வாகினி – 12 | மோ. ரவிந்தர்

 வாகினி – 12 | மோ. ரவிந்தர்

அழகான தென்றல் வீசும் சுகமான இரவு நேரம் இது. வெள்ளை நிலா அழகாகக் காட்சி தர நட்சத்திரப் பூக்கள் எல்லாம் வானெங்கும் கோடி கோடியாய் கொட்டிக்கிடந்தன.

ஒருபுறம், இரவு நேரத்தில் விளையாடும் பட்சிகள் எல்லாம் ஒரு விதமான ஓசை எழுப்பி ரீங்காரம் செய்துகொண்டிருந்தது.

நேரம் இரவு எட்டு மணியைக் கடந்து ஊரே உறங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. ஆனாலும், சதாசிவம் வீட்டில் மட்டும் பேச்சுக் குரல் கேட்டுக்கொண்டிருந்தது.

வீட்டின் முன் வாசல் பகுதியில் மின்விளக்கு ஒன்று பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.

வாகினி நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வீட்டுப் பாடத்தை இன்றே அவசர அவசரமாக எழுதிக் கொண்டிருந்தாள்.

அவளின் தாய் கஸ்தூரி, தனது மடிமீது குழந்தை பாபுவை வைத்துக்கொண்டு வனிதாவிற்குச் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள். வனிதா, அரை உறக்கத்தில் அம்மா தரும் சாதத்தை மெதுவாகச் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

பக்கத்தில் கட்டில் மீது சதாசிவம் அரைத் தூக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தார்.

வாகினி, நோட்டில் 2 +7 = 9 என்று எழுதிவிட்டு. அடுத்த வரிக்கு தனது அம்மாவிடம் சந்தேகம் கேட்கத் தொடங்கினாள்.

“அம்மா… 17+ 6 கூட்டினால் எவ்வளவும்மா வரும்?”

“உனக்கு எத்தனை முறைதான் நான் பாடத்த சொல்லித் தருவதோ தெரியல. சொல்லித்தரப் பாடத்த சரியா கேட்டாத்தானே?” என்று சற்று அலுத்துக்கொண்டே கூறினாள், கஸ்தூரி.

“17 +6=23” என்றாள், கஸ்தூரி.

கஸ்தூரி திட்டுவது காதில் போட்டுக்கொள்ளாமல் அதற்குள் வாகினியே விரல் விட்டு எண்ணி விட்டாள்.

“அம்மா, இன்னைக்கு எங்க பள்ளிக் கூடத்தில ஆண்டுவிழா!. எங்க ஸ்கூல்ல எல்லாருமே ஜாலியா இருந்தாங்க. தெரியுமா?” என்றாள்.

“என்னடி சொல்ற அடுத்த வாரம் பத்தாவது பரிட்சை இருக்குன்னு கோமதி சொல்லிட்டு இருந்தா. இப்போ போய் உங்க ஸ்கூல்ல ஆண்டு விழாவா?” என்று கேள்வி எழுப்பினாள், கஸ்தூரி.

“அது எதுவும் தெரியலம்மா, பத்தாவது பரிட்சை எழுத போறவங்களுக்கு ஆண்டு விழான்னு சொன்னாங்க டீச்சர். ஸ்கூல் பசங்க எல்லோரும் அவங்க அம்மா அப்பாவ ஸ்கூலுக்குக் கூட்டிக்கிட்டு வந்தாங்கம்மா. நம்ப மீனாக்கா இருக்காங்களே! அவங்க வீட்டுக்காரு கூட மைக்கிலப் பேசினாரும்மா” என்றாள், வாகனி.

இந்த நேரத்தில் கஸ்தூரி மனதில் ஏதோ ஒரு எண்ணம் ஓடியது.

“சரி, வெட்டிப் பேச்சு எல்லாம் பேசாம நோட்டை எடுத்து வச்சிட்டு. உங்க அப்பாவ போய் எழுப்பு. உங்க ரெண்டு பேருக்குமா சாப்பாடு கொண்டு வரேன்” என்றாள், கஸ்தூரி.

வனிதா, உணவு ஊட்டிக்கொண்டே அதே இடத்தில் உட்கார்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

“வனிதா… இந்தா இந்தத் தண்ணியிக் குடி” என்று கஸ்தூரி அவளுக்குத் தண்ணீர் கொடுத்தாள்.

வாகினி நோட்டுப் புத்தகத்தை எடுத்து தனது பையில் வைத்துவிட்டு, “எழுந்திருப்பா, அம்மா சாப்பிட கூப்பிட்றாங்க” என்று தன் தந்தையை எழுப்பினாள்.

வாகினியின் குரல் கேட்டுச் சதாசிவம் தூக்கத்தில் இருந்து மெல்ல எழுந்துகொள்ள, “ஏங்க, வனிதா உக்காந்துட்டே தூங்குறா, அவளக் கொஞ்சம் கட்டில கிடத்துங்க” என்றாள், கஸ்தூரி.

