வாகினி – 9 | மோ. ரவிந்தர்
தனியாகத் தொழில் தொடங்கலாமா வேண்டாமா என்று கஸ்தூரியிடம் கூறிவிட்டு, தான் வேலை பார்க்கும் தொழிற்சாலைக்குள் வழக்கமான நேரத்தில் நுழைந்தான், சதாசிவம்.
அவன் தொழிற் சாலைக்குள் நுழையும்போதே கண்களில் ஒரு கனவும் மனதில் ஒரு குழப்பமும் அலைமோதியது.
முதலாளியான குமார் ஒரு புதிய அலுமினிய பாத்திரத்தில் நசுங்கி இருந்த இடத்தை, உளியைக் கொண்டு சரி செய்து கொண்டிருந்தார்.
“வணக்கம்!, முதலாளி”
“வணக்கம்!, என்ன சதாசிவம் கவலையா வணக்கத்த வைக்கிறியே. உடம்புக்கு என்ன?” என்று வார்த்தையை முடித்தார், குமார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க முதலாளி. தினமும் அவ்வளவு தூரத்திலிருந்து வேலைக்கு வரேன். அதான், உங்களுக்கு அப்படித் தெரியுது” என்றான், சதாசிவம்.
“சரி, போய் வேலைய பாரு” என்றார், குமார்.
முதலாளி சொல்லை ஏற்று, அவர் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அலுமினியம் தகட்டையும் கையில் எடுத்துக்கொண்டு பாத்திரங்கள் செய்யும் கருவி இருக்கும் இடத்திற்கு வந்தான், சதாசிவம்.
ஒரு பெரிய கத்தரிக்கோலால் தகடை எடுத்து இரண்டாகக் கத்தரித்தான். பிறகு, சுத்தியால் அடித்து அடித்து அதற்கு ஒரு பாத்திரம் வடிவம் கொடுக்க. அது ஒரு சமையல் பாத்திரமாக உருமாறிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்திலும் அவனுடைய மனதானது வேலையில் நாட்டம் கொள்ளாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது.
‘தனியாகத் தொழில் தொடங்க போகிறேன் என்று கஸ்தூரியிடம் அவசரப்பட்டுச் சொல்லிட்டேன். இது எனக்குச் சரி வருமா? என்னைப்போல் மனுஷன் தொழில் தொடங்குவது லேசான காரியமா? கையில் எதுவும் காசும் இல்லை. இதற்கு யாரிடம் பணம் கேட்பது. இந்தக் காலத்தில வட்டிக்குப் பணம் கேட்டால் கூடத் தருவதற்கு யாரும் இல்லை. என்ன செய்வது தொழில் தொடங்க வேண்டுமென்றால் ஒரு லட்சமாவது கையிருப்புத் தேவைப்படும்.
நமக்குத் தெரிந்த ஒரே ஆளு அந்தச் சுப்பையா தான். இப்பதான் அவன் பொண்ணுக்குச் சீமந்தம் வேற முடிச்சான். இப்போ போய்க் காசு கேட்டா இல்லன்னுதான் சொல்லுவான், சரி அதிக வட்டிக்குப் பணம் தர கோவிந்தனை போய்க் கேட்டுப் பார்ப்போம். அவர்தான் மூணு பைசா வட்டிக்குப் பணத்தை வாரி கொடுப்பான் அவனவிட்டா இப்போதைக்கு நமக்கு உதவி செய்ய யாரும் இல்ல’ என்று எண்ணிக்கொண்டே தனது வேலையில் மூழ்கினான், சதாசிவம்.
அந்த நேரத்தில் பார்த்து, தொழிற் சாலையில் வேலை பார்க்கும் ஒருவர். தகரத்தில் தனது கையைக் கிழித்துக்கொண்டு ரத்தம் வடிய வலியால் துடி துடித்துக் கொண்டிருந்தான்.
இதைக் கவனித்த முதலாளி குமார், அவனிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அது சதாசிவம் காதில் கொஞ்சம் கூட விழவேயில்லை. அவன் பெரும் யோசனையுடன் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“தம்பி ஒரு வேலைய செய்யும்போது அந்த வேலையிலேயே கவனம் செலுத்தனும். இல்லைன்னு வெச்சுக்கோ இப்படித்தான் அசம்பாவிதம் ஏதாவது நடக்கும். பொருள் போனா பரவாயில்லை வாங்கிக்கலாம். உயிர் போன உன்னோட குடும்பத்த யார் பார்த்துப்பா?. செய்யிற வேலைய கவனமா செய்யக் கத்துக்க” என்று கூறிக்கொண்டே தனது பாக்கெட்டில் இருந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டு.
“சீக்கிரம் ஆஸ்பத்திரிக்குப் கூட்டிட்டு போங்க” என்று பக்கத்தில் இருந்த சக ஊழியர்களைக் கோபமாக அதட்டினார்.
முதலாளி சத்தம் போடுவதைத் திடீரெனக் கவனித்த சதாசிவத்திற்கு அப்போதுதான் சுய உணர்வே வந்தது. அங்கு நடந்து கொண்டிருந்த காட்சியையும் கவனிக்கத் தொடங்கினான்.
‘இவ்வளவு நல்லவர் கிட்ட இந்த விஷயத்தை நான் சொல்லாம மறைச்சிட்டேன்.
ச்சீ… இத்தனை வருஷமா இந்தத் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறோம். இவர் குணம் நமக்குத் தெரியாதா?. இதப்பத்தி இவர் கிட்ட சொல்லாம விட்டா எப்படி? சரி இதப்பத்தி இப்பவே சொல்றதுதான் நல்லது’ என்ற எண்ணம் திடீரென அவனுக்குள் ஏற்பட்டது.
