நகைச்சுவை சிறுகதைப் போட்டி | 3ம் பரிசுக் கதை!

 நகைச்சுவை சிறுகதைப் போட்டி | 3ம் பரிசுக் கதை!

(கண்)காட்சிப் பிழை!

சாய்ரேணு

1.1 ஒரு முன்னுரை

“ஹலோ, போலீஸ் கமிஷனர் பேசறேன். யாரு டிஎஸ்பியா பேசறது?”

‘டிஸ்பி மொபைல் ஃபோனில் டிஎஸ்பி தான் பேசுவார், எஸ்பிபியா பாடுவார்?” என்று மனதிற்குள் அலுத்துக் கொண்ட டிஎஸ்பி “எஸ் சார்” என்றார் பவ்யமாக.

“ஒரு வாரத்திற்கு முன்னாடி நுங்கம்பாகத்திலே பெரிய திருட்டு நடந்ததில்லையா? அந்தத் திருடங்க இன்றைக்கு மாலை கண்காட்சி நடக்கற இடத்திற்கு வராங்களாம்! இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு.”

“அடடா! உங்களுக்கு யாரோ தப்பா இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்காங்க சார். அது திருடர்கள் கண்காட்சி இல்லை, திருவிழா கண்காட்சி!”

“உன்னையெல்லாம் எவன் டிஎஸ்பியா போட்டான்?”

“நீங்கதான் சார்!”

“அடச்சே! சொல்றதைக் கேட்டுத் தொலை. திருடங்க கண்காட்சியில் கூடி, கொள்ளையடிச்ச நகைகளையெல்லாம் யாருக்கும் தெரியாம அவங்க தலைவன் கிட்ட சேர்க்கப் போறாங்களாம். அந்தத் தலைவனைப் பிடிச்சுட்டா அந்த க்ரூப்பை, திருட்டு நகைகளை வெளிநாட்டில் விற்கற வியாபாரிகளைன்னு எல்லாரையும் பிடிச்சுடலாம். அப்படியே அந்த நகைகளையும் மீட்கணும்.”

“எஸ் சார்! அதை நீங்க எப்படி சார் பண்ணப் போறீங்க?”

“இடியட்! நீதான்யா இதையெல்லாம் பண்ணணும்! நான் உனக்குக் கொடுக்கற அசைன்மெண்ட் இது, புரிஞ்சுதா?”

அன்று லீவ் எடுக்கலாம் என்று எண்ணியிருந்த டிஎஸ்பி கமிஷனரை மனதிற்குள் சபித்துக் கொண்டு மேலதிகாரிகள் முன்னால் எப்போதும் ஓதும் மந்திரமான “எஸ் சார்” என்பதை உதிர்த்து, காலைக் கட் பண்ணினார்.

1.2

“ஏன்னா, தேர்தல் கணிப்புகள் ஒவ்வொரு யூடியூப் சானலும் என்ன சொல்றதுன்னு மனப்பாடம் பண்ணலைன்னு யார் அழுதா இப்போ? சின்னக் குழந்தை அழறான், சமாதானப்படுத்துங்களேன் சித்தே!” என்று சமையலறையிலிருந்து உத்தரவு போட்டாள் விசாலி.

“ஏன், நீங்க பொண்டுகள் எல்லாரும் என்ன வெட்டி முறிக்கறேள்? நீங்க சமாதானப்படுத்தறது!” என்றார் பஞ்சாபகேசன், ராக்கிங் நாற்காலியிலிருந்து அசையாமல்.

சமையலறையிலிருந்து விசாலி பத்ரகாளிக் கோபத்தோடு வந்து நின்றாள். “என்ன வெட்டி முறிக்கறோமா? இந்தக் கொரொனா காலம் வந்தாலும் வந்தது, நீங்கள்ளாம் ஒரு கடை கண்ணிக்குக் கூடப் போறது கிடையாது. காய்கறி ஆன்லைன்ல ஆர்டர் பண்ணக் கூடச் சோம்பல். டோர் டெலிவரி ஆன காயை யார் உப்பும் மஞ்சள்பொடியும் போட்டு அலம்புவா? யார் துணியில் பரப்பிக் காய வைப்பா? யார் காயைத் தனித்தனிப் பையில் போட்டு ஃப்ரிட்ஜில் வைப்பா? வேற வேலை ஒண்ணும் செய்யலைன்னாலும், இந்தக் காயையாவது எடுத்துவைங்கோன்னு நேற்றே சொன்னேன். இருக்கற இடத்தை விட்டு அசையறதே கிடையாது! அந்த ராக்கிங் சேர் ஆடறதுதான் ஒரே எக்ஸர்சைஸ்! அட் லீஸ்ட், காய்கறிப் பை கனமா இருக்கறதை உள்ளே கொண்டுவந்தாவது வைக்கலாமோல்லியோ!” என்று பொறுமித் தீர்த்தாள்.

“சரிதாண்டி! காய், காய்னு காய்ச்சாதே! அதுக்கு உள்ளே போய் எனக்கு இரண்டாவது டோஸ் காப்பிக்குப் பாலைக் காய்ச்சலாம்!” என்று அவள் கோபத்துக்கு அணைகட்ட முயன்றார் பஞ்சு.

“போய்ப் பேரனைச் சமாதானப்படுத்துங்கோ, அப்பதான் காப்பி!” என்று உறுமிவிட்டு உள்ளே போய்விட்டாள் விசாலிப் பாட்டி.

தலையெழுத்தே என்று ராக்கிங் சேரிலிருந்து இறங்கி, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார் பஞ்சு. அங்கே ரகவாரியாக இருந்த ஆறு டிக்கெட்களும் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் கேட்கும் சப்த ஜாலங்களை முறியடிக்கும் அளவிற்கு விதவிதமாகக் கூவிக் கொண்டிருந்தன. இந்த அலப்பறைக்கு இடையில் சின்னக் குழந்தை எங்கே என்று தேடினார் பஞ்சு. ஒரு மூலையில் ஸ்டேஷனிலிருந்து ரயில் ஒன்று கிளம்புகிற மாதிரி ‘கூ’ என்று சப்தம் வரவே, அங்கேதான் சின்னக் குழந்தை ஸ்ரீதர் கத்துகிறான் என்று தன் தீர்க்கமான அறிவின்மூலம் கண்டுகொண்டு, மழலைப் பட்டாளத்தைப் பிளந்துகொண்டு அவ்விடத்தை அடைந்தார்.

“எஜ்ஜிபிஜ்ஜி!! எஜ்ஜிபிஜ்ஜீ!!!” என்று அலறிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

“என்னடா ஆச்சு உனக்கு? பஜ்ஜி வேணுமா?” என்றார் அவன் பாஷையை மொழிபெயர்க்க முயன்று.

“இல்லே தாத்தா! அவனுக்கு எக்ஸிபிஷன் போகணுமாம்!” என்றது ஒரு பத்து வயது.

“என்னது! எக்ஸிபிஷனா! அதுவும் இந்தக் காலத்திலா! நத்திங் டூயிங்!” என்றார் பஞ்சு.

பேச்சே இன்னும் சரியாக வராத அந்த ஸ்ரீதருக்குத் தாத்தா தான் கேட்டதை மறுக்கிறார் என்று மட்டும் சரியாக புரிந்துவிட, ரயில் சத்தத்திலிருந்து ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்திற்கு மாறினான். கூட மற்ற குழந்தைகளும் “எக்ஸிபிஷன்!” என்று கத்தித் தீர்த்தனர்.

“என்னடா ஒரே ரகளை” என்றவாறே பஞ்சுவின் மூத்த மகன் சுந்தர் பிரசன்னமானான்.

“அப்பா! புதுசா எக்ஸிபிஷன் வந்திருக்கோ இல்லையோ, அதுக்கு எல்லாரும் போகணும்னு ஆசைப்படறா” என்று பவ்யமாக, தனக்கு அதற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் பெரிய பெண் மானஸி தெரிவித்தாள்.

(எல்லாக் குழந்தைகளையும் கிளப்பி விட்டவளே அவள்தான் என்பதில் பஞ்சுவுக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது!)

“என்னது? அதுக்கு நாங்க பெரியவாள்ளாம் போகப் போறோம். நீங்கள்ளாம் வர முடியாது. இந்த கொரோனா டைம்ல வெளில போறதாவது!” என்றான் சுந்தர்.

“பின்னே! இந்த கொரோனா டைம்ல தேர்தல் கூட்டங்கள் நடத்தலாம், எக்ஸிபிஷன் நடத்தலாம், ரிஸ்க் அதிகமான பெரியவாள்ளாம் அதற்குப் போகலாம், நாங்க மட்டும் வரக் கூடாது” என்று முணுமுணுத்தான் ஒரு வாண்டு.

“கொரோனா இல்லாத டைம்ல என்னவோ தினமும் வெளியே கூட்டிக் கொண்டு போயிட்ட மாதிரி” என்று ஒத்து ஊதினான் பஞ்சுவின் பெண்ணின் மகனான அஸ்வின்.

“சுப்பு பெற்ற சுப்பா! சும்மா இரேண்டா!” என்று உறுமினார் பஞ்சு. “குழந்தைகளும் போகப் போறதில்லை. நான் பெற்ற இந்த கடாக்களும் போகப் போறதில்லை!”

“ஏன் போகப் போறதில்லை?” – மறுபடி காளியன்னை விசாலியின் ரூபத்தில் சமையலறையிலிருந்து பிரசன்னமானாள். “எல்லா புகழ்பெற்ற ஜவுளி பிராண்ட்களும் தங்கள் ஸ்டால்களைப் போட்டிருக்கா. நிறைய டிஸ்கவுண்ட் எல்லாம் அறிவிச்சிருக்கா. போகாம இருக்கறதாவது? கொரோனா டைம்மா இருந்தா என்ன? மாஸ்க் போட்டு டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணிக்கலாம். நாங்க எல்லோரும் போயிட்டு வரோம். நீங்க குழந்தைகளைப் பார்த்துண்டு ஆத்தில் இருங்கோ” என்றாள் உறுதியாக.

இதற்குப் பஞ்சுவிடம் எந்த ஆட்சேபணையுமில்லை. குழந்தைகள் எங்கேயாவது கத்திக் கொண்டிருக்க, இவர் பாட்டுக்கு யூடியூபை அலசலாம். ஏற்கெனவே ராக்கிங் சேர் அவரை அன்புடன் அழைக்கிற மாதிரி அவருக்குத் தோன்றிவிட்டது.

ஆனால் குழந்தைகள் கூட்டணி அமைத்து ஆளுங்கட்சியை எதிர்த்தன. விதவிதமான பரப்புரைகள் பேசப்பட்டன. கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரான ஸ்ரீதரின் “எஜ்ஜிபிஜ்ஜி! எஜ்ஜிபிஜ்ஜி!” என்ற கோஷம் பலத்த ஆதரவைப் பெற்றது. ஆளுங்கட்சி பணிந்தது. அன்று எல்லோருமாக “எஜ்ஜிபிஜ்ஜி”க்குப் போவதாக ஏகமனதாகத் தீர்மானிக்கப் பெற்றது.

1.3

கண்காட்சியைக் கண்டு வியந்து போனார் பஞ்சு. என்ன கூட்டம்! தேர்க் கூட்டம், திருவிழாக் கூட்டம்! பக்கத்தில் பாப்கார்ன் விற்றவனைப் பார்த்து “ஏம்ப்பா! மாஸ்க் போடலியா?” என்று கேட்டார்.

“பேஸ்க்கிட்டாங்க போடணும்னு” என்று அவன் எதுகையில் பதிலளித்தான். “ஆரும் போடலே! நாம மாத்திரம் எதுக்குப் போடணும் முகமூடிக் கொள்ளைக்காரன் கணக்கா!” என்று விளக்கமளித்தான்.

பஞ்சுவின் மூத்த மகன் சுந்தர், இரண்டாம் மகன் சுரேஷ், மகள் சுப்பு ஆகியோரும் மாப்பிள்ளை மருமகள்களும் ஸ்டால்களை நோக்கிப் போருக்குப் போவதுபோல் அணிவகுத்து முன்னேறினார்கள்.

“அப்பா! பாப்கார்ன் வாங்கித் தாப்பா” என்று அஞ்சனும் அஸ்வினும் சுரேஷின் கையைப் பிடித்து இழுத்து அவர்கள் முன்னேற்றத்திற்குத் தடைபோட்டார்கள்.

“இந்த வெய்யில்ல பாப்கார்னா? ஐஸ்க்ரீம் வாங்கலாம்” என்று குரலை உயர்த்தாமல் தன் கருத்தை உறுதியாகத் தெரிவித்தாள் மானஸி.

“பேசாம இருடி!” என்றாள் விசாலிப் பாட்டி. “வெளியில் வாங்கிச் சாப்பிடறதாவது? நான் எல்லோருக்கும் தோசை வார்த்துக் கொண்டுவந்திருக்கேன். எங்கேயாவது பெட்ஷீட்டை விரிடா சுந்து. எல்லோருக்கும் போட்டுத் தரேன்…”

“ஏம்மா! வீட்டில்தான் உன் தோசைகிட்டயிருந்து தப்பிக்க முடியலை, இங்கேயுமா? வெளியில் வந்தா வெளியிலேயேதான் சாப்பாடு எல்லாம் பார்த்துக்கணும்” என்றான் சுரேஷ்.

“சொல்ல மாட்டியோ? நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம்னு எகிறிண்டு போறதே கொரோனான்னு, குழந்தைகளுக்காக அடுப்படியில் வெந்து தோசையை வார்த்துண்டு வந்தா பேச மாட்டியோ நீ?” என்றாள் விசாலி சூடாக.

“யாராவது இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கோ. அடுப்படியில் வெந்தது அம்மாவா, தோசையா?” என்றான் சுந்தர்.

“பெரிய க்விஸ் மாஸ்டர்! கேட்டுட்டான்!” என்றாள் சுப்பு.

“ஆமா, கேள்விக்குப் பதில் சொன்னா ஒரு ஐஸ்க்ரீம். சொல்லாதவா எல்லாருக்கும் அம்மாவோட தோசைதான்” என்றான் சுந்தர்.

“பேசாம இருங்கோளேன். எப்போ பார்த்தாலும் அம்மாவைக் கோட்டா பண்ணிண்டு” என்றாள் சுந்தரின் மனைவி அனு.

“என்னத்துக்கு இப்போ அம்மாவுக்குச் சேர்ந்துண்டு வரே? நைஸா ஆத்துக்குப் போனதும் நைட் சமையலை அம்மாகிட்டத் தள்ளிடலாம்னா?” என்றான் சுந்தர்.

“நன்னாயிருக்கு, மன்னியும் இவளும் என்னிக்குச் சமையல் பண்ணினா இன்னிக்குப் பண்றதுக்கு? எல்லாம் அம்மாதான், சுற்றுக் காரியம் செய்யறோம்னு சொல்லிண்டு கிச்சனைச் சுற்றிச் சுற்றி வந்துடுவா, அவ்வளவுதான்” என்று உண்மையைப் போட்டு உடைத்தான் சுரேஷ்.

“ஓ! இங்கேயும் அப்படித்தானா?” என்று கேட்டுவிட்டு மாப்பிள்ளை சுப்புவிடம் ஒரு கிள்ளு வாங்கினார்.

