பத்துமலை பந்தம் | 15 | காலச்சக்கரம் நரசிம்மா
15. வண்டவாளம் தண்டவாளத்தில்..!
மனிதனின் குழந்தைப் பருவம் ஓடி விளையாடும் பருவம். பறவைகளாகப் பறந்து திரிந்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று உற்சாகத்துடன் வளைய வரும் வயது.
குமார பருவம், இயற்கை உடலில் உண்டாக்கும் மாற்றங்களை வியப்புடன் ஏற்று, விடலை எண்ணங்களுடன், பொழுதைக் கழிக்கும் பருவம்.
வாலிபப் பருவம், உள்ளத்துக்கு இனிமையை அள்ளித்தரும் தனக்கு உற்ற ஜோடியை தேர்ந்தெடுத்து, கைகோர்த்துக் காதல் பாதையில் பவனி வரும் வயது.
அதுவரையில் மலர்கள் இறைக்கப்பட்ட பாதையில் நடந்து வந்த அந்த மனிதன், முதன் முறையாக ஒரு ரோஜா மலரில் இருக்கும் முள் காலில் தைத்ததும், அதுவரையில் சுகமான வாழ்க்கைப் பயணத்தை அனுபவித்து வந்த அவனுக்கு, அந்த சிறிய முள் குத்தியது பெரிய பிரச்சனையாகத் தோன்றும்.
நல்லமுத்து குடும்பத்தினர் அனைவரும் இதுவரையில் சுக போகங்களை அனுபவித்து வந்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கூறும் வழக்கு போல, வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்கள் (Born with a silver spoon ). முதன்முறையாக, பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கி இருந்ததால், கதி கலங்கிப் போயிருந்தார்கள். தாத்தா நல்லமுத்துவின் வற்புறுத்தலால் கூட்டத்திற்கு வருபவர்கள், இந்த முறை பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக தாங்களாகவே உலகின் பல மூலைகளில் இருந்து, சென்னைக்குப் படை எடுத்திருந்தார்கள்.
சென்னைக்கு வந்ததுமே, ஈசிஆரில் உள்ள தனது குறிஞ்சி பண்ணை வீட்டுக்குச் சென்று விட்டார் நல்லமுத்து. இவரது பண்ணை வீட்டைப் பார்த்துக் கொள்பவர்கள், அஞ்சையாவும், அவரது தங்கை ராஜகாந்தமும்தான். குறிஞ்சியில் குடும்ப மீட்டிங் நடக்கப்போகிறது என்றவுடனேயே அதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டனர்.
குடும்ப மீட்டிங் என்றாலே ராஜகாந்தாவுக்குப் பதட்டம்தான். குறிப்பாக குணசுந்தரி, கனிஷ்கா, தேஜஸ் மற்றும் சரவணபெருமாள் மிகவும் கோபக்காரக் குடும்பம். எல்லாம் நேர்த்தியாக இருக்க வேண்டும். ஒரு முறை கனிஷ்கா உணவு அருந்திவிட்டு, கைகழுவிட்டு, டிஷ்யூஸ் கேட்க, ராஜகாந்தம் டிஷ்யூஸ் எடுத்து கொண்டு போய் நீட்ட, அதை வாங்கிக்கொள்ளாமல் கத்தத் தொடங்கினாள், கனிஷ்கா.
“கொஞ்சமாவது அறிவு இருக்கா..? டிஷ்யூஸ் கொண்டு வந்து உன்னோட அழுக்குக் கையால நீட்டறியே..! ஒரு ட்ரே-யில வச்சுக் கொண்டுவரத் தெரியாதா..?” –என்று ஆர்ப்பாட்டம் செய்தாள். அது மட்டுமா..? குடும்பத்தில் எல்லோரும் விவிஐபி என்பதால் ஈகோ பிரச்சனை..! வழக்கமாக எல்லா குடும்பங்களிலும், உறுப்பினர்கள் ஒன்று கூடும்போது பாசமும், கூத்தும், கும்மாளமுமாக கழியும். ஆனால் இங்கே நல்லமுத்து குடும்பம் கூடும்போது மட்டும், போட்டி, பொறாமை, புகைச்சல், வாதப் பிரதிவாதங்கள், சண்டை, போட்டி, பொறாமை. எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளலாம். ஆனால் அவர்களை ஒன்றாக சாப்பிட வைப்பதற்குள், அவள் படும் பாடு !
