வீரமே வாகை சூடும்! -திரை விமர்சனம்
குடும்பம், சென்டிமென்ட், அரசியல், அராஜகம், போலீஸ், நகைசுவை, காதல் எல்லாமே ரவுசு! தொய்வில்லாமல் இடைவேளை வரை ஓட்டம். இடையில் கொஞ்சம் வேண்டாத சோர்வு. படத்தின் நீளம் குறைத்திருக்கலாம்.
அயோக்கியங்களையும் அட்டூழியங்களையும் அவன்… இவன்… எனப் பேசலாம். குடும்பத்துப் பெரியவர்களையும்கூட நாகரிகமில்லாமல் அவன்… இவன்… என்ப துடன் கேவலமாய் வசனங்கள் எதற்கு? நகைச்சுவை என்கிற பெயரில் இந்த அநாகரிங்கங்களை யோகிபாபு நிறுத்தவேண்டும். இல்லை, இல்லை… டைரக்டர் நிறுத்த வேண்டும்.
சாமானிய மனிதனின் கோபத்தை மையமாக வைத்துப் படத்தை இயக்கி யிருக்கிறார் இயக்குநர் து.ப.சரவணன். வெவ்வேறு திசையில் செல்லும் மூன்று கிளைக் கதைகளை ஒன்றாக அமைத்து திரைக்கதை உருவாக்கி இருக்கிறார். வழக்கமான கமர்ஷியல் படத்திற்கு உண்டான அம்சங்களை வைத்தே படத்தை இயக்கி இருக்கிறார். ஆக்சன் காட்சிகள் படத்திற்குப் பலம். பிற்பாதியில் யூகிக்கும் படியான காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்திற்கு பலவீனம்.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஷால் தனக்கே உரிய பாணியில் அசத்தி யிருக்கிறார். தங்கை பாசம், சமுதாயத்தின் மீது அக்கறை, சாமானிய மனிதனின் கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார்
கொஞ்சம் கதையில் பயணிக்கலாம்.
நாயகன் விஷால் போலீஸ் எஸ்.ஐ. பதவிக்குத் தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட் டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய அப்பா மாரிமுத்து போலீஸ் ஏட்டாக இருக்கிறார். விஷாலின் தங்கை ரவீனா ரவி கல்லூரியில் படித்து வருகிறார்.
ரவீனாவை லோக்கல் ஏரியாவில் இருக்கும் ரவுடியின் தம்பி காதலிக்கிறார். ஆனால், ரவீனா அவருடைய காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் கோபமடை யும் ரவுடியின் தம்பி ரவீனாவை மிரட்டி காதலைச் சொல்ல வைக்கிறார். இது விஷாலுக்கும் ரவுடிக்கும் தெரிந்து தம்பியை அசிங்கப்படுத்து கிறார்கள்.
இதனால், ரவீனாவைக் கடத்த முயற்சி செய்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக வேறொரு கும்பல் ரவீனாவைக் கடத்திக் கொலை செய்துவிடுகிறார்கள். இறுதி யில் தங்கை ரவீனாவைக் கொலை செய்தவர்களை விஷால் கண்டுபிடித்தாரா? ரவீனாவைக் கொலை செய்ய என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் டிம்பிள் ஹயாதி கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். தங்கையாக வரும் ரவீனா நடிப்பில் கவனிக்க வைத்திருக் கிறார். வில்லன் பாபுராஜ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மாரிமுத்து.
கவினின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்குப் பெரிதும் உதவி இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘வீரமே வாகை சூடும்’ பாசிட்டிவ் பாதி, நெகடிவ் பாதி.