தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 2 | தனுஜா ஜெயராமன்
இன்று காலையில் முகேஷ் கண்விழித்தபோதே சுதாவும், தனலட்சுமியும் சமையற்கட்டில் நெய்வாசம் ஊரைக்கூட்ட, கேசரியும், வடையும் செய்து கொண்டிருந்தனர். வாசனை மூக்கைத் துளைக்க பசி வயிற்றை கிள்ள படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தான் முகேஷ்.
ஹாலில் பேப்பர் படித்து கொண்டிருந்த வேதமூர்த்தி..”பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா மகனே!” ..என வாழ்த்தினார்.
“தாங்ஸ்ப்பா!..” என்றவன் அம்மாவையும் மனைவியையும் தேடி சமையலறைக்கே ஓடினான்.
“வாங்க மை பர்த்டே பேபி!..” என சுதா கிண்டலடிக்க… வடையைத் தட்டி கொண்டிருந்த தனலட்சுமி.. “நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் அவன் எப்பவுமே எனக்கு பேபி தான்” எனச் சிரித்தார்.
“போங்கம்மா..” என அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டவனை… “சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாடா.. சாப்டலாம்…” என விரட்டினாள்.
சுதாவிடம் காபியை வாங்கி உறிஞ்சியவாறு… அப்பாவுடன் சோபாவில் வந்து அமர்ந்தான்.
“டேய்! இன்னைக்கு என்ன ப்ளான்?” என்றவரிடம்..
“அப்பா ஆபிஸ்ல நிறைய வேலையிருக்கு, சுதாவும் பேங்க் போயாகணும்.. சாயங்காலம் தான் வெளிய எங்கையாவது போகணும்” என்றவனிடம்…
“ஆமாம்டா… கோவில், சினிமா, ஹோட்டல் ன்னு எங்கையாவது சுதாவையும் தியாவையும் அழைச்சிட்டு போடா..”
“ஏன்ப்பா… நீங்க வரலையா..?”
“இல்லைடா! நானும் அம்மாவும் காலையிலே கோவிலுக்கு போய் உன்பேர்ல அர்ச்சனை பண்ணிட்டோம்..”
“சுதா சின்ன பொண்ணுடா!.. அவளுக்கும் புருஷனோட தனியா போகணும்னு ஆசை இருக்காதா..? எங்களுக்கென்ன, வயசாயிடுச்சு.. நீங்க போய்ட்டு வாங்க.. ”
“சரிப்பா..” என குளிக்கப் போனவனின் செல்லில் “ட்ரிங்”..என குறுஞ்செய்தியின் ஒலி.
ஆர்வமுடன் பார்த்தவனுக்கு, சிவப்பு ஹார்ட்டில் அம்புக்குறியிட்டு குத்தி “ஹாப்பி பர்த்டே” என்ற வாசகம் ஆச்சர்யமளித்தது.
நம்பரை பார்த்தான் அறிமுகமற்ற புதிய எண்ணிலிருந்து வந்திருந்தது. முகப்பில் ப்ரொபைல் பிச்சர் ஏதும் காணப்படவில்லை.
யாராக இருக்கும் என யோசித்தவன.. சரி ஏதாவது காலேஜ் நண்பனாக இருக்கலாம் என நினைத்து துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கப் போனான்.
குளித்து விட்டு பாத்ரூமிலிருந்து வந்தவனிடம்.. “ஹாப்பி பர்த்டே பா” என நீல நிற சட்டையையும் க்ரே நிற பேண்டையும் நீட்டினாள். அவனுக்கு பிடித்தமான கலர். சுதாவை இழுத்து அணைத்து, “தாங்யூ.” என்றவன்.. வேகமாக புதுத்துணியை அணிந்து வெளியே வந்தான்.
சோபாவிலிருந்து எழுந்த வேதமூர்த்தி “இந்தாப்பா..! என் பிறந்தநாள் பரிசு.” என வாட்சை நீட்டினார். “நீங்களும் அம்மாவும் ஒன்னா நில்லுங்கப்பா.. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.” எனக் காலில் விழுந்தவன.. “தீர்காயுசா எந்த குறையுமில்லாம இருப்பா”.. என மனமார வாழ்த்தியது பெற்ற மனது.
