பத்துமலை பந்தம் | 39 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 39 | காலச்சக்கரம் நரசிம்மா

39. போகர் பள்ளி..!

போகர் சாலை ! தற்போது இந்த பகுதியின் பெயர் போன்சாய் ! குனோங் தஹான் மலைப்பாதையில் ஆறாவதாக வரும் பகுதி..

காலை பொழுதில் கதிரவன் வானத்தில் ஏறுமுகமாக இருந்தாலும், அவனது கிரணங்கள் க உள்ளே புகாதபடி அடர்ந்த மரங்கள் பந்தல் அமைந்திருந்தன. இதனால் பகல் வேளையிலும் அங்கே இருள் பரவியிருக்க, ‘ங்கோயிங் ‘ என்கிற காட்டு பூச்சிகளின் இரைச்சல் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பறவைகளும் அவ்வப்போது கூவி, அதை பகல் பொழுது என்று ஊர்ஜிதம் செய்துகொண்டிருந்தன.
போன்சாய் பகுதியை அடைந்ததும், குகன் மணி கூறியபடி, ” கால்கள் கெஞ்சுகின்றன ! இனிமேல் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது” என்றபடி ஒரு பாறையில் அமர, அவள் அருகே, அமர்ந்த குகன் மணி, தங்களை கடந்து செல்லும், மற்ற ட்ரேக்கார்களை நோட்டம் விட்டான். மொத்தம் ஒரு அணியில் பதினெட்டு பேர்கள் இருக்க வேண்டும் என்பது நியதி ஆதலால், தங்களை கடந்து செல்பவர்களின் தலைகளை எண்ணினான்.

”கடைசியாக சென்ற இரு பர்தா அணிந்த பெண்களை சேர்த்து மொத்தம் பதினாறு பேர், அவர்களை கடந்து சென்றனர். மலேசியாவில் பர்தா என்ன புதிதா என்ன ? இம்மாதிரி மயூரியையும் குகண்மணியையும் சந்திக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் சமாளிக்க வேண்டுமே என்கிற முன்யோசனையோடு, கையோடு இரு பர்தாக்களை கொண்டு வந்திருந்தாள்,

அந்த பதினாறு ட்ரெக்கர்களும் கடந்து சென்ற பிறகு, மெதுவாக எழுந்த, குகன் மணி, மயூரிக்கு தனது கரத்தை கொடுத்தான். அதனை பற்றிக்கொண்டு எழுந்தாள் மயூரி.

”இப்பவே எச்சரிக்கிறேன், மயூரி ! ரொம்ப அப்பத்தான் பாதை ! உன்னால் முடியலேனா நான் உன்னை தூக்கிட்டுதான் போகணும். தனிமை-ல இருக்கிறோம் னு நிலைமையை சாதகமா உபயோகிச்சுக்கிறானு லாம் நினைக்காதே. கஷ்டமா இருந்தா சொல்லு ! வழுக்கு பாறையில் ஏறணும். ! உன்னால நிச்சயமா முடியாது. நான் உன்னை உப்பு மூட்டை தான் தூக்கிட்டு போகணும். !” — குகன் மணி கூற, என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழித்தாள், மயூரி.

”பழனி மலை, பள்ளங்கி மலை னு ரெண்டு நவபாஷாண முருகனை சிரமம் இல்லாம தரிசனம் செஞ்சிருக்கேன். சேர்த்து வச்சு, மூணாவது சிலைக்கு சோதனை செய்யறாரு முருகன்னு நினைக்கிறேன். Come what May! மூணாவது சிலையை தரிசிக்காம இங்கே இருந்து போகறதில்லை !” — மயூரி கூறினாள்

”உன்னை மாதிரி நிறைய பேர் தீர்மானத்தோடு இங்கே அலையறாங்க. !” — சிரித்தபடி நடந்த, குகன், வழியில் படர்ந்திருந்த ஒரு மரக்கிளையை பற்றி உயர்த்தி அவள் நடப்பதற்கு வசதியாக பிடிக்க, குகன் மணியை கடந்து அவள் நடந்தாள்.

அவள் நிதானமாக முன்னேற, திடீரென்று ஒரு மரத்தின் பின்பாக, மிக வேகமாக ஒரு உருவம் ஓடி மறைந்தது. மூன்றடி கூட இருக்காது, அந்த உருவம். ஆனால் இமைக்கும்பொழுதில் அந்த உருவத்தை மயூரி பார்த்து விட்டாள். அடர்ந்த தாடியுடன், தீட்சண்யமான பார்வையுடன், செம்மையான முகம் ஒன்றை தான் பார்த்தோம் என்று அவளுக்கு தூண்டியது.

