சிவமலர் – மொட்டு – 7 | பஞ்சமுகி
சிவமலர் வீட்டுக்குக் கிளம்பும் பொழுது நிலவுப்பெண் முகம் காட்டி விட்டாள். அதற்குள்ளாகவே கற்பகம் வாசலுக்கும் தெருமுனைக்குமாய் ஐம்பது தரமாவது நடந்திருப்பாள்.
“வந்துடுவா அத்த! நீங்க வாங்க!”
“இல்ல நந்தினி. பெண் பிள்ளையை வேலைக்கு அனுப்பிட்டு இருட்டியும் வரலேன்னா பயமாத் தானே இருக்கு. காலம் கெட்டுக் கிடக்கும்மா! எப்பவும் ஆறு மணிக்கெல்லாம் டாண்னுன்னு வந்துடுவா.”
“இன்னிக்கு வேலை ஜாஸ்தியா இருந்திருக்கும் அத்த! ஆமா.. பிரியா எங்க போயிருக்கா? இன்னும் காணலை?”
“மொட்டை மாடியில் விளக்கு எரியுதே. அங்க உட்கார்ந்து படிச்சிட்டு இருப்பா! ப்ரியா.. ஏய்.. ப்ரியா! இன்னுமா படிக்கற? மணி எட்டு ஆச்சு.. கீழ வா!” கற்பகம் கீழிருந்து குரல் கொடுத்தாள்.
சிவமலரின் அழகுக்குச் சற்றும் குறைந்தவள் இல்லை பிரியா. எனக்குப் பிறந்த இரண்டு பெண்களும் தங்கச் சிலைகள் என்று கர்வமாகத் தன் கணவர் சிவகடாட்சத்திடம் சொல்லிச் சிரித்தவர் தான் கற்பகம். சிவகடாட்சம் காலமானதும், மூத்த மகன் ஈஸ்வரும் காலமானதும் அவரது மனோநிலையே மாறிப்போனது. பெண்களை மருந்துக்கும் கூட அழகி எனக் கொஞ்சுவதில்லை. மயூரியும் அத்தைகளைக் கொண்டு பிறந்திருந்தது தான் சிறப்பு.
அம்மாவின் குரல் கேட்டுத் தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு படிகளில் தாவித் தாவி இறங்கி வந்தாள் பிரியா.
“என்னம்மா? இன்னும் மலரக்கா வரலயா? பாவம்மா அக்கா.. எவ்வளவு நேரம் வேலை பார்க்கறா. எனக்கெல்லாம் இந்த கம்ப்யூட்டர் வேலையே வேணாம்பா. டீச்சர் வேலைக்குத் தான் போகப் போறேன். சின்னப் பசங்களோட பசங்களா கும்மியடிக்கலாம்”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே தெருமுனை திருப்பத்தில் சிவமலரின் தலை தெரிந்தது. களைத்துப் போய் நடந்து வந்தாள்.
“யம்மா.. அக்கா வந்தாச்சு!” பிரியா கத்தினாள்.
குழந்தை மயூரி தூங்கியிருக்க.. அண்ணி, அம்மாவுடன் பிரியாவும் வெளியே நின்றிருப்பதைப் பார்த்து.. என்ன பிரச்சனையோ எல்லோரும் வெளியில் நிற்கிறார்களே என இரண்டெட்டு நாலெட்டாய் ஓடி வந்தாள்.
“என்னாச்சும்மா? மயூரிக்கு ஏதாவது…? ” குழந்தை அவ்வப்போது சளியில் அவதிப்படுவாள். அதனால் பதைப்புடன் கேட்டாள்.
“இல்லை மலர். உனக்காகத் தான்.. உன்னைக் காணோமேன்னு வெளியில் நிக்கறோம்!” அண்ணி சொன்னாள்.
“நல்லா நின்னீங்க போங்க. பயந்தே போயிட்டேன்”
“ம்க்கும்.. அம்மா உனக்காக பயப்படறாங்க. நீ எங்களுக்காகப் பயப்படற.. நல்ல குடும்பம் தான் நாம.”
