அவ(ள்)தாரம் | 13 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 13 | தேவிபாலா

ருள் பட்டறையில், பரபரப்பாக செயல் பட்டுக்கொண்டிருக்க, சிதம்பரம் உள்ளே நுழைந்தார்! அருள் எழுந்து வந்து வரவேற்று, அவரை உட்கார வைத்தான்.

“ காஃபி ஏதாவது சொல்லட்டுமா சார்?”

“ வேண்டாம் தம்பி! ஒரு மாதிரி பதட்டமா இருக்கு!”

“ ஏன்? பாரதியை, எங்கப்பா, மருமகளா ஏத்துக்கறேன்னு சொன்ன முதல் உங்களுக்கு பதட்டம் கூடிப்போச்சா? எதிராளிகளை பதட்டப்பட வச்சு, அதன் காரணமா அவங்களை பலவீனமாக்கி, தோற்க வச்சு, தான் ஆட்டத்துல ஜெயிக்கறது எங்கப்பாவோட ராஜ தந்திரமாச்சே! சரி, என்ன சொன்னார்?”

“ பெண் கேட்டு சம்பந்தம் பேச என் வீட்டுக்கு இன்னிக்கு வரப்போறாராம்!”

“ நீங்க என்ன சொன்னீங்க?”

“ அப்படியெல்லாம் பசங்களை கேட்காம யோசிக்காம, சம்பந்தம் பேசக்கூடாதுனு சொன்னேன்! அருள் தம்பி! நீங்க மாப்ளையா வர்றதை விட, எனக்கொரு கொடுப்பினை இருக்க முடியாது! ஆனா இதை உங்கப்பா தீர்மானிக்கும் போது பின்னணில பெரிய விபரீதம் இருக்கோனு பயம்மா இருக்கு!”

“ சரி, நீங்க சொன்னதுக்கு அவர் என்ன சொன்னார்?”

“ வந்தே தீருவேன்! இதை தடுத்தா, என் கூட ,உனக்குள்ள முப்பது வருஷ வர்த்தக உறவு என்னானு உன் குடும்பத்துல போட்டு உடைப்பேன்னு மிரட்டறார்! நான் எப்பேற்பட்ட இக்கட்டான சூழ்நிலைல மாட்டியிருக்கேன்னு இப்ப உங்களுக்கு புரியுதா தம்பி?”

“ சரி, வரட்டும்! விடுங்க!”

“ வந்து பேசிட்டா, என் குடும்பமே சிலிர்த்து போகும்! ஏற்கனவே அவரை ஒரு தேவதூதனா என் குடும்பம் வணங்குது! இப்ப மரியாதை அதிகமாகும்! ஆனா இதோட பின்னணில அவரோட சதி என்னானு தெரியலியே தம்பி?”

“ நிச்சயமா பெரிய சதி இருக்கு! பாரதியை பழி வாங்க, அவர் துடிச்சு கிட்டு இருக்கார்! அதுக்கான திட்டம் தான் இது! அதுவும் மீடியால அவளுக்கு நல்ல பேரு! இவரை எதிர்த்து, அதிகமா அவ பிரபலமாயிட்டா! அதனால அவளை பகிரங்கமா மீடியா முன்னால அசிங்கப்படுத்த, பெரிசா திட்டம் போடறார்!”

“ என் மகளுக்கு எதுக்கு இந்த சங்கடம்?”

“ நீங்க அவரை தடுக்காதீங்க! தடுத்தா, அவர் நிக்கவும் மாட்டார்! பாரதி மேல தூசு படக்கூட நான் விட மாட்டேன்! நீங்க கவலைப்படாதீங்க! இதை என்னானு கண்டுபுடிச்சு நான் உடைக்கறேன்!”

சிதம்பரம் தளர்ந்து போய் எழுந்தார்.

“சார்! இந்த மாதிரி எங்கப்பா உங்க வீட்டுக்கு சம்பந்தம் பேச வர்றதை முன்கூட்டியே உங்க சம்சாரத்துக்கோ, மற்ற பெண்களுக்கோ தெரிவிக்காதீங்க!”

“ ஏன் தம்பி?”

“ அவருக்கு, இது தொடர்பா நீங்க எந்த முக்கியத்துவமும் தரலைனு அவருக்கு உணர்த்தணும்! மற்றதை நான் பார்த்துக்கறேன்!”

தை இவர்கள் பேசும் நேரம், பூதம் தன் வீட்டில் இருந்தார்! மகள் அஞ்சுவை அழைத்தார்!

“ சாயங்காலம் அஞ்சு மணிக்கு, நாம ஒரு இடத்துக்கு போறோம்மா! நீ தயாரா இரு!”

“ எங்கேப்பா? ஏதாவது ஃபங்ஷனாப்பா?”

“ இல்லைம்மா! உங்கிட்ட சொல்றதுக்கென்ன? உங்கம்மாவும் இல்லாத இந்த வீட்ல, ஒரே பெண் நீ தான்! உன் அண்ணன் அருளுக்கு பெண் பார்க்க போறோம்!”

“ அப்பா! உங்களை சதா எதிர்க்கற அண்ணனுக்காக, நீங்க பெண் பார்க்க ஏற்பாடா?”

“ அவன் எதிர்த்தாலும் என்னோட ஒரே மகன்னு இல்லைனு ஆயிடுமா அஞ்சு? மேலும் அவன் காதலிக்கற பெண்ணையே அவனுக்கு மனைவியாக்கினா, வேண்டாம்னு சொல்லுவானா அருள்?”

“ அண்ணன் காதலிக்கறானா? யாரைப்பா? புதுப்புது தகவல்களா இருக்கேப்பா!”

“ எனக்கு தெரியாம எதுவும் நடக்காதும்மா! அந்த பாரதியைத்தான் விரும்பறான் அருள்! இந்த காதல் வேகமா வளருது!”

“ உங்களையே எதிர்த்து, மீடியா வரைக்கும் போன திமிர் புடிச்சவ அந்த பாரதி! நம்ம தகுதிக்கு கால் தூசிக்கு கூட வராத குடும்பம்! இது என்னப்பா முடிவு? நீங்க உங்க தரத்தை விட்டு இறங்கி, அவ குடும்பத்துல சம்பந்தம் பேச போறது எனக்கு பிடிக்கலைப்பா!”

“ இதப்பாரம்மா! உங்கண்ணனுக்கு என்னை பிடிக்கலை! எனக்கு எதிரா பல வேலைகளை அவன் செய்யறான்! ஆனா நான் அவனை எதிரியா நினைக்க முடியாது! அவன், நான் பெத்த பிள்ளை! அவன் சந்தோஷமா வாழணும்னு, நான் ஆசைப்படறேன்! அதனால அவனுக்கு புடிச்சவளையே கட்டி வைக்க முடிவு செஞ்சிட்டேன்! அந்தஸ்த்து என்னம்மா புண்ணாக்கு? அவ மிடில் க்ளாசா இருந்தா என்ன? நம்ம வீட்டுக்கு வந்தா அவளும் கோடீஸ்வரி தான்!”

“ எனக்கு அவளை சுத்தமா புடிக்கலைப்பா!”

“ அப்படி யார் மேலயும் வெறுப்பை வளர்த்துகாதேம்மா! போகப்போக எல்லாம் சரியாகும்!”

அப்பா மேல் ஒரு பக்கம் கோபம் வந்தாலும் மரியாதை, கூடியது!

“ நீ தயாரா இரம்மா! சம்பந்தம் பேச போற காரணமா சில ஏற்பாடுகளை நான் செய்யணும் அஞ்சு!”

அவர் தன் ஆட்களுக்கு உத்தரவு போட ஆரம்பித்தார்!

தே நேரம், வாசுகி தன் குழந்தையோடு அம்மா வீட்டுக்குள் நுழைந்தாள்!

“ ஏம்மா, நீ என் கிட்ட எதுவும் சொல்ல மாட்டியா?”

“ நீ என்ன சொல்றேன்னு எனக்கு எதுவும் புரியலை வாசுகி!”

“ அப்பாவும் எனக்கு சொல்லலை! சரி விடு! அந்த கோடீஸ்வர முதலாளி எங்கிட்ட வச்ச மரியாதை கூட நம்ம குடும்பத்துல எங்கிட்ட இல்லை!”

“ எனக்கு இன்னமும் புரியலை வாசுகி!”

“ அப்பாவோட முதலாளி, நம்ம பாரதியை அவர் மருமகளா ஏத்துக்க முடிவு செஞ்சிருக்கார்!”

“ நீ என்னடீ சொல்ற?”

“உனக்கே இது தெரியாதா? அப்பா உன் கிட்ட சொல்லலியா?”

“ சத்யமா இல்லைடி! இப்பக்கூட நீ சொல்றதை என்னால நம்ப முடியலை! எனக்கு ஒரே படபடப்பா இருக்குடி வாசுகி! இது நிஜமா?”

“ அம்மா! இன்னிக்கு சாயங்காலம் அவளை பெண் பார்த்து சம்பந்தம் பேச முதலாளி குடும்பம் வருதும்மா! இது அப்பாவுக்கு தெரியும்!”

“ ஏன் அப்பா எங்கிட்ட கூட சொல்லலை? என்ன நடக்குது நம்ம வீட்ல?”

“ அந்த முதலாளியே எனக்கு ஃபோன் போட்டு, இந்த மாதிரி நான் சிதம்பரம் கிட்ட பேசியிருக்கேன்! நீ அவரோட மூத்த மகளாச்சே! உனக்கு சொல்றது மரியாதைனு ஃபோன் பண்றேன்மா! சீக்கிரமே உன் அம்மா வீட்டுக்கு நீ வந்துடும்மானு சொன்னார்!”

“ பாரதிக்கு இது தெரியுமா?”

“ அவ தானேம்மா கல்யாண பொண்ணு ? அவளுக்கு தெரியாம இருக்குமா?”

“ என்னடீ வாசுகி இது? அவங்க கோடீஸ்வர குடும்பம்! என்ன ஏற்பாடுகளை செய்யணும்னு தெரியலியே? அப்பா ஏன் இத்தனை மெத்தனமா இருக்கார்? இதுல அவருக்கு சம்மதம் இல்லையா?”

“ ஏம்மா, அவங்க கோடீஸ்வர குடும்பம்! இவ அவரையே எதிர்த்து மீடியால பிரபலம் ஆனவ! அருள் அடுத்தடுத்து நம்ம குடும்பத்துக்கு நல்லதை செய்யற பையன்! இது போதாதா?”

“ அருள், அப்பா கூட இணக்கமா இல்லைனு தகவல் வருதேடீ?”

“ அதைப்பற்றி் நமக்கென்ன? மகன் மேல உள்ள அக்கறையால தன் அந்தஸ்த்துக்கு ரொம்ப கீழே இருக்கற, தன் கிட்ட சம்பளம் வாங்கற, ஒரு ஊழியர் மகளை மருமகளாக்கற அளவுக்கு பெருந்தன்மை அவருக்கு இருக்கே!”

“ ஆமாண்டி வாசுகி! இத்தனை காலம் நம்ம குடும்பத்துக்கு படியளக்கற பகவான் அவர் தானே? அதை மறந்தா, நமக்கு சோறு கிடைக்குமா? அவங்க எத்தனை மணிக்கு வர்றாங்க? என்ன செய்யணும்? பாரதி, எப்ப ஆஃபீஸ்லேருந்து வர்றா? எனக்கு தலை சுத்ததுது வாசுகி!”

“ நீ முதல்ல ஒக்காரு! நான் தான் வந்துட்டேனே! நான் இவருக்கும் சொல்லியாச்சு! ஆனாலும் அப்பாவை விட்டு இவர் கிட்ட பேசச்சொல்லு! அது தான் மரியாதை!”