சதாசிவம், வனிதாவை தூக்கிக்கொண்டு போய்க் கட்டில் மீது கிடத்திவிட்டு, தனது முகத்தைச் சுத்தம் செய்ய வெளியே வந்தார்.

வாகினி சாப்பிடுவதற்குத் தரையில் அமர்ந்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சண்டை சச்சரவு. இப்போது இந்த வீட்டில் இல்லை. கணவன் மனைவி இருவரும் சுகமுடன் காணப்பட்டனர்.

சதாசிவம், புதிதாக வியாபாரம் செய்யப் போகின்றேன் என்று கூறியதிலிருந்து கஸ்தூரி தன்னுடைய கோபத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்று முதல் புது மனுஷியானால். அதனால், வீடு சற்று அமைதியாக விளங்கியது.

வாகினிக்குத் தட்டில் உணவு பரிமாறப்பட்டது. அவள் சமத்தாக உணவு உண்ண ஆரம்பித்தாள்.

தனது முகத்தைத் துடைத்துக் கொண்டே வாகினி பக்கத்தில் வந்து அமர்ந்தார், சதாசிவம்.

அவருக்கு உணவு பரிமாறிக் கொண்டே அவரிடம் பேச ஆரம்பித்தாள், கஸ்தூரி .

“எங்க, வீட்ல கொஞ்சம் நகை இருக்கு அத வச்சாலோ, வித்தலோ கொறஞ்சது இருபதிலிருந்து முப்பது வரை தான் காசு கிடைக்கும். மீனாகிட்ட இரண்டு பைசா வட்டிக்கு முப்பதாயிரம் வரை கேட்டு பாக்கலாம்ன்னு இருக்கேன். மீதி பணத்துக்கு நீங்களும் வெளில கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்” என்று பாசமாகக் கூறினாள், கஸ்தூரி.

“பரவாயில்ல கஸ்தூரி, மீதியை நான் பார்த்துக்குறேன். உன்னால முடிந்தவரை கொடுத்தால் போதும்” என்று கூறிக்கொண்டு சாப்பாட்டில் கையை வைத்தார், சதாசிவம்.

“ஏங்க, கடைய எங்க போட்றதா உத்தேசம். ஆவடியா? இல்ல சென்னையிலேயா?” என்று ஆவலுடன் கேட்டாள், கஸ்தூரி.

“ஆமா, கஸ்தூரி நான் உங்கிட்ட இத சொல்லனும்னு நெனச்சிட்டே இருந்தேன். ஆவடில கடைய வச்சா கால் காசு வருமானம் பேராது. அதனால சென்னையிலையே ஒரு நல்ல இடமா பார்த்து போடலாம்னு இருக்கேன்.”

“ஆமாங்க, நீங்க சொல்றதுதான் சரி. கடையை ஆவடில போட வேண்டாம், லாபம் தரும் இடமே சென்னை தானே!. அதனால சென்னையிலே ஒரு நல்ல இடமா பாருங்க” என்று உற்சாகம் காட்டினாள், கஸ்தூரி.

“ஆமா கஸ்தூரி, எங்க முதலாளி கூட ரொம்ப நல்லவர். நானும் ஒரு புதுப் தொழில் தொடங்கப் போறேன்னு சொன்னதும். எந்த ஒரு மறுப்பும் சொல்லாம கடையை எடுத்து நடத்து, நானும் உனக்கு உதவி செய்யிறேன்னு சொல்லி இருக்கார். அவருக்குத் தெரிந்த பேங்க்ல கூடக் குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கித் தர ஏற்பாடு பண்ணிருக்காரு” என்று தனது முதலாளி குமாரை பெருமை பேசினான், சதாசிவம்.

“நல்ல விஷயங்க!” என்றாள் கஸ்தூரி.

“நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். முடிஞ்சவரை எல்லாத்தையும் முயற்சி செய்து பார்ப்போம்” என்றாள், கஸ்தூரி.

வாகினி சாப்பிட்டு முடித்துவிட்டு உறங்குவதற்குத் தயாரானாள்.

சதாசிவமும் உணவை முடித்துக்கொண்டு எழுந்தார். கஸ்தூரியும் அந்தப் பாத்திரத்தை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, தானும் சாப்பிட்டு முடித்துவிட்டு உறங்குவதற்கு தயாரானாள்.

இருவரின் கனவுகளும் மெல்ல சிறகடிக்க தொடங்கியது. நடக்க இருக்கும் வரவு செலவு கணக்குகளை புத்தியில் வைத்துக்கொண்டு இரவின் கனவுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தனர்.

சரி பார்க்கலாம், இவர்கள் இருவரின் ஆசை நிறைவேறுகிறதா? இல்லை வெறும் கானல் நீராகக் கடலில் கலந்துவிடுகிறதா என்று?.

–தொடரும்…

< பதிணொன்றாவது பகுதி

கமலகண்ணன்

3 Comments

  • ஆழம் கொண்ட கதை! ARUMAI!👏💐

  • கணக்குப் பாடம் வீட்டுப்பாடம் 2 சேர்ந்துவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...