படைத்திறல் பல்லவர் கோன் – 1 | பத்மா சந்திரசேகர்
1 ஆலோசனை
சுக்லபட்ச சதுர்த்தசி சுக்கிரன் பூமிப்பெண்ணைக் காண எண்ணி சற்று விரைவாகவே உதித்திருந்தான். தங்கக்குழம்பை காய்ச்சி, வெள்ளிக் குழம்பில் கலந்து செய்த பெரும் வட்டில் போல, பொன்னும், வெள்ளியும் கலந்த நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தான்.
‘நகரேஷு காஞ்சி’ என பாரவியாலும், ‘கல்வியிற் கரையிலாக் காஞ்சி’ என அப்பர் பெருமானாலும் புகழ்ந்து பாடப்பட்ட காஞ்சி நகரத்தைப் பிரிந்து செல்லப் பிடிக்காமல் ஆதவன் தயங்கி நிற்க, அதுவரை பொறுமை காக்கவியலாமல் சுக்கிரன் விரைந்து வர, ஒரே நேரத்தில் மேற்கிலும், கிழக்கிலும் ஒளிவட்டங்கள் வெவ்வேறு நிறங்களில் தோன்றின.
இவையெல்லாம் தரும் ஒளி போதாதெனக் கருதிய அரண்மனைப் பணியாட்கள், தீவர்த்திகளை ஏற்றத் தொடங்கினர். அரண்மனைக்கு தீவர்த்தி தரும் பேரொளி தேவை, எங்கள் குடிலுக்கு தீபங்கள் தரும் மெல்லோளி போதுமென கருதிய பெண்கள், தங்கள் இல்லங்களை தீபங்கள் கொண்டு ஒளியேற்றி இருளகற்றினர்.
அரண்மனைக்குள் பரபரப்பு இருந்தபோதிலும், ஒருவித அமைதியும் நிலவியது. பேரரசர் நந்திவர்மரின் வருகைக்காக அரசவை காத்திருந்தது.
“இப்போது இந்த ஆலோசனை எதற்காக?” அமைச்சர் விக்கிரமர், சேனாதிபதி கோட்புலியாரைக் கேட்டார்.
“தெரியவில்லை கோட்புலியாரே*. அரசர் வரசொன்னதாக செய்தி வந்தது. வந்துள்ளோம். இந்த திடீர் ஆலோசனையின் காரணத்தை அரசர் நந்திவர்மரே தெளிவு படுத்த வேண்டும்”
அமைச்சரும், சேனைத் தலைவரும் அரசர் ஏன் அழைப்பு விடுத்தாரென ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், பல்லவ அரசர் நந்திவர்மர் தனது தனியறையில் இருந்தார். சில காலங்களுக்கு முன்னர் குறுகோடு என்னும் இடத்தில் நடந்த மாபெரும் போரில் வெற்றி பெற்று, தொண்டை நாட்டின் வட பகுதிகளைக் காத்துக்கொண்டதோடு அல்லாமல், தான் இராஷ்டிரகூடருக்கு அடங்கியவன் அல்ல என்பதையும் நிலைநிறுத்தியிருந்தார் பல்லவ சிம்மம் நந்திவர்மர்.
போரின் முடிவில், சமாதானத்தை விரும்பிய இராஷ்டிரகூட அரசர் அமோகவர்ஷர், தனது மகள் சங்காவை நந்திவர்மருக்கு மணமுடித்துக் கொடுத்து, பகையை உறவாக்கினார். இப்போது தனது பத்தினி சங்காவுடன் காஞ்சிபுரம் அரண்மனையில் தனியறையில் இருந்தார் பல்லவ மன்னர் நந்திவர்மர்.
அண்டமாய் ஆதியாய்
அருமறையோ டைம்பூதப்
பிண்டமாய் உலகுக்கோர்
பெய்போருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தாம் மலர்தூவிச்
சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை
என்மனத்தே வைத்தேனே
இனிமையான குரலில் பாடிக்கொண்டிருந்தார் அரசி சங்கா.
