நடப்புகள் சிறுகதை | ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

 நடப்புகள் சிறுகதை | ஃபிர்தவ்ஸ்  ராஜகுமாரன்

பெரும் மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது. “பேஞ்சா இப்பிடித்த பேஞ்சிட்டே இரிக்கும்.. இல்லேனே கெடந்து வெய்யில் கொளுத்தும்….” வானத்தை அண்ணாந்து பார்த்தபடி சலித்துக் கொண்டார் தள்ளு வண்டி காய்கறி வியாபாரியான முத்து ராவுத்தர். இன்னைக்கும் வியாபாரம் செய்ய முடியாதபடிக்கு காலையிலேயே வானம் இருட்டிக் கொண்டிருந்தது.

கல்யாணமென்பது சந்தை வியாபாரமாகிவிட்டது! ஒரு பெண் என்றாலே முழி பிதுங்கும் இந்தக் காலத்தில் முத்து ராவுத்தருக்கு மூன்று பெண்கள். முதல் பெண்ணை எப்பாடுபட்டாவது தாட்டியாகணும் என்று தெரிந்தவர்கள் மூலம் நிறைய இடங்களில் சொல்லி வைத்திருந்தார். ‘வரதட்சணை வாங்காத கல்யாணம்.’ என்று கொஞ்சம் பேர் ஒரு பக்கம் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க, ஏழை குமர்கள் பற்றி கவலையே படாமல் சாதாரண கூலித் தொழில் செய்யும் மாப்பிள்ளைக்கே குறைந்த பட்ச சிறுதனம் இவ்வளவு நகை இவ்வளவு பவுன் என்று ஒரு நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது சமூகம்.!

“ஒரு மாப்பிளை இரிக்கிது. ஆனா அவரு ஏதோ அமைப்புல இரிக்காரு. உங்க பொண்ணக் குடுப்பீங்களா..?” தூரத்து உறவினர் தூது வந்தார். ராவுத்தர் கொஞ்சம் யோசித்தார். அவர்கள் மீது சில காரணங்களால் பெண் கொடுக்க தயக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது ! நிக்காஹ்வின் போது டிமாண்ட் வைக்காமல் கல்யாணத்திற்குப் பிறகு சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் இந்த தயக்கம்.

இதை கவனத்தில் கொண்டு முத்து ராவுத்தரும் கொஞ்சம் தயங்கினார். வரதட்சணையாக கல்யாணத்துக்கு முன்னாடி இவ்வளவு என்று டிமாண்ட் செய்பவர்களை விட, இப்படி பின்னாடி மறை முகமாகக் கேட்பவர்களின் இம்சை தாங்க முடியதாக இருக்கும். அது வீடு பூந்து அடிக்கும் கொள்ளையென்றால், இது எதிர் பாராமல் அடிக்கும் வழிப்பறி கொள்ளை !

“என்ன இப்பிடி யோசனை பண்றீங்க…?”’ முத்து ராவுத்தரைப் பார்த்துக் கேட்டார் அவர். ராவுத்தர் எதுவும் பேசாமல் அவரைப் பார்க்க,

“சீர் செனத்தி (வரதட்சணை, பணம்) பத்தித்தானே…..யோசிக்கிறீங்க…? .அது ஒரு பிரச்சனையே இல்ல… நீங்க உங்கப் பொண்ணுக்கு எதும் செய்யண்டாம்…..” என்றவரிடம், ’பிரச்சனையே அதானே..’ என்று சொல்லத் தோன்றாமல் வெறுமனே சின்னதாய் ஒரு சிரிப்பைக் காட்டிய ராவுத்தர்.

“இல்லே..” என்று மெல்ல இழுத்தார்.

“நீங்க ஒண்ணும் பயப்படண்டாம் கிட்டியா… பைய்யன் அஞ்சு நேரத் தொழுகையாளியாக்கும்…. இது பத்தாதா உங்களுக்கு….? இந்தக் காலத்துல .இதுக்கு மேல வேற என்னங்காணும் வேணும் ?”

எத்தனை இடத்திலிருந்து வந்து பார்த்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். இப்படித்தான் பிடித்து விட்டதாகச் சொல்லிச் செல்வார்கள். சீர், செனத்தி பேரத்தில் அப்புறம் சத்தமே இருக்காது. வரதட்சணை என்னும் பேய் சமூகத்தைப் பிடித்து மிக பலமாய் ஆட்டிக் கொண்டிருக்க, பணம் இல்லாதவர்களின் கஷ்டத்தையும், வலியையும் உணராத கையாலாகாத சமுதாயம் எதுவும் செய்யாமல் வெறுமனே வேடிக்கை பார்க்கிறது.

