பயணங்கள் தொடர்வதில்லை | 12 | சாய்ரேணு
12. சால்வை
ட்ரெயினில் கொடுக்கப்பட்டிருந்த சால்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கலிவரதனும் காமுப் பாட்டியும் அமர்ந்திருந்தார்கள்.
“நமஸ்காரம்” என்றவாறே உள்ளே நுழைந்தார்கள் தர்மா, தன்யா, தர்ஷினி. கலிவரதன், காமுப் பாட்டி இருவரும் தங்கள் கேபினிலேயே அவர்களைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டதால் இங்கே வந்திருக்கிறார்கள்.
“வாங்கோ” என்றாள் காமுப் பாட்டி. கலிவரதன் லேசாகத் தலையை மட்டும் அசைத்தார்.
ஆரம்ப அறிமுகங்கள் முடிந்ததும் “சுப்பாமணி – அவரைப் பற்றிச் சொல்லுங்கோ” என்று கேட்டுக் கொண்டாள் தன்யா.
காமுப் பாட்டி ஏதோ பேச ஆரம்பித்தவள், கலிவரதன் பதில் சொல்லப் போகிறார் என்றதும் நிறுத்திக் கொண்டாள்.
“சுப்பாமணியைப் பற்றி என்ன சொல்றது? பல வேலைக்காரன், பலே வேலைக்காரன்” என்றார் கலிவரதன்.
“இதுக்காக யாரும் ஒருத்தரைக் கொல்ல மாட்டாங்க, சார்” என்றாள் தன்யா.
“அவன் நல்லவன் இல்லை” என்றாள் காமுப் பாட்டி.
“காமு! குழந்தைகள் என்ன பண்றான்னு பாரு போ! ஒண்ணும் பயப்படலையான்னு கேட்டுத் தெரிஞ்சுக்கோ! பயப்படாதுகள், ஆனா உன் நாட்டுப் பொண்ணால அதுகளைச் சமாளிக்க முடியாது. போ, அவளுக்கு ஒத்தாசை பண்ணு” என்றார் கலிவரதன்.
காமுப் பாட்டி எழுந்தாள். முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டாளோ இல்லையோ, யாரும் பார்க்கவில்லை. அடுத்த கேபினுக்குப் போய்விட்டாள்.
“லேடீஸுக்கு விஷயம் எதுவும் தெரியாது. அப்படி இருக்கறதுதான் நல்லது. இப்போ பாருங்கோ, ஒண்ணும் தெரியாதப்பவே என் ஆம்படையா எப்படி விஷயங்களை ஊகிக்கறான்னு” என்றார் கலிவரதன்.
தன்யாவும் தர்ஷினியும் வந்த சிரிப்பைச் சந்தர்ப்பம் கருதி வாய்க்குள் அடக்கினார்கள்.
“சுப்பாமணி நல்லவர் இல்லைன்னு மாமி சொல்றாங்க…” என்று இழுத்தாள் தன்யா.
கலிவரதன் சட்டென்று பேசிவிடவில்லை.
“கேரக்டர்…” என்று தன் பங்குக்கு எடுத்துக் கொடுத்தாள் தர்ஷினி.
“சே! அதிலே ஒரு குறை சொல்ல முடியாது! அதாவது… எனக்குத் தெரிஞ்சவரை… தண்ணி உண்டுன்னு கேள்விப்பட்டேன். அக்கேஷனலா… கொஞ்சமா…” என்றார் கலிவரதன்.
“அப்போ அவர் நல்லவர் இல்லைன்னு மாமி சொல்றது…”
“அதுவும் சரிதான். சுப்பாமணி… அவன் கொஞ்சம் லேடி-லைக். உரிமையா கிச்சன் வரைக்கும் வந்து ஆத்துப் பெண்களுக்கு ஹெல்ப் பண்ணுவான். சமையல்ல எக்ஸ்பர்ட். புளியோதரை கிளறினா, தனி வாசனையா இருக்கும். ஊறுகாய் போட்டான்னா, ஊருபூரா மணக்கும். புட்டு முதல் பண்ணி வெச்சுடுவான்னா பாருங்கோ! ஆரம்பகாலத்தில் ஃபங்க்ஷன்ஸ்ல சமையல்ல அஸிஸ்ட் பண்ணிட்டுத்தான் இருந்தான்… தண்ணி பிடிச்சு ட்ரம்களை நிரப்பற வேலைகூடச் செய்வான். அதெல்லாம் உழைப்பாளி” கலிவரதன் பழங்காலத்தை அசைபோட்டார்.
