பத்துமலை பந்தம் | 41 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 41 | காலச்சக்கரம் நரசிம்மா

41. திரிசங்கு சொர்க்கம்

லையுச்சியில் கனிஷ்கா அரங்கேற்றியிருந்த பயங்கரத்துக்குச் சாட்சியாக தலைகுனிந்து மூங்கில் மரங்கள் அமைதியுடன் நிற்க, அவற்றின் மலர்களில் இருந்து பனித்துளிகள் வழிய, அந்த மரங்கள் மௌனமாக மிதுனுக்குக் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திக்கொண்டிருந்தன.

விசாரணைக்கு வரும் போலீஸ் அதிகாரியைப் போன்று, மெதுவாக எட்டிப் பார்த்தான் சூரியன். சூரிய கிரணங்கள் போகர் பள்ளியின் வாயில் வழியாக குகைக்குள் எட்டிப்பார்த்து, இன்னமும் மூன்றாவது நவபாஷாணச் சிலையின் முன்பாக தியானத்தில் இருந்த மயூரியைத் தட்டி எழுப்பியது. ‘இப்படியும் ஒரு பக்தியா?’ என்று அவளைச் சிலாகித்துப் பார்த்தபடி, குகன்மணி குகையின் நுழைவாயிலில் அமர்ந்தபடி, தனது கால்களை வெளியே தொங்கவிட்டபடி, அவற்றை ஆட்டிக் கொண்டிருந்தான். கீழே அதள பாதாளம் என்கிற அச்சம் கூட இல்லை.

சூரியன் இன்னொமொரு காரியத்தையும் செய்தான். முந்தைய தினம் மாலை, தான் அஸ்தமிக்கும் சமயத்தில் மலையுச்சியில் இருந்த மூங்கில் மரங்களைத் தாலாட்டி உறங்க வைத்திருந்தான். அவை, பனி பெய்ததால், வளைந்து ஒன்றுக்கொன்று பிணைந்து மேடை போல அமைந்திருந்தன.

(மலையுச்சியில் காட்டு மூங்கில்கள் மிகவும் ஆபத்தானவை. Bamboo என்கிற மூங்கிலின் ஆங்கில வார்த்தையே மலாயா மொழில் இருந்து தோன்றியது. மலேஷியா மூங்கிலுக்கு பெயர் போனது. பல வகை மூங்கில்கள் இங்கே வளருகின்றன. மலையுச்சிகளில் வளரும் Bambusoideae of the grass family Poaceae. குறிப்பிடத்தக்கவை. இவை மிக வேகமாக வளருவதோடு, மிகவும் ஆபத்தானவையும் கூட. இந்த வகை மூங்கில் மரங்களை பத்தினி மரங்கள் என்று அழைப்பார்கள். சூரியன் மறைந்ததும், இவை இரவு நேரங்களில் வளைந்து பூமியில் நெளிந்து கிடைக்கும். சூரிய ஒளி பட்டதும், புத்துணர்வுடன், மீண்டும் நிமிரும். சூரிய ஒளியில் மட்டுமே நிமிர்ந்து நிற்கும். திடீரென்று சூரிய உதயத்திற்கு பிறகு, திருமால் விஸ்வரூபம் எடுப்பது போல, நிமிர்ந்து நிற்கும். முப்பதடி மரங்கள் கூட இரவில் வளைந்து நெளிந்து கிடந்தது காலையில் நிமிர்ந்து நிற்கும் )

அந்த மேடையில்தானே கனிஷ்கா தன்னையும் அறியாமல் உறங்கிவிட்டிருந்தாள். கீழே போகர் பள்ளிக்குச் சென்றிருந்த குகன்மணியும், மயூரியும், காலை வரை வரமாட்டார்கள் என்கிற யூகத்தில் தன்னை மறந்து உறங்கி விட்டிருந்தாள்.

ஆனால் தான் படுத்துக்கிடந்தது, மூங்கில் மரங்கள் அமைத்திருந்த தற்காலிக மேடை என்பதை உணரவில்லை. சூரியக் கிரணங்கள் அந்த மூங்கில் மரங்களின் மீது பட்டவுடன், அவை சிலிர்த்துக்கொண்டு எழ, மூங்கில் மரம் ஒன்றில் கனிஷ்கா சிக்கிக்கொண்டாள். திடீரென்று தனது உடல் குலுங்க, தகான் மலையில் நில நடுக்கம் ஏற்படுகிறது என்கிற உணர்வுடன் தான் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். தான் உயரே, உயரே போகவும்தான், பயத்துடன் மூங்கில் மரத்தை உறுதியுடன் அணைத்துக் கொண்டாள். நல்லவேளையாக, அந்த மரமும், இவள் இறுக பற்றிக் கொள்ளும்படியாக மெல்லியதாகத்தான் இருந்தது.