யோசித்த ராவுத்தர் “சரி நா யோசிச்சு சொல்லி உடுறேன்…” என்றார். .

ராவுத்தரின் பொஞ்சாதி உம்ஸல்மா வாயெல்லாம் பல்லாக, “அந்த றப்புதா நமுக்கு இப்பிடியொரு வழிகாட்டியிருக்கான். சீக்கிரம் ஆக வேண்டியதப் பாருங்க….எப்பப் பாத்தாலும் ஒடுக்கத்த யோசனதா ஒங்குளுக்கு….” வெடுக்கென்று கணவனை சீண்டினாள்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை மாப்பிளை வீட்டிலிருந்து ஒரு கும்பல் வந்து பெண் பார்க்கும் சடங்கு நடந்தது. பலகாரங்களைச் சாப்பிட்டு விட்டு பெண்ணைப் பிடித்தாகச் சொன்னார்கள். கிளம்பும் சமயத்தில்,

“சீர் செனத்தி வேண்டாங்குறாங்கணு ஒங்க பொண்ணுக்கு ஏதும் செய்யாம உட்றாதீங்க…..என்ன….! ஒங்க தகுதிக்கு செய்யிறத செயிங்க…ஒங்க பொண்ணுக்குத்தா செய்யிறீங்க…ஆமா.” உம்ஸல்மாவின் காதைக் கடித்தாள் மாப்பிளை வீட்டாரின் உறவுப் பெண் ஒருத்தி. மனைவியின் முகம் போன போக்கை கண்டு கொஞ்சம் பதட்டமடைந்தார் முத்து ராவுத்தர். உம்ஸல்மா தலையை ஆட்டிக்கொண்டதைக் கண்டு கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தார்.

அவர்கள் சென்றதும் “என்னளா…சொல்லுச்சு அந்தம்மா..?” தாங்க முடியாத ரகசியத்தைக் கேட்பது போலக் கேட்டார் ராவுத்தர்.

“மாப்பிள எதும் வேண்டாம்னு சொல்றாருனு ஒங்க பொண்ணுக்கு எதும் செய்யாம உட்டுறாதீங்க. நீங்க செய்ய வேண்டியத செய்ங்கனு…சொல்லுது..” என்றாள் உம்ஸல்மா. மனைவியின் பதிலில் கொஞ்சம் வேதனையும் சலிப்பும் இருந்ததை ராவுத்தர் உணர்ந்து கொண்டார்.

“கேக்காமக் கேக்குறாங்க…இல்லயா….? அதான் நா அப்பவே கொஞ்சம் தயங்கினேன்.

நீ தா இந்த எடத்த உட்டுறாதீங்கணு கெடந்து சாடுனே.. இப்பப் பாத்தியா !” ராவுத்தர் இளக்காரமாகச் சொன்னாலும், அவருக்குள் கவலை பொங்கியது.

“அதுக்குனு நாம வெறுங்கையோட பொண்ண அனுப்பி உடுருதாக்கும்….?” உம்ஸல்மா விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

“இருக்கிறத வச்சுத் தாட்டுறதுக்குத்தானே இவுங்களுக்கு சரினு பொண்ணக் குடுக்கலாம்னு சொன்னேன் நீயென்னடானா இப்ப இப்பிடிச் சொல்றே..?” மனைவி மீது கோபப்பட்டார் ராவுத்தர்.

“அதுக்குனு ஒண்ணுமே போடாம பொண்ணக் கட்டிக் குடுக்கலாம்னு சொல்றீங்களாக்கும்..?” கணவன் மனைவிக்குள் ஒரு வாக்குவாதமே உருவானது. மூத்தவள் மெஹபுனீஷா தனக்காக வேண்டி வாப்பா, உம்மா போடும் இந்த சண்டை குறித்து கொஞ்சம் சங்கடப்பட்டாள். இருந்தும் அவளுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. மற்ற இருவரும் குழப்பத்துடன் வேடிக்கை பார்த்தார்கள்.

அந்த வாரத்திலேயே பொண்ணை முறைப்படி வந்து பார்த்தார்கள். ரஃபீக் எதிர் பாரத்தபடியே அவன் வைத்திருந்த அளவு கோளுக்கு தகுந்தபடி மெகபூனீஷா இருப்பதாகப்பட பொண்ணைப் பிடித்து விட்டதாக உடனே சம்மதம் சொன்னான். வீடே நிலை கொள்ளாத சந்தோஷம் கொண்டது.

