சிவமலர் – மொட்டு – 5 | பஞ்சமுகி

 சிவமலர் – மொட்டு – 5 | பஞ்சமுகி

“குன்றாத மூவுருவாய் அருவாய்
ஞானக் கொழுந்தாகி
அதுசமயக் கூத்தும்
ஆடி நின்றாயே மாயை என்னும்
திரையை நீக்கி நின்னை
யார் அறிய வல்லார்?”

தாயுமானவர் பாடலை சிவன் கோவில் திண்ணையில் அமர்ந்து உரக்கப் பாடிக் கொண்டிருந்தார் நீலகண்டக் குருக்கள்.

விபுலானந்தன் அவரின் அருகே அமர்ந்து அப்பாடலை உள்வாங்கிக் கொண்டிருக்க.. குளம் தூர்வாரும் பணி எந்த அளவு இருக்கிறது என்று பார்க்க வந்த மாணிக்கம்..

“என்ன குருக்களய்யா? உங்க உறவா இந்தத் தம்பி. வடிவழகி கல்யாணம் பண்ணிப் போனதில் இருந்து இந்தப் பக்கம் வரவே இல்லையே. இந்தத் தம்பி யாரு?” தூண்டில் போட்டான்.

“தம்பி பேரு விபுலானந்தனாம். சிவன் கோவில் பத்தி ஆராய்ச்சி பண்றாராம்”

“என்ன தம்பி.. நீங்களும் என் கட்சி தானா? சிவன் மேல தான் நானும் ஆராய்ச்சி பண்றேன். இருக்கானா இல்லையான்னு. இருந்தா…. தன் இருப்பிடத்தை இப்படிச் சிதிலமா வைச்சிருப்பானா?”

“அட. நீ வேற மாணிக்கம் உன் கட்சி இல்ல இவரு. நீ இல்லவே இல்லன்னு சாதிக்கற. இவர் இருக்கிற சாமியப் பத்தித் தெரிஞ்சு எங்கிருக்கார்ன்னு தேடி வந்திருக்கார். சரி.. குளத்து வேலையெல்லாம் முடிச்சுட்டியா?”

“அது ஆகும் மாமாங்கம்.. கோவில் கட்டினதில இருந்து குளத்தைச் சுத்தம் பண்ணவே இல்லையா? ம்ஹூம். கோவில் மேலயே அக்கறை இல்லாதவங்க குளத்தைத் தான் சீர்படுத்தப் போறாங்களாக்கும். இந்த இரண்டு நாள் போக அடுத்த வாரமும் இரண்டு நாள் வந்து செஞ்சா தான் ஓரளவு சுத்தமாகும் குருக்களய்யா! அப்புறம் தம்பி எங்க தங்கி இருக்காப்ல?”

விபுலானந்தன் பதில் சொல்ல யத்தனித்தான். அதற்குள் நீலகண்டன் சொன்னார்..

“ஊருக்குள்ள ஒரு நல்ல வீடா பார்த்துச் சொல்லு மாணிக்கம் தம்பி தங்கறதுக்கு!”

“ஏன் உங்க வீட்டை கொடுக்கறது? பேச ஆளில்லாமத் தானே கிடக்கிய.. கமலாம்மாவுக்கும் மனுஷங்கன்னா ஆசையாச்சே!”

“அது சரி தான்! விஷயம் தெரிஞ்சுண்டே பேசற பார்த்தியா? நானும்,கமலாவும் மட்டுமா இருக்கோம்? கடம்பவனத்தை மறந்துட்டியா?

“யாரு அவரா? அடப் போங்க குருக்களய்யா. இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டாரு. பேச மாட்டாரு. நினைச்சா நீராகாரம். இல்லன்னா அதுவும் இல்ல. அவரை ஒரு பொருட்டா நினைச்சு .. என்னவோ போங்க! உங்க உறவுன்னு ஆதி காலத்துல இருந்து இந்த சிவனுக்குத் தொண்டு செஞ்சாரு. இப்ப என்னவோ வாய்க்கட்டு போட்டாப்புல.. நீங்க இந்தத் தம்பிய உங்க வீட்டுலயே வைச்சுக்கோங்க குருக்களய்யா. அவர் கண்டுக்கக் கூட மாட்டாரு.”

“அப்படிங்கிறியா.. ம்!” நீலகண்டன் யோசித்தார்.

“சாப்பாடுக்கு கவலைப் படாதீங்க தம்பி. சைவ மெஸ் ஒண்ணு ஊருக்குள்ள இருக்கு. வந்தீங்கன்னா காமிச்சுக் கொடுத்தடறேன். மூணு வேளைக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கும். குருக்களய்யா பாவம் சக்தியே இல்லாம சிவனுக்கே அவர் தான் சாப்பாடு போடறார். இதுல உங்களுக்கு எங்க?” மாணிக்கம் போற போக்கில் பேச்சில் ஊசி இட்டான்.

