சிவமலர் – மொட்டு – 4 | பஞ்சமுகி

 சிவமலர் – மொட்டு – 4 | பஞ்சமுகி

“வாங்கோ!

“சிவமலர், என்னாச்சும்மா?” என்று பதறிக் கொண்டு ஓடிவந்தாள் கற்பகம். பின்னாலேயே நந்தினி.

“தூங்கிப் போயிட்டியா? ஏதாவது கனவு, கினவு கண்டியா? அதே நாகம் வர கனவா? அப்போ ஏன் அண்ணான்னு கத்தின?”

கற்பகம் ஏதேதோ கேட்டுக் கொண்டு போக, சிவமலர் பிரமை பிடித்தவள்போல் அமர்ந்திருந்தாள்.

“அத்தை, கொஞ்சநேரம் அவளை எதுவும் கேட்காதீங்க. நான் போய் அவளுக்குக் காப்பி கொண்டுவரேன்” என்றாள் நந்தினி. பயந்துகொண்டு அருகில் வரப் பார்த்த பிரியாவையும் மயூவையும் கண்களாலேயே அப்பால் போகச் செய்தாள்.

கற்பகம் மகளுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தாள். சிவமலர் மெதுவாகத் தெளிவுக்கு வந்தாள். “எனக்கு ஒண்ணுமில்லைம்மா. நீ சொன்ன மாதிரி கனவுதான் கண்டிருக்கேன்” என்றாள். எழுந்து வாஷ்பேஸினை அடைந்தாள். முகத்தில் நீரை வாரியடித்து முகம் கழுவினாள். மெலிதாகப் பவுடர் பூசிப் பொட்டு வைத்துக் கொண்டு, டப்பியிலிருந்து திருநீறு எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு அவள் மறுபடி ஹாலுக்கு வரும்வரை கற்பகம் அவளைவிட்டு நீங்கவேயில்லை.

நந்தினி காப்பி தயாராக வைத்திருந்தாள். அதை அமைதியாகப் பருக ஆரம்பித்தாள் சிவமலர். கற்பகம் அவள் தெளிவாகிவிட்டாள் என்று உறுதிப்படுத்திக் கொண்டு குக்கர் வைக்க உள்ளே சென்றாள். “என்ன இது, இதுவரை இந்தக் குடும்பத்துக்கு வந்த சோதனைகள் எல்லாம் போதாதா? கண்ணுக்கு நிறைஞ்ச பிள்ளையைப் பறிகொடுத்தேன். கல்யாணம் பண்ணிப் புருஷன் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரத்தில் இந்தப் பெண் இந்தக் குடும்பத்துக்காக உழைச்சுக் கொட்டிக்கிட்டிருக்கா. நடுவுலேயே கனவுங்கறா, பாம்புங்கறா… இப்ப புதுசா அண்ணாங்கறா. தெய்வமே, ஏன் எங்களுக்கு இத்தனைச் சோதனைகளைக் கொடுக்கற?” என்று உள்ளம் கதறினாலும் வீட்டு வேலைகளை இயந்திரகதியில் செய்துகொண்டிருந்தாள்.

நந்தினி சிவமலர் குடித்து முடித்த காப்பி டம்ளரை வாங்கிக் கொண்டு எழ இருந்தாள். அவளை “அண்ணி, கொஞ்சம் இங்கே உட்காருங்க” என்ற சிவமலரின் குரல் தடுத்து நிறுத்தியது.

“என்னம்மா, இப்போ எப்படி இருக்கு?” என்று ஆதுரத்துடன் கேட்டாள் நந்தினி.

“எனக்கு ஒண்ணுமில்லை அண்ணி. அது இருக்கட்டும்… நான் இப்போ ரெண்டு கேள்விகள் கேட்கப் போறேன். மனசில் எந்த உணர்ச்சிப் பிரவாகமும் இல்லாம அப்ஜெக்டிவ்வா பதில் சொல்லணும், சரியா?”

“நீ பேசறதைப் பார்த்தா உன் அண்ணாவைப் பற்றி ஏதோ கேட்கப் போறேன்னு தெரியுது. அவரைப் பற்றி நான் எப்படிம்மா உணர்ச்சி வசப்படாம பேசுவேன்?” இதைச் சொல்வதற்குள்ளேயே குரல் தழுதழுத்தது நந்தினிக்கு.