கனிஷ்கா வீறிட்டு அலறினாள். ஆனால் அவள் தொற்றிக்கொண்டிருந்த மூங்கில் மரமோ விஸ்வரூபம் எடுத்து, முப்பது அடிக்கு ஓங்கி உலகளந்து நின்றது.

மேலே ஊசலாடிக்கொண்டிருந்த கனிஷ்காவின் கண்களில் பள்ளத்தாக்கு நன்கு புலப்பட, மூங்கில் மரம் காற்றில் இப்படியும் அப்படியும் ஆட, மூங்கில் மரம் முறிந்து தான் மிதுன் ரெட்டி பின்பாகவே சென்று விடுவோமோ என்கிற பயம் ஏற்பட, கண்களை இறுக மூடிக்கொண்டு, அலறத் தொடங்கினாள் கனிஷ்கா.

அவளது அலறல், கீழே இருந்த குகன்மணிக்குக் கேட்டது. தனக்குள் அவன் சிரித்துக் கொண்ட நேரம், “போகலாமா..?” என்று இனிமையான குரல் கேட்டது. திரும்பி நோக்கிய போது கண்களில் பரவசத்துடன் நின்று கொண்டிருந்தாள், மயூரி.

“போகலாம்..!” –அவளைப் பார்த்த குகன்மணி, புதிய உற்சாகத்துடன் எழுந்தான்.

“ஒரு நிமிஷம், குகன்..! எனக்கு புத்தி வந்தது. ப்ரபஞ்சங்களைக் கடந்து வாழற ரகசியங்களை நூறு வயசு கூட வாழ வக்கில்லாத மனுஷன், அடைய நினைக்கிறது ரொம்ப தப்பு. தான் போன இடத்துல புல்லு முளைக்கப் போகிறதுன்னு தெரிஞ்சும் மனுஷன் இந்த ஆட்டம் ஆடறானே..! கூடாது… என் குடும்பமாக இருந்தாலும் தப்பு செஞ்சா தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும். குகன்..! முருகன் தீர்ப்பை வழங்க போறான்னு நினைக்கிறேன். ஆனா அவனை நோக்கித் தியானத்துல இருக்கறப்ப ஒரு ஒரு வரம்தான் கேட்டேன். என் குடும்பத்து உறுப்பினர்கள், தண்டனையை அனுபவிக்கட்டும். ஆனால். அதே சமயம் அவங்க என் ரத்தம். அவங்களுக்கு கோரமான முடிவு ஏற்படறதை என்னால கேட்க முடியாது. அதனால அவர்களை ஜஸ்ட் லைக் தட்… இல்லாம பண்ணிடு..! அது போதும்..! எனக்கு அவங்க மரணச் செய்தியும் காதுல விழக்கூடாது..! அவங்க டெட் பாடியையும் நான் பார்க்க கூடாது. ஆனா அவங்க இலலாம போயிடணும்.–ன்னு ஒரு வரம் கேட்டேன். பார்க்கலாம் என்ன செய்யறான்னு..!” –மயூரி கூறினாள்.

குகன்மணி உண்மையிலேயே மலைத்துப் போனான். பாசத்துக்கும், தர்மத்திற்கும் இடையே ஏற்பட்ட போரில் சிக்கி, கடைசியில் தர்மம் நிலைப்பதற்காக கண் மூடி பாசத்தை உதறி, அவர்களைத் தண்டிக்க அனுமதி தருகிறாள். அதே சமயம் அவர்களது முடிவும், வேதனையைத் தரக்கூடாத வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். பிரம்மனின் படைப்பில் இம்மாதிரி உன்னதப் படைப்புகளும் தோன்றுகின்றனதான்.

“உன் எண்ணங்கள் எல்லாமே பூர்த்தியாகும் மயூரி..! கிளம்பலாம்..!” –என்றவன் குகையில் தான் வைத்திருந்த நீண்ட கம்பை எடுத்தான். அதில் ஒரு துரட்டி பிணைக்கப்பட்டிருந்தது. அதை கொண்டு மீண்டும் காட்டுக்கொடிப் கயிற்றை குகைப் பக்கமாக இழுத்து, அதைப் பற்றிக்கொண்டான். மயூரி அவன் முதுகில் தொற்றிக்கொண்டு, கைகளை அவன் மார்பில் மாலையாகப் போட்டு, பிணைத்துக்கொண்டாள்.