“அடேய் பாதகா! சக்தியில்லாமல் சிவனா? சிவனுக்கே நான் சாப்பாடு போடறேனா? நான் தம்பட்டம் அடிச்சுண்டேனா? அவன் உலகாள்பவன் டா! அவன் தயவுல தான் எனக்கே அரிசி கிடைக்கறது. உனக்கும் இப்படிப் பேச விஷயம் கிடைக்கறது. கோவிலுக்குன்னு இத்தனை செய்யற.. கொண்டாட மாட்டேங்கிறியே.. ஆனா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ! வெறுப்பா இருந்தாலும், பழிப்பா இருந்தாலும் சிவ சிவன்னு சொல்ற பார். இதுக்கே உன் புண்ணியபலன் ஏறி இருக்கும்டா”

“கோவிச்சுக்காதீங்க ஐயரே. சிவனேன்னு இருக்கற அந்த சிவனைச் சீண்டினால் தான் எனக்கு நாளே நகருது. வரட்டா தம்பி.. விபுலன்! விபுலன் தானே பேரு. இருந்து உங்க ஆராய்ச்சியப் பாருங்க. நான் போற வழில மெஸ்ல சொல்லிட்டுப் போறேன்..அவங்களே இங்க வந்து சாப்பாடு குடுத்துடுவாங்க. இன்னிக்குச் செலவு எம் பொறுப்பு. நீங்க குடுக்க வேணாம்.”

“இல்லை சார். நான் குடுத்தடறேன்!*

” ஹப்பா. பேச வராதோன்னு நினைச்சேன். பேசிட்டீங்க.! சரி வரேன் தம்பி.” மாணிக்கம் சென்று விட்டான்.

“காலை பூஜைக்கு அப்புறம் சாயரட்சை தான். கொஞ்சம் உடம்பைக் கிடத்தலாம்ன்னு அந்த சிவனே தன் ஒரு வேளைச் சாப்பாட்டை விட்டுக் கொடுத்துட்டார். சரிப்பா விபுலா .. மாணிக்கம் சொன்னபடி எங்காத்துக்கு வந்துடுறியா. இல்ல ஊருக்குள்ள பார்க்கச் சொல்லவா?”

“வரேன் ஐயா. உங்களுக்கு ஒரு சிரமமும் இல்லேன்னா..” விபுலன் தன் பைகளை எடுத்துக் கொண்டான்.

நீலகண்டனின் வீட்டில் நுழையும் போது விபுலனின் மேனியெங்கும் விபூதி வாசம் அடித்தது. சிலிர்த்தான். தெய்வாம்சம் இங்கும் இருக்கிறதோ.. வெயிலில் வந்த இருட்டைக் களையக் கண்ணைக் குவித்துச் சுருக்கிப் பின் விரித்துப் பார்த்தான். நீலகண்டன் வீட்டுக் கூடத்தில் பாயில் மரப்பலகையைத் தலைக்கு வைத்து எலும்பே ஆடை போல் ஒரு உருவம் படுத்திருந்தது. நீலகண்ட குருக்களய்யா வயது தான் இருக்கும் . ஆனாலும் குருக்களிடம் இருக்கும் சுறுசுறுப்பு.. உண்மையைச் சொல்லப்போனால் சக்தியில்லாத சிவம் அங்கு கண்ணை மூடிப் படுத்திருந்தது.

“சிவப்பழம்! என் உறவுக்காரர். மாணிக்கம் சொன்னானே அது இவர் தான்.” என்றார் நீலகண்டன்.

“வணக்கம் சாமி!” தூண்டப்பட்ட சக்தியாய் விபுலன் விறுவிறுவென்று போய் அவன் பாதம் பணிந்தான்.

அந்த ஸ்பரிசத்துக்குச் சற்றே கண்ணைத் திறந்து பார்த்தார். அவ்வளவு தான்..

“குருக்களய்யா!” திணறினான் விபுலன்.

“அவ்ளோதான்ப்பா. உன்னைக் கண்ணைத் திறந்து பார்த்தாரோன்னோ.. அதுவே பெரிது. வா.. கொல்லைப்பக்கம் கிணறு இருக்கு..ஒரு வாளி இழுத்துத் தலைல விட்டுண்டு வந்தியானா சாப்பிட்டுட்டு கண் அசரலாம். “

“ஐயா.. மெஸ்ஸில் இருந்து..”

