மூக்கு மேலே ராஜா – ஆர்னிகா நாசர்

 மூக்கு மேலே ராஜா – ஆர்னிகா நாசர்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

தமிழ் நிலா தொலைக்காட்சியின் விளையாட்டு அலைவரிசையின் நிர்வாக அலுவலகம் ஈக்காடுதாங்கலில் அமைந்திருந்தது.

நிர்வாக இயக்குநர் குரியன் ஜோசப் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் தமிழ்கிரிக்கெட் வர்ணனையின் இயக்குநர் பால்மரியா மூத்த வர்ணனயாளர் கிரிகாந்த் மற்ற வர்ணனையாளர்கள் கிஷ்மன் பவராமகிருஷ்ணன், தப்பிரமணியம் சுத்ரிநாத், சுமாங் கிதானி, யாதாகிருஷ்னன் கீனிவாசன், பட்சுமிபதி சாலாஜி, எஸ்கே மீலாஜி, முட்டுசந்து கிரிக்கெட்டர் பத்து, கேவனா, படகோபன் கிமேஷ், பானி மற்றும் பலர் கூடியிருந்தனர்.

“மீட்டிங்குக்கு எல்லாரும் வந்திருக்கம் பஸ்ஸல் கொர்னால்டு வரலையே?”

“அவர் இலங்கைல இருக்காருப்பா… மீட்டிங்குல பேசினதை பின்னாடி சொல்லிக்கலாம்பா…”

நிர்வாக இயக்குநர் முதலில் வாய்திறந்தார். “இரண்டாயிரத்து இருபத்தி ஒன்னில் நடக்கப்போகும் ஐபிஎல் போட்டிகளுக்கும் மார்ச் மாதம் இந்தியாவில் நடக்கப்போகும் டி20 ஐந்து ஆட்டங்களுக்கும் தமிழ் வர்ணனை செய்யப்போறத பத்தி பேசப்போரம்!”

“ஹிஹி… டி 20ல யாரார் விளையாடப் போறாங்க?” மீலாஜி.

“எதுவுமே தெரியாம கிரிக்கெட் தமிழ் வர்ணனை செய்ய வந்திட்ட… அபிஷ்டு… இங்கிலாந்தும் இந்தியாவும் விளையாடப் போகுது!” கிரிகாந்த்.

“கேப்மாரி படத்ல ஹீரோ எதையோ வாங்க அலையோ அலைன்னு அலஞ்சு ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிரானே எதை… சொல்லுங்க பாப்பம் கிரிகாந்த்!”

“ஆஊன்னா அவுட் ஆப் சிலபஸ்லயிருந்து கேள்வி கேட்டுரு!” மனதுக்குள் ‘பன்னாடை பன்னாடை’

“நாம விரிவா பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நமக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை உங்களுக்கு வாசிச்சு காட்டப்போரேன்… அதில வர்ற காமென்ட்ஸ் உங்களை புண்படுத்தக்கூடும்… டோண்ட் மிஸ்டேக் மீ!”

“வாஷிங்கோ வாஷிங்கோ… எவ்ளவோ பேர் எங்களை கழுவிகழுவி ஊத்ராங்க… மூஞ்சியை தொடச்சிக்கிட்டு எங்கவேலையை பாத்துக்கிட்டுதான இருக்கம்!” மீலாஜி.

“மீலாஜி! புதுசா ஒரு சினிமால ஹீரோவா நடிக்றியாமே,,,, ஹீரோயினை கரக்ட் பண்ணிட்டியா?”

”லுச்சாதனமா கேக்காதிங்க… ஹீரோயினுக்கு கொக்னேஷ் பவன்னு ஆள் இருக்கான்! நீங்க கேவனாவுக்கு ஜொள்ளு விடுங்கோ!”

தொண்டையை செருமிக் கொண்டார் குரியன் ஜோசப். வாசிக்க ஆரம்பித்தார்.

தமிழ் நிலா தொலைக்காட்சியின் விளையாட்டு அலைவரிசையின் நிர்வாக இயக்குநர் அவர்களுக்கு வணக்கம்.

என் பெயர் தஞ்சை தமிழ்நாடன். அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். எனக்கு வயது 60ஆகிறது. மகள் கணவன் குழந்தைகளுடன அமெரிக்காவில் இருக்கிறாள். மகன் மனைவி குழந்தைகளுடன் கோயம்புத்தூரில் இருக்கிறான். இப்போது நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் செய்கிறோம். தினமும் காலையில் வாக்கிங். அதன்பின் தினமலர் வாசிப்பேன். அதன்பின் நூற்றுக்கணக்கான டிவி சானல்களை மாறறி மாற்றி பார்ப்பேன்.

அடிப்படையில் நான் ஒரு கிரிக்கெட் பக்தன். இந்தியா எந்த நாட்டுடன் விளையாடினாலும் பார்ப்பேன். ஆப்கானிஸ்தான் பங்களாதேஷுடன் விளையாடினாலும் பார்ப்பேன்.

கிரிக்கெட் வர்ணனைகளை கடந்த 45 வருடங்களாக கேட்டும் பார்த்தும் வருகிறேன்.