“சரிதாண்டா சரிதான்! உங்க அப்பா எங்கேன்னு பாருங்கோ! ரொம்ப நேரமா அவர் சத்தத்தையே காணும்” என்றாள் விசாலி.

எல்லோரும் சுற்றுமுற்றும் பஞ்சுவைத் தேடியபோது, இரண்டு குழந்தைகள் புடைசூழ, ஒரு கையில் ஸ்ரீதரை இடுக்கிக் கொண்டு, இன்னொரு கையில் வறுத்த சோளத்தட்டைகள் கொண்ட பேப்பரைத் தாங்கிக் கொண்டு வெற்றிகண்ட வீரன்போல் கம்பீரமாக நடந்து வந்துகொண்டிருந்தார் பஞ்சு.

1.4

“இந்தாங்கோ குழந்தைகளா, ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்கோங்கோ!” என்றார் பஞ்சு அருகில் வந்ததும்.

“அப்பாவைப் பார்த்தியோன்னோ! இங்கே நாம எல்லோரும் அம்மாவோட தோசையிலிருந்து தப்பிக்க ட்ரை பண்ணிண்டிருக்கோம், சூப்பர் வழி கண்டுபிடிச்சுட்டார்” என்றான் சுந்தர்.

“என்ன அப்ஸர்வேஷன்! கரெக்டா சோளத் தட்டைக்காரனைப் பிடிச்சுட்டார் பார்!” என்றான் சுரேஷ்.

“என்னடா கிண்டல்? உப்பு, மிளகுபொடி எல்லாம் போட்டது, உடம்புக்கு ரொம்ப நல்லது” என்றார் பஞ்சாபகேசன்.

“அம்மா தோசையைவிட” என்றாள் சுப்பு.

“இரு, தோசை வாங்குவ நீ பாட்டிகிட்ட” என்று எச்சரித்தது சின்னப் பெண்.

“சரிசரி, டேய் வானரப் படைகளா! பாட்டி, தாத்தாவைப் படுத்தாமச் சுற்றிப் பார்த்துண்டு இருங்கோ! நாங்க ஸ்டாலுக்குள்ள போயிட்டு வந்துடறோம்” என்று சொல்லிவிட்டு ஸ்டால்களை நோக்கித் தப்பித்து ஓடாத குறையாகப் பாய்ந்தார்கள் பஞ்சுவின் வாரிசுகள்.

1.5

பேரக் குழந்தைகள் எக்ஸிபிஷனைத் துவம்சம் பண்ணின. விசாலி அவர்களைச் சமாளிக்க முடியாமல் தவித்தாள்.

பஞ்சு சுற்றுமுற்றும் நோட்டம் விட்டார். கண்காட்சிக்கு அவர் வந்ததே ஒரு முக்கியமான ஆளைத் தேடித்தான்.

“மாங்கா பத்தை வேணுமா சார்?” என்றவாறே அருகில் வந்தவனிடம் “பஞ்சுமிட்டாய்க்காரன் எங்கே இருக்கிறான்?” என்று ரகசியமாக விசாரித்தார். விசாலியின் காதில் விழுந்துவிடக் கூடாதே!

“ஏன் அவனைத் தேடறே நீ?” என்று சந்தேகமாகக் கேட்டான் அவன்.

“வேற எதுக்குத் தேடுவாங்க? பஞ்சுமிட்டாய் வாங்கத்தான்” என்றார் பஞ்சு.

அவர் முகத்தில் வடிந்த அசட்டைப் பார்த்ததும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. “சரிசரி, அவருதான் எங்க வாத்தியாரு. அங்கே ஜெயண்ட்வீல் பக்கத்தில் இருப்பாரு பாரு” என்று சொல்லிவிட்டு விலகிப் போய்விட்டான்.

“ஏ மானஸி! தனியா எங்கேயும் போகாதே!” என்று விசாலி திட்டியது அவர் காதில் விழுந்தது.

“பாட்டி, எனக்கு ஹேண்ட்பேக் பார்க்கணும்” என்று மானஸி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

எப்படி இவர்கள் யாரும் கவனிக்காமல் ஜெயண்ட்வீல் பக்கம் நகர்வது என்று பஞ்சு யோசித்துக் கொண்டிருக்கையில், “தாத்தா, ஐஸ்க்ரீம்!” என்று அஸ்வினும் அஞ்சனும் அவர் சட்டையைப் பிடித்து இழுத்தார்கள்.

“டேய், விடுங்கடா!” என்று பஞ்சு அவர்களை அடக்கியவாறே நகர முயன்றார்.

“புள்ளைங்க ஆசையாகக் கேட்குது, வாங்கிக் கொடேன் ஐயரே” என்றான் ஐஸ்க்ரீம்காரன்.

“சும்மா இருப்பா. சளி வந்தா நீயா வந்து கவனிப்ப? கொடுத்தேன்னா பாரு” என்று அவனை மிரட்டினார் பஞ்சு.

அதற்குள் “யோவ் ஐஸ்க்ரீம்! உன் வண்டியைப் பாருய்யா! கதை பேசிக்கிட்டு!’ என்று கத்தினார்கள் அங்கிருந்த சிறு வியாபாரிகள்.

ஆம், அஞ்சனும் அஸ்வினும் ஐஸ்க்ரீம் வாங்கித் தரப்படாது என்று உணர்ந்தவர்களாக ஐஸ்க்ரீம் வண்டியையே இழுத்துக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். பல்லக்கில் உட்கார்ந்திருக்கும் இளவரசன் மாதிரி ஸ்ரீதர் அதன்மேல் அமர்ந்திருந்தான். (இடையில் ஒரு கோன்-ஐஸை வேறு தட்டிவிட்டான் குறும்புக்காரன்! அதைச் செங்கோல் போல ஏந்திக் கொண்டிருந்தான்.) பின்னால் சேவகர்கள் போலப் பஞ்சுவின் பேத்திகள்.

விசாலியும் மானஸியும் அலறினார்கள். பஞ்சு தன் தபஸிலிருந்து வெளிவர வேண்டியிருந்தது. “டேய்! நில்லுங்கடா வானரங்களா!” என்று கத்திக் கொண்டு பின்னாலேயே ஓடி, அவர்களை ஒருவழியாகப் பிடித்துவிட்டார். அதற்குள் அங்கே மதுமிதாவுக்கும் அஸ்வினுக்கும் ஒரு சண்டை உருவாகியிருந்தது. இல்லாவிட்டால் அவர்களைப் பிடிக்க இன்னும் கஷ்டப்பட்டிருப்பார்.

“தாத்தா, ஐஸ்க்ரீம் உனக்கு, ப்ரேஸ்லெட் எனக்குன்னா ஒத்துக்க மாட்டேங்கறான் தாத்தா! ரெண்டும் எனக்குத்தான்ங்கறான்!” என்று மதுமிதா அலறினாள்.

“போடி! நாந்தானே வண்டியைத் தள்ளிண்டு வந்தேன்” என்று பதிலுக்குக் கூக்குரலிட்டான் அஸ்வின்.

“ப்ரேஸ்லெட்டா? அது எங்க வந்தது?” என்று வியந்தவாறே ஐஸ்க்ரீம் வண்டியைத் திறந்து பார்த்தார். ஐஸ்க்ரீம் கோன்களுக்கும் கப்களுக்கும் இடையில் ஆங்காங்கே உலோகம் பனிமூடித் தெரிந்தது. ஒன்றை எடுத்தார், தங்கச் சங்கிலி வெளியே வந்தது.

“கலக்கிட்டீங்க சார்!” என்ற சத்தம் கேட்டுப் பதறித் திரும்பினார் பஞ்சு. “திருட்டுப் பொருளைப் பசங்களை வெச்சே பிடிச்சுட்டீங்களே!” என்று பிரமிப்புடன் கூறினார் ஒரு கான்ஸ்டபிள். அவர் பிடியில் ஐஸ்க்ரீம்காரன் திணறிக் கொண்டிருந்தான்.