தன்யா அவரைச் சற்று எரிச்சலுடன் பார்த்தாள். ‘என்ன இவர் விஷயத்துக்கே வராமல்…’
‘தொலைகிறது, பொறுமையாகப் போ’ என்று தர்மா அவளுக்கு ஜாடை காட்டினான்.
“அந்தக் காலக் கல்யாணங்கள்ளே, சம்பந்திச் சண்டைன்னு ஒண்ணு வரும், தெரியுமோ?” என்றதும் மூவரும் சிரித்தார்கள்.
“வாஷிங்டனின் திருமணம் புக்கில் படிச்சிருக்கோம்” என்றாள் தர்ஷினி.
“அது வேடிக்கை. வேதனையா போகிற அளவுக்குச் சம்பந்திச் சண்டை நடக்கறதுண்டு. எங்க வீட்டுக் கல்யாணங்கள் எல்லாமே கலாட்டா இல்லாம நடந்ததேயில்லை. சுப்பாமணிதான் அதையெல்லாம் சமாதானம் பண்ணுவான். அப்புறம் விசாரிச்சுப் பார்த்தேன்னா, எல்லா கலாட்டாக்கும் அவன் தான் காரணமா இருப்பான்” என்றார் கலிவரதன்.
தன்யாவும் தர்ஷினியும் நிமிர்ந்தார்கள்.
“இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி… தெரிஞ்சவா கல்யாணம் ஒண்ணு நடந்தது. பிள்ளையாத்தில் ஒரு சொந்தக்காரப் பையன்… கொஞ்சம் கை நீளம்னு வெச்சுக்கோங்கோளேன்… ஒரு வெள்ளிக் கெண்டியைத் திருடிப்பிட்டான்… எங்களுக்கு விஷயம் தெரிஞ்சபோது, கல்யாண ஆத்திலே இதைப் பெரிய கலாட்டா ஆக்காம, சத்தங்காட்டாம விஷயத்தை முடிச்சுடுவோம்னு நினைச்சுண்டிருந்தோம்… அதுக்குள்ளே விஷயம் பொண்ணாத்துக்குத் தெரிஞ்சு போச்சு… நாங்க பொண்ணாத்திலே ஒருத்தர் மேலே பழி போட்டுட்டோம்னு அவா நினைச்சுட்டா… பெரிய சண்டையாயிடுத்து… அப்புறம் சுப்பாமணிதான் வந்து எல்லாரையும் சமாதானம் பண்ணி வெச்சான்…”
இந்தக் கதையின் முக்கியத்துவம் என்ன என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே கலிவரதன் மீண்டும் பேசினார் – “கல்யாணம் முடிஞ்சு நாலைஞ்சு மாசம் கழிச்சுத்தான் எங்களுக்குத் தெரியவந்தது, இந்த விஷயம் பொண்ணாத்துக்குப் போனதே சுப்பாமணி மூலமாத்தான்னு!”
தர்மா, தன்யா, தர்ஷினி அவரை அதிர்ச்சியாகப் பார்த்தார்கள்.
“அவன் கெட்டிக்காரத்தனத்தைப் பார்த்தேளா? பொண்ணாத்துக்கும் நல்லவனாயிட்டான், சமாதானம் பேசி பிள்ளையாத்துக்கும் நல்லவனாயிட்டான்! என் பிள்… அதாவது… என் சொந்தக்காரர் அவனுக்கு சங்கருடைய ஆபீஸில் சின்ன வேலைகூட வாங்கிக் கொடுத்தார். அப்புறம்தான் அவன் திரிசமன் தெரிஞ்சுது!” என்று முடித்தார் கலிவரதன்.
*
அடுத்த கேபினுக்குத் தேவசேனாபதியைப் பார்க்கச் சென்றபோது, அவர் சந்திரசேகருடன் பேச அவருடைய கேபினுக்குப் போயிருப்பதாக அவர் மனைவி சொன்னாள்.
“சாப்பாட்டுக்கு நாழியாகலையோ? சாப்பிட்டுட்டு மேல் விசாரணையெல்லாம் வெச்சுக்கக் கூடாதா?” என்று கரிசனத்துடன் கேட்டாள் காமுப் பாட்டி.
“தினமுமே நாங்க சாப்பிட நேரமாகும் பாட்டி! வேலை இருக்கும்…” என்று தர்ஷினி சொல்ல, “வேலை இருந்துண்டேதான் இருக்கும்! அதுக்காக வயித்தைக் காய போடுவாளோ!” என்று பாட்டி இடைமறித்துக் கூறினாள்.
“நல்ல சமையலா பண்ணினா, சாப்பிட ஆசையிருக்கும், பாட்டி! இந்த நாகரீகச் சமையலெல்லாம் யாருக்குப் பிடிக்கறது?” என்று தர்மா சொல்லிவைத்தான்.
அதைப் பிடித்துக் கொண்டுவிட்டாள் காமு பாட்டி. “ஒடப்பெறப்புக்கு நன்னாப் போடாட்டா, நீங்க கல்யாணம் ஆகி ஆம்படையானுக்கு எப்படிப் போடுவேள்? நன்னாயிருக்குடி!” என்று மோவாயில் கைவைத்தாள்.
தன்யாவுக்குச் சிரிப்பு வந்தது. “சரிதான், பாட்டி! எல்லாம் பண்ணித்தான் போடறோம்! போன திருவாதிரைக்குக் கூடக் களி பண்ணினோமே!” என்றாள்.
“தாளிதன் குழம்பு பண்ணினியோ?” – பாயிண்ட்டைப் பிடித்தாள் காமுப் பாட்டி.
“அது கஷ்டமாச்சே பாட்டி!”
“என்னடி கஷ்டம்? வேணும்னா நான் சொல்லித் தரேன்” என்றாள் பாட்டி. அங்கே கேபினில் இருந்த மற்றவர்களின் தவிப்பை லட்சியம் செய்யாமல்.
“சித்த டைனிங் காருக்கு வரேளா, பாட்டி? நீங்க சொல்லச் சொல்ல எழுதிக்கறேன்” என்றாள் தர்ஷினி.
“ஓ, வரேனே” என்று கிளம்பிவிட்டாள் பாட்டி, சரஸ்வதியின் சைகைகளைக் கவனிக்காதவளாய்.
*
“சுப்பாமணியைப் பற்றித் தெரிஞ்சுக்கத்தானே கூப்பிட்டேள்?” என்றாள் பாட்டி எடுத்த எடுப்பிலேயே.
“நாங்கள்ளாம் டிடக்டிவ்ஸ்னு சொல்லிக்கறோம்! பாட்டி, நீங்க டிடக்டிவ்வா இருந்திருந்தா ஒரு குற்றவாளி வாலாட்ட முடியாது! சரியா சொல்லிட்டேளே!” என்று வியந்து சொன்னாள் தன்யா.
“இது என்னடி கம்ப சூத்திரம்? போகட்டும், சுப்பாமணியைப் பற்றி என்ன தெரியணும்?”
“தாத்தா சில விஷயங்கள் சொன்னார்” என்று சொல்லி கலிவரதன் சொன்ன கதையைச் சுருக்கமாகச் சொன்னாள் தன்யா.
“ஏன் பாட்டி? இது நடந்தது உங்க பிள்ளை கல்யாணத்தில்தானே?” என்று கேட்டாள் தர்ஷினி.
பாட்டி வாய்விட்டுச் சிரித்தாள். “இதைக் கண்டுபிடிக்க டிடக்டிவ்ஸ் வேணுமா? குழந்தைகூடச் சொல்லிடும்! அப்பாவி, என் ஆத்துக்காரர்!” என்றாள்.
“பாட்டி, சுப்பாமணி பற்றி உங்களுக்கு வேறே விவரங்கள் தெரிஞ்சா சொல்லுங்கோ! எங்களுக்கு உதவியா இருக்கும்!” என்று கேட்டுக் கொண்டாள் தன்யா.
“இந்த இருபத்தஞ்சு வருஷக் கதையெல்லாம் இப்போ சுப்பாமணியைக் கொன்றது யாருன்னு கண்டுபிடிக்க எப்படி உதவும்?” என்று கேட்டாள் காமுப் பாட்டி.
“சுப்பாமணி குணத்தைத் தெரிஞ்சுக்க இதெல்லாம் உதவும், பாட்டி! அப்புறம் அவர் கொலைகாரனைக் கண்டுபிடிக்கறது ஈஸி” என்றாள் தன்யா.
பாட்டி சிறிதுநேரம் மௌனமாக இருந்தாள். பிறகு “உங்களைப் பார்த்தா நல்ல குழந்தைகளா தெரியறது. இப்போ நான் சொல்லப் போற விஷயம் வெளியே போகக்கூடாது. யாருக்கும் தெரியக் கூடாது” என்றாள்.