டிவி வருவதற்கு முன் வானொலியில்தான் கிரிக்கெட் வர்ணனைகளை கேட்பேன்.

ஆனந்த சேதல்வாத், சுரேஷ் சரையா போன்ற ஜாம்பவான்களின் ஆங்கில வர்ணனைகளை கேட்டுத்தான் என் ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன்.

சர்வதேச அளவில் டோனி கோஸியர், ரிச்சி பென்னானட் ஜியாப்ரி பாய்காட், பில் லாரி, ரவிசாஸ்திரி, சுனில் காவாஸ்கர், ஹர்ஷா போக்லே போன்றோர் டிவி ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் என் ஆதர்ச நாயகர்கள்.

வானொலியில் தமிழ் கிரிக்கெட் வர்ணனைகள் செய்வதில் சி.ரங்காச்சாரி, அப்துல் ஜப்பார், கேஎஸ்எஸ் மணி, பி, சிவராமகிருஷ்ணன், பி.கணேசன் சிறந்து விளங்கினர், அவர்களின் வர்ணனைகளை கேட்டபோது காதுகளில் தேன் வந்து பாய்ந்தது.

டிவி ஆங்கில கிரிக்கெட் வர்ணனையிலும் இப்போது இலையுதிர் காலம் . காதுகுளிர பிரிட்டீஷ் ஆங்கிலம் கேட்ட காலம் போய் தங்கிலீஷில் வர்ணனை கேட்டு நொந்து போகிற காலம் வந்துவிட்டது. ஆங்கில வர்ணனையிலும் இடஓதுக்கீடு. பாகிஸ்தானியர் உருது கலந்த ஆங்கிலத்தில் வர்ணனை செய்கின்றனர். மைக்கேல் ஹோல்டிங் வாயில் 100மில்லி விளக்கெண்ணெயும் வாழைப்பழமும் வைத்துக்கொண்டு வர்ணனை செய்கின்றார். பங்களாதேஷிகள் இலங்கைவாசிகள் வெங்கடேஸ்வர பிரசாத் போன்ற இந்தியர்கள் ஆங்கில வர்ணனையை கடித்துக் குதறுகின்றனர்.

இப்போது இந்த வேதனையை இரட்டிப்பாக்கி இருக்கிறது உங்களின் தமிழ் கிரிக்கெட் வர்ணனை ஒளிபரப்பு.

குற்றபத்திரிகையில் ‘ஏ1’ என குறிப்பிடுவார்கள். தமிழ் கிரிக்கெட் வர்ணனை செய்து தமிழர்களை ரணகளப்படுத்துவதில் முதல் குற்றவாளி கிரிகாந்த்தான். முன்னொரு காலத்தில் அவர் தடாலடி பேட்ஸ்மேனாக இருந்திருக்கலாம். எல்லா கிரிக்கெட் வீரர்களையும் அவன் இவன் என ஏகவசனத்தில் தான் பேசுகிறார். ‘சோடி வந்தான் கிமித்ஷா வந்தான்’ என்றுதான் சொல்வார் போல. அவரும் மீலாஜியும் அடிக்கும் லூட்டி அருவெறுக்கதக்கது. பேட்ஸ்மேன் யாராவது பந்தை தூக்கி அடித்து கேட்ச் அடித்தால் மூக்கு மேலே ராஜா என்கிறார். பௌலர் சிக்ஸர் அடிக்க எளிதாக பந்தை வீசினால் அரைக்கோழி பந்து என்கிறார். அடிக்கடி இவர் சுயபெருமை பேசுவது சகிக்கவில்லை. தோற்கும் நிலையில் இருக்கும் இந்திய அணியை கட்டாயம் ஜெயித்துவிடும் என குருட்டுநம்பிக்கை அளிப்பது இவர் ஸ்டைல்.

இரண்டாவதாக வர்ணனையாளர் பானி. என்னம்மோ இவர்தான் கிரிக்கெட்டை கண்டுபிடித்தவர் போல அதிமேதாவி பேச்சு.

எஸ்.ஜே.மீலாஜி. இவருக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ்சினிமாவில் இவர் ஒரு கத்துக்குட்டி காமெடியன். ஒரு எல்கேஜி பையன் ஒரு பிஹெச்டி மாணவனுக்கு கைடாக இருப்பதுபோல இருக்கிறது இவரது தமிழ் கிரிக்கெட் வர்ணனை.

சோதாகிருஷ்ணன் கீனிவாசன் வர்ணனை ‘இந்த லோகத்திலே என ஆலாபிக்கும் கதாகாலாட்சேப பாகவதர் ஸ்டைல். எல்லாரும் வாயால் வர்ணனை செய்தால் இவர் மூக்கால் வர்ணனை செய்கிறார்.

சுமாங் கிதானி யாராவது பேட்ஸ்மேன் பவுண்டரி அடித்தால் பவுண்டரிபவுண்டரி பவுண்டரி என வடை விற்க கிளம்பி விடுவார். இவர் ‘அற்புதம்’ என்கிற சொல்லை உச்சரிக்கும் விதம் கேவலம்.

பஸ்ஸல் கொர்னால்டு சேட்டுத்தமