பத்துமலை பந்தம் | 28 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 28 | காலச்சக்கரம் நரசிம்மா

28. மலையுச்சியில் வௌவால் மேடு

த்துமலை முருகனை மனங்குளிரத் தரிசித்தாள் மயூரி. மனதின் ஒரு மூலையில் கலக்கம் தோன்றிக்கொண்டிருந்தது. உலகில் இப்போதைக்கு இவள் தனிமைப்பட்டு நிற்கிறாள். மூன்றாவது நவபாஷாணச் சிலையை தேடத் தொடங்கியிருக்கும், தனது குடும்பத்தாரின் செயலுக்கு ஆதரவு தர மறுத்ததால், அவர்களாலேயே குறி வைக்கப்பட்டு இருக்கிறாள். நவபாஷாணச் சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை உட்கொண்டால், உடலில் ஆரோக்கியம் நிலவும் என்பது பொதுப்படையாக அனைவருக்கும் சொல்லப்பட்ட அறிவுரை. ஆனால் நவபாஷாணச் சிலையின் மகத்துவம் அதோடு நிற்கவில்லை என்பது நவபாஷாணக் கட்டின் ரகசியங்களை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். காயம் என்கிற உடலின் சப்த நாடி சக்கரங்களையும் இயக்கிவைத்து அரிய சாதனைகளைப் புரிய செய்யும்.

பாஷாணத்தை கட்டியாள்பவன் பாதுஷா — என்கிற உண்மையை எப்படியோ அறிந்துவிட்ட இவளது தாத்தா போலி நல்லமுத்துவும், குடும்பமும், இரண்டாவது சிலை தங்களுக்கு ப்ரயோஜனப்படாது என்பதை உணர்ந்திருந்ததால், எப்பாடு பட்டாவது மூன்றாவது சிலையைத் தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்று வெறி கொண்டு அலைவார்கள். இவள் கவலையெல்லாம், அவர்கள் நல்லவிதமாக வாழ வேண்டும் என்பதுதான். என்ன இருந்தாலும், அவர்கள் ரத்தம்தானே என் உடலிலும் பாய்கிறது.! அவர்களை இவள் காப்பாற்றாமல் யாரு காப்பாற்றுவார்கள்..?

தன்னையே அவர்கள் குறிவைத்தும், குடும்பத்தினர் நல்லபடியாக வாழவேண்டும் என்று மனதில் வேண்டியபடி, முருகனின் சிலையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘நீதான் குமரா, உனது நவபாஷாணச் சிலைகளைக் காப்பாற்ற வேண்டும். மூன்றாவது சிலை மட்டுமல்ல. போகர் அமைத்த முதல் இரண்டு சிலைகளையும் வீர்யம் குறையாமல் நீயே காப்பாற்றிக்கொள்! அப்படியே எனது குடும்பத்தாரிடமும் கருணை காட்டு ! அவர்கள் அறியாமையால், தவறுகளைச் செய்கிறார்கள். அவர்களுக்கு நல்ல புத்தி புகட்ட, அவர்களையும் நீதான் ஆட்கொள்ள வேண்டும்..!” –கண்களில் நீர் மல்க, மயூரி, முருகனின் சிலையின் முன்பாக நின்றிருந்தாள்.

“மயூரி..! உன் ஆசைதீர தரிசனம் செஞ்சாச்சா..? கிளம்பு..! இப்ப இந்தக் கோவிலுக்கு பின்னாடி இருக்கிற படிக்கட்டுல ஏறி யாரும் போகாத ஒரு ரகசிய இடத்திற்கு போக போறோம்..! நான் உன்கிட்டே சொன்னேன் இல்லே… ஒரு குறிப்பிட்ட இடத்துல இருந்து பள்ளங்கி மலை இருக்கிற தென் மேற்கு பக்கமா பார்த்துகிட்டு நிற்பேன்னு..! அங்கேதான் போகப் போறோம்!” –குகன்மணி கூற, குமுதினி அவனை நோக்கித் தலையசைத்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க, முதலாளி. ! நான் காருல உட்கார்ந்திருக்கேன். என்னால இப்ப 272 படிகளை ஏறி இறங்க முடியாது.” –குமுதினி விலக, பத்துமலை பின்பாக உயரத்தில் இருந்த சுண்ணாம்புக் குகைகளை நோக்கிச்சென்ற படிகளில் ஏறினான் குகன்மணி. இரண்டு படிகளில் எறியவன் திடீரென்று நின்று, தன்னைப் பின்தொடர்ந்த மயூரியைப் பார்த்தான். அப்போதுதான் அவள் முதல் படியில் காலடியை வைத்திருந்தாள்.