ஆபிஸ் கிளம்பியவன் வாட்சை ஆசையுடன் கட்டி கொண்டு, ‘‘பை சுதா.” என சுதாவிடம் சொல்லிக்கொண்டு காரைக் கிளப்ப மறுபடியும் ஒரு குறுஞ்செய்தியின் ஒலி. இம்முறை ‘ஹவ் ஆர் யூ?’ என்ற குறுந்தகவல் வந்திருந்தது.
முகேஷ் காரை ஓட்டியபடி… யாராயிருக்கும் என யோசித்து, ‘ஹூ ஆர் யூ?’ என கேட்க நினைத்தவன்.. நெருங்கிய நண்பனாக இருந்து தப்பாக நினைத்துவிட்டால்… சே சே… பிறந்த நாளும் அதுவுமா? என நினைத்து அப்புறம் பாத்துக்கலாம் என வண்டியை செலுத்தினான். ஆனாலும் மனதுக்குள் கேள்வி குடைந்து கொண்டிருந்தது.
இருந்தாலும் பிறந்தநாள் உற்சாகத்தை இழக்க விரும்பாமல் டேப்பில் இளையராஜாவை ஓடவிட்டு… பாடலை ஹம்மிங் செய்தபடி ஸ்டியரிங்கில் தாளமிட்டபடி வண்டியை அலுவலகம் நோக்கி செலுத்தினான்.
மாலை அலுவலகத்தில் பர்மிஷன் சொல்லிவிட்டு சீக்கிரமே வீடு திரும்பினான். சுதாவும் பேங்கிலிருந்து வந்து விட்டாள்.
தியா பிங்க் நிற ப்ராக்கில் குட்டி தேவதை போல இருந்தாள்… “அடடா! என் பட்டுகுட்டியே!” என தியாவை தூக்கி கொஞ்சினான். அதற்குள் சுதாவும் பளிச்சென ரெடியாகி வர, அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு… கிளம்பினார்கள்.
நேராக பெருமாள் கோவில் போய் அர்ச்சனை செய்து பெருமாளைத் தரிசித்து விட்டு.. சத்யம் தியேட்டரில் புது படம் செல்வதாக ப்ளான். சுதா உற்சாகமாக பேசி கொண்டே வர தியா வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே வந்தாள்.
படம் வெகுசுமாராக இருந்தது. இருந்தாலும் மனைவி பிள்ளைகளுடன் ரிலாக்ஸாக இப்படி வெளியில் வருவதே மனதிற்கு மகிழ்ச்சி தானே..!
நேராக உட்லேண்ட்ஸில் காரை நிறுத்தினான். சுதா, தியாவை தூக்கி கொண்டு டேபிளை அடைய, காரை பார்க் செய்து விட்டு முகேஷூம் இணைந்து கொண்டான்.
“ஏங்க நீங்களே ஆர்டர் செய்யுங்களேன்!…” என மெனு கார்டை நீட்டினாள்.
“சுதா எப்பவும் நான் தானே ஆர்டர் செய்யறேன். இன்னைக்கு உன் சாய்ஸ் . நீ ஆர்டர் பண்றியாம்.. நாங்க சாப்பிடுறோமாம்… இல்லை தியாகுட்டி” என்று சிரித்தான்..
சுதா.. பட்டர் நாணையும் , மலாய் கொப்தாவையும் தியாவிற்கு தோசையும் ஆர்டர் செய்தாள்.
“ஏங்க! அத்தை மாமாவிற்கு ஏதாவது வாங்கிட்டு போகலாமா..?” என்றாள் அப்பாவியாக..