“சரிசரி! கான்ஸ்டபிள், நீ இவனையும் வண்டியையும் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோ! பிள்ளைகளை என் சம்சாரத்துகிட்ட விட்டுடு. நான் அர்ஜெண்டா பஞ்சுமிட்டாய்க்காரனைப் பார்க்கணும்” என்று சொல்லிவிட்டு அதுதான் சாக்கென்று ஜெயண்ட்வீலை நோக்கி ஓடினார் பஞ்சு.

பஞ்சுமிட்டாய்க்கடையை நெருங்கிவிட்டார். அப்போது மாங்காய்ப் பத்தைக்காரன் “அண்ணாத்தே! உசாரு! அவந்தான் நம்ம ஐஸ்க்ரீமைப் போலீஸில் மாட்டிவுட்டவன்” என்று உரத்த குரலில் சொல்ல, பஞ்சுமிட்டாய்க்காரன் வண்டியிலிருந்து துப்பாக்கியை எடுக்க, அதை ஒரு கை தட்டிவிட, அவனை ஒரு போலீஸ்படை சுற்றி வளைக்க, ஒரே ரகளையாகிவிட்டது.

1.6

“மிஸ்டர் சுந்தர்! உங்க அப்பா டிஎஸ்பி பஞ்சாபகேசன் ஒரு ஜீனியஸ்! அவர் ஒரு சிரிப்புப் போலீஸ்காரன்னு நினைச்சு எல்லாரும் ஏமாந்துடறாங்க! என்கிட்ட இன்று லீவுன்னு சொல்லிட்டு, மஃப்டில குடும்பத்தோட வந்து, யாருமே சந்தேகப்பட முடியாதபடி தந்திரமா நடந்துக்கிட்டு ஒரு கொள்ளைக் கும்பலையே பிடிச்சிட்டார்! எல்லோரும் சிறு வியாபாரிகள் வேஷத்தில் வந்திருக்காங்க! நாங்க இங்கே ஒரு போலீஸ்படையே சுற்றிக்கிட்டிருக்கோம், எங்களால் ஸ்மெல் பண்ண முடியாத விஷயத்தைக் கரெக்டா எப்படியோ ஸ்மெல் பண்ணி, இந்தப் பொய்க் காட்சியிலிருக்கும் பிழையைக் கண்டுபிடிச்சிருக்கார்” என்று சுந்தரின் கையைக் குலுக்கினார் போலீஸ் கமிஷனர்.

பெருமையோடு பஞ்சு, அதுதான் டிஎஸ்பி பஞ்சாபகேசன், எங்கே இருக்கிறார் என்று பார்த்தார்கள் குடும்பத்தினர்.

அவர் பஞ்சுமிட்டாய்க் கடையருகிலேயே காவல் காப்பவர்போல் நின்றுகொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஒரு நிருபர் கூட்டம் கேள்விகளை வீசிக் கொண்டிருந்தது. பஞ்சுமிட்டாயை மென்றவாறே அவர்களுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

“பெரிய சாகஸம் செய்திருக்கீங்க சார்! உங்களுக்கு ரோல் மாடல் யாரு? தங்கப்பதக்கம் சௌத்ரியா, மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனா, சிங்கம் துரைசிங்கமா?” என்று ஒரு முக்கிய வாரப் பத்திரிகை நிருபர் கேட்ட கேள்விக்கு மட்டும் அவர் பதிலளிக்கவில்லை. புன்னகைத்து மழுப்பிவிட்டார்.

ஆம், “இவர்கள் யாரும் இல்லை. துப்பறியும் சாம்பு!” என்று எப்படி உண்மையைச் சொல்வார் அவர்?

ganesh

2 Comments

  • சாம்புவை மறு உருவாக்கம் செய்ய சிறப்பாக முயற்சி செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  • Very humorous story. I had a good laugh after a long time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...