“மயூரி..! மேலே உனக்கு நான் பல ஆச்சரியங்களைப் பற்றிச் சொல்லப் போறேன். மலையை விட்டு இறங்கறப்ப எல்லாத்தையும் மறந்துடு. நீ முருகன் மேல அதீத பக்தி, அதுவும் தூய்மையான பக்தி செலுத்தத்தறதால, உனக்கு மட்டும் சில ரகசியங்களைக் காட்டும்படி உத்தரவு. அதனாலதான் உன்னை மேலே அழைச்சுக்கிட்டு போகிறேன். அதே சமயம், உனக்கு உன் குடும்பத்து மேல கண்மூடித்தனமாக பாசமும் இருக்கு. எனவே நீ கத்தி மேல நடந்துகிட்டு இருக்கே. உனக்கு தெரிகிற ரகசியங்கள், உன் குடும்பத்தாருக்கு தப்பித்தவறித் தெரிஞ்சாகூட, விபரீதங்கள் நிகழலாம். உன்னோட மனதை வசியம் செஞ்சுகூட அவர்கள் விஷயங்களை அபகரிக்கலாம். ! எனவே, நீ ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். அதனால, கொஞ்ச நாளைக்கு நீ என்னோட பாதுகாப்புல இருக்கிறதுதான் நல்லது.” –என்றபடி தொடர்ந்து விடுவிடுவென அந்த மரப் படிகளில் ஏற, அவனை வேகமாகத் தொடர முடியாமல் தடுமாறினாள், மயூரி.

டுநிசி..! பங்களாவின் மொட்டைமாடியில், காற்றாட, A2B யிலிருந்து தருவித்திருந்த கார்ன் மிக்சரோடு கண்ணாடி கோப்பையில் ஸ்காட்ச்சை ஊற்றித் தொடர்ந்து அருந்திக்கொண்டிருந்தார் சரவணப்பெருமாள். அருகே மனைவி குணசுந்தரி A2B மிக்ஸரிலிருந்து முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சைகளை மட்டும் தேடிப் பொறுக்கி வாயில் தள்ளிக் கொண்டிருந்தாள். சற்றுத் தள்ளி, தேஜஸும், கனிஷ்காவும், ஷட்டில் காக் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அனைவரும், மலேசியாவிலிருந்து அமீரின் போன் காலுக்காக காத்திருந்தனர். சரியாக இந்திய நேரப்படி இரவு பன்னிரண்டுக்கு போன் செய்வதாகச் சொல்லியிருந்தான் அமீர்.

சரவணப்பெருமாளின் செல்போன் சரியாக பன்னிரண்டு மணிக்கு ஒலித்தது. தனது கலர் ட்யூனாக டிட்டானிக் கப்பல் முழுகியதும் ஒலிக்கும் இசையை வைத்திருந்தார் சரவணப்பெருமாள்.

“இந்த கண்றாவி இசையை மாத்துங்க, எஸ்பி..! நடுராத்திரில வயத்தை கலக்கிறது இந்த ம்யூசிக்..! அபசகுனமா இந்த இசையைப் போயி ஏன் காலர் ட்யூன்ல வச்சிருக்கீங்க..?” –கடிந்து கொண்ட குணசுந்தரியைக் கையால் மடக்கியபடி, சரவணப்பெருமாள், போனில் பேசினார். அவரையும் அறியாமல், குரலில் பயம் கலந்த ஒரு குழைவு. போனில் அமீர் அழைக்கிறான் என்று தெரிந்ததும், கனிஷ்கா ஆவலுடன், பெற்றோரை நோக்கி நகர, தேஜசும் ஷட்டில்லை வீசி எறிந்துவிட்டு, கட்டு போடப்பட்டிருந்த காலைச் சற்றே நொண்டியபடி, நடந்து சென்று நாற்காலி ஒன்றில் சரிந்தான்.

“வாட்..? மயூரியைக் காணுமா..? ஹோட்டல் ரூமுக்கே வரலியா..?” –சரவணப்பெருமாளின் குரல் அதிர்வுடன் ஒலிக்க, மற்ற மூவரும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்தனர்.

“எஸ் அமீர்..! எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுக் காரியத்தை முடிச்சுடுங்க. அவகிட்டே இருக்கிற ரகசியம் மட்டும்தான் முக்கியம்..!” –சரவணபெருமாள் கூறியபடி, போனை வைத்தார்.

“மயூரியைக் காணுமாம்..!” –சரவணப்பெருமாள் கூற, கனிஷ்கா உடனே பொங்கினாள்.

“எனக்குத் தெரியும்..! இது அந்த சஷ்டி சாமியோட வேலைதான். அந்த சஷ்டி சாமிதான் சுவடியைக் களவாடி அவ மூலமா அனுப்பியிருக்காரு..! அந்த சுவடியை வச்சுக்கிட்டு அவ என்ன செய்யப் போறாள்..? மில்லினியம் ஹோட்டல்ல அவள் இல்லேனா எங்கே போயிருப்பா..?” –கனிஷ்கா கேட்டாள்.

தேஜஸ் யோசனையுடன் கூறினான்.

“நிச்சயம் அவளுக்கு அவ்வளவு துணிச்சல் கிடையாது. சஷ்டி சாமி, இன்னும் பலர் அவளுக்கு துணையா இருக்கணும். எனக்கு இப்ப அந்த அஞ்சையா, அவன் தங்கை ராஜகாந்தம், அதுதான்… ஒரிஜினல் நல்லமுத்து, தேவசேனை அவங்க ரெண்டு பேர் மேல கூட சந்தேகமா இருக்கு..! மயூரி புதுசா ரெண்டு பேரை வேலைக்கு கொண்டு வந்தாளே, போதினி, சுபாகர்..! எல்லாரும் மயூரிக்கு உடந்தையா இருக்கணும். திடீரன்று, நம்ம தாத்தா பூஜித்து வந்த நவபாஷாணச் சிலை வீர்யத்தை இழப்பானேன். ? அந்த சஷ்டி சாமிதான் ஏதோ சதி செஞ்சிருக்கணும்..! விடக்கூடாது, கனிஷ்கா..! நம்ம எதிர்காலம் சிறப்பா இருக்கணும்னா, நாம் எப்படியாவது அந்த மூணாவது சிலையை அடைஞ்சே தீரணும்.” –தேஜஸ் கூற, ஆமோதித்தாள், கனிஷ்கா.

“யு ஆர் அப்ஸல்யூட்லி ரைட்..! அந்த மயூரிக்கு ஏதோ உண்மை தெரிஞ்சிருக்கு. அதனாலதான், நம்ம திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிச்சிருக்கா. எல்லாம் இந்தத் தாத்தா கொடுத்த இடம்..! எனக்கு ஒரு யோசனை..! நாம் ஏன் மலேசியாவுக்குப் போயி, அவளை ஒரு தட்டு தட்டி, அந்த ரகசியத்தைக் கைப்பற்ற கூடாது. மூணாவது சிலையை கண்டுபிடிக்கிற வரைக்கும் அவளை நம்ம கஸ்டடியில் வச்சுஇருப்போம்.” –கனிஷ்கா கூற, தேஜஸ் கட்டை விரலை உயர்த்தினான்.