“தனக்குப் பாம்பு கனவு வரதாகவோ, தன்னைப் பாம்பு துரத்தறதுன்னோ எப்பவாவது அண்ணன் உங்ககிட்டச் சொன்னதுண்டா?” அழுத்தமாகக் கேட்டாள் சிவமலர்.

நந்தினி சற்றுத் தடுமாறித்தான் போனாள். பிறகு “இல்லையே! அவரோட ஜாதகத்தில் ராகுதோஷம் இருக்கறதாகவும், அதனால் அவருக்கு ஏதோ பரிகாரம் பண்னணும்னு அத்தை கூப்பிட்டாங்களாம், அவர் ஆஃபீஸ் வேலையிருக்கு, வர முடியாதுன்னு சொல்லிட்டாராம். அவ்வளவுதான். பாம்பு துரத்தறதால்லாம் சொன்னதே…” நிறுத்தியவள் “மலர், அங்கே பாரு!” என்றாள், மெலிதாக நடுங்கும் குரலில்.

ஜன்னலுக்குக் கீழே படமெடுத்து அமர்ந்துகொண்டு, இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் போல அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது ஒரு ஐந்தடி நீள நாகம்.

சிவமலரும் நந்தினியும் அசையாமல் மயக்கத்தில் இருப்பவர்கள்போல் அந்த நாகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில நிமிடங்கள் கழிந்ததும் “சரி, பேச்சை முடித்துவிட்டீர்களல்லவா? அப்படியானால் நான் போய்வருகிறேன்” என்பதுபோல் ஜன்னல் வழியே வெளியேறிவிட்டது.

கல்லாய்ச் சமைந்திருந்த சிவமலர் அசைந்துகொடுத்தாள். “தட் டஸ் இட்” என்றாள் ஆத்திரத்துடன். “அண்ணி, நாம அடுத்த வாரமே என் ஆஃபீஸ் கிட்ட இருக்கற ஃப்ளாட் ஏதாவது பார்த்து வாடகைக்குக் குடிபோயிடுவோம். இப்படிப் பாம்பு வர மாதிரி தோட்டம் இருக்கற வீடெல்லாம் வேண்டாம்! குழந்தைக்கு அப்புறம் என்ன சேஃப்டி? நமக்குத்தான் என்ன சேஃப்டி?” என்றாள்.

“என்னவோ அஞ்சு ஏக்கர் நிலத்தில் கட்டின வீடு மாதிரிப் பேசிட்டிருக்கியே! அப்படி என்னடி தோட்டம் இருக்கு இங்கே? நாலு பூச்செடி, ஒரு தென்னை மரம்” என்றவாறே வெளியே வந்தாள் அம்மா கற்பகம். “பழைய வீடுன்னாலும், ஏதோ சொந்த வீட்லயாவது இருக்கோம். எதுக்குத் தேவையில்லாம வாடகை வீட்டுக்குப் போகணும்?” என்றாள். அவளுக்கு இப்போது பாம்பு வந்த விஷயம் தெரியாதென்று புரிந்துகொண்டார்கள் நந்தினியும் சிவமலரும்.

“அம்மா! ஆஃபீஸ் இங்கிருந்து ரொம்பத் தள்ளியிருக்கும்மா! ரெண்டு பஸ் மாறி, நடுவுலயே எலக்ட்ரிக் ட்ரெயின்ல போயின்னு உடம்பு ஓய்ஞ்சு போகுது” என்றாள் சிவமலர்.

“உங்கப்பாவும் அண்ணனும் வாழ்ந்த வீடுடி இது. இங்கேயே என் உயிரும் போகணும்னு நினைச்சேன். நீ விடமாட்டியே!”

“நீ அதுக்குள்ள போயிடுவியா? நம்ம மயூ கல்யாணத்தை நீ பார்க்க வேண்டாமா, கொள்ளுப் பேரனை மடியில் போட்டுக் கொஞ்ச வேண்டாமா?” என்று சிரித்தாள் மலர்.

“ஏன்? உன் கல்யாணத்தையும்தான் பார்க்கணும், உனக்குப் பிறக்கற குழந்தையையும்தான் கொஞ்சணும்! அதுக்காகத்தாண்டி உயிரைக் கையில் பிடிச்சு வெச்சிட்டிருக்கேன்!” என்றாள் கற்பகம். மலர் மேலுக்குச் சிரித்தாலும் அவள் மனதில் ஏதோ உறுத்தல் தோன்றியது. மாங்காட்டில் ஒற்றைப் பாதத்தில் நின்று ஒன்றேயான சிவத்தை நோக்கித் தவம்புரியும் காமாட்சியம்மன் மனத்தில் வந்து நின்றாள்.

“சொன்னா கேளும்மா, மயூ குட்டி பாவமில்லையா? குழந்தை இப்போதான் முதன்முதல்ல ஸ்கூலுக்குப் போகப் போறா. இப்போ பார்த்திருக்கற ஸ்கூலுக்கு எவ்வளவுதூரம் ஸ்கூல் பஸ்ஸில் போயிட்டு வரணும்?” என்றாள் சிவமலர்.

“ஆமா. குழந்தை தினமும் ஸ்கூலிலிருந்து வரதுக்குள்ள கிறங்கிப் போயிடும்” என்ற கற்பகம் “சரி… அப்போ அவ ஸ்கூலுக்குப் பக்கத்திலே வீடு பாரு” எண்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள் கற்பகம்.

சிவமலரின் முகத்தில் மெலிதாகப் புன்னகை படர்வதை அன்புடன் பார்த்த நந்தினி “என் கிட்ட இன்னும் ஏதோ கேட்கணும்னு சொன்னியே, அது என்னம்மா?” என்று கேட்டாள்.

இதற்குச் சிவமலர் உடனே பதிலளித்துவிடவில்லை. அவள் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு தவிப்பாகக் காணப்பட்டாள்.

திடீரென்று நந்தினியைப் பார்த்து “அண்ணி, அண்ணா சாகலை, உயிரோடுதான் இருக்கான்னு உங்களுக்கு எப்பவாவது தோணியிருக்கா?” என்று கேட்டாள்.

மறுநாள் காலை.

“ஹலோ, ஹலோ… கேக்குதா?” என்று மொபைலில் கத்தினான் விபுலானந்தன். ஆலயம் இருந்த கிராமத்தில் மொபைல் டவரே கிடையாது என்று கேட்டுப் பிரமித்து, நடந்தே பக்கத்து டவுனுக்கு வந்திருந்தான்.

“இப்போ கேக்குது. சொல்லுங்க விபுலானந்தன்” என்றாள் ஸ்வர்ணா மறுமுனையில்.

ஸ்வர்ணா ! இங்கே ஏதேதோ விவரம் கிடைச்சிருக்கு. கண்டபேருண்டப் பக்ஷின்னு பேராமே காசில் இருக்கற இருதலைப் பறவைக்கு?” என்றான் விபுலானந்தன்.

“என்னது, கண்டபேருண்டமா? அந்த வாகனம் எங்க ஊர்க் கோயிலில் உண்டே!” என்றாள் ஸ்வர்ணா வியப்புடன்.

“அதுவும் கேள்விப்பட்டேன். பொக்கிஷத்தோட ஒரு பகுதி மன்னார்குடியிலும் மற்றுமொரு பகுதி இங்கேயும் சேமிக்கப்பட்டதுக்கு ஏதோ காரணம் இருக்கு. ஒரு தடவை நான் மன்னார்குடிக்கு வர வேண்டியிருக்கும். இந்தக் கண்டபேருண்டப் பறவையைப் பற்றி எனக்கு எல்லா விவரமும் வேணும். உனக்குக் கிடைச்ச புதையலைப் பற்றியும்…”

“கண்டிப்பா அனுப்பறேன். ஆனா நான் இன்னும் ரெண்டு நாள்ள யூ எஸ் கிளம்பறேன் என் ஹஸ்பண்டோட ஸோ நீங்க மன்னார்குடி வரும்போது நான் அங்கே இருப்பேனான்னு சொல்ல முடியாது” என்றாள் ஸ்வர்ணா..

“பரவாயில்லை ஸ்வர்ணா நீ எனக்கு உன் கிட்ட இருக்கற டீட்டெயில்ஸ் அனுப்பு. அதுக்கு மேல நான் பார்த்துக்கறேன். தாங்க் யூ, பான் வாயேஜ்” சொல்லி காலைக் கட் பண்ணினான் விபுலானந்தன்.

சொன்னபடியே இரண்டே மணி நேரத்தில் அவளுக்குக் கிடைத்த விவரங்களை வாட்ஸப் செய்துவிட்டாள் ஸ்வர்ணா எல்லாமே பழைய ஓலைச் சுவடிகளின் போட்டோக்கள் போலிருந்தன. சில காசுகளின் படங்களும் இணைத்திருந்தாள்.