“வரட்டும்.. வந்தா அதை ராத்திரிக்கு வச்சுக்கோ..ஆத்துக்கு வந்தவனுக்கு ஒரு வாய் சாதம் கூடப் போடலன்னா நான் என்ன பிராமணன்? என் மனைவி கமலா எம் பொண்ணைப் பார்க்க ஊருக்குப் போயிருக்கா. கொஞ்ச நாளைக்கு என்னோட நளபாகம் தான். குளிச்சுட்டு வா! சாப்பிடலாம்!”

நீலகண்டன் சொன்னபடி கிணற்றடியில் குளித்து விட்டு வேஷ்டியைக் கட்டிக் கொண்டவன் சூரியனைப் பார்த்து

“ஓம் ஏக சக்ராய வித்மஹே மஹத் யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய ப்ரசோதயாத்!” என்ற சூர்ய காயத்ரி சொன்னான்.

கேட்டுக் கொண்டே வந்த குருக்கள்.. “ரொம்ப நல்ல பழக்கம் தம்பி. வா.. சாப்பிடலாம்!”

தையல் இலை போட்டு சொம்பில் நீர் எடுத்து வைத்தார். சுட்ட கத்திரிக்காய் துகையலும் , வடாமும் சாதத்துடன் அமிர்தமாய்த் தான் இருந்தது. சமையல் கூடத்தை ஒழித்து விட்டுப் படுக்கப் போனவர்..

“கூடத்தில் அவர் தூங்கறார். நீ பாட்டுக்கு இப்படித் தூங்கு. இல்லன்னா திண்ணையில் உட்கார்ந்துக்கோ. வாசல் அலமாரில ஸ்வாமி புஸ்தகம் இருக்கும்..வேணும்னா எடுத்துப் படி. எதுவும் அவருக்குத் தொந்தரவாய் இருக்க வேண்டாம்.” தணிந்த குரலில் சொன்னவர் மனைக்கட்டையை வைத்துப் படுத்துக் கொண்டார்.

விபுலன் தன் இலையை கொல்லைப்புறம் போட்டு விட்டு காலலம்பி வந்தவன்.. சத்தம் போடாமல் திண்ணையை நோக்கிப் போனான். நீலகண்டனிடமிருந்து குறட்டை வந்தது.

ஹாலைக் கடக்கையில் “வா! விபுலா! என் குழந்தாய்!” என்றது சிவமான கடம்பவனம்.

அசரீரியோ! திகைத்தான்.

“இதோ… இங்கே வா! ” கையை அசைத்தார் .

தயங்கியபடி அருகில் சென்றவனிடம்.. தன் கையில் வரவழைத்த நாகலிங்கப்பூவை அவனிடம் கொடுத்தார்.

“சிவமலரப்பா! சிவ மலர்! தலையும் தலையும் சேர்ந்து விட்டால் புதைந்தது பொருளாய்க் கை சேரும்!” சொன்னது இவர் தானா என்றபடி அடுத்த நிமிடம் நித்திரையில் ஆழ்ந்தார்.

உள் நுழைந்து விட்டேன்.. இனி என்ன தான் நடக்கிறது எனப் பார்க்கலாம் . நினைத்த விபுலன் வாசல் திண்ணையில் வந்தமர்ந்து கொண்டான்.

கையில் இருந்த மலரைப் பார்த்தவாறே அமர்ந்தான். சிவப்பும் மஞ்சளுமாய் நாகம் போன்ற அமைப்பில்…

நாகலிங்க பூவுக்குள்ளே கடவுள் இறங்கி வந்து குடியிருக்கிறான் என்று சொல்வார்கள். பூவில் நாகமும், உள்ளே லிங்கமும் அதனை சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள் என்றும் கூறுவர்.

ஹே.. ஸ்வர்ணா..மை ப்ரெண்ட்.. இங்கிருந்து கிளம்புவதற்குள் என்னை சன்னியாசி ஆக்கி விடுவாய் போலவே! தனக்குள் சிந்தித்தவன் எப்படி கண்ட பேருண்டப் பறவை சொல்லும் பொக்கிஷத்தைக் கண்டறிவது. முதலில் எங்கிருந்து ஆரம்பிக்கலாம்.

ஹான் .. அந்தத் தூணில் பார்த்தோமே பறவையின் சிற்பம் .. அதிலிருந்து தொடங்கலாமா? ஆராய்ச்சி பண்ண வந்தால் சிவ மலராய்க் கிடைக்குதே. என்னவாய் இருக்கும்? இத்தனை சிவமலரை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன். ஒண்ணே ஒண்ணு.. ஒரு சிவமலர் போறாதா..நினைத்தவன்..

“சிவமலர்” என்று சப்தமாகச் சொல்லிப் பார்த்தான். அவ்வொலியில் வெளிப்பட்ட அதிர்வலையில் சென்னையில் எங்கோ அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த பெண்.. பக்கத்தில் இருந்த புரோஜெக்ட் லீடர் குமாரிடம் ..

“கூப்பிட்டீங்களா சார்? சிவமலர்ன்னு சொன்ன மாதிரி இருந்ததே..”

குமார் முகத்தில் மகிழ்ச்சி கொப்பளித்தது. யாரையும் திரும்பியும் பார்க்காமல் இருப்பவள் தானே சுயமாய் வந்து கேட்கிறாள் என்றால்..

“ப்ரெண்ட்ஸ்?” கேட்டு கை நீட்டினான்.

“இங்க ஆபீஸ்ல எல்லோருமே எனக்கு ப்ரெண்ட் தான் சார். நீங்க உட்பட.” சிரித்தவள் அவனின் .நீட்டிய கையைக் கண்டு கொள்ளாது.. யாரோ என்னை ஆத்மார்த்தமா கூப்பிட்டது மாதிரி இருந்ததே.. ஒரு வேளை ஈஸ்வர் அண்ணன் என்னைத் தேடி அரூபமாய் வருகிறானோ? என்ன சொல்லத் துடிக்கிறான்? அவன் எதற்கு அப்பறவையை வரைந்து வைத்தான். என்னைச் சுற்றி என்னமோ நடக்கிறது. விடை சொல்வார் யார்? மனம் போன படி நினைத்தவள் சீட்டை விட்டு எழுந்து சன்னல் வழி யோசனையாய் பார்த்து நின்றாள்.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஜன்னலுக்கு நேர் கிளையில் உடம்பைச் சுற்றியபடி கண்கள் மின்ன இவளை உன்னித்துப் பார்த்தபடி இருந்தது ஒரு நாகம்.

அம்மாவிடம் முதலில் இதையெல்லாம் சொல்ல வேண்டும். பெரியவர்கள்.. ஏதும் தெரிந்திருக்கலாம். ஓயாமல் நாகம் தட்டுப்பட்டால் எனக்கு எதுவும் தீங்கு நடக்கப் போகிறதோ.

நேற்று பத்திரிக்கைத் துணுக்காய் ஒரு செய்தி படித்தது ஞாபகம் வந்தது. ஒரு லேடி ..வீட்டுல நாய் வளர்ப்பது போல் பாம்பு வளர்த்தாங்களாம். அந்தப் பாம்பு முதல்ல எல்லாம் போட்டதை தின்னுட்டுச் சுருண்டு கிடக்குமாம். சே! நல்ல பாம்பா இருக்கேன்னு அவங்க அதை தூக்கி தான் தூங்கும் போதெல்லாம் தன்னுடம்பில் சின்னக் குழந்தையாட்டம் படுக்க வைச்சுப்பாங்களாம். தினம் இது தொடர்ந்ததாம். ஒரு நாள் கீழே தனியே விட அது மனமே இல்லாமல் திரும்ப அவங்க மேலேறி படுத்துக் கொண்டதாம். ஏதோ உடம்பு முடியலன்னு டாக்டர்ட்ட போய் அதைப் பத்திக் கேட்டா.. முதல்ல அந்தப் பாம்பை அடிச்சுக் கொல்லுங்கன்னு பதறினாராம் டாக்டர். என் பெட் டாக்டர்ன்னாங்களாம்..அம்மா! தினம் உங்க மேல படுத்து உங்க நீள அகலத்தைக் கணக்கிட்டு வருகிறது. விரைவில் உங்களை இரையாக்கிக் கொள்ள என்றதும் அதிர்ந்து விட்டாளாம் அந்தப் பெண்.

அது மாதிரி எனக்குமா? ஏன் என்னையவே தொடர்ந்து தேடி வந்து பார்க்குது இந்தப் பாம்பு? நாமளும் இரை ஆகிடுவோமோ. சிந்தனை ஓட்டத்தில் உடம்பு குலுக்கிப் போட்டது.

அதே சமயம் நஞ்சுண்டபுரத்தில்

“நச்சரவம் மேலேற
நஞ்சும் மேலோங்கும்
அச்சமினி இல்லை அவனியிலே
மிச்சமுள மிருகசீரிஷ ஆதிரையான்
மேவும் நற்பொழுது மீளுமே சென்றதெல்லாம்!”

சன்னாசி பாடிக் கொண்டு போனான்.

(மொட்டு விரியும்)

< மொட்டு – 4

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published.