பிறகு இவர்களைப் பார்க்க வரச்சொன்னார்கள். இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம்தான் இவர்கள் செய்ய மாட்டார்களே ! பிறகு ஏன் மாப்பிளை வீட்டுக்கு வரச்சொல்கிறார்கள் ! மாப்பிளை வீட்டுக்கு வெறுங்கையை வீசிட்டுப் போக முடியுமா அதுக்கு ஒரு செலவு எனவே,

“அதெல்லாம் வேண்டாங்க“ என்றார் ராவுத்தர்.

“சும்மா ஒரு சம்ப்ரதாயத்துக்குத்தான். உங்க சொந்தக் காரங்களையெல்லாம். மாப்பிளயப் பாக்கக் கூட்டிட்டு வாங்க..” என்று கட்டாயப்படுத்தினார்கள்.

இதெல்லாம் நாமாளே ஏற்படுத்திக்கொள்ளும் தேவையில்லாத சம்பிரதாயங்கள் ! பணத்துக்கு என்ன செய்வது என்ற சிந்தனையே இல்லாமல் எல்லாத்துக்கும் கெடந்து தலையாட்டிக் கொண்டிருக்கிறாள் .உம்ஸல்மா என்று ராவுத்தருக்கு சரியான கோபம்.

ஸ்வீட் வகைகள், பலகாரங்கள் என்று மறுபடியும் ராவுத்தருக்கு ஒரு செலவு. ஒரு வாரத்திற்குப் பிறகு பொண்ணுக்கு பூ வைக்க பத்து பேர் வருகிறோம் என்று மாப்பிளை வீட்டிலிருந்து தகவல் வர இயலாமையும் எரிச்சலும் அடைந்த முத்து ராவுத்தர், “இப்பிடி பத்து பத்துப் பேத்துக்கா செலவு பண்ணிக்கிட்டே இரிக்கணுமாக்கும்….? என்னளா இது..! காசுக்கு எங்க போறது…? நம்மகிட்ட வசதி இல்லேன்னு தெரிஞ்சும் இப்பிடிப் பண்ணுறாங்களே!” மனைவியிடம் எரிந்து விழுந்தார்.

“உடுங்க இதெல்லாம் எல்லாப் பக்கமும் உள்ள வழம தானே..”

வேற எடமாயிருந்தாலும் இதெல்லாம் செஞ்சுதானே ஆகணும்.” உம்ஸல்மாவின் பேச்சுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

ஒரு வாரம் கழித்து அவர்களின் உறவினர் ஒருவரின் புது வீடு திறப்பு விழா அழைப்பிதழுடன் புது சம்பந்தி என்று இவர்களிடம் சொல்ல வந்தார்கள். “என்னளா ! நெனச்சுட்டிரிக்காங்க அவுங்க..? இவுங்களுக்கு செலவு பண்ணியே ஒரு வழியாயிருவோம் போல..!” தலையில் அடித்துக் கொண்டார் முத்து ராவுத்தர். உள்ளுக்குள் கிடந்து குமுறிய ராவுத்தர் பொறுக்க முடியாமல் மாப்பிளையை கொண்டு வந்த அந்த தூரத்து உறவினரிடம் தன் வருத்தத்தை இயலாமையை வெளிப்படையாகவே கொட்டினார்.

எங்கே தன்னிடம் சண்டைக்கு வந்து விடுவாரோ என்று பயந்தவராக தன் மௌனத்தைக் கலைத்து “என்னங்க பாய் ! நீங்க புரியாமப் பேசுறீங்க.? அவுங்க சீர், செனத்திதா வேண்டானாங்க.! இந்த மாதிரியான சின்னச் சின்ன சடங்கு சம்பிரதாயங்களெல்லாம் பொம்பளைங்க ஆசைக்கு செய்யறது. இதெல்லாம் கால காலமா நடக்குற ஒரு வழமதானே பாய்..? கல்யாணத்துல இதெல்லாம்தானே சந்தோஷம். இதையெல்லாம் வேண்டாம்னு நாம சொல்ல முடியுமாக்கும்.? இதெல்லாம் இல்லாம என்ன கல்யாணம்.?” என்றார் அந்த தூரத்து உறவினர்.

முத்து ராவுத்தர் எதுவும் பேசாமல் தலையை ஆட்டிக்கொண்டார்.

பிறகு உறவினர்களுடன் ராவுத்தர் கலந்தாலோசித்தார். இருக்கும் நடப்புகளையெல்லாம் சொல்லி அவர்கள் இன்னும் பயமுறுத்தினார்கள் ! அவர் மனைவி உம்ஸல்மா எதையும் காதில் வாங்கவில்லை.