அம்மாவுக்கு கண்ணீர் பொங்கி வந்தது. சிவமலர் அணைத்துக் கொண்டாள்.
“ஏம்மா.. வேலை நிறைய இருந்துது. போன் பண்ணிச் சொல்லி இருக்கலாம். மறந்துட்டேன்..ஸாரிம்மா!”
“ஆறு பேரா இருந்து நாலானோம்டி. அரசாளப் புருஷன் இல்லா வீடா ஆகிப் போச்சேடி நம்ம வீடு. பொம்பளைங்களா உட்கார்ந்திருக்கோம். ஒருத்தரக் காணலன்னா கூட மனசுக்கு கெதக்குன்னு இருக்கு.”
ஒன்றும் பதில் சொல்லாமல் வீட்டுக்குள் அம்மாவை அழைத்துச் சென்றாள் சிவமலர். அவளுக்குத் தெரியும் இது போன்ற சமயங்களில் மௌனத்தின் சக்தி அதிகம் என்று. பேசப் பேச அம்மாவின் விஷயத்தில் துக்கம் அதிகமாகும். அப்பா , அண்ணன் என்று ஒருமூச்சு அழுது தீர்ப்பார். இனி லேட்டாச்சுன்னா மறந்துடாம போன் பண்ணிச் சொல்லிடணும் என நினைத்துக் கொண்டாள்.
நாட்டு வைத்தியர் கொடுத்த மூலிகை எண்ணெய்யை கற்பகத்தின் காலில் தடவி விட்டுப் படுத்துக் கொள்ளச் சொன்னாள்.
“சாப்பிட்டு வா மலர். எனக்கு வர வர எதையும் தாங்கற சக்தியே இல்லாமப் போகுது. உங்க அண்ணி அடுப்பை ஒழிச்சுக்குவா. நீ சாப்பிட்டு வந்து படு. களைப்பா இருக்க.” கற்பகம் வற்புறுத்தினார்.
இரண்டு படுக்கையறை உண்டு கீழே. மேல் மாடியில் ஒரு பெரிய அறை. அதன் பாதி மொட்டை மாடி. அந்த அறைக்கும் ஈஸ்வர் போன பின்பு யாரும் போவதில்லை. ஆக புழங்குவது எல்லாம் கீழே தான்.
நந்தினி கேஸ் அடுப்பில் அப்பளம் சுட்டுக் கொண்டிருந்தாள். “மதியம் வைத்த சாதமே இருக்கு மலர். கொஞ்சம் ரசம் ஊத்திச் சாப்பிடு. மோர் இருக்கு!”
“அடேங்கப்பா. தேவாமிர்தம் அண்ணி!”
வரவுக்குள் செலவை அடக்கி வாழும் குடும்பம் அது. இல்லையென்றால் சமாளிக்க முடியாதே.
சிவமலர் அம்மாவின் அறையில் ஓரமாகப் படுத்திருக்க நந்தினியும் பிரியாவும் மயூரியுடன் பக்கத்து அறையில் உறங்கினாலும் கதவு திறந்தே வைத்துக் கொள்வர்.
நல்ல தூக்கத்தில் இருந்த சிவமலருக்கு அம்மா முனங்கும் சப்தம் லேசாகக் கேட்டது. எழுந்து பார்த்தாள். கற்பகத்தின் உடல் அனலாய்க் கொதித்துக் கொண்டிருந்தது.
“மலரு.. உன்னைக் காணலையே.. எங்க போன?” அனத்தினாள்.
“ஆபீஸுக்கு போன் பண்ணிப் பாக்குறியா நந்தினி? இன்னும் காணோமே..” மீண்டும் தூக்கத்திலேயே கேட்டாள்.
முழித்த சிவமலர்.. “அம்மா.. நான் இங்க தான் இருக்கேன்..இதோ உன் கூட!” சொன்னவள் அம்மாவின் உடல் அனலாய்க் கொதிப்பதையும், தன்னிலை மறந்து அவள் பேசுவதையும் கண்டு.. “அண்ணி! அண்ணி!” என அழைக்க.. நந்தினி சத்தம் கேட்டு ஓடோடி வந்தாள்.
இன்னும் விழிக்க வில்லை கற்பகம்.
“மலரு.. இப்படிக் கஷ்டப் படுறியே தாயி. அன்னிக்கு மட்டும் பெரியவர் மனசு வைச்சிருந்தாருன்னா.. சொத்துக் காரிடி நீ..சொத்துக் காரி!” புலம்பினார்.
யாரு சொத்துக்காரி? நாமளா? சொத்து இருந்துமா இப்படி சுட்ட அப்பளம் தின்னு காலத்தை ஓட்டறோம். நினைத்த சிவமலர்..
“இப்பவும் சொத்துக்காரி தான்ம்மா. அன்புள்ள நீங்க மூணு பேருமே எனக்குப் பெரிய சொத்து தான். அண்ணி! அந்த க்ரோசின் மாத்திரையை எடுங்க. தண்ணி கொண்டு வாங்க.”
அம்மாவை எழுப்பி மாத்திரையைக் கொடுத்தாள். சிவமலரின் கையைப் பிடித்துக் கொண்டே மீண்டும் உறங்கி விட்டாள். மலரும், நந்தினியும் உறங்கவே இல்லை.
என்ன சொன்னாள் அம்மா? அப்பாவும், அண்ணனும் போன பிறகு ஆரம்பித்த வாழ்க்கை அப்பாவின் சேவிங்க்ஸ் கரைந்த பின் இழுபறியானது என்றால் அண்ணனின் காலத்துக்குப் பின் இன்னும் மோசமாக ஆகிப் போனதே. அதனால் தானே நான் சட்டென்று வேலைக்குப் போனது!
யோசனையில் அண்ணியைத் திரும்பிப் பார்த்தவள்..
“பூர்வீகச் சொத்து இருக்குமோ அண்ணி?”
“இருக்கலாம் மலர். காலையில் அம்மா கிட்ட விபரம் கேட்போம். மனசைப் போட்டு உழப்பிக்காம தூங்கு.”
அண்ணி கண்மூடிக் கிடக்க இவள் உறக்கமும் வராது மேல்புறச் சுவரையே வெறித்துப் படுத்திருந்தாள். மின்னல் கீற்றாய் ஒரு வரி தொடங்கி விறுவிறுவென்று கோடுகள் அங்கும் இங்குமாய் வித்தை போல் நெளிந்து செல்ல சிவமலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மேற்புறச் சுவரில் கண்ணுக்குத் தெரிந்தது அது. இருதலைப் பறவை வாயில் கவ்விய நாகங்களுடன். மேலே ஈஸ்வர் அண்ணா அறையில் பார்த்தது இங்கே உத்திரத்தில் கண்முன்னே. யார் வந்து இப்போது வரைந்தார்கள்? சிவமலர் கண்ணைக் கசக்கிக் கொண்டு திரும்பவும் மேலே பார்த்தாள். இம்முறை எதுவும் தெரியவில்லை. தூக்கம் தொலைந்தது அவளுக்கு.
காலையில் கற்பகம் தெளிவாகி இருந்தாள். ஆபீஸுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த மலர் கேட்டாள்.
“ஏம்மா.. நமக்கு உறவுக்காரங்க யாரும் இருக்காங்களா? ஏன் யாருமே நம்ம வீட்டுக்கு வரதில்ல?”
“என்னத்துக்கு? இருக்கறதையும் சுரண்டறதுக்கா? அடிப்போடி.. ஏழையா இருக்கற உறவாவது நம்மைத் தேடி வந்து ஆசையா எப்படிம்மா இருக்கன்னு விசாரிக்கும். இந்தப் பணக்காரன் இருக்கானே.. நம்மக் கிட்ட பேசக் கூடக் காசு கேட்பான். தொலையாத உறவுகளைத் தொலைப்பது பணம் தான்டி மலர். அத ஞாபகம் வைச்சுக்கோ. எத்தனை சம்பாதிச்சாலும் அதை அன்பா மாத்தி இங்க வைச்சுக்கோ..(நெஞ்சைத் தொட்டுக் காண்பிக்கிறாள்) இங்க ஏத்திக்காதே..( தலையைத் தொட்டுக் காண்பிக்கிறாள்)”
“கட்டாயமா அம்மா. நான் உங்க பொண்ணு. கற்பகத்தின் பொண்ணும் கற்பகம் தான்.” மலர் சிரித்தாள்.
“அப்புறம் .. இனி தினம் ஆபீஸுக்குப் போகும்போது நம்ம தெருமுனை சிவன் கோவில்ல நெய்விளக்கு ஏத்திட்டுப் போ மலரு. உங்கண்ணி ரொம்பக் கவலைப் படறா.. உன் கண்ணுல பாம்பு தட்டுப் பட்டதில் இருந்து!” கற்பகம் சொன்னாள்.
ஆமா. நேத்துக் கூட ஆபீஸில்.. ஹய்யோ.. நினைக்கும் போதே அந்தக் கண்ணு மின்னுதே.அது மட்டுமா? இரவில் கண்ட அந்தக் காட்சி.. ம்ஹூம்! இனி எதையும் வெளியில் சொல்லக் கூடாது என்று நினைத்தவள் விரைவிலேயே தன்பாதை மாறப் போவதை அவள் அறியவில்லை.
—————-
நஞ்சுண்டபுரம்
ஊருக்கென்று கோவில் குளம் தவிர பொதுக்குளம் ஒன்று அனைவரும் நீராட என்று இருந்தது. சுத்த பத்தமாய் வீட்டுக் கிணற்றில் குளிப்போரும் அவ்வப்போது குளத்தில் மூழ்கிக் குளிக்கும் ஆசைக்காக வருவர்.
நீலகண்டன் விபுலனை அதிகாலையில் குளத்துப் பக்கம் கூட்டி வந்திருந்தார். ஓதுவார் சம்பந்தம் குளித்து விட்டுக் கரையில் தலை துவட்டிக் கொண்டிருக்க.. இன்னும் சில ஜனங்கள் கரையில் அமர்ந்து பல் தேய்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தேய்த்த தேய்ப்புக்கு பல் வைரமாய் மின்னி இருக்கும். எங்கே? அவர்கள் தேய்ப்பதை விடப் பேசுவதற்காகத் தானே கூடிபதே! விபுலனைப் பார்த்து நட்புடன் சிரித்தார்கள். ஆராய்ச்சியாளன் என அவன் பேர் பரவி விட்டிருந்தது.
குருக்கள் சொன்னார்.. “தம்பி! குளத்தங்கரை அனுபவமும் தெரிஞ்சுக்கோங்க. நம்ம ஜனங்க துலக்கோ துலக்குன்னு துலக்குவாங்க.. பல்லைச் சொன்னேன்.” (சிரித்தார்)
“ஆமாங்க சார்.. நாங்க துலக்கோ துலக்குன்னு தான் துலக்குவோம். இது எங்க கை.. இது எங்க குச்சி.. அப்புறம் என்ன.. குருக்களய்யாவுக்கு சிவன்சாமி காத்துக்கிட்டு இருக்காரு. எங்களுக்கென்ன.. கேட்டாச் சோறு! கிடந்தா திண்ணை! ” உட்கார்ந்திருந்த ஊர்ப் பெரிசு ஒன்று வம்பிழுத்தது.
“சரி தான்! சரி தான்! நீ நடத்துப்பா உன் ராஜாங்கத்தை!” என்ற நீலகண்டன்..
“விபுலா! குளத்தில் குளிச்சுப் பழக்கமுண்டோன்னோ? தோ! பார்! குளத்துல இறங்கும் போது ஒவ்வொரு படியா நின்னு இறங்கணும். நம்ம கால அந்த ஜீலிர்ன்னு சில்லிப்பை முதல்ல உள்ள வாங்கணும். அது கொஞ்ச கொஞ்சமா இறங்கும் போது சில்லுன்னு இருக்காம உடம்போட வெப்பம் இயல்பாயிடும்.
வீட்டுக் குளியல்ல கூட..நீரை முதல்ல கால்ல தான் ஊற்றணும்.பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி கண் மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். வியாதி வரும்.”