“இவ்வளவு விரைவில் பதிகங்கள் பாடும் அளவுக்குத் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்று விட்டாயே சங்கா!”
“காரணம் தாங்கள்தான் ஐயனே. உங்களுக்குத் தமிழ் மீது பற்று. எனக்கோ தங்கள் மீது பற்று. தங்கள் மீது எனக்குள்ள பற்றின் காரணமாகவே தமிழைப் பற்றிக் கொண்டேன். தங்களைப் பற்ற குறுக்கு வழியாகத் தமிழைக் கற்றேன். தங்களைப் பற்றிக்கொண்டேன்”
“நன்றாகத்தான் தேர்ச்சி பெற்று விட்டாய் சங்கா. பதிகங்களை மனனம் செய்து பாடலாம். ஆனால், கற்காமல் இத்தனை பற்றுடன் பேச இயலாது” சிரித்தபடி கூறினார் நந்திவர்மர். நாணத்துடன் தலைகுனிந்தபடி நின்றிருந்தாள் சங்கா.
“தமிழைக் கற்றுத் தேர்ந்தது பெரிய விஷயமெனில், பிறந்ததிலிருந்து சமணத்தை மார்க்கமாகக் கொண்ட நீ, விவாகத்திற்கு பிறகு சைவத்தை அனுசரித்து, ஈசனைக் குறித்துப் பாடுவது மிகவும் பெரிய விஷயம் சங்கா.”
“தங்களையே எனக்கான பாதையாக வரித்த பின்னர், தங்கள் மார்க்கமே எனது மார்க்கமாகும்” மெல்லிய குரலில் கூறினாள் சங்கா. நெகிழ்ச்சியில் ஆழ்ந்த நந்திவர்மர், சங்காவை இழுத்து மார்புடன் அணைத்துக் கொண்டார். சில கணங்கள் அங்கு மௌனமே பேச்சாக இருந்தது.
“என் மீது இவ்வளவு பற்றுக் கொண்டுள்ளாயே, நான் வேறு பெண்ணை மணந்து கொண்டால் என்ன செய்வாய்?” நந்திவர்மர் கேட்டதும் கண்களில் கண்ணீர் துளித்தது சங்காவிற்கு.
“தெரியவில்லை ஐயனே. இராஜ குடும்பத்தில் பிறந்து, இராஜ குடும்பத்தில் விவாகம் செய்ததின் தண்டனையாக எண்ணி ஏற்றுக்கொள்ளலாம். அல்லது உம்முடன் கோபம் கொண்டு எனது தந்தையுடமும், கங்க மன்னரிடமும் கூறி தங்களுக்கு எதிராக போர் தொடுக்கலாம். அது அப்போதையை மனநிலையைப் பொறுத்தது. வருவது வரும்போது எதிர்கொள்ளலாம்” கண்ணில் கண்ணீருடன் வார்த்தைகளைக் கூட்டிக் கூறினாள் சங்கா.
“எதற்காகக் கண்ணீர் சிந்துகிறாய் சங்கா? அரச குடும்பங்களில் பலதார மணம் என்பது சகஜம்தானே? நான் இன்னொரு விவாகம் புரிந்தால் தவறா என்ன?” சங்காவைச் சீண்டிப் பார்த்தார் நந்திவர்மர். எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள் சங்கா. சில கண அமைதிக்கு பின்னர், கண்ணீர் மல்க நின்றிருந்த சங்காவை தானே சமாதானம் செய்யத்தொடங்கினர் நந்திவர்மர்.