திடுமென ஒரு நாள் மாப்பிளையின் வாப்பாவுடன் அவர்களின் குடும்பத்தினர் சிலரும் ராவுத்தர் வீட்டுக்கு வர, என்ன குண்டத் தூக்கிப் போடுவாங்களோ என்று பதட்டமடைந்தார் ராவுத்தர்.

“ஒண்ணுமில்ல, மைலாஞ்சி நைட்டுக்கே நிச்சயம் வச்சிருலாம்னு எல்லா அபிப்ராயப்படுறாங்க…யாருக்கும் சொல்லாம ஏற்கனவே நிச்சயம் நடத்திட்டோம்னு சொந்தக் காரங்கள்லாம் சங்கடப்படுவாங்க…. அதான்“ என்று இழுத்தார் மாப்பிளையின் மச்சான்.

மைலாஞ்சி விசேசம் வைக்கலாம்னு யாரு இவுங்க கிட்டச் சொன்னா.! எல்லாம் இவுங்களாகவே முடிவு பண்ணிக்கிட்டு இப்பிடி படுத்துறாங்களே ! .ராவுத்தர் நொந்து போய் யோசனையுடன் மோவாயைத் தடவிக் கொண்டிருக்க, “அப்பறம், நிக்காஹ்வுக்கு மாப்பிள ஊட்லருந்து வர்ற எரநூறு பேத்துக்கு நீங்க கல்யாண சாப்பாடு குடுக்கணும்..” என்றார் ஒருவர்.

இடிந்து போனார் ராவுத்தர்.

“என்ன ஒண்ணும் பேச மாட்டேன்கிறீங்க…?” மாப்பிளையின் மச்சான் கேட்டார்.

எப்படிப் பேசமுடியும் ராவுத்தரால்….! என்ன பேசுவார்…? உள் பக்கம் திரும்பி உம்ஸல்மவைப் பார்த்தார் ராவுத்தர் . பொஞ்சாதியின் முகமும் சுருங்கிப் போயிருந்தது கண்டு, மேலும் கலக்கமடைந்தார்.

“சரி…நாங்க சொல்லி உடுறங்க..” என்று மாப்பிளை வீட்டாரை அனுப்பி வைத்தனர்.

இப்பவே இப்பிடிப் படுத்துறவங்க, மத்தவங்க சொல்றதப் போலவே இவ்வளவு நகை போடணும், சிறுதனப் பணம் அம்பதாயிரம் வேணும். மாப்பிளைக்கு வாச்சி மோதிரம் போடணும்னு கட்டாயப் படுத்தி டிமாண்ட் வச்சாங்கனா என்ன பண்ண முடியும்…? நிறைய எடத்துல இப்படித்தா நடக்குது. இப்ப அவுங்க சொன்னதுக்கே செலவு செய்ய ஒரு வழியும் இல்ல…. கடன உடன வாங்கி செய்யவும் எந்த வழியும் இல்ல !. எல்லாம் முடிவு பண்ணிட்டு கடைசியில பணப் பிரச்சனையால நிக்காஹ் நின்னு போச்சுனா, ஒண்ணு கெடக்க, ஒண்ணாயி மானக்கேடாயிருமே…. ஒரு தாயின் மனப் போராட்டத்தை போல ராவுத்தருக்குள் குழப்பமும், கவலையும் அலை மோதியது.

இப்ப என்ன செய்யறது….? ஒரு வழியும் புலப்படவில்லை. நேரிடையாக மாப்பிளையிடம் போயி பேசிப்பார்க்கலாமா ? நிலை கொள்ளாமல் குழம்பித் தவிக்க ஆரம்பித்தார் ராவுத்தர்.

பெரும் மழைக்குத் தயாராக வானம் கறுத்துக்கொண்டு வந்தது. எங்கும் இருட்டு கவ்விக்கொண்டிருக்க, சட்டென்று ஒரு மின்னலுடன், திடுமென ஒரு பேரிடி கடந்து போனது…

கமலகண்ணன்

1 Comment

  • பெரும் மழைக்குத் தயாராக வானம் கறுத்துக்கொண்டு வந்தது. எங்கும் இருட்டு கவ்விக்கொண்டிருக்க, சட்டென்று ஒரு மின்னலுடன், திடுமென ஒரு பேரிடி கடந்து போனது…

    ‘இதுவும் கடந்து போகும்’ என்பதை கதாசிரியர் கோடிட்டுக் காட்டிய கதையின் முடிவு அருமை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...