அந்த ஊழியனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு குமார் அவருக்குரிய இருப்பிடத்தில் வந்து அமர்ந்தர்.
சதாசிவம், தயங்கிக்கொண்டே மெல்ல அவர் இருந்த இடத்திற்கு வந்தான்.
“உனக்கு என்னடா…? என்று முதலாளி கேட்க.
“முதலாளி, உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லன்னும். சொன்னா கோவிச்சிக்க மாட்டிங்களே?”
“சொல்லுடா, உனக்கு என்ன?” என்றார்.
“முதலாளி நான் பத்து வருஷமா உங்கக்கிட்ட வேலை செய்யுறேன்” என்று பேச்சை ஆரம்பித்தான்.
“அதற்கென்ன நேரா விஷயத்துக்கு வா?” என்றார், குமார்.
“முதலாளி, நான் தனி மனிதனா இருந்த வரைக்கும் நீங்க கொடுக்குற சம்பளம் எனக்குச் சரியாகத்தான் இருந்தது. ஆனா, இப்ப அப்படி இல்லை. குடும்பம் குட்டின்னு ஆயிடுச்சு. விக்கிற விலைவாசிக்கு இப்ப எதையும் சமாளிக்கவே முடியல, முதலாளி.
இந்த இடத்தை விட்டு வெளியே போய்ப் புதுசா ஒரு தொழில் தொடங்களான்னு முடிவு செய்திருக்கேன்” என்றான் வருத்தத்துடன் அழுதுகொண்டே
“என்ன மன்னிச்சிடுங்க முதலாளி…” என்று குமார் காலில் திடீரென விழுந்தான், சதாசிவம்.
“மடையா முதல்ல, எழுந்திரு ஒரு மனுஷனா உனக்கு இப்பதான் அறிவு வந்திருக்கு. அதுக்கு ஏன்டா இப்படி அழற” என்றார், குமார்.
சதாசிவம், அவருடைய சொல்லை ஏற்றுத் தனது கண்களைத் துடைத்துக்கொண்டே மெல்ல எழுந்தான்.
“சரிடா தம்பி, புதுசா தொழில் தொடங்கப் போறேன்னு சொன்னா என்ன தொழில்…?”
“முதலாளி, இந்த இரும்பு அடிக்கிற வேலையை விட்டா எனக்கு வேற எதுவும் தெரியாது. அதனால திண்டுக்கல்ல இருந்து சரக்கு எடுத்துட்டு வந்து இங்க விற்பனை செய்யலாமுன்னு இருக்கேன்” என்றான்.
ஒரு முறை சதாசிவத்தை ஆனந்தமாகப் பார்த்தார், குமார்.
“சதாசிவம், நீ எடுத்திருக்க முடிவு ரொம்ப நல்லதுக்கு. நம்ம சுத்து வட்டாரத்துல அலுமினிய தகடும் சரி, பித்தளை பாத்திரம் தகடும் சரி வாங்கிட்டு வரணும்னா திண்டுக்கல் வர போக வேண்டியிருக்கும். இப்ப நீ எடுத்து இருக்க முயற்சியாள நமக்கும் நம்மைச் சுற்றி இருக்கும் வியாபாரிகளுக்கும் நன்மையாய் இருக்கும். ரொம்ப நல்ல விஷயம் கூட” என்று சதாசிவம் தோள்பட்டையை ஆனந்தமாகப் பிடித்தார், குமார்.
“முதலாளி, நீங்க வேற ஏதாவது சொல்லுவீங்கனு நெனச்சேன். ஆனா, உங்க மனசு, வேற யாருக்கும் வராது” என்று சதாசிவம் மீண்டும் குமார் கையைப் பிடித்துக் கும்பிட்டான்.
“ஆமா, இந்தக் கடையைத் தொடங்க பெரிய தொகையா தேவைப்படுமே அதுக்கு நீ என்ன செய்யப் போற?”
“கஸ்தூரி கிட்ட கொஞ்சம் நகை இருக்குன்னு சொன்னா. வெளியே கொஞ்சம் கடன் வாங்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன் முதலாளி” என்றான் சதாசிவம்.
குமாருக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.
“சதாசிவம், கடன் எல்லாம் வெளிய வாங்காத, எனக்குத் தெரிஞ்ச பேங்க் மேனேஜர் ஒருத்தர் இருக்காரு. வேணும்னா, நாம அவர்கிட்ட போய் உதவி கேட்டுப் பார்ப்போம். ஞாயிற்றுக்கிழமை ரெடியாயிரு” என்றார் சர்ரென்று, குமார்.
‘இந்த உலகத்தில் எந்த ஒரு முதலாளியும், ஒரு தொழிலாளியை உயர விடமாட்டான் என்பது ஒரு இலக்கணம். இவர் என்ன அதற்கு நேர்மறையாக இருக்கிறாரே” என்று நினைக்கத் தோன்றியது, சதாசிவத்திற்கு.
“ரொம்ப நன்றிங்க முதலாளி” என்று மீண்டும் கை எடுத்து கும்பிட்டான், சதாசிவம்.
“சரி, போய் வேலைய பாரு… மத்த விஷயத்தைப் பிறகு பேசிக்கலாம்” என்றார், குமார்.
எண்ணிய வேலை இப்படி எளிதாக முடிகிறது என்ற மன மகிழ்ச்சியில் தான் வேலை செய்யும் இடத்திற்குச் சென்றான், சதாசிவம்.
6 Comments
Good Story keep it up
நன்றி தொடர்ந்து படியுங்கள்!
Your story very nice and interesting keep it up and congratulations
நன்றி தொடர்ந்து படியுங்கள்!
அருமை வாழ்த்துக்கள்
நன்றி தொடர்ந்து படியுங்கள்!