சீவியாக வாழ்வேன். அந்த ஏடுகள் இந்த காட்டுல எங்கையோ இருக்குற “அஷ்டநாக லிங்கேஸ்வரர்” கோயில்ல தான் கண்டிப்பாக இருக்கனும்.அந்த கோயிலுக்கு என்னை மாதிரி சாதாரண மனுஷங்க போக முடியாது. நாக அம்சம் உள்ள நபர்கள் தான் போக முடியும்.”

“சாமி ! நான் உங்களை ஒரு சித்தர்ன்னு நினைச்சேன்.ஆனால், நீங்க நாக சாஸ்திர ஏடுகளை அடைய நினைக்குற பேராசை பிடிச்ச மனுஷனாக இருப்பீங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல. எனக்கு ஒரு உண்மை கண்டிப்பாக தெரிஞ்சாகணும். இந்த காட்டுல “அஷ்டநாக லிங்கேஸ்வரர்” கோயில் உண்மையாகவே இருக்கா?” என்று தன் மனதில் பட்டதையெல்லாம் ஒளிவு மறைவின்றி அப்படியே அரவிந்தன் கேட்டுவிட்டான்.

“அரவிந்தா ! ஒரு சித்தன் தன்னை என்னைக்கும் சித்தன்னு சொல்லவும் மாட்டான்,வெளிகாட்டவும் மாட்டான். அதுமட்டுமில்லாமல், நான் என்னை சித்தன்னு ஒரு முறை கூட சொன்னது கிடையாது.இந்த கொல்லிமலை மலை வாசிகள் தான் என்னை சித்தர்ன்னு சொல்றாங்க.இந்த மக்களோட அறியாமைக்கு நான் பொறுப்பு இல்ல. இன்னொரு முக்கியமான விஷயம் சொல்றேன் கவனாமக கேட்டுக்கோ. நாக சாஸ்திர ஏடுகள் எனக்கு மட்டும் தேவைப்படல உனக்கும் தான் தேவைப்படுது.உன் கனவு பலிக்குமா? பலிக்காதா? அப்படின்னு இந்த பெளர்ணமி இரவே தெரிஞ்சிடும்‌.உன்னை காப்பாத்தணும்னா நாக சாஸ்திர ஏடுகள் கிடைச்சாதான் காப்பாத்த முடியும்.அந்த நாக சாஸ்திர ஏடுகள் இருக்குற “அஷ்டநாக லிங்கேஸ்வரர்” கோயிலுக்கு உன்னால தான் போக முடியும்.ஏன்னா நீ நாக அம்சம் உள்ளவன்.உடனே ‘கோரக்கர் குகை’ பக்கம் போ.உனக்கே எல்லாம் புரியும்” என்று நறுக்கு தெறிக்க கூறினார்.

அவர் தன்னை நாக அம்சம் பொருந்தியவன் என்று கூறியதைக் கேட்டு அரவிந்தன் பேரதிர்ச்சி அடைந்தான். ஒருவேளை ‘தனக்கு ஏற்பட்ட கனவு பலித்துவிடுமா?தான் ஒரு நாக கன்னியால் தீண்ட பட்டு இறந்துவிடுவோமா?’ என்று தனக்குத்தானே கேள்விகள் கேட்டுக் கொண்டான்.

அரவிந்தன் புல்லாங்குழல் சித்தரிடம் கேள்வி எழுப்பவதற்குள், புல்லாங்குழல் சித்தர் தன் வசமிருந்த ‘மாரண மையை’ ஒரு குப்பியில் இருந்து எடுத்து அரவிந்தனின் தலையில் பூசினார். அவர் அந்த மையை பூசிய சில நொடிகளில் அரவிந்தன் ஒரு அடிமையைப் போல அவர் முன் கைக்கட்டி வாய்ப்பொத்தி நின்றான். மாரண மையை மாந்திரீகத்தில் கை தேர்ந்தவர்கள் தன் வசம் வைத்திருப்பர்‌. இந்த மையை ஒருவர் உச்சந்தலையில் பூசிவிட்டால், அந்த நபர் மை பூசிய நபருக்கு சில மணி நேரம் கைப்பாவை போல செயல்படுவார். ஒரு வேளை இந்த மை குறிப்பிட்ட நேரத்திற்குள் அழிந்து விட்டால் அந்நபர் சுயநினைவிற்கு வந்துவிடுவார். சில நிமிடங்களில் அந்நபர் இயல்பாக செயல்பட ஆரம்பித்து விடுவார்.

“அரவிந்தா…இனி நீ என் அடிமை !” என்று கூறிவிட்டு புல்லாங்குழல் சித்தர் என்ற அந்த நபர் சற்று உரக்க சிரிக்க ஆரம்பித்தார்.

“ஆம்.நான் உங்கள் அடிமை.ஆணையிடுங்கள் குருவே ! நான் என்ன செய்ய வேண்டும்?” என்று மிக பவ்யமாக ஒரு சேவகன் போல கேள்வி எழுப்பினான்.

“அரவிந்தா ! சற்றும் தாமதிக்காமல் உடனே ‘கோரக்கர் குகை’ நோக்கி செல். அங்கே சென்றதும் மற்றது அனைத்தும் உனக்கு தானாக புரிய வரும்.வெற்றியோடு திரும்பி வா ! வரும்போது நாக சாஸ்திர ஏடுகளோடு வா ! உனக்காக நான் இலங்கையே காத்திருப்பேன்” என்று ஆவேசமாக புல்லாங்குழல் சித்தர் கூறினார்.

“தாங்கள் சொன்னதை என் சிரமேற்கொண்டு செய்து முடிக்கிறேன். வெற்றியோடு வருகிறேன்” என்று கூறிவிட்டு அரவிந்தன் கோரக்கர் குகை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.

– தொடரும்…

< இருபத்தி இரண்டாம் பாகம்

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...