கல்லூரி வாசல் சிறுகதை | கோகுல்

 கல்லூரி வாசல் சிறுகதை | கோகுல்

காலை பத்து மணி.

வாசலில் ஹாரன் சப்தம், காதை கிழித்தது. சுரேஷ், வீட்டினுள் இருந்து எட்டிப் பார்த்தான். ஹரி, பைக்கில் இருந்தவாறே கேட்டான், “என்னடா இன்னும் ரெடியாகலையா?”

“இதோ ரெண்டே நிமிஷம்னா, வந்துடுறேன்!” சுரேஷ், பதில் சொல்லிக்கொண்டே வெளியே வந்து, வீட்டைப் பூட்டினான்.

சுரேஷ் வந்து பைக்கில் ஏறியதும், ஹரி ஆக்ஸிலேட்டரைத் முறுக்க, அந்தச் சின்ன கிராமத்தின் சந்துப் பொந்துகளில் எல்லாம் வண்டி சீறிப்பாய ஆரம்பித்தது.

ஹரி, அந்த கிராமத்திற்கு அருகிலேயே, சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவன். சுரேஷ், இந்த வருடம் தான் +2வில் 97 பர்சென்டேஜ்டுடன் பாஸ் செய்திருந்தான்.

“அண்ணா, பத்து மணிக்கெல்லாம் காலேஜ்க்கு போய்டலாம்ல?”, ஹரியின் தோளைப் பிடித்து அழுத்திக் கொண்டே கேட்டான், சுரேஷ்.

“டேய், என்ன விளையாடுறியா? நீ வீட்டுல கெளம்பும்போதே, மணி பத்தாயிடுச்சு!”

“அச்சச்சோ, முதல் நாளே லேட்டாகிடுச்சே!”

“நானே, லேட்டாகிடுச்சின்னு ஃபீல் பண்ணலை. நீ ஏன்டா, ஓவரா பண்ணுற?”

“என்ன இருந்தாலும், முதல் நாளே லேட்டா போறது, ஒரு மாதிரி இருக்கு!”

“சரி, சரி! ரொம்பப் பண்ணாத, டாபிக்க மாத்து!”, கியரை மாற்றிக்கொண்டே சொன்னான், ஹரி.

“ரொம்ப நாளாக உங்களை கேட்கணும்னு நெனச்சிட்டு இருந்தேன் அண்ணா…”

“டேய்! கடன் மட்டும் கேட்டுடாத, வேற என்ன வேணா கேளு!”

“அட அது இல்லேண்ணா! நம்ம காலேஜ்ல ரேகிங்லாம் இருக்கா…?”

“ரேகிங் இல்லாத காலேஜ் இருக்கா?, நானே பண்ணுவேன், பாக்குறியா?”

“…..”

“என்னடா, பதிலையே காணும், கவலைப் படாதே! உன்னை எவனும் ஒன்னும் செய்ய மாட்டானுங்க!”

“சும்மாதான் அண்ணா, கேட்டேன்!”

“சரி, உன் தங்கச்சி எங்க? கொஞ்சநாளா பார்க்கவே முடியலை…?”

“ஹாஸ்டல்ல சேர்த்தாச்சி அண்ணா!”

“ஓ! சரி, சரி!”நானும் உன்னைக் கேட்கணும்னு நெனைச்சிட்டு இருந்தேன், மறந்துட்டேன்!”

“என்ன, கடன் வேணுமாண்ணா…?”

“அட! இதப்பாருடா, காமெடி! ஆனா, சிரிப்புத்தான் வரலை! நீ மேத்ஸ்ல சென்டம் தானே?”

“ஆமாண்ணா!, மேத்ஸ், பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மூணு சப்ஜெக்ட்லயும் சென்டம்….!

“ஹ்ம்ம்! உன் மார்க்குக்கெல்லாம், மெடிக்கல் சீட்டே வீடுத் தேடி வந்துருக்கணும்…. எல்லாம் நேரம்!”

“உண்மைதான் அண்ணா! எனக்கும், எம்பிபிஎஸ் படிக்கணும்ன்னு தான் ஆசை! ஆனா, விதி வலியது!”

பேசிக்கொண்டிருக்கும் போதே, பைக் கல்லூரி வளாகத்தினுள் நுழைந்தது. ஆங்காங்கே, சீனியர் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை, ‘ரேகிங்’ செய்து கொண்டிருந்தனர்.

“சுரேஷ்!”

“சொல்லுங்கண்ணா!”

“ரேகிங் இருக்கான்னு கேட்டியே, பாத்தியா?

“ஹ்ம்ம்!”

“நீ ஏன்டா, டல் ஆகுற? உன்னை யாரும் டீஸ் பண்ண மாட்டாங்க… பயப்படாம வா!”

இரண்டு, மூன்று பிரமாண்டமான கட்டிடங்களைக் தாண்டி, பைக்கை, கம்ப்யூட்டர் சயின்ஸ் ப்ளாக்கில் உள்ள, டூவீலர் பார்க்கிங்கில் நிறுத்தினான், ஹரி.

“நீ இன்னைக்குத் தான், பர்ஸ்ட் டைம் வர இல்லையா?”

“ஆமாண்ணா!”

“எப்படி இருக்கு காலேஜ்?”

“ஹ்ம்ம், சூப்பர்ணா!

“லெப்ட் சைட்ல இருக்குறது தான், பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸோட ப்ளாக்!”

“ஹ்ம்ம்! பசங்க முகத்தைப் பார்த்தே கண்டுபிடிச்சிட்டேன்!”

“சரி! லேட் ஆகுது! பர்ஸ்ட் நாம கேண்ட்டீன்க்கு போகலாம், வா!”

ஹரி முன்னால் நடக்க, அந்த பர்ஸ்ட் இயர் ப்ளாக்கையே, திரும்ப திரும்ப பார்த்தவாறு, அவனை பின் தொடர்ந்தான், சுரேஷ்.

சுற்றிலும் மரங்கள் சூழ, இயற்கையான சூழலில் அமைந்திருந்தது, அந்தக் கேண்ட்டீன்.

“சுரேஷ்! காபி சாப்பிடுறியா?”

“இல்லைண்ணா! எதுவும் வேண்டாம்…”

“சும்மா சாப்பிடு! நாளையில் இருந்து, நீ தான் என்னைக் கவனிச்சிக்கப் போற…!”

வேகமாகச் சென்று, இரண்டு கப், காபி வாங்கி வந்தான், ஹரி.

சுரேஷ் காபியை குடித்துக் கொண்டு இருக்கும் போதே, அருகில் வந்தார், அந்த கேண்ட்டீன் மேனேஜர்.

“அண்ணா, நான் சொன்னேன்ல, என் ப்ரெண்ட் சுரேஷ், இவன் தான், என்று அறிமுகப்படுத்தினான், ஹரி.

“உங்க அப்பா, அம்மா தானே…..” சுரேஷைப் பார்த்து கேண்ட்டீன் மேனேஜர், ஏதோ கேட்கத் தொடங்க, அவரை இடைமறித்தான், ஹரி.

“ஆமாம்ணே! மூணு மாசம் முன்னாடி நடந்த பஸ் ஆக்ஸிடென்ட்ல ஸ்பாட்லயே, இவனோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே, இறந்து போயிட்டாங்க! இந்தக் கஷ்டத்துக்கு நடுவுலயும் படிச்சி, +12ல 97 பர்ஸெண்ட் மார்க் எடுத்திருக்கான்!”

டாக்டருக்கு படிக்க வேண்டிய பையன், இவங்க அப்பா வாங்கி வச்சிருக்க ஹோம் லோனைக் கட்டவும், தன் ஒரே தங்கச்சியை படிக்க வைக்கவும், தன் கனவைத் தியாகம் பண்ணிட்டு, இங்க கேண்ட்டீன்ல க்ளாஸ் கழுவ வந்திருக்கான்!” நிலைமை மாறும், நிச்சயம் நாளைக்கு அவன் பெரிய ஆளாக வருவான், இப்போதைக்கு இந்த வேலை “டெம்ப்ரரி”தான். சரி இவனை பார்த்துக்குங்க! எனக்கு க்ளாஸ்க்கு டைம் ஆச்சு, உன்னை அப்புறம் பார்க்குறேன், சுரேஷ்” என்றவாறு கிளம்பினான் ஹரி.

கஸ்டமராய் கேண்ட்டினில் நுழைந்தவன், தான் குடித்த க்ளாஸையே எடுத்துச் சென்றான் கழுவ, கண்ணீருடன்…

கமலகண்ணன்

2 Comments

  • கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை.
    கஸ்டமராய் கேண்ட்டினில் நுழைந்தவன், தான் குடித்த க்ளாஸையே எடுத்துச் சென்றான் கழுவ, கண்ணீருடன்…
    எதிர் பாராத முடிவு.
    வாழ்த்துகள்.
    ஜூனியர் தேஜ்

    • தங்களின் விமர்சனத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...