“எது நடக்கவேண்டுமென்பது இறைவன் கரங்களிலுள்ளது சங்கா. அரச குடும்பங்களில் பலதார விவாகம் சகஜமென்ற போதிலும், அவ்வாறு நடப்பது ஈசன் கையிலுள்ளது. அவ்வாறு நடக்கக்கூடாதென நானும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”
நடப்பதும், நடக்காததும் இறைவனின் கரங்களிலிருக்க, நடக்காதென்ற நம்பிக்கையில் தான் அந்த சமாதானத்தைக் கூறினார் நந்திவர்மர். நடந்தால் என்ன செய்வாயென நந்திவர்மரை கேட்டுப்பார்க்க விதி எண்ணியது போலும், அடுத்த சில நாட்களிலேயே அவர் சங்காவிடம் கேட்ட வினாவிற்கு விடை தேட வேண்டிய நிலை வருமென்பதை நந்திவர்மர் அறிந்திருக்கவில்லை.
சங்காவைச் சமாதானம் செய்துவிட்டு, அரசவைக்கு வந்தார் நந்திவர்மர்.
“நான் உங்களை இங்கு அழைக்கக் காரணம்..” சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்க்க, எதிலிருந்த இருவர் முகத்திலும் ஆவல் தெரிந்தது. இன்னும் தாமதம் வேண்டாமென தான் சொல்ல வந்ததை சொல்லத்தொடங்கினார் நந்திவர்மர்.
“நமது பல்லவ நாட்டின் எல்லை குறித்து பேசவே உங்களை வரச் செய்தேன்” சொன்ன நந்திவர்மர் தொடர்ந்தார்.
“பாண்டியர்கள் சோழ தேசத்தைக் கடந்து, தொண்டை மண்டலம் வரை பரவி விட்டனர். பல்லவத்தின் பல பகுதிகள் பாண்டியர்கள் வசம் சென்று விட்டன”
“ஆனூர்ப்போரில்•• நாம் சற்று அலட்சியமாக இருந்துவிட்டோம். அதன் விளைவாகவே பாண்டியர்களிடம் நமது எல்லைகளை இழக்க நேர்ந்தது” விக்கிரமர் கூற மௌனமாக இருந்தார் நந்திவர்மர்.
“எனினும், அரசே, ஆனூர்ப் போரின் போது இருந்த சூழல் இப்போது இல்லை. பலம் வாய்ந்த இராஷ்டிரகூடர்களையே நாம் குறுகோட்டுப் போரில் வென்று, நமது வீரத்தை நிருபித்து விட்டோம். அமோகவர்ஷரின் மகளை விவாகம் செய்ததால், அவரது ஆதரவு நமக்கு இருக்கிறது. அத்துடன் அமோகவர்ஷரின் மற்றொரு மகளை மணந்த கங்க மன்னர் பூதுகனின் ஆதரவும் பெற்றிருக்கிறோம். எனவே, தற்போது நாம் நமது தென் எல்லையை மீட்கத் தேவையான முயற்சியை எடுக்கலாம்” கோட்புலியார் கூறியதையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டார் நந்திவர்மர்.
“ஆனூர்ப் போர் நமது தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் கோட்புலியாரே. தோல்வி என்பது மறைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. மறக்கப்பட வேண்டியதும் அல்ல. தோல்வியை வெளிக்காட்டியும், நினைவில் கொண்டுமிருந்தால், அதையே உத்வேகமாகக் கொண்டு வெற்றியை நோக்கி நடைபோடலாம்” சொன்ன நந்திவர்மர் தொடர்ந்தார்.
“அத்துடன், தோல்வி என்பது நம்மையே நமக்கு அடையாளம் காட்டும் மண்டிலம்••• போன்றதாகும். நமது பலவீனங்களை மண்டிலத்தைப் போல நமக்கு எடுத்துக்காட்டும் நண்பன் எவரும் இல்லை. அவ்வகையில், ஆனூர்த் தோல்வியே என்னை எனக்கு அடையாளம் காட்டியது. அதிலிருந்து பாடம் கற்ற நான் எனது பலவீனங்களை நீக்கி, பலத்தை வளர்த்துக் கொண்டேன். எனவே தான் பெரும் படைபலம் மிக்க இராஷ்டிரகூடர்களை குறுகோட்டுப் போரில் வெல்ல முடிந்தது”
விக்கிரமரும், கோட்புலியாரும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். தொடர்ந்து பேசினார் நந்திவர்மர்.