“நான் ரெடி..! நீங்க ரெடியா..?” –பெற்றோரை நோக்கினான் தேஜஸ்.

“என்னால பத்திரிகை வேலையெல்லாம் விட்டுட்டு வர முடியாது. ஆனா உங்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு தரேன்.” –குணசுந்தரி கூறினாள்.

சரவணப்பெருமாள் தனது பிள்ளை மற்றும் பெண்ணை எச்சரிக்கையுடன் பார்த்தார்.

“ஜாக்கிரதை..! அமீர் மிகவும் ஆபத்தானவன். மூணாவது நவபாஷாணச் சிலையோடமதிப்பை தெரிஞ்சுக்கிட்டா, அவனே அதை கபளீகரம் செஞ்சுடுவான். கூடியவரையில், டோன்ட் ரப் ஹிம் ஆன் தி ராங் சைடு..! கனிஷ்கா..! அமீர் கிட்டே அபி னு ஒரு பயங்கரமான ஆளு இருக்கான். இரக்கம் இல்லாத சாடிஸ்ட் அவன். கூடிய வரையில், அமீர் கிட்டேயோ, அபி கிட்டேயே நீ பேசாதே. தேஜஸை அனுப்பு..!” –சரவணபெருமாளின் குரலில் அச்சம் தென்பட்டது.

“டோன்ட் வொர்ரி, டாடி. என்னால என்னையே காப்பாத்திக்க முடியும். மலேசியா போறதுக்கு ஒரு நல்ல ரீசனும் கிடைச்சது. மிதுன் ரெட்டி மலேசியாவில் ஸ்டார் நைட்ல கலந்துக்கப் போறாரு. என்னையும் வரச் சொன்னாரு. நான்தான் மாட்டேன்னு சொல்லிட்டேன். காரணம், என்னோட பிக் பட்ஜெட் படம், பாலைவனத்தை பிடுங்கிக்கிட்ட, மித்ரா ராவும் வர்றாளாம். அவ முகத்துல கூட நான் விழிக்க விரும்பலேனு சொல்லிட்டேன். இப்ப நம்மளுக்கு காரியம் ஆகணும்னா மிதுன் ரெட்டியோட போறதுதான் நல்லது. நானும் நீயும், அந்த கலைக்குழுவோட போனா, யாருக்குமே சந்தேகம் வராது. போயி, அந்த மயூரியை உலுக்கற உலுக்கில, அவள் ரகசியங்களைக் கக்கிடுவா..!” –கனிஷ்கா, கூற, தேஜஸ் அலட்சியமாக தோளை குலுக்கினான்.

“அந்த மித்ரா ராவை நான் வளைச்சுப் போடறேன்..! நீ புறப்பட வேண்டிய ஏற்பாடுகளைப் பாரு..!” –தேஜஸ் கூற, கனிஷ்கா , அவசரமாக தனது பிஆர்ஓ சுனிலின் நமபரை அழுத்தினாள்.

த்துமலையின் நூற்றைம்பது படிகளைக் கடந்து விட்டிருந்தனர், குகன்மணியும் மயூரியும். சட்டென்று மூலப் பாதையில் இருந்து விலகி ஒரு அடர்த்தியான ஒற்றையடிப் பாதையில் நுழைந்தான் குகன்மணி.

“என்னை எங்கே அழைச்சுக்கிட்டுப் போறீங்க..?” –தயக்கத்துடன் கேட்டாள் மயூரி.

“தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறிப் போனால், பத்துமூலக் குகை வரும். ஆனால் நாம போகப் போற இடம் அது இல்லை. இந்தப் பக்கமாப் போனால் நிறையக் குகைகள் வரும். நான் வழக்கமா போகிற ரகசியக் குகை பக்கம் மனுஷ நடமாட்டமே கிடையாது. அங்கேதான் சித்த புருஷர்கள் யோகத்துல இருந்த குகைகள் இருக்கு. நாம அங்கேதான் போகப் போறோம். அங்கே ஒரு ஆச்சரியத்தை உனக்குக் காட்டப் போறேன்.” –என்றபடி குகன்மணி நடக்க, மயூரி வேறு வழியின்றி அவனைத் தயக்கத்துடன் தொடர்ந்தாள்.