விபுலானந்தனுக்குப் பழந்தமிழில் ஓரளவு பழக்கமிருந்தாலும், எழுத்துகள் அத்தனைத் தெளிவாக இல்லாததால் அவற்றைப் படிக்கத் திணறினான். கடைசியில் இவற்றைப் பெரிய அளவில் ப்ரிண்ட்-அவுட் எடுத்துச் சாவதானமாக ஆராய்வது என்ற முடிவுக்கு வந்தான்.

கேலரி ஆப்ஷனை விட்டு வெளியே வரும்போது ஓலைச்சுவடியிலிருந்த இரு சொற்கள் அவனுக்கு அடையாளம் புரிந்தது. பளேரென்று அடித்தாற்போல் தோன்றிய அந்தச் சொற்கள்:

“இச்சாதாரி நாகம்!”

சரியாக அதே நேரம் வீட்டு மாடியில் ஈஸ்வரின் அறைக்கு வந்தாள் சிவமலர். ஈஸ்வரின் மறைவுக்குப் பிறகு யாருமே அங்கே போகவில்லை. மயூ எப்போதுமே பாட்டியோடுதான் படுத்துக் கொள்வாள். நந்தினி சற்றுப் பெரிதான பிரியாவின் அறைக்குத் தன் துணிமணிகள், பிற பொருட்களை மாற்றிக் கொண்டுவிட்டாள்.

இதுவரை சிவமலருக்கு மாடிக்குப் போக வேண்டும் என்று தோன்றவேயில்லை. இன்று ஏதோ ஒரு உள்ளுணர்ச்சி உந்தித் தள்ள, யாரும் பார்க்காத நேரம் படிகளில் ஏறிவிட்டாள்.

அறையில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த ஈஸ்வர்-நந்தினி கல்யாணப் படத்தைக் கண்டதும் அவளுக்குக் கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது. “அண்ணா, உன்னைப் புரிந்துகொள்ளாமல் உன்னையும் அண்ணியையும் என்ன பாடு படுத்திவிட்டேன்! சண்டை போட்டிருந்தால்கூடப் பரவாயில்லை! மௌனமாகவே இருந்து, உன்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல்… இப்படி நீ மௌனமாக என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் போகப் போகிறாய் என்று தெரிந்திருந்தால்…”

மாலை மாலையாக அழுதாள். பாவம், குடும்பச் சுமைகளால் அவளால் இதுவரை சரியாக அழக்கூட முடியவில்லை.

கண்ணீருக்கிடையிலேயே, அந்த அறையின் மேற்குச் சுவற்றின்மீது அவர் பார்வை பட்டது. அங்கேயும் ஒரு போட்டோ மாட்டப்பட்டிருந்தது. கீழைச் சூரியனின் வெளிச்சம் பளிச்சென்று அதன்மேல் அடித்துக் கொண்டிருந்தது.

இது என்ன போட்டோ? இதுவரை நான் பார்த்ததில்லையே?

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அருகில் சென்றவளுக்கு மறுபடியும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

போட்டோவில் சிவமலர் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அவள் தோளில் கையைப் போட்டுக் கொண்டு, ஈஸ்வர்.

வெகு நேரத்திற்குப் பின்புதான் அந்தப் போட்டோவின் கீழே ஏதோ வரையப்பட்டிருப்பதைக் கண்ணுற்றாள் சிவமலர்.

என்ன இது? கோலமா? நந்தினி போட்டிருக்கிறாளா? இல்லை, மண்டலா ஆர்ட்? ஈஸ்வர் அருமையாக வரைவான். ஆனால் இந்த மாதிரி ஓவியங்கள் வரைந்து நான் பார்த்ததில்லையே? இது என்ன? அட, இரு பக்கமும் இறகுகள் போல இருக்கிறது. இது ஏதோ பறவையா?

சிந்தித்துக் கொண்டே அதன் மேற்புறம் பார்த்தவள் திடுக்கிட்டாள்.

இந்தப் பறவைக்கு இரண்டு தலைகள் இருக்கின்றன! ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாம்பைக் கவ்விக் கொண்டு… அதில் ஒரு நாகம் என்னையே பார்க்கிறது! “எப்போது என்னைத் தேடி வருவாய், சிவமலர்?” குரல்கேட்டு

சிவமலர் அங்கேயே மயங்கி விழுந்தாள்.

(மொட்டு விரியும்)

< மொட்டு – 3மொட்டு – 5 >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...