“குறுகோட்டு போரின் மூலம் வட எல்லையை பலப்படுத்தி விட்டோம். இனி தெற்கில் நாம் இழந்த பகுதிகளை மீட்க வேண்டும். விரைந்து நமது படையைத் தயார் செய்யுங்கள்”
“நமது படை தயாராகவே உள்ளது அரசே. படையெடுப்பை எந்நேரமும் முன்னெடுக்கத் தயாராகவே உள்ளோம்” கோட்புலியார் நம்பிக்கையுடன் கூறினார்.
போரில் உடலில் படும் அம்புகளினால் ஏற்படும் காயம் ஆறிவிடும். வலி மறைந்து விடும். ஆயினும், விழி அம்புகளால் இதயத்தில் ஏற்படும் காதல் காயத்தின் வலியை நந்திவர்மர் உணரும் நேரம் வந்துவிட்டதை அவர் அறிந்திருக்கவில்லை.
ஆயினும், இந்த வலி அவருக்கு மட்டுமல்ல, மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தின் பேரரசரான அமோகவர்ஷரின் மகளான சங்காவிற்கும் வலி தருமென்பதை அறிந்திருந்த காலம் அவரைப் பார்த்து மெல்ல புன்னகைத்தது.
—தொடரும்…
* நந்திவர்மருடைய சேனை தலைவர்களில் ஒருவர் கோட்புலி. இவரை கோட்புலி நாயனார் என்று பெரியபுராணம் தெரிவிக்கிறது. – மூன்றாம் நந்திவர்மன் – சீனி. வேங்கடசாமி – பக்கம் 12
** கடலானூர் அல்லது ஆனூர் என்னும் இடத்தில் பல்லவர்களுக்கும், பாண்டியர்களுக்குமிடையே பெரும் போர் நடந்தது. அதில் பாண்டிய மன்னர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் வென்று பல்லவர்களின் சில பகுதிகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் பாண்டியர்களின் ஆளுமை சோழ தேசம் கடந்து தொண்டை மண்டலத்திலும் பரவியதாக அறியலாம். – பல்லவர் வரலாறு K.V. இராமன். பக்கம் 77
*** கண்ணாடி
46 Comments
Good Starting madam,
Thanks sir.. 🙂🙂
Good start manni… All the best…
சிறப்பானத் தொடக்கம்… ஆர்வத்தை தூண்டும் எழுத்து நடை. மேலதிக குறிப்புகள் புத்தகம் படிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.. வாழ்த்துக்கள்.
நன்றியும் அன்பும்… 🙂🙂
Nice start
Thank you.. 🙂🙂
நல்ல தொடக்கம் வாழ்த்துக்கள்.
அருமையான தொடக்கம்.. தமிழ் வார்த்தைகள் இங்கு பயன்படுத்தியவை பாராட்டுக்குரியது… சங்கா போர் புரிய போகிறாளா இல்லை கண்ணீருடன் ஏற்க போகிறாளா என்ற கேள்விக்கு பதில் தேடுகிறது என் மனம்..
நன்றி ப்பா.. 🙂🙂
அருமையான தொடக்கம்.. அந்தப்புரத்தில் மெதுவாக நகர்ந்த காட்சிகள் அரசவையில் சடசடவென வேகமெடுத்து நகர்ந்தது். ஒரு சின்ன உரையாடல் மூலம் வரலாற்று செய்திகளை தூவி விட்டு சென்றுள்ளார் கதையின் ஆசிரியர் பத்மா💐. இந்த இடத்தில் ஏன் தொடரும் போட்டீர்கள்? 😕😤 .. அடுத்து என்ன என்ற ஆவல் இப்போதே வந்துவிட்டது
நன்றி ப்பா… 🙂🙂❤️❤️
Sure.