“முருகா..! உன் மேல எல்லா பாரத்தையும் போட்டுட்டு, இந்த ஆளை நம்பி நடக்கிறேன்.” –மனதினுள் வேண்டிக்கொண்டாள், மயூரி.

“மயூரி..! நாம ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கு. அதனால நாம பேசிட்டே நடந்தால், உனக்கு சிரமமா இருக்காது. நீயும் நானும், ஒருவரையொருவர் நல்லா அறிஞ்சுக்க இதுவே நல்ல சமயம். என்னைப் பத்தி உனக்கு நிறையச் சந்தேகங்கள் இருக்கு. அதனால் எல்லாத்தையும் கேட்டுத் தெளிவுபடுத்திக்கோ. ” –குகன்மணி கிண்டலாகச் சொல்ல, குகன்மணியின் பரந்த முதுகை பார்த்தாள் .

“எது கேட்டாலும் சொல்வீங்களா..?” –மயூரி கேட்க, அவன் திரும்பிப் பார்த்து புன்னகைத்தான்.

“என்னைப் பத்தி எது வேண்டுமானலும் நீ கேட்கலாம். ஆனால் நினைவில வச்சுக்க. இங்கே நாம பேசினதையோ, நீ பார்த்ததையோ, பத்துமலையை விட்டு இறங்கினதும், மறந்துடணும், ஓகே..!” –தனது கட்டை விரலை உயர்த்தினான், குகன் மணி..!

“இப்ப நாம எங்கே போறோம்..?” –மயூரி கேட்டாள்.

“இப்ப நாம கிழவர் கெலவர் குகைக்கு போறோம்..! கெலவர்ன்னா மலாயாமொழியில் வௌவால் குகைன்னு அர்த்தம். கெலவர் குகைல என்ன விஷயம், தெரியுமா..? அகத்தியர்கிட்டே ககன குளிகையை வாங்கிட்டுப் பள்ளங்கி மலையிலிருந்து பறந்து வந்த போகர், தவம் செஞ்ச இடம். நீ மனப்பாடம் செஞ்சு வச்சிருக்கியே இரண்டாவது சுவடி பாடல் . அதன் முழுப்பாடல் இதுதான்.

மூல தலைச்சன் பாலனுக்கு மாங்கனியே காப்பு.

ஜால இடைச்சன் குட்டனுக்கு ஆழ்குழியே காப்பு

கோல கடைச்சன் வித்தனுக்கு சுண்ண கல்லே காப்பு

தகையோன் வந்து நிற்க மெய்யே காப்பு

ஓவ்வா மேட்டில் எழும் அடக்கினால் ,

பாலர் மூவரின் அருளும் கிட்டிடுமப்பா..!

“இந்த பாடலுல குறிப்பிடப்படற ஒவ்வா மேடு தான் வௌவால் குகை. அதைத்தான், மலாயா மொழியில் கெலவர் குகைனு சொல்றாங்க. அங்கேதான் உனக்கு ஒரு ஆச்சரியத்தைக் காட்டப் போறேன்..!” –என்றான் குகன்மணி.

வௌவால் மேட்டுக் குகையில் என்ன ஆச்சரியத்தைக் காட்டப் போகிறானோ குகன்மணி. ஆனால் அப்போதே மயூரிக்கு ஆச்சரியங்கள் மனதில் ஏற்பட, காரணமின்றி அவளது மேனியில் புல்லரித்தது.

‘வௌவால் மேட்டில் என்ன இருக்கிறது..?’ –தனக்குள் கேட்டபடி குகன்மணியை பின்தொடர்ந்தாள் மயூரி.

–தொடரும்...

ganesh

3 Comments

  • Super!waiting for the next saturday!

  • ♥️♥️♥️

  • Wow… Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...