கடைசியாக வருபவர்கள்தான், மிக பெரிய விவிஐபி என்று பலருக்கும் எண்ணம். யாரைச் சாப்பிட அழைத்தாலும், “எல்லோரும் வரட்டும்..! பிறகு நான் வருகிறேன்..!” –என்று பந்தா செய்துகொண்டு அவரவர் அறையில் இருப்பார்கள். தமிழ் சினிமாவில் காபரே டான்சர் ஒவ்வொரு டேபிளாகச் சென்று ஆடுவது போன்று, ராஜகாந்தம் ஒவ்வொரு அறையாகச் சென்று அவர்களைச் சாப்பிட அழைக்க வேண்டும்..! அவர்களை அணி திரட்டுவதற்குள், உயிர் போகும் ராஜகாந்தத்திற்கு. இரண்டு மாடி வேறு ஏறி, தேஜஸ் அறைக்கு போக வேண்டும். அவன் உள்ளே மியூசிக் சிஸ்ட்டத்தில் பாட்டு கேட்டுக்கொண்டிருப்பான், கதவு தட்டினால் கோபம் வரும். மிகவும் மண்டைக்கனம் கொண்டவன்.
“தம்பி..! நேத்து டிவில பார்த்தேன்..! நீ மட்டையால பந்தை விளாசி, பந்து மைதானத்துக்கு வெளியே போனதைப் பார்த்து பெருமையா இருந்தது.” –என்று இவள் கூற, அவன் அந்த பாராட்டுரைகளைக் கேட்டு மகிழவில்லை.
“என்ன… காக்கா பிடிக்கிறியா..? மட்டைனு சொல்றியே..? நான் என்ன தேங்காய் மட்டையாலயா ஆடறேன்..? உனக்கு விஷயம் தெரியலேனா, பொத்திகிட்டுப் போ..!” — என்று மிரட்ட, ராஜகாந்தம் அரண்டு போய் அகன்றிருந்தாள்.
மகன் பாண்டிமுத்து குடும்பம் பரவாயில்லை. பாண்டிமுத்து மௌனமாக அமர்ந்திருக்கிறான் என்றால் தனது அறையில் உள்ள பாரில் இருக்கும் மதுபாட்டில்களில் இருந்து உற்சாக பணம் அருந்தி வருகிறான் என்று பொருள். அவன் மனைவி சத்தியவதி, தனது பருமனான தேகத்தை இம்மியும் அசைக்க மாட்டாள். அவள் பக்கத்திலேயே அமிர்தாஞ்சனம் இருக்கும். ஆனால் குனிந்து எடுக்க மாட்டாள். ‘ராஜகாந்தம்’ என்று ஒரு குரல் கொடுப்பாள்..! அவள் சென்று அதை எடுத்து கொடுத்தால், இங்கே என்று தனது சுட்டு விரலால், நெற்றியை காட்டுவாள். அதாவது அவள் தேய்த்து விட வேண்டும்.
சிறு வயதில், நினைவு தெரிந்த நாளில் இருந்தே, அவளும், அண்ணன் அஞ்சையாவும், நல்லமுத்துவின் அரவணைப்பில் தான் வளர்ந்தார்கள். குறிஞ்சி பண்ணை வீட்டை வாஙகியதும், இருவரையும் அங்கே அனுப்பி, அதைப் பார்த்துக்கொள்ளும்படி உத்தரவிட்டிருந்தார் நல்லமுத்து.