அருமையான துவக்கம்… 💐💐
நன்றி.. 🙏🙏
அருமையான தொடக்கம். நல்ல கதைக்களம். எழுத்தாளர் பத்மா சந்திரசேகர் கதைகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். வாழ்த்துகள்
நன்றி ப்பா.. 🙏🙏❤️❤️
தங்களின் எழுத்தும் நடையின் வேகமும் அருமை அக்கா.. வாழ்த்துள்
அருமையான தொடக்கம்்.
தோல்வியையும் நினைவில் கொண்டால் வெற்றி அடையலாம் சிறந்த கருத்து.
நன்றி தம்பி… 🙂🙂
நன்றி.. 🙂🙂
எழுத்தாளர் பத்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சொல்லாடல் சொக்க வைக்கிறது
கதையின் ஓட்டம் வாசகர்களை கட்டிப் போடுகிறது.
அருமையான தொடக்கம்.
அடுத்த பதிவுக்காக காத்திருப்பவர்கள் வரிசையில் நானும் ஒருவன்.❤️👍
மகிழ்வுடன் நன்றியும் அன்பும்…
மன்னருடன் தனியறையில் பதிகம் பாடும் சங்கா அவளிடம் இத்தனை சீக்கிரம் தமிழ் கற்றுக்கொண்டாயே என்று வியந்து என் மார்க்கத்தை திருமணத்திற்குப்பிறகு கடைபிடிக்கிறாய் என்று பேசும் போது உங்களையே ஆதாரமென பற்றிவிட்டேன் உங்கள் மார்க்கமே எனது வழி என்று காதலாய் பேசும் சங்காவின் மொழி
அடுத்து மறுமணம் பற்றி பேசும் போது என்ன செய்வாய் என்ற கேள்விக்கு சட்டென அப்போதைய நிலைமையைப் பார்த்துக்கொள்வோம். போர்தொடுக்கலாம் அல்லது ராஜ குடும்பத்து பெண்களின் தண்டனையாக இதை ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறும் போதே அவள் பல்லவரின் மீது கொண்ட காதல் வெகு ஆழமாய் தெரிகிறது கூடவே அவள் தன் சுயமரியாதையையும் இழக்காமல் பதில் கூறியிருக்கிறாள். கதையின் ஓட்டப்படி சங்கா இக்கதையின் பின்வரும் அத்தியாயங்களில் பெரும் பங்கு வகிப்பாள் என்று நினைக்கிறேன்.
இரண்டுவிதமான பதில்களே அவளின் குணத்தை ஓரளவு உணர்த்திவிடுகிறது. நல்ல பாத்திரப்படைப்பு
ஆர்வத்தைத் தூண்டிய விழிகளுக்கு இடைவெளியாய் தொடரும் போட்டு இருக்கிறீர்கள் அற்புதமான கதைக்களம் வாழ்த்துக்கள் ஆசிரியருக்கு
நன்றியும் அன்பும் Mam.. 🙂🙂
முதல் இரண்டு பத்திகள் படிக்கும் போது சாண்டில்யன் நாவலைப் படிக்கும் உணர்வு. அதேபோல் கடைசி பத்திகளும்.
உன்னதமான தொடக்கம்.
விறுவிப்பு பத்மாவின் trademark. நாவல்களிலேயே அதற்கு குறைவிருக்காது, தொடர்கதையில் கேட்கவா வேண்டும்?
நன்றி அண்ணா… 🙂🙂🙏🙏
மகிழ்வுடன் நன்றி ப்பா.. 🙂🙂
மிக அருதையாக உள்ளது. முதல் அத்தியாயத்திலேயே விறுவிறுப்பு ஆரம்பித்து விட்டது. வாழ்த்துக்கள் பத்மா அவர்களுக்கு. கதைக்கு மிக பொருத்தமாகவும் அருமையாகவும் ஓவியம் வந்திருப்பது இன்னும் பலம். ஓவியருக்கு பாராட்டுக்கள். அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறேன். நன்றி.