“தெரியாது, பாட்டி! சொல்லுங்கோ.”
“என் ஆத்துக்காரர் சொன்னாரே, ஒரு விவகாரம், அதோட சூத்ரதாரியே சுப்பாமணிதான்னு எனக்கும் என் மாட்டுப் பெண்ணுக்கும் சந்தேகம்” என்றாள் பாட்டி.
“என்ன சொல்றேள்?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் தன்யா.
“என் மாட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு சுப்பாமணிக்கு ஆசை இருந்தது. ஆனா சரியா வேலை இல்லாதவனுக்கு அவ தோப்பனார் என்னமா பொண்ணைக் கொடுப்பார், சொல்லு? என் பிள்ளைக்கு அவளை நிச்சயம் பண்ணினதிலிருந்தே அவளை மிரட்டியிருக்கான். அவ கல்யாணத்தை நிறுத்திடணும்னே அந்தப் பிள்ளையாண்டானைத் தூண்டி கெண்டியைத் திருட வெச்சு, இந்தத் தகிடுதத்தத்தைப் பண்ணியிருக்கான். பிரச்சனை பெரிசாகவே, தான் மாட்டிக்கப்படாதுன்னு நல்லவன் வேஷமும் போட்டுட்டான்! எப்படிப்பட்டவன் பாரு!” என்று வியப்புடனும் கோபத்துடனும் சொன்னாள் பாட்டி.
பாட்டியின் பேச்சைக் கவனமாகக் கேட்டு, ஜீரணித்துக் கொண்டார்கள் தன்யாவும் தர்ஷினியும்.
“உங்க பிள்ளை தேவசேனாபதி சார் தான் சுப்பாமணிக்கு சங்கர்-ஸ்ரீனி அஸோஸியேட்ஸ்ல வேலை வாங்கிக் கொடுத்தாராமே?”
“ஆமா, தேவா அப்போ கம்பெனி லீகல் டிபார்ட்மெண்ட்டில் வேலைக்கு இருந்தான், அப்புறம் தனியா ப்ராக்டிஸ் ஆரம்பிச்சுட்டான்.”
“இந்த மிஸஸ் இராணி கந்தசாமி…”
“எங்களுக்கு ஒறவுக்காரா தான், ஆனா எனக்குச் சுப்பாமணி அவா விவகாரத்தில் எப்படிச் சம்பந்தப்படறான்னு தெரியாது. ஆனா ஏதோ இருக்குன்னு தெரியும். அவளுக்கு ஒரே பொண்ணு. நல்லபடியா கல்யாணம் ஆகி, இப்போ ஸ்டேட்ஸ்ல இருக்கா” என்றாள் பாட்டி.
“மிஸ்டர் கிருஷ்ணகுமார்?”
“கிருஷ்ணகுமாருக்கு ஒரு பிள்ளை இருந்தான். சின்ன வயசிலேயே போயிட்டான்” என்றாள் பாட்டி.
“என்ன சொல்றேள்? கிருஷ்ணகுமாருக்கு ரெண்டு மகள்கள் தானே? ட்வின்ஸ்…” என்று தன்யா வியப்பாகக் கேட்டாள்.
“அது இல்லேடி…” என்று பாட்டி ஆரம்பித்தபோது… “என்ன வம்பு பேசிண்டிருக்கே, அம்மா? அங்கே சரஸ்வதி தேடிண்டிருக்கா உன்னை” என்றவாறே தேவசேனாபதி டைனிங் காரின் உள்ளே நுழைந்தார்.
*
காமுப் பாட்டி வெளியேறியதும் “தேவசேனாபதி சார், உங்க மகன் அஸ்வினுக்கும், சந்திரசேகர் சார் மகன் பிரபுராமுக்கும் எப்படிப் பழக்கம்?” என்று எடுத்த எடுப்பிலேயே தேவசேனாபதியை நோக்கிக் கேள்விக் கணையை வீசினாள் தன்யா.
“சரியா கேளு, தன்யா. உங்க மகனுக்கும், சந்திரசேகர் மகனுக்கும், சுப்பாமணிக்கும் எப்படிப் பழக்கம்?” என்று புன்னகையோடு கேட்டாள் தர்ஷினி.
இதைச் சற்றும் எதிர்பாராத தேவசேனாபதிக்குப் பயம் மனதைச் சுற்றிச் சால்வை போர்த்தியது. முகத்தில் ஏஸியின் குளிரை மீறிக் கொண்டு வியர்த்தது.