தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்களும் மாணவர்களும் – சாம்பவி சங்கர்

 தற்போதைய சூழ்நிலையில்  ஆசிரியர்களும் மாணவர்களும் – சாம்பவி சங்கர்

உன் மென் பஞ்சு பாதங்களுக்கு ,
மெத்தை விரித்த கொன்றை மலர்களோ ..
பூச்சொரிந்து காத்திருக்கின்றன
உந்தன் பூ விழி நோக்கி …

படபடவென சிறகடிக்கும் ,
பட்டாம் பூச்சியோ ..
உந்தன் மேனி தீண்டி தொட்டு விளையாட
சிறகடித்து சுற்றுகின்றன . .

நீ சுற்றித் திரிந்த பக்கமெல்லாம் ,
ஆழ்ந்த இருளின் நீண்ட பயணமாய் …

விண்மீன்களும் போட்டியிட்டு தோற்றுப் போகின்றன ,
நீ பேசிய வார்த்தைகளின் எண்ணிக்கையில் …

உன்னைக் காண காத்திருந்த விழிகளோ ...

வெள்ளைத் தாளின்
வெளிறியப் பக்கங்களாய் …

திறந்தப் பள்ளியில் கேட்பாரற்று நான் மட்டும்
சுவருக்குத் துணையாக .

ஆசிரியர்கள் இப்படி தான் முகாரி பாடிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா என்னும் பெருந்தொற்றால் உலகமே ஸ்தம்பித்து நிலை தடுமாறி போயிருக்கும் இந்த
சூழ்நிலையில் ஆசிரியர்கள், மாணவர்களின் நிலையினைப் பற்றி ஒரு அலசல்.

தமிழ் வழிக் கல்வி, ஆங்கில வழிக்கல்வி, கேந்திர வித்தியாலயா , என மாணவர்களுக்கு அறிவைத் திணிப்பதற்கு ஆயிரம் வாசல்கள் இருக்கின்றன. ஆனால் இந்த வாசல்கள் எல்லாம் கொரோனாவால் மூடப்பட்டுள்ளது. அப்ப மாணவர்களின் அறிவுக்கதவை எப்படி திறப்பது ?

இந்த கேள்விக்கு சரியான விடையறியாமல் தான் ஆசிரியர்களும் மாணவர்களும் திணறிக்கொண்டிருக்கின்றனர்.

இடையில் 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் கருத்துக்களின் படி பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பள்ளியில் மாணவர்கள் முககவசம் அணிகிறார்கள், சமூக இடைவெளியுடன் இருக்கிறார்கள் . கைகளைக் கழுவுகிறார்கள். ஆனால் பள்ளிக்கு வரும் போதும், போகும் போதும் அவர்கள் இதை கடைப்பிடிக்கிறார்களா?
இது மிகப்பெரிய கேள்வி ? அதனால் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது . மீண்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் எனற நிலை வந்தது.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் . கல்விக் கட்டணம் வாங்கும் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. எப்படியாவது மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது . இந்த ஆன்லைன் வகுப்புகளில் என்ன சொல்கிறோம் என்று ஆசிரியருக்கும் புரிவதில்லை, என்ன கேட்கிறோம் என்று மாணவர்களுக்கும் புரிவதில்லை. இது தான் நிதர்சனமான உண்மை . மாணவர்களின் முகத்தை பார்க்கும் போதே அவனுக்கு நாம் சொல்லும் செய்தி புரிகிறதா,இல்லையா ? என்று ஆசிரியருக்குப் புரியும் . ஆன் லைன் வகுப்பில் அதற்கு வாய்ப்பில்லை.

சரி அரசுப் பள்ளிகளின் நிலை என்ன ? 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கூடம் வருகிறார்கள். அவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களைத் தவிர மற்ற ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் ? இது அனைவர் மனதிலும் உள்ள கேள்வி ?

இந்த கேள்விக்கு ஒரே மாதிரியான பதிலை அனைத்து ஆசிரியர்களாலும் தர முடியாது காரணம் ஒவ்வொருவரின் பள்ளிச் சூழ்நிலைகள் வேறுவேறாக இருக்கும்.

பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. “கோழி ஒரு,கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே ” .என்ற பாடல் அது போல ஆசிரியர்கள் பள்ளியிலே, மாணவர்கள் வீட்டிலே அறிவு மட்டும் ஆளில்லாத காட்டிலே..என்பது போல இப்போதைய நிலைமை இருக்கிறது.

புலம்பல்கள் மட்டுமே வாழ்க்கை என்றால், மனிதப் பிறப்பெதற்கு ?

இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள் என்ன செய்யலாம்,

மாணவர்களுக்கு பாடங்களை நினைவு கூறும் வகையில் சிறு சிறு விளையாட்டுகளை வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்.

மாணவர்கள் பெரும்பாலும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் இருப்பார்கள், ஒரு நாளைக்கு ஒரு தெரு என்று சுழற்சி முறையில் அந்தத் தெருவில் உள்ள மாணவர்களை வீட்டிற்குச் சென்று பார்க்கலாம். மாணவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் . ஆசிரியர் மாணவர் என்ற இடைவெளி குறைந்து தாயன்பு ஏற்படும்.

மாணவர்களுக்கு வீட்டில் தோட்டம் போடும் வசதி இருந்தால் செடிகளை வளர்க்க உற்சாகப்படுத்தலாம். ஏட்டுக் கல்வி மட்டுமே மனிதனை பண்படுத்தாது.இதை புரியவைக்க மாணவர்களிடம் நிறைய கலந்துரையாடல்கள் நடத்தலாம். பெற்றோர்களுக்கு கொரோனாவை தடுக்கும் வழிமுறைகளையும் , கபசுர குடிநீர் தயாரிக்கும் முறைகளையும், பயன்படுத்தும் வழிகளையும் பெற்றோர்களுக்கு விளக்கலாம்.

பள்ளி மேலாண்மையை மேம்படுத்தலாம். பள்ளி வளாகத்தில் மூலிகைத் தோட்டங்கள் அமைக்கலாம்.

அடுத்த ஆண்டிற்கான பாடத்திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு ஆயத்தமாகலாம்.

அரசுப்பள்ளிகளில் சத்துணவில் அரிசி, பருப்பு, முட்டை, மாணவர்கள் சத்துணவு சாப்பிடும் அளவில் மாதமாதம் தருகிறார்கள் அதை விடுபடாமல் பெற்றோர்களுக்கு கிடைக்க வழிசெய்யலாம்.

மாணவர்கள் இந்த காலகட்டத்தில் வீடியோ கேம் ஆடியே தங்கள் நேரத்தையும், மனதையும் வீணடிக்கிறார்கள்.

குடும்பப் பொறுப்புள்ள மாணவர்கள் கடைகளிலும், விவசாயத்திலும் ஈடுபட்டு தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார்கள்.

காலத்தை வீணாக்காமல் தட்டச்சுப் பயிற்சி, தையல் பயிற்சி , ஓவியப் பயிற்சி , ஆங்கில இலக்கண வகுப்பு , என தன் திறமைகளை வெளிப்படுத்தும் பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.

இங்கு மிகவும் வேதனைக்குரிய விசயம் என்னவென்றால் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை தான், பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு சரியாக சம்பளம் கொடுப்பதில்லை. இதை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தும் எத்தனையோ ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

காலத்தின் கோலத்தால் கொரோனா கோரத்தாண்டவம் ஆடினாலும், ஆசிரியர்களும், மாணவர்களும் தங்கள் அறிவையும், அன்பையும் இழக்காமல் எப்பொழுதும் இணை தண்டவாளங்களாய் உலகம் முழுமையும் பயணிக்கிறார்கள்.

– சாம்பவி சங்கர்

கமலகண்ணன்

3 Comments

  • கட்டுரை மிக அருமை அக்கா உங்கள் கட்டுரை பணி தொடர வாழ்த்துகள்

  • மிகவும் அரு​மையான கட்டு​ரை

  • Arumai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...