சோழன் உலக சாதனை புத்தகத்தில் இரண்டு முறை இடம் பிடித்தார் சென்னையைச் சேர்ந்த பாலி சதீஷ்வர்

 சோழன் உலக சாதனை புத்தகத்தில் இரண்டு முறை இடம் பிடித்தார் சென்னையைச் சேர்ந்த பாலி சதீஷ்வர்

ஒரு நொடியில் 16 குத்துகள் (Punches) விட்டு சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டு புத்தகத்தில் இரண்டு முறை இடம் பிடித்து உலக சாதனை நிகழ்த்தினார் சென்னை யைச் சேர்ந்த பாலி சதீஷ்வர்.

1970ஆம் ஆண்டு நடிகர் புரூஸ்லி 9 குத்துக்கள் (Punches) விட்டு சாதனை படைத்ததை கடந்த ஆண்டு முறியடித்து 13 குத்துக்கள் விட்டு சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தார் சென்னையைச் சேர்ந்த பாலி சதீஷ்வர்.

அவர் நிகழ்த்திய அந்தச் சாதனையை அவரே முறியக்கும் விதமாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 22-1-2022 அன்று மாலை 4 மணிக்கு சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நடுவர்கள் முன்னிலையில்  பத்திரிகையாளர்கள் மத்தியில் 16 குத்துக்கள் (Punches) விட்டு முறியடித்தார்.

சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் நிறுவனர் மற்றும் முதன்மை ஆசிரியர் முனைவர் நிமலன் நீலமேகம் அவர்கள் நிகழ்ச்சியில் பேசும்போது, “சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க காவிரிக்கு கல்லணை கட்டிய ராஜராஜ சோழன் பெயரால் உருவாக்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் தலைமையகம் செயல்படும் எங்களுக்கு உலகில் 26 நாடுகளில் கிளைகள் உள்ளன. ஐ.நா. சபையுடன் இணைந்து செயல்படுகிறோம்.

நம் நாட்டில் திறமையாளர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் சாதனைகளை நாமே அங்கீகரிக்கவேண்டும் என்பதற்காகவே இந்தச் சாதனைப் புத்தகத்தை உருவாக்கினோம். கின்னஸ் போன்ற புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்றால் நம் மக்கள் சென்று சேர்வதற்கும் கடினம், செலவுகளும் அதிகம். ஆனால் நாங்கள் எந்தவிதச் செலவுகளும் இல்லாமல் தகுதியானவர்கள் எங்களுக்குத் தெரிவித்தால் நாங்கள் அந்த இடத்திற்கே வந்திருந்து அங்கீகரித்து  சான்றிதழ் வழங்குகிறோம்.

நிறைய புதிய சாதனையாளர்களையும் இளம் சாதனையாளர்களையும் அடையாளப் படுத்துவதே எங்கள் நோக்கம். அந்த வகையில்  பாலி சதீஷ்வர் ஏற்கெனவே 13 குத்துகள் விட்டு உலக சாதனை நிகழ்த்தினார். தற்போது  16 குத்துக்கள் விட்டு அவர் நிகழ்த்திய சாதனையை அவரே முறியடித்து இரண்டாவது முறையாக சோழக் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். அதை நாங்கள் அங்கீகரித்திருக்கிறோம். இந்தச் சாதனையை மேலும் ஊக்குவிக்கும் விதமாக பாலி சதீஷ்வர் நிகழ்த்திய 16 குத்துகள் (Punches) விட்டு சாதனை படைத்ததை 18 குத்துகள் (Punches) விட்டு முறியடிக்கிற இளைஞருக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஒரு லட்ச ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க இருக்கிறோம்” என்றார் நிமலன் நீலமேகம்.

இந்த நிகழ்ச்சியில் சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் நிறுவனர் மற்றும் முதன்மை ஆசிரியர் முனைவர் நிமலன் நீலமேகம் மற்றும் சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் தலைமை செயற்குழு உறுப்பினர் வெற்றி நெஞ்சன், ஆல் இந்தியா மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் துணைத் தலைவர் ஷாம் பிரசாத், மூத்த குத்துச்சண்டை வீரர் கஜபதி, இன்டர்நேஷனல் பிரேவ் பாக்ஸிங் சேம்பியன்ஷிப் இயக்குநர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில்  சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடந்த 21 ஆண்டுகளாகத் தற்காப்புக் கலை பயிற்சி செய்து வரும் பாலி சதீஷ்வர் பாக்ஸிங், கிக்பாக்ஸிங், ஜூடோ, மோய்தாய் போன்ற தனி விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு இதுவரை மாநில, தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
சதீஷ்வர் நிறைய கேஜ் பைட் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். உயரமான அதிக எடைப் பிரிவு போட்டியாளர்களையும் எதிர்கொண்டு நாக்அவுட் செய்திருக்கிறார். அமெச்சூர் பிரிவில் ஆசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். புரோ அமெச்சூர் பிரிவில் மூன்று போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டில் வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது தொழில்முறை போட்டியாளராக மாறி, சர்வதேச அளவிலான முதல் போட்டியிலேயே வென்றிருக்கிறார்.

உலகின் ஆபத்தான மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டில் முதன்மையாக விளங்குகிறது எம்.எம்.ஏ. விளையாட்டு. உயிருக்கு ஆபத்தான, உண்மையாக வீரத்தை வெளிப்படுத்தும் போட்டியில் எந்தவித பின்புலமும் இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்த பாலி சதீஷ்வர் தமிழகத்திலிருந்து முதன்முறையாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றதால் அவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

பாலி சதீஷ்வர் மேலும் பேசும்போது, “வருகிற மார்ச் மாதம் சிங்கள குத்துச்சண்டை வீரனை எதிர்த்து பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் சண்டையிட இருக்கிறேன். அந்தப் போட்டியில் அந்த வீரரை முதல் சுற்றிலேயே நாக்அவுட் செய்வேன்.

ஏப்ரல் மாதம்  சென்னையில் முதன்முறையாக எம்.எம்.ஏ. எனப்படும் உலகின் மிக ஆபத்தான விளையாட்டான மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் வோல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில்  மேலை நாட்டு குத்துச்சண்டை வீரனை எதிர்த்து மோதி வெற்றி பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பேன்.

வேர்ல்ட்  சாம்பியன்களை உருவாக்க, நாட்டிலேயே பெரிய சர்வதேசத் தரம் வாய்ந்த மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிக்கூடம் சென்னை மதுரவாயிலில்  தொடங்கி இருக்கிறேன். இதில் எளிய பின்னணியில் உள்ள திறன் வாய்ந்த இளைஞர்களுக்குப் பயிற்சி தந்து வேர்ல்ட் சாம்பியன்களை உருவாக் குவேன்.

கூடிய விரைவில் புதிய களத்தில் முழுமையான ஆக் ஷன் கலந்த தமிழ்ப் படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க உள்ளேன்” என்றார்.

எவர்லாஸ்ட் பிரேவ் பாக்ஸிங் பயிற்சிக் கூடம் நடத்தும் இவர் முழு நேரமும் இளம் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். இவர் ஒரு நாளைக்குப் பத்து மணி நேரத்தைப் பயிற்சிக்காகச் செலவழிக்கிறார். உடற்பயிற்சிக்கு ஏற்ற ஊட்டச்சத்துக் களை உட்கொள்ள வேண்டிய இவர் அதற்கான பொருளாதார வசதியில்லாமல் இருக்கிறார் பாலி சதீஷ்வர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...