இந்த முறை அவள் கண்களை மூடவில்லை. கீழே அதல பாதாளத்தையும் கண்டு ரசித்தாள். இன்னும் என்ன பயம்..! மூன்றாவது நவபாஷாண சிலையை தரிசித்துவிட்டாள். அப்படியே இனி பாதாளத்தில் தவறி விழுந்து முடிந்தால் கூட, முருகனின் அடியிலேயே உயிரை விடும் பாக்கியத்தை பெற்றவளாகத்தான் திகழ்வாள்.

காட்டுக்கொடிகளால் உருவான அந்தக் கொடியை தனது உறுதியான கரத்தால் பற்றிய குகன்மணி அனாயசமாக உயரே ஏறினான். அவன் ஏறும்போதே, பலமான அவனது தசைகள் வேகமாக இயங்குவதை மயூரியால் உணர முடிந்தது.

இப்படியே காலம் முழுவதும், பள்ளத்தாக்கில் ஊசலாடிக் கொண்டிருக்க அவள் தயார்தான், குகன்மணி அவளை இப்படிச் சுமந்து செல்வதாக இருந்தால்..!

மேலே அவன் எழும்பவும், அவளது காதல் உணர்வும் ஜிவ்வென்ற விதத்தில் உயர தொடங்கின. குகன்மணியோடு நெருங்கிப் பழகி விட்டோம். மூன்றாவது நவபாஷாணச் சிலையையும் அவளைத் தரிசனம் செய்ய வைத்து விட்டான். மனதினுள் அவனுடன் உறவு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுவிட்டாள் ! ஆனால்…

உறவு என்று ஒரு சொல் இருந்தால், உடனே பிரிவு என்கிற பொருள் இருக்குமே..! கவிஞர் கூறியது போல, அது போன்ற பிரிவுக்கு அவள் தயாரா..? இல்லவே இல்லை..! தனது குடும்பம், தனது விமானப்பணிப்பெண் வேலை எதுவுமே வேண்டாம். இந்த வனாந்திர தகான் மலை உச்சியில், கிடைத்த காய், கனி கிழங்கை சாப்பிட்டுக்கொண்டு இங்கேயே இருப்போம் என்று குகன்மணி கூறினால், நத்தையின் முதுகில் கூட்டைப் போல, இப்படியே குகன்மணியின் முதுகில் ஒட்டிக்கொள்ளத் தயார்..! ஆனால் அவன் மனதில் என்ன நினைக்கிறானோ..?

அவன் என்ன நினைத்தாலும் பரவாயில்லை..! குமுதினி போல, அவனது பங்களாவில் ஒரு பணியாளாக அவன் இடம் கொடுத்தால் கூடப்போதும்..! பத்துமலை முருகனை தரிசித்துக்கொண்டு, குகன்மணியை பார்த்து கொண்டு காலத்தை ஓட்டி விடுவாள். அவனுடன், தகான் மலைக்கு வந்து நவபாஷாணச் சிலையை ஆராதிக்கும் பேற்றினைப் பெறுவாள்.

குகன்மணி மேலே ஏறியதும், அவளை இறக்கி விட்டான். மயூரிக்கு இறங்கவே மனதில்லை. என்ன செய்வது ! காலமெல்லாம் அவன் முதுகில் பயணிக்க முடியுமா…?

சட்டென்று அவள் வாயில் அந்தச் சொல் வந்துவிட்டது..! “குகன்..! முதுகில் இருந்து இறக்கி விட்டால் பரவாயில்லை. ஆனால் இதயத்தில் இருந்து தயவுசெய்து இறக்கி விடாதீர்கள். காலமெல்லாம் உங்கள் இதயத்தில் நான் பயணிக்க வேண்டும்..!” –எதனால் அப்படி கூறினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஒருவேளை, பனிப்பந்து உருண்டு கொண்டே சென்றால், பாறையின் அளவுக்குப் பெரிதாவது போன்று, இவளது காதலும், உருண்டுகொண்டே வந்து இதயத்தில் கனமாகி, அவளை அங்ஙனம் பேசச் சொன்னதோ..?

“காலமெல்லாம் இதயத்தில் சுமப்பேன்..! இது நிச்சயம்..!” –குகன்மணி கூற, அவள் பரவசத்துடன் நிற்க, குளிர்க்காற்று அவர்களைத் தழுவி ஆசீர்வதித்தது.

அப்போது அந்த ஓலம் கேட்டது.

“மயூரி..! என்னைக் காப்பாத்து..!”

மயூரி திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தாள். மேலே மூங்கில் மரத்தில், கனிஷ்கா ஊசலாடிக் கொண்டிருந்தாள்.

“பாரு..! உன் அக்கா திரிசங்கு சொர்க்கத்துல ஊசலாடிக் கொண்டிருக்காள்.” -நையாண்டியுடன் கூறினான் குகன்மணி.

–தொடரும்…

ganesh

2 Comments

  • அட்டகாசம்

  • Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...