நல்லமுத்து காரில் இருந்து இறங்கியதும், தனது கைத்தடியைச் சுழற்றியபடி, அஞ்சையாவையும் ராஜகாந்தத்தையும் பார்த்தார்.
”ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கங்க..! இந்த முறை, இங்கேயே ரெண்டு நாள் தங்க போறோம். ரொம்ப முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கு. எனவே, எல்லோருக்கும் எது வேண்டும்ன்னு கேட்டுக் கேட்டுக் கவனிங்க. கடைசி நிமிஷத்துல இது இல்லை, அது இல்லைனு சொல்லாம, எல்லாத்தையும் வாங்கி வச்சுக்கங்க..! அதிகமா வாங்கினாக் கூடப் பரவாயில்லை..! குறைவா வாங்கித் தொலைக்காதீங்க..!” — என்றபடி தனது அறையை நோக்கி நடந்தார்.
”தெய்வமே..! இவங்களோட இரண்டு நாள் கழிக்கணுமா ? கனிஷ்கா அம்மாவை நினைச்சா இப்பவே பயமா இருக்கு..! அதுக்குக் கோபம் வந்தா கண்மண் தெரியாது ஏழு தலைமுறையை பிடிச்சுத் திட்டுது.” –ராஜகாந்தம் வேதனையுடன் கூற, அஞ்சையா அவளை ஆறுதலுடன் பார்த்தார்.
“கவலைப்படாதே ராஜகாந்தம்..! ஏதாவது பிரச்சனைன்னா என்னைக் கூப்பிடு..! நான் வந்து சமாளிக்கிறேன்..!” –தங்கையைக் கரிசனத்துடன் பார்த்தார். நல்லமுத்து குடும்பத்திற்கு ஊழியம் செய்ததில், தங்கைக்குத் திருமணம் செய்து வைக்கக்கூட அவரால் இயலவில்லை. பாவம்..! நித்ய கன்னிகையாக உதிர்ந்து போய்க்கொண்டிருக்கிறாள்..! –குற்றமுள்ள நெஞ்சுடன், நல்லமுத்துவின் அறைக்குச் சென்றார்.
ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். அஞ்சையா, பாவம்..! வருபவர்களை வரவேற்று, கார்க் கதவைத் திறந்து உபசரித்து, டிக்கியில் இருந்து அவர்களின் உடைமைகளை அவரவர் அறைகளில் வைக்க வேண்டும்.
மயூரியின் கார் பண்ணை வீட்டினுள் நுழைவதைப் பார்த்ததும், அஞ்சையாவும், ராஜகாந்தமும் முகமலர்ந்தனர். நல்லமுத்து குடும்பத்தில் இவர்களிடம் அன்பாகப் பேசும் ஒரே ஆத்மா மயூரிதான். ராஜகாந்தத்திற்கு உதவியாகச் சமையலறையில் பணிகளைச் செய்வது, அஞ்சையாவுக்கு உதவியாக தோட்டப் பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுவது என்று இரண்டு நாட்கள் அவர்களுடன் சுற்றிக்கொண்டிருப்பாள் . மற்றவர்களை நினைத்தால், ‘ஏன்தான் குடும்ப மீட்டிங் வருகிறதோ..?” என்று நினைக்கிற இருவரும், மயூரியும் வருவாள் என்கிற ஆறுதலில்தான் அந்த நாளை வரவேற்பார்கள்.
தனது காரிலிருந்து இறங்கும்போதே, சிரிப்புடன் ராஜகாந்தத்தின் கையை நட்புடன் பற்றினாள்.
“என்ன ராஜகாந்தம்..! எப்படி இருக்கே..? அஞ்சையா..! உன் தோட்டத்துக்கு கோலாலம்பூர்ல இருந்து ஒரு புதுச் செடி கொண்டு வந்திருக்கேன். டிக்கியில் வெச்சிருக்கென். பார்க்கலாம், நம்ம சென்னை மண்ணுக்கு எப்படி வளருதுன்னு..!” என்று பேசியபடியே –பின்சீட்டுக் கதவைத் திறந்தாள் மயூரி.
“அஞ்சையா..! ராஜகாந்தம்..! உங்களுக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கேன். இவங்க ரெண்டு பேரும் இனிமே வீட்டு வேலையில உங்களுக்கு உதவியா இருக்கப் போறாங்க. இந்த பெண் பெயர் போதினி..! இந்த பையன் பெயர் சுபாகர்..! ஹவுஸ் கீப்பிங் ஏஜென்சிலருந்து வந்திருக்காங்க.! ரெண்டு நாள் மீட்டிங் போதும் உங்களுக்கு கூடமாட ஹெல்ப் பண்ணுவாங்க..! அதுல ஒரு விசேஷம் தெரியுமா..? நீங்க ரெண்டு பெரும் அண்ணன், தங்கை மாதிரி, சுபாகரும், போதினியும் அண்ணன் தங்கை..! நீங்க எங்க குடும்பத்துல எத்தனை பேரைச் சமாளிக்க வேண்டியிருக்கு..! அதனால இவங்களை அழைச்சுக்கிட்டு வந்தேன்..!” –என்றதும் பிரமித்துப் போய் நின்றார்கள் அஞ்சையாவும், ராஜகாந்தமும்.
கனிஷ்கா அழகிதான் என்றாலும், அவளைவிட மயூரி இன்னும் பேரழகாய் கொண்டிருந்தாள். ஆனால் இந்த போதினியோ, மயூரியைவிட அழகாக இருந்தாள் ! சுபாகரோ, தேஜஸைவிட மிகக் கம்பீரமாகவும், துருதுருப்புடனும் காணப்பட்டான்.
“அம்மா மயூரி..! இவங்களைப் பார்த்தாலே பெரிய இடத்துப் பசங்க போல இருக்காங்க..! இவங்களைப் போய் வீட்டு வேலைக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்கியே..!” –ராஜகாந்தம் கேட்டாள்,
“இல்லைம்மா..! இவங்க எல்லாரும் ஸ்டூடென்ட்ஸ்..! பார்ட் டைமா இந்த மாதிரி ஒரு நாளைக்கு, ரெண்டு நாளைக்கு வேலை செஞ்சு சம்பாதிச்சுக்கிட்டே படிப்பாங்க. இப்ப இவங்களுக்குக் கல்லூரி விடுமுறை..! அதுதான் வேலைக்கு வந்திருக்காங்க.” –சொல்லிக் கொண்டிருக்கும் போதே கனிஷ்காவின் கரிய நிற BMW உள்ளே நுழைந்தது. தான் கார் நிறுத்த வேண்டிய இடத்தில மயூரியின் கார் நிற்பதைக் கண்டதும், கனிஷ்காவுக்கு கோபம் வந்தது. அவள் காரை எடுக்கும்வரை, இவள் காரில் உட்கார்ந்து போர்டிகோவில் வெளியே காத்திருக்க வேண்டுமா..? மயூரி என்ன பெரிய மகாராணியா..? மயூரி ராஜகாந்தத்துடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டதும், கனிஷ்காவின் தேகமெல்லாம் பற்றி எரிந்தது. என்ன துணிச்சல் இருந்தால் போனில் இவளுக்கு அட்வைஸ் செய்வாள்.? தான் பெரிய பருப்பு என்று நினைப்பு..! சட்டென்று, தன்னுடைய BMW டாமேஜ் ஆனாலும் பரவாயில்லை, மயூரியின் காரைச் சேதப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது.
மயூரியின் ஹ்யுண்டாய் அல்கஸார் காரைக் குறி வைத்து, தனது காரின் ஆக்சிலேட்டரை வேகமாக மிதித்தாள்..! காரின் ஒலிகேட்டு அனைவரும் அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தனர்.