சொன்னபடி செய்தான் விபுலன். தொடர்ந்து குளத்தில் மூழ்கி ஒரு பிடி மண்ணை எடுத்து வீசச் செய்தார் நீலகண்டன்.
“ஏன் குருக்களய்யா?”
“ஒருவனுக்கு ஒருபிடி மண்ணுன்னா அத்தனை ஜனங்களுக்கு.. இது இயல்பான தூர்வாருதல் தம்பி..இடத்தோட கொள்ளளவும் ஜாஸ்தியாகும். ஜாஸ்தியானா என்னாகும்? நீரோட அளவும் அதிகரிக்கும். முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! நம் கைதான்ப்பா நமக்குதவி!”
இருவரும் சிரித்தபடி மேலேறினார்கள். தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது எதிர்ப்பட்ட ஒருவனிடம்
“என்ன மாடசாமி என்ன சொல்லுது உன் உடம்பு. மேலுக்குத் தேவலையா?”
“எங்க குருக்களய்யா! நித்தம் ஒரு நோவு. நீங்காத பெரும் சாபம் ஐயா.”
“வாழ்ந்து கடக்கணும்ன்னா போனதை மறக்கணும்ப்பா. வாழ்க்கையில் யாருக்குத் தான் துக்கம் இல்ல? சென்றதினி மீளாது. முதல்ல உடம்பைப் பாரு.
உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே!
உடம்பு நலத்தப் பார்த்துக்கோ. அதான் பெருங்கோயில். வரவா? அப்புறம்.. கோவிலுக்கு வந்து சுத்தம் பண்ண உதவி பண்ணேன். மாணிக்கத்தோட சேர்ந்து குளத்தக் கூட சுத்தம் பண்ணலாம். சிவத் தொண்டு சீவனுள்ள தொண்டு அப்பா!”
தலையாட்டி விடைபெற்றவர்..
வீட்டுக்கு வந்து திண்ணையில் அமர்ந்து ருத்ரம் ஜபிக்க ஆரம்பித்தார்.
விபுலானந்தன் உள்ளே சென்றான் தன் ஈரத் துணியை மாற்றிக் கொள்ள.
பள்ளிகொண்ட சிவப்பழம் அழைத்தது.
“இங்கே அமர்ந்து கொள் விபுலா! என் வரை நீ அனந்தன். என் சிவமேற வந்த அனந்தன்!” அங்கிருந்த ஒரு கட்டையைக் காட்டிச் சொன்னார் கடம்பவனம்.
“நெற்றியில் திருநீறு இடு!” என்றார்.
பூசிக் கொண்டவனைப் பார்த்து
“இன்றிலிருந்து ஒரு மண்டலம் பஞ்சாட்சரம் ஜெபி. தினம் உன் கணக்கில் ஆயிரத்தெட்டு வேண்டும். ஜபிக்க ஜபிக்க நெருங்கி வரும் அச்சிவமலர்!. இந்தா வைச்சிக்கோ!”
குருவாய் மந்திர உபதேசம் செய்தவர் அவன் கையில் வில்வ இலையோடு நாகலிங்கப் புஷ்பத்தை கொடுத்து ஆசீர்வதித்தார். மீண்டும் ஒன்றும் அறியாதவர் போலக் கண்மூடிக் கொண்டார். நீலகண்ட குருக்கள் இவை எதையும் அறிந்தாரில்லை.
எழுந்து துணிகளை மாற்றிக் கொண்டு வெளியே வரும் போது காலை உஷத் பூஜைக்கு நீலகண்டம் கிளம்பிக் கொண்டிருந்தார். கோவில் பிரகாரத்தை சன்னாசி சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தான். பாட்டில்லாது சன்னாசி ஏது? சுத்தம் பண்ணும் போதும் பாட்டு தான்!
விபுலனும், குருக்களும் உள் நுழைவதைக் கண்டு விட்டு உற்சாகமாகப் பாடலானான்.
“வெள்ளிக் கம்பிகோர்த்த
விழுதாய் இருதலைகள்
அள்ளிச் சேர்ப்பதற்கு
ஆருண்டு நாந்தானே!”
கவனியாது கடந்தான் விபுலன்.
(மொட்டு விரியும்)