”இப்ப ஒருத்தர் இந்த மரத்து பின்னாடில இருந்து ஓடிப்போனார் ! யார் அவர் ?” — திகைப்புடன் குகன் மணியை திரும்பி நோக்கினாள், மயூரி.

அவனோ மரக்கிளையை பற்றியபடி தாங்கள் வந்த வழியையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

”நீ முன்னாடி போனவரை பற்றி கேட்கிறே ! நான் பின்னாடி யாராவது வரங்களானு பார்த்துகிட்டு இருக்கேன் !” — என்றவன் , அவளை நோக்கி புன்னகைத்தான்.

”இது போகர் பூமி ! அவரோட பரிவாரங்கள் இங்கே நிறைய இருக்காங்க. ! நீ ஒருத்தரை பார்த்தேனா, நீ ஆசிர்வதிக்கப்பட்டவனு அர்த்தம் ! அவ்வளவுதான் ! இன்னும் நிறைய விசித்திர காட்சியை எல்லாம் பார்ப்பே ! அதனால இதுக்கே ஆச்சரியப்படாதே !”– — என்றபடி அவளுடன் நடந்தான்.


கனிஷ்காவும் மிதுனும் குகன் மணியையும்,மயூரியையும் பின்தொடர்ந்துகொண்டே இருந்தார்கள். அவர்களை காண பார்வையிலிருந்து நழுவ விடாதவாறு, அதே வேலையி, தங்களுக்கிடையே சற்று இடைவெளியை கடைப்பிடித்து, அவர்கள் பின்பாக நடந்தனர்.

அடர்ந்த காடு ஓரிடத்தில் சமவெளியாக விரிய, அங்கே ஒரு சிறிய குன்று தென்பட்டது.

”நான் சொன்ன வழுக்கு பாறை அதுதான். இந்த குன்றத்து உச்சியிலே ஏறி நின்னா, மறுபக்கம் பயங்கர பள்ளத்தாக்கு. அங்கேதான் மூன்றாவது நவபாஷாண சிலை இருக்கு !” — குகன் மணி சொன்னதும், மயூரி அச்சத்துடன் அந்த மலையை பார்த்தாள்.

”ரொம்ப செங்குத்தா இருக்கு! பரவாயில்லை ! முயற்சி செய்யறேன் !”

”உன் குரலுல இருக்கிற நடுக்கமே உன்னை காண்பிச்சு கொடுக்குது. வேற வழியில்லை. என் முதுகலை உப்பு மூட்டை ஏறிக்க” — என்றான் குகன் மணி. மயூரி தயக்கத்துடன் அவன் பின்பாக தொற்றிக்கொண்டு தனது கரங்களை மாலையாக அவனது மார்பில் கோர்க்க, அவளது துப்பட்டாவால் அவளை தனது உடலுடன் இறுக பிணைத்துக்கொண்டான். பிறகு விறு விறு என்று ஏறத்தொடங்கினான்.

மயூரியை சுமந்துகொண்டு குகன் மணி மலையேறுவதை பார்த்துக்கொண்டிருந்தார்கள், கனிஷ்கா வும், மிதுன் ரெட்டியும்.

‘ஆஹா ! கொடுத்து வைத்தவள் அந்த மயூரி ! தன்னுடைய கம்பீர தேகத்தில் மயூரியை பிணைத்துக்கொண்டு மலை ஏறுகிறான். தான் மட்டும் மயூரியின் நிலையில் இருந்து அவனுடைய ஸ்பரிசத்தை பெற்றிருக்க கூடாதா !

”என்ன கனிஷ்கா ? அவங்களையே பார்க்கிறே ? அதை மாதிரி நான் உன்னை தூக்கிட்டு போகணும்னு எதிர்பார்க்கறியா ?” — மிதுன் கேலியுடன் கேட்டான்.

”யாரு நீயா ? ஸ்வீட் ட்ரீம்ஸ் படத்துல டூயட் சாங் ஷூட்டிங் போது என்னை தூக்கி சுத்தினதுக்கே, ரெண்டு நாள் முதுகு வலின்னு சுருண்டு படுத்தவன்தானே நீ ! ரொமான்டிக் பேச்சு வேற உனக்கு கேடு !” — மயூரியை சுமந்துகொண்டு செல்லும் குகன் மணியை பார்த்து தாபம் அதிகரிக்க, வார்த்தைகள் விஷமாக வெளிவந்தன.

மிதுன் ரெட்டியின் கண்களில் உக்கிரம் எட்டிப்பார்த்தது.

”நான் ஒண்ணும் உன் பின்னாடி வரலை ! நீதான் என்னோட நிச்சயதார்த்தம் அன்னைக்கு நான்தான் வேணும்னு ஓடி வந்து சீன் கிரேட் பண்ணினே ! வேற வழியில்லாமதான் உன் கிட்டே சரண்டர் ஆனேன் !” — மிதுன் ரெட்டி கூறினான்.

”சாரி ! நான் அப்படி பேசி இருக்க கூடாது. ஏதோ டென்ஷன் ! எனக்கு மட்டும் யாரு இருக்காங்க மிதுன் ? என் கோபம் தாபத்தை எல்லாம் உன்கிட்ட தானே காட்ட முடியும். நம்ம கல்யாணம் ஆகிட்டா. தன்னால எனக்கு பக்குவம் வந்துடும் ! இப்ப அந்த மலை மேல ஏறணும்! அங்கேதான் மூணாவது நவபாஷாண சிலை இருக்கு போல இருக்கு ! மிதுன் ! நீ மட்டும் அந்த சிலையை எடுக்க எனக்கு உதவின, அப்புறம், நாம் ரெண்டுபேரும்தான் உலகத்துக்கே ராஜா ராணி !” —

”நாம உடனைடியா அவங்களை பின்தொடரணும் !” — என்றபடி கனிஷ்கா நடக்க, அவளை வியப்புடன் பார்த்தான், மிதுன்.

வழக்கமாக இவன் கோபத்தை காட்டினாலே, பதிலுக்கு எரிமலையாக வெடிப்பாள், கனஷ்கா முதன்முறையாக இவன் விஷயத்தில் ஜகா வாங்கி, இவனை சமாதானப்படுத்துகிறாள், என்றால், பக்குவம் அடைந்து வருகிறாள் என்று எடுத்து கொள்ளலாமா ?

யோசித்தபடி அவளையே பார்த்தவன், பிறகு அவளை பின்தொடர ஆரம்பித்தான்..


மலையுச்சியில் நின்றுகொண்டிருந்தனர், மயூரியும், குகன் மணியும்.

மலையுச்சியில் நின்று பார்த்தபோது மறுபக்கம் கிடுகிடு பள்ளத்தாக்கு தெரிந்தது. மயூரிக்கு கிறுகிறு என்று தலையை சுற்ற, அருகில் நின்றிருந்த குகன் மணியின் புஜத்தை பற்றிக்கொண்டாள்

”இந்த் உயரத்தை பார்த்து இப்படி பயப்படறியே ! நீ எப்படி விமான பணிப்பெண்ணா வேலை பார்க்கிறே ?” — சிரித்தான், குகன் மணி !

”இங்கிருந்து நாம் எப்படி சிலை இருக்கிற இடத்துக்கு போகணும் ?” — மயூரி கேட்க, அவளை யோசனையுடன் பார்த்தான்.

”அதைத்தான் நான் யோசிச்சுகிட்டு இருக்கேன். உன்னால வர முடியுமா, இல்லை பயப்படுவியா ?” — குகன் மணி அவளை உறுத்து நோக்கினான்.

”இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்துட்டேன். எப்படியும் மூணாவது நவபாஷாண சிலையை பார்க்காம போக மாட்டேன். நான் தயாரா இருக்கேன். போகலாம் வாங்க !” — மயூரி கூறியதும், அவளை அழைத்துக்கொண்டு மலை உச்சியில் நடந்தான்.

ஓரிடத்தில் நான்கைந்து மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்க, அவற்றில் ஏராளமான காட்டுகொடிகள் பிணைந்திருந்தன. ஐந்தாறு கொடிகளை பிணைத்து இறுக கட்டப்பட்டிருந்தது.

”நான் சொல்றதை பயப்படாம கேளு, மயூரி ! இந்த கொடியை பிடிச்சுக்கிட்டு பள்ளத்தாக்கில் இறங்கணும். இந்த கொடி முடியுற இடத்துலதான் போகர் பள்ளி இருக்கு.” — குகன் கூறினான்.

”போகர் பள்ளியா ?” – திகைத்தாள் மயூரி !

”ஆமா ! அகத்தியர் கொடுத்த ககன குளிகைய வாயில் அடக்கிகிட்டு, தகையோன் மலைக்கு பறந்து வந்த போகர், இந்த மலையை குடைஞ்சு அதுல தான் யோக நிலையில இருந்தார். நிலத்தை தோண்டினால் பள்ளம்-னு சொல்வோம். மலையை குடைஞ்சா பள்ளி-னு சொல்லுவோம். பள்ளுதல்-நா தோண்டுதல் அல்லது குடைதல் என்று பொருள்.! இரவு வேளைகளில காட்டு மிருகங்க கிட்டேருந்து தன்னை காப்பாத்திக்கணும்னு, ஆதி தமிழர்கள் இப்படி மலை சரிவுல குகைகளை குடைந்து பள்ளிகளை உருவாக்கினாங்க. உறங்குவதற்காக அமைக்கப்பட்ட குகைகள் என்கிறதால, குடைந்து செய்யப்பட்ட இந்த் குகைகளுக்கு பள்ளி னு பெயர். போகர் அமைச்ச இந்த பள்ளியிலதான் அவர் தங்கினார் ! போகர் ஒரு முறை சாபம் ஒன்றை வாங்க நேர்ந்தது. அந்த சாபத்தை போக்க இங்கே வந்து சயனிச்சு தனது சாபத்தை போக்கிகிட்டதால, இதுக்கு போகர் பள்ளின்னு பெயர்.! இங்கேதான் மூணாவது சிலையை ஒளிச்சு வச்சிருக்காரு. ! நீ என் முதுகுல தொத்திக்கிட்டு என்னை இறுக பிடிச்சுக்கோ. நான் இந்த கோடியை பிடிச்சுக்கிட்டு பள்ளத்தாக்கில் இறங்க போறேன். பயமா இருந்தா கண்களை இறுக மூடிக்க! கீழே பார்க்காதே !” — குகன் மணி கூறினான்.

அடுத்த கணம், சற்றும் தயங்காமல், அவனது முதுகில் தொற்றிக்கொண்டு, அவனது மார்பில் தனது கைகளை மாலையாக கோர்த்துக்கொண்டாள், மயூரி.

அவளது துப்பட்டாவை மீண்டும் எடுத்து அவளது மேனியை தனது தேகத்துடன் இருக்க பிணைத்து கொண்ட, குகன் மணி, அந்த கோடியை பற்றிக்கொண்டு பாதாளத்தில் இறந்ததொடங்கினான்.

கண்களை இருக்க மூடிக்கொண்டு அவனது தோளில் தனது முகத்தை புதைத்துக்கொண்டாள், மயூரி.

மலைச்சரிவில் விறுவிறுவென்று இறங்கிக்கொண்டிருந்தான், குகன் மணி .

அதே வேளையில் —

மிதுன் ரெட்டியும், கனிஷ்காவும் சிரமப்பட்டுதான், அந்த வழுக்கு பாறையில் ஏறினார்கள். எப்படியோ மெதுவாக நடந்தும், ஊர்ந்தும் மலை உச்சியை அடைந்துவிட்டார்கள். மலை உச்சியை அடைந்ததும்,,இருவரும் நின்று, சுற்றிலும் நோக்கினர். மலையின் மறுபக்கம் கிடுகிடு பள்ளத்தாக்கு, சரிவுகளில் ஆங்காங்கே மரங்கள் வளர்ந்திருந்தன.
சரியாக தீப்பந்தாக மாறிய சூரியன், மேற்கு வானில் இறங்கிக்கொண்டிருந்தது.

”மயூரியும், குகன் மணியும் எங்கே போயிருப்பார்கள் ?” — கேட்டபடி தனது பார்வையை சுற்றிலும் படர விட்டாள், கனிஷ்கா !

அப்போதுதான் மலைச்சரிவில் உச்சியில் ஐந்தாறு மூங்கில் மரங்கள் இருப்பதை பார்த்தாள் . அவற்றில் ஒன்றுக்கொன்று பிணைந்து இருந்த காட்டு கொடிகள், ஒரு கோவிலின் தேர் வடத்தை போன்று உறுதியாக திகழ, அந்த இயற்கை உருவாக்கிய காட்டுகோடிகளினால் உருவான தாம்பு, தகான் பள்ளத்தாக்கில் இறங்குவதை பார்த்தாள்.

அந்த கொடிகளை உறுதியாக பற்றிக்கொண்டு, பள்ளத்தாக்கில் எட்டி பார்த்தாள் . கீழே கிடுகிடு பள்ளத்தாக்கு. துணிச்சல்காரியான கனிஷ்காவே பயந்து விட்டாள். இருப்பினும், தன்னை சுதாரித்துக்கொண்டு, தனது பார்வையை மலைச்சரிவில் ஓட விட்டாள். காட்டு கொடிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில முடிவடைவதையும், அங்கே ஒரு மலையில் சிறு குகை ஒன்று குடையப்பட்டிருப்பதையும் பார்த்தாள்.

குகன் மணியும், மயூரியும், அந்த குகைக்குத்தான் சென்றிருக்க வேண்டும், என்பதை யூகித்தாள்.

–தொடரும்…

கமலகண்ணன்

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...