‘அப்பா அம்மா கொடுத்து வைத்தவர்கள் சுதா மாதிரி ஒரு மருமகள் கிடைக்க… எவ்வளவு அன்பாக இருக்கிறாள்.. இவள் மனைவியாக கிடைத்தது தான் செய்த பாக்கியம்’ என மனதுக்குள் நினைத்துவாறு… “இல்லை சுதா..அம்மாவை போன் பண்ணிக் கேட்டேன். சாப்ட்டாங்களாம் எதுவும் வோணாம்னுடாங்க. சரி, உனக்கு வேறு ஏதாச்சும் வேணுமாடா?”
“இல்லீங்க… இதுவே போதும்..”
“இங்க செஷ்வான் ப்ரைட் ரைஸ் நல்லாருக்கும்…சாப்ட்டு பாரேன்..” என வலுக்கட்டாயமாக ஆர்டர் செய்தான்..
தியா… “அப்பா, தோச பிச்சி தாங்க” என மழலையில் கொஞ்சியது.
தியாவிற்கு தோசையை பிட்டுக் கொண்டிருந்தவன், தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதாய் உணர்ந்து திரும்பினான். பக்கத்து டேபிளில் கூட யாருமில்லை.
மனதுக்குள் எதுவோ நெருட… யோசித்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
சுதா உற்சாகமாய் ஏதேதோ பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். கேட்டுக் கொண்டிருந்த முகேஷ் விழுந்து விழுத்து சிரித்து கொண்டே, நாணை கோப்தாவில் தோய்த்து வாயில் போட்டான்.
பாக்கெட்டில் இருந்த மொபைலில் இருந்து குறுஞ்செய்தியின் ‘ட்ரிங்’ சத்தம்.
எடுத்துப் பார்த்தவன் டக்கென்று முகம் மாறினான்.
‘மலாய் கோப்தா நல்லாருக்கா..?’
யாராயிருக்கும்..? சுற்றும் முற்றும் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என திரும்பித் திரும்பிப் பார்த்தான். தெரிந்த முகமேதும் கண்ணில் படவில்லை.
“ஏங்க.. என்னவோ மாதிரி இருக்கீங்க..? யாரைத் தேடுறீங்க..? ப்ரண்ட்ஸ் யாராவது வரேன்னாங்களா?” எனக் கவலையுடன் கேட்ட சுதாவை..
அவளை குழப்ப விரும்பாமல்… “இல்லைம்மா வேர்க்குது!…ஏசி சரியா வேலை செய்யுதான்னு பார்த்தேன்..” எனச் சமாளித்தான்.
யாரோ விளையாடுகிறார்கள் என்று தோன்றியது. யாராயிருக்கும்..? மனது குடைந்தது.
குழம்பும் மனதை ஒதுக்கி வைத்து தியா குட்டியை கொஞ்சியவாறு சுதாவிடம் அரட்டை அடித்து கொண்டே சாப்பிட்டு முடித்தான்.
நிறைவாக ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து சுவைத்து… டிப்ஸ் வைத்து.. பில் தொகையைக் கார்டில் ஸ்வைப் செய்து… தட்டில் வைத்த ஸ்வீட் சீரகத்தை வாயில் போட்டவாறு எழுத்தான்.
அதே நம்பரிலிருந்து.. ‘சந்தோஷமா இருக்க போல..’ என மற்றொரு குறுந்தகவல்.
காரை கிளப்பி… ட்ரைவ் செய்தான். பின்சீட்டில் தியா தூங்கி விட… அருகில் சுதா… “என்ன பர்த்டே பேபி சந்தோஷமா இருக்கீங்களா..?” என அப்பாவியாகக் கேட்டவளை.. முதலில் அதிர்ந்து பின் சுதாரித்து… அவள் மூக்கைத் திருகி, “நீ இருக்கும் போது என் சந்தோஷத்துக்கு குறைவென்ன…” எனக் கொஞ்சினான்.
சுதா நெகிழ்ந்து போய் அவன் தோளில் சாய்ந்தாள்.
இனி தன் வாழ்வில் விளையாடப் போகும் விதியைப் பற்றி அறியாமல் மகிழ்வுடன் கணவனின் அணைப்பில் மெய்மறந்து கிடந்தாள்.
2 Comments
Interesting one
கதைக்கேற்ற படம் இல்லை