வாசுகி, பாரதிக்கு ஃபோன் அடித்தாள்.

ந்த நேரம் பாரதி அருள் எதிரே அவன் பட்டறையில் இருந்தாள்!

“ அக்கா ஃபோன் பண்றா!”

“ எங்கப்பா, நீங்க யாரும் இதை சொல்லலைன்னாலும், அவரே அக்காவுக்கு சொல்லியிருப்பார்! உன் அக்கா, உன் வீட்டுக்கு வந்திருப்பா! பூதம் தன் ஆட்டத்தை தொடங்கியாச்சு! நீ நினைச்சா கூட பெண் பார்க்கும் வைபவத்தை நிறுத்த முடியாது! அது தான் பூதம்! உன் அக்கா கிட்ட பேசு!”

“ என்ன பேசறது?”

“ அவங்க டென்ஷனா இருப்பாங்க! நீ கூலா இரு!”

எப்படி பேச வேண்டும் எனஅவளுக்கு அவன் கோடு போட, பாரதி எடுத்தாள்!

“ ஏண்டீ, ஃபோனை எடுக்க இத்தனை நேரமா?”

“ ஆஃபீஸ்ல வேலை இருக்கும் போது உடனே எடுக்க முடியுமா?”

“ உன்னை பெண் பார்க்க நம்ம முதலாளி வரப்போற சங்கதி உனக்கு தெரியுமா? தெரியாதா பாரதி?”

“ ம்! ஒரு மணி நேரம் முன்னால அருள் சொன்னார்! அப்புறமா அவங்கப்பாவும் சொன்னார்! சாயங்காலம் வர்றாங்களாம்!”

“ நம்ம அப்பா எதுவும் பேசலையா?”

“ இது வரைக்கும் பேசலை! நானும் கேக்கலை!”

“ என்னடி இத்தனை கூலா பேசற நீ? எனக்கு முதலாளியே ஃபோன் பண்ணி எத்தனை மரியாதையா கூப்பிட்டார் தெரியுமா? அப்பா இன்னும் நம்ம யார் கிட்டேயும் இது பற்றி ஏன் பேசாம இருக்கார்? அம்மாவுக்கு பீப்பீ ஏறியாச்சு!”

“ எதுக்கு? அத்தனை பதட்டப்பட வேண்டிய அவசியம் என்ன?”

“ ஏண்டீ நீ இப்படி இருக்கே? உடனே அரை நாள் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வா! நான் அப்பா கிட்ட இப்பவே பேசறேன்!”

வைத்தாள்!

“ அருள் நாம இப்ப என்ன செய்யணும்?”

“ நாங்க எங்கப்பா சொன்ன மாதிரி வர்றோம்! உனக்கு என்னை பிடிச்சிருந்தா, சம்மதம் சொல்லு! இல்லைனா, வேண்டாம்னு சொல்லிடு!”

“ என்ன? விளையாடறீங்களா?”

“ பூதம் அவமானப்பட்டு திரும்பட்டும்! அதுவும் ஊர் முழுக்க தெரியட்டும்!”

“ அப்புறமா காலம் முழுக்க நாம ஒண்ணு சேர முடியாது!”

“ எனக்கு நீதான்னு முடிவான பிறகு அதை யாரால மாற்ற முடியும்? ஆனா, பூதம் களத்துல இறங்கறது நம்ம கல்யாணத்தை நடத்த இல்லை! வேற ஏதோ இருக்கு! அதை கண்டு புடிக்கணும்! நான் சொல்ற மாதிரி நீ நடந்துக்கோ!”

அருள் அவளிடம் சின்னக்குரலில் சொல்லத்தொடங்கினான்!

பூதம் அருளுக்கு ஃபோன் செய்தது!

“ அருள்! சீக்கிரம் வீட்டுக்கு வா! ஆறு மணிக்கு சிதம்பரம் வீட்ல நாம இருக்கணும்!”

அதை ஸ்பீக்கரில் போட்டான் அருள்! பாரதியும் கேட்டாள்!

ரியாக நாலு மணிக்கு சிதம்பரம், பின்னால் பாரதி, இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்! அம்மா ஓடி வந்து அப்பாவிடம் படபடவென பொரிய தொடங்கினாள்!

“ வாசுகி சொல்லி நான் தெரிஞ்சுக வேண்டியிருக்கு! இந்த வீட்ல எனக்கு மரியாதை அவ்ளோ தான்!”

“ எதுக்கு நீ படபடன்னு பேசற? அப்பாவுக்கே ஆஃபீஸ் போன பிறகு தான் அவர் சொல்லியிருக்கார்! அப்புறமா, அக்காவுக்கு, எனக்குனு வரிசையா சொல்றார்?”

“ சொன்னதும் வாசுகி புறப்பட்டு வந்துட்டா! நீ கல்யாண பொண்ணு! இவர் அதை நடத்த வேண்டிய உன் அப்பா! ரெண்டு பேரும் எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி இருக்கீங்க? என்னங்க! வரப்போறது உங்க முதலாளி! சம்பந்தம் பேச வர்றார்! நாம என்ன செய்யணும்? நமக்கு அவகாசம் இருக்கா?

“ எதுவும் செய்ய வேண்டாம்! காஃபி மட்டும் குடு! அதையும் அவர் சாப்பிடுவாரானு தெரியாது!”

“ ஏம்பா? அம்மா கேக்கறது நியாயம் தானே? அப்பேற்பட்ட மனுஷன் இறங்கி வரும் போது, நாம எந்த விதத்துல மரியாதை செய்யணும்னு தெரிய வேண்டாமா?”

“ இதப்பாரு வாசுகி! முடிவுகளை அவரா எடுக்கறார்! பிசினஸ்ல அவர் இப்படித்தான் படக்குனு முடிவெடுப்பார்! இது வாழ்க்கை! அவர் மாதிரி நான் அவசரப்பட முடியாது! இதுல அருள், பாரதி ரெண்டு பேரும் பேசணும்! நிறைய இருக்கு! நீங்க எந்த முடிவுக்கும் இப்பவே வந்து கனவுகளை வளர்த்துக்க வேண்டாம்! அமைதியா இருங்க! நான் பேசிக்கறேன்! பாரதி! நீ மட்டும் கொஞ்சம் உள்ளே வா!”

அப்பா, மகள் உள்ளே போய் கதவை சாத்திக்கொள்ள,

“ என்னடீ வாசுகி நடக்குது?”

“ எனக்கும் புரியலைம்மா! ஏற்கனவே மீடியால கொஞ்சம் ஆகாதவங்க, முதலாளியை, பாரதி வச்சு செஞ்சிட்டானு எழுதறாங்க! அவரை எதிர்த்த காரணமா, இவளுக்கு தேவையில்லாத விளம்பரம்! அதையும் தாண்டி அவர் சம்பந்தம் பேச வர்றார்! இன்னிக்கு இவ என்ன பேசுவான்னு தெரியலியே?”

“ எனக்கும் அது தாம்மா ரொம்ப பயம்மா இருக்கு! அப்பாவும் பாரதி பேச்சை கேட்டு ரொம்ப ஆடறார்! பெரிய மனுஷங்களை பகைச்சுக்கறது நல்லதில்லை வாசுகி! நீயாவது அவங்களுக்கு எடுத்து சொல்லு! அவர் தந்த வேலையை நிராகரிச்சவ பாரதி! இப்ப அவர் மகனையும் நிராகரிச்சா, அவர் கொலை காண்டுக்கு ஆளாவார்!”

“ நாம இத்தனை பேர் வீட்ல இருக்கும் போது, அப்பா, பாரதி இந்த மாதிரி தனியா போய் பேசறது எதுக்கு”

“ எனக்கும் அது பிடிக்கலைம்மா!”

உள்ளே அப்பா..பாரதியின் விவாதம் வேகமாக நடந்து கொண்டிருந்தது. அப்பா முகம் படு சீரியசாக இருந்தது..!

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...