நன்றி boss… 🙂🙂
வாசிப்பில் வாசிப்பவா் வெளியேறவிடா வருணனை. கதை காலுான்றி வாழ்த்துக்கள்🎉🎊.
நன்றியும் மகிழ்ச்சியும்.. 🙏🙏🙂🙂
ஆஹா மிக அருமையான ஆரம்பம். காட்சிகளை நேரில் பார்பது போன்று அமைந்திருக்கு. அதற்க்கு ஏற்றால் போலே ஒவியமும் அதன் தேர்வும் இன்னும் அழகு சேக்கிறது. சாதாரண வரலாற்று கதையாக இல்லாமல் அதன் வரலாற்று சான்றுகளையும் சேர்த்து கொடுத்திருப்பது நம்மை அந்த காலத்திற்க்கு அழைத்துச்சென்று வரலாற்று சாட்சியாக ஆக்கிவிட்டீர்கள்.
அடுத்த நாள் எப்போது வரும் என்று ஆவலுடன் …
நன்றி sir.. 🙂🙂
Dear Ma’m
Congratulations on your recent publication. You are a great example to the rest of the writers.
.
Thank you so much.. 🙂🙂
Good start madam
Thank you Mam…
சரித்திர கதைகளில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர் முன்பு சாண்டில்யன், தற்போது காலச்சக்கரம் நரசிம்மா, கோவி மணிசேகரன், கவுதம நீலாம்பரன், விக்ரமன், கல்கி, என்று பலரது சரித்திரக் கதைகளை வாசித்திருந்தாலும் இவர்கள் இருவரும் ஸ்பெஷல். அந்த வகையில் இனி உங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். தொய்வில்லாத நடையில் சுவாரஸ்யமாக முதல் பகுதியை ஆரம்பித்திருக்கிறீர்கள். அருமை. வாழ்த்துகள்! தொடர்கிறேன். நன்றி!
மகிழ்ச்சியும் நன்றியும் sir..
இது மின் கைத்தடி ஆசிரியர் குழுவினருக்கான வேண்டுகோள். கதைகள் தொடர்கள் எழுதியவரின் புகைப்படத்தை கதை ஆரம்பத்தில் எழுத்தாளர் பெயருடன் போடவும். இறுதியில் கதையை பதிந்தவர் புகைப்படத்துடன் எழுத்தாளர் புகைப்படமும் வருவது குழப்பம் உண்டாக்குகிறது. முதலிலேயே படம் வருவது அழகாகவும் இருக்கும். நன்றி!
அடுத்த அத்தியாயத்தை எதிர்நோக்கி….
அன்பும் நன்றியும்…
சூரியனின் உதையத்தை எவ்வளவு அழகாக விவரித்து உள்ளீர்.. ஓவியங்கள் அனைத்தும் அருமை அதிலும் சங்கா வட பெண்ணின் தமிழழகி.. நந்திவர்மர்.. சங்கா.. உரையாடலில் பெண்ணிற்கே உரிய கம்பீரம் கலந்த காதல் தோய்கிறது.. விரைவாக வெளியே வர மனமின்றி நகர்கிறது பத்மா வாழ்த்துகள் உனக்கு நீயே செம..
நன்றி டா..
ஒரு சரித்திர நாவல் என்றால் தான் நல்ல தமிழ் படிக்கக் கிடைக்கிறது! உங்களின் தமிழ் நடை தமிழைப் போலவே தென்றலாகக் குளிர்கிறது. படங்களை (சம்பந்தமில்லாதவை என்பதாலேயே!) தவிர்த்திருக்கலாமோ? இன்னமும் வரும் கதையும் இது போலவே சுவையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் வாழ்த்துக்களுடனும்,
-ஆரெஸ்கே