கனிஷ்காவின் கார் போர்டிகோவை நோக்கிச் செல்லாமல், அதன் முன்பாக அழகாக மர ஸ்டாண்டுகளில் அடுக்கப்பட்டிருந்த மண்பானை செடிகளை இடித்துத் தள்ளிக் கொண்டு, செடிகளின் மீது மோதி, ஒரு அலங்கார விளக்குக் கம்பத்தின் மீது மோதி நிற்க, அந்த விளக்குக் கம்பம் சரிந்து அவளது BMW வின் மீது விழுந்து காரின் முன்கண்ணாடியை உடைத்தது. கண்ணாடி துண்டங்கள் சிதற, ஒரு துண்டு கனிஷ்காவின் கன்னத்தை உராய்ந்து கொண்டு பறக்க, அவளது கன்னத்தில் குருதி எட்டிப் பார்த்தது..!
தான் நினைத்தது என்ன… நடந்தது என்ன..? –அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள் கனிஷ்கா.
“நல்லா வேண்டும்..!” –மனத்திற்குள் ராஜகாந்தம் நினைக்க, புதிதாக வந்திருந்த போதினியும் , சுபாகரும், உதட்டில் குறுநகையோடு கனிஷ்காவின் காரையே வெறித்துக்கொண்டிருந்தனர். .
பண்ணை வீட்டின் மாடியில் தனது அறையில் அமர்ந்து, தனது வண்டவாளங்களில் எவற்றையெல்லாம் மறுநாள் நடைபெற இருந்த குடும்ப மீட்டிங் தண்டவாளத்தில் ஏற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் நல்லமுத்து. ‘முதல் முறையாகத் தனது குடும்பத்தின் வாரிசுகளிடம், இதுநாள் வரையில் மறைத்து வைத்திருந்த ரகசியங்களை எல்லாம் ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறார். அவர்கள் அதனை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்..?’ –தனக்குள் அவர் யோசித்தபடி அமர்ந்திருந்தார்.
ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ… அனைவரும் ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் செயல்பட்டு இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க வேண்டும். ஒன்றுபட்டால் நிச்சயம் மீண்டும் வாழ்வு உண்டு. அவர் எதிர்பார்க்கும் ஒற்றுமை அந்தக் குடும்பத்தில் வருமா..? வந்துதான் தீர வேண்டும்.
தனக்குள் பேசிக்கொண்டிருந்ததவர், கார் மோதும் சப்தம் கேட்டு, அவசரமாக பால்கனிக்குச் சென்று, கீழே பார்த்தார். கனிஷ்காவின் BMW விளக்குக் கம்பத்தில் மோதி, கம்பம் காரின் மீது விழுந்து அதன் கண்ணாடி நொறுங்கியிருந்ததை பார்த்தார்.
தற்செயலாக, அங்கே நின்றுகொண்டிருந்த போதினி மற்றும் சுபாகரின் மீது அவரது பார்வை படர்ந்தது. அதே சமயம், அவர்களும் தங்களது பார்வையை உயர்த்தி அவரைப் பார்க்க, நல்லமுத்து தனது தலையில் ஆயிரம் இடிகள் இறங்கி, முதுகுத்தண்டு வழியாகக் கீழே இறங்கியது போல உணர்ந்தார்.
‘குடும்ப மீட்டிங் நடைபெறுவதற்கு முன்னாலேயே தான் தண்டிக்கப்பட்டு விடுவோமா..?” –நல்லமுத்துவின் கால்கள் உதறல் எடுத்தன.
3 Comments
ரொம்பவும் விறு விறுப்பா போகுது.அடுத்து என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கிறது.காத்திருக்கிறேன்.அடுத்த பகுதிக்காக!நன்றி நரசிம்மா சார்!
❤️❤️❤️❤️❤️
Wow… Thrilling…