ஊழல் அரக்கன் | ஆர்னிகா நாசர்
விஞ்ஞான சிறுகதை தொடர் – 1
கிபி 2044ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி காலை பத்துமணி….
பிரதமர் அலுவலகம்.
பிரதமர் ஞாழல் நறுவீ தன்னுடைய இருக்கையில் மிடுக்காக அமர்ந்திருந்தாள். இந்திரா காந்திக்கு பின் ஒரு பெண் பிரதமர். வயது 40. திராவிடநிறம்.அரசியல் விஞ்ஞானத்திலும் சரித்திரத்திலும் தமிழிலும் முதுகலைபட்டம் பெற்றவள். டேக் வான்டோ கராத்தேயிலும் கிக் பாக்ஸிங்கிலும் துப்பாக்கி சுடுதலிலும் நிபுணி. சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருப்பவள்.
அவள் எதிரே மூன்று கேமிராக்கள் ஸ்டாண்டிடப்பட்டிருந்தன. அறை முழுக்க செயற்கை வெளிச்சங்கள்.
ஞாழல் நறுவீ நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்லப்போகிறாள். டெலிபிராம்ப்ட்டரில் நறுவீ பேச வேண்டிய ஐந்து பக்க உரை தயாராக இருந்தது.
நிகழ்ச்சி அமைப்பாளர் “த்ரீ… டூ… ஓன்… ஸ்பீக்!” என கூவினார்.
“வணக்கம்! இன்று நான் எழுதி வைத்த உரையை வாசிக்கப் போவதில்லை. என் இதயத்தில் உள்ளதை உங்கள் முன் கொட்டப் போகிறேன். நம் நாட்டின் ஜனத்தொகை 170கோடி. நூற்றி எழுபது கோடி பேரில் பெரும்பாலானோர் வறுமையில் உழல்கின்றனர். ஓட்டைப்பானை வைத்து நீர் இறைப்பது போல ஊழலை வைத்துக் கொண்டு இந்தியாவை முன்னேற்ற பார்க்கிறோம். நமது வருட வருமானம் 25ட்ரில்லியன் ரூபாய்கள். நமது செலவு 45ட்ரில்லியன் ரூபாய்கள். பற்றாகுறை பட்ஜெட்டுக்கு யார் காரணம்? ஊழல்தான் நம் இந்தியாவை விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஈராக்தான் ஊழலில் முதலிடம் வகித்தது. ஆனால் தற்போது ஊழலில் நாம்தான் முதலிடம் வகிக்கிறோம். மிதமிஞ்சிய சட்டதிட்டங்களும், சிக்கலான வரிவிதிப்புகளும் தலையை சுற்றி மூக்கை தொடும் உரிமம் பெறும் விதிமுறைகளும் வளைந்து கொடுக்காத அதிகாரிகளும் அவர்களின் எல்லையற்ற அதிகாரமும், ஊழலுக்கு காரணங்களாய் சொல்லப்படுகின்றன. ஆனால் ஊழலுக்கு முழு முதல் காரணம் தனிமனித ஒழுக்ககுறைவே.
அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கிரிமினல்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளை யடிக்கின்றனர். அரசியல்கட்சிகள் மக்கள் நலனை புறக்கணித்து கார்பரேட் நலனை பேணிகாக்கின்றன.
தனிமனித ஒழுக்கக்குறைவு நம் ஒட்டுமொத்த இந்தியமக்களின் உள்ளங்களில் இரத்தத்தில் ஊறிக்கிடக்கிறது.
நான் ஆட்சிக்கு வந்து நான்கு வருடமாகிறது. நான் நம் நாட்டு விஞ்ஞானிகளை ஒரு கடுமையான ஆராய்ச்சியில் ஈடுபடச் சொன்னேன். ஈடுபட்டு ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளார்கள். அந்த தடுப்பூசியை பிறக்கும் ஒவ்வொரு இந்தியக்குழந்தைக்கும் நாற்பது நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இந்த தடுப்பூசி மூளையின் ந்யூரான் செல்களில் செயல்பட்டு ஊழல் செய்யும் மனநிலையை மதவாதம் பிரிவினைவாதம் பேசுவதை மொழிவெறியை அடியோடு களைந்து விடும். தடுப்பூசிகள் போடப்பட்ட குழந்தைகள் வளர்ந்து அரசியல்வாதியாய் அதிகாரிகளாய் மாறும் போது உத்தமர்களாய் செயல்படுவார்கள். ஊழல் செய்வோரும் இருக்க மாட்டார்கள் ஊழலுக்கு துணை போவோரும் இருக்கமாட்டார்கள் ஜீரோ பர்சன்ட் கரப்ஷன்.
ஒரு திட்டத்துக்கு 100பைசா செலவழித்தால் 5பைசாதான் திட்டத்துக்கு போகிறது மீதி 95பைசாவை ஊழல்வாதிகள் கபளீகரம் செய்கின்றனர். அந்தநிலை மாறி 100பைசாவும் இனிமேல் திட்டத்துக்கு போகும். அதனால் திட்டத்துக்கு 50பைசா செலவு செய்துவிட்டு மீதி 50பைசாயை மிச்சப்படுத்தலாம்.
இந்த தடுப்பூசி ஜுலைமாதம் 1ஆம்தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. அதற்குள் சில களையெடுப்புகளை செய்யப்போகிறேன்.
- நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளின் சொத்துகளையும் பறிமுதல் செய்கிறேன்.
- நாட்டின் கார்பரேட்கள் சொத்துகளுக்கு உச்சவரம்பு விதிக்கிறேன். அவர்கள் 1000கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் வைத்திருக்கக் கூடாது.
- நாட்டில் கல்வியும் மருத்துவமும் இலவசம். வேறு எதிலும் இலவசங்கள் கிடையாது.
- இதுவரை ஊழல் செய்த அரசியல்வாதிகள் அதிகாரிகள் கைது செய்யபட்டு இராணுவ கோர்ட்டால் விசாரிக்கப்பட்டு தூக்குதண்டனை விதிக்கப்படுவர்.
- இராணுவம் உள்நாட்டு சிவில்பணியில் ஈடுபடுத்தப்படும்.
- தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. நூறுசதவீத ஓட்டு பதிவு கட்டாயம். தேர்தல் செலவுகள் அறவே இல்லாத தேர்தல் முறை அமுல்படுத்தபடும். அரசியல்வாதிகளுக்கு ஓய்வுவயது 60ஆக நிர்ணயிக்கபடுகிறது. ஜனாதிபதி கவர்னர் பதவிகள் ஒழிக்கப்படுகின்றன. எம்எல்ஏ எம்பிகளுக்கு சம்பளமோ சலுகைகளோ கிடையாது.
தடுப்பூசி போடாமல் யாரும் இந்திய குடிமகனாக தொடர அனுமதிக்க மாட்டேன். இந்தியாவை ஊழல் இல்லாத தேசமாக முன்னேற்றுவோம். வாழ்க இந்தியா!”
ஞாழல் நறுவீ பேசி முடித்தாள். அறைக்குள் இருந்த அனைவரும் கைதட்டினர். “பிராவோ மேடம்!”
தனது அறையை விட்டு மிடுக்காக நடந்து வெளியேறினாள் நறுவீ.
ஊடக மக்கள் காத்திருந்தனர்.
“கேள்விகள் கேட்கலாமா பிரதமர் அம்மா?”
“பத்திரிகையாளர்களை கண்டு ஓடி ஒளிபவர் சிறந்த பிரதமர் அல்ல. கேள்விகளும் பதில்களுமே இருதரப்பாரின் உள்ளங்களை மேம்படுத்துகின்றன!”
“ஞாழல் நறுவீ என்றால் என்ன அர்த்தம்?”
“நறுமணமிக்க கொன்றைமலர் என அர்த்தம்!”
“பிறக்கும் குழந்தைகளுக்கு ஊழல்தடுப்பூசி போடப்படும் என்கிறீர்கள் ஏற்கனவே பிறந்தவர்களுக்கும் ஏற்கனவே அரசியலில் உள்ளவர்களுக்கும் என்ன செய்வீர்கள் அம்மா?”
“அவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்!”
“இந்த தடுப்பூசியின் பெயர் என்ன?”
“மனசுத்திகரிப்பு வாக்ஸின்!”
“இது இடுப்பில் போடப்படுமா, கையில் போடப்படுமா?”
“கையில் போடப்படும்!”
“தடுப்பூசி போடப்படுபவர்களுக்கு ஏதேனும் அடையாளக்குறி இடப்படுமா?”
“வலது முன்னங்கையில் காந்திஜி இலச்சினை பச்சை குத்தப்படும்!”
“இந்த தடுப்பூசி எவ்வாறு செயல்படும்?”
“மூளையின் ஒட்டுமொத்த எதிர்மறை எண்ணங்களையும் செயல்பாடுகளையும் வேரறுத்து விடும்…”
“நீங்கள் போட்டுக் கொள்வீர்களா?”
“இதென்ன கேள்வி? நாட்டின் முதல் தடுப்பூசி எனக்குத்தான்!”
“உலக சுகாதார நிறுவனம் உங்கள் தடுப்பூசியை அங்கீகரிக்குமா?”
“அங்கீகரிக்கும் என நம்புகிறேன். அங்கீகரிக்காவிட்டால் எனக்கொன்றும் பிரச்சனை இல்லை. இந்த தடுப்பூசியை இந்திய அளவில் தான் பயன்படுத்தப் போகிறேன். எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப் போவதில்லை…”
“தடுப்பூசியை பற்றி அனைத்துஅரசியல் கட்சிகளிடம் கலந்தாலோசித்தீர்களா மேடம்?””
“இல்லை!”
“பின்னே எப்படி இந்த திட்டத்தை செயல்படுத்த போகிறீர்கள்?”
“உளவுநிறுவனங்களை வைத்து மக்களிடையே இரகசிய அபிப்ராயம் கேட்டறிந்தேன். 98சதவீத பேர் இந்த தடுப்பூசியை ஆதரிக்கிறார்கள்!”
“உள்நாட்டு கலகம் வரும்!”
“இரும்புக்கரம் கொண்டு நசுக்குவேன்!”
“பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி போடுவதிலிருந்து விதிவிலக்கு உண்டா?”
“நீங்கள் நேர்மையாக இருந்தால்தான் அரசாங்கம் செம்மையாக செயல்பட முடியும். யாருக்கும் விதிவிலக்கு இல்லை. ஊழலில் ஒரு காக்கா குருவி ஈடுபட்டாலும் அவைகளுக்கும் தடுப்பூசி போடப்படும்!”
“நன்றி மேடம்!”
“இந்த தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த யோசனைகள் இருந்தால் யார் வேண்டுமானாலும் கூறலாம். கேட்டு செயல்பட தயாராய் உள்ளேன்!” கை கூப்பினாள்.
ஊடக மக்கள் தங்களுக்குள் கசகசப்பாய் விவாதித்தபடி கலைந்தனர்.
தடுப்பூசிகள் இந்தியா முழுக்க போடப்பட்டன.
அரசியல்வாதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. கார்பரேட்களின் சொத்துகளுக்கு உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது. நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் முச்சந்தியில் தூக்கில் இடப்பட்டனர். ஊழலில் ஊறி திளைத்த பத்திரபதிவு, போக்குவரத்து, வருவாய் துறை அதிகாரிகளின் வால்கள் ஒட்ட நறுக்கப்பட்டன.
குழந்தைகள் மதவாதம் இனவாதம் மொழிவெறி இல்லாமல் வெள்ளந்திகளாய் விகசித்தனர். இந்தியாவின் பற்றாக்குறை பட்ஜெட் தன்னிறைவு பட்ஜெட்டானது. டோல்கேட்கள் இழுத்து மூடப்பட்டன. ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டர் முப்பது ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்தியாவின் ஜிடிபி இரட்டிப்பானது. உலகவங்கியிடம் வாங்கிய கடன் அடைக்கப்பட்டது. கோயில்களிலும் மசூதிகளிலும் தேவாலயங்களிலும் சர்வமத வழிபாடு நடந்தது. நாத்திகவாதிகளும் கண்ணியப்படுத்தபட்டனர். வாரிசுஅரசியல் ஒழிந்தது. தகுதியுள்ளோர் மக்களுக்கு சேவை செய்யும் உள்ளம் கொண்டோர் அரசியலுக்கு வந்தனர். இந்தியாவில் கட்சிகள் நான்காக சுருங்கின.
பிரதமர் ஞாழல் நறுவீ விமானத்தில் பொதுப்பயணியாய் பறந்தாள். ஒரு லட்சம் ரூபாய் காரில் இந்தியா முழுக்க சுற்றி வந்தாள். முன்னூறு ரூபாய் வாட்ச் கட்டினாள். ரோட்டோர கடைகளில் சாப்பிட்டாள்.
தனது அறுபதாவது வயதில் நறுவீ அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாள்.
புதிய பிரதமர் பொறுப்பேற்றதும் இந்திய அரசியலில் லேசாக சலசலப்பு ஆரம்பித்தது.
கிபி 2074 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம்தேதி காலை பதினோரு மணி
ஞாழல் நறுவீ அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டாள். மக்கள் உள்நாட்டு புரட்சியில் இறங்கினர்.
புரட்சியாளர்களில் ஒருவன் மக்களிடம் பேசினான். “எங்களுக்கு ஊழலும் மதவாதமும் இல்லாத இந்தியா போரடித்து விட்டது. ஊழல் தடுப்பூசி இனி எங்களுக்கு வேண்டாம். ஊழலும் லஞ்சமும் எங்கள் வாழ்க்கை முறை. எதாவது ஒரு காரணத்தை சொல்லி அரசாங்க சொத்துகளை தீவைப்பதும் சூறையாடுவதும் எங்களுக்கு கிளுகிளுப்பை மூட்டும். லஞ்சம் கொடுத்து எக்காரியத்திலும் முன்னுரிமை பெற எங்கள் கைகள் அரிக்கின்றன. எங்களுக்கு பிரதமர் மகாராஜா முதலமைச்சர் குறுநிலமன்னன். அவர்களுக்கு கும்பிடு போட்டு போட்டு எங்களுக்கு பழக்கமாகி விட்டது. மீண்டும் எங்களுக்கு ஊழல் இந்தியா தேவை!”
“சார்! எனக்கு டிரைவிங் லைசென்ஸ் வேணும்!”
“ஒரு லட்சம் கொடு. எல்எல்ஆர் இல்லாமயே டாரக்டா டிரைவிங் லைசென்ஸ் தரேன். இரண்டு லட்சம் கொடுத்தா ஹெவி லைசென்ஸ் சேத்து தரேன்!”
லஞ்ச அரக்கன் கானாபாட்டு பாடி மரணகுத்தாட்டம் போட்டான். ●
1 Comment
மிக அற்புதமான சிறுகதை….ஊழல் ஒழிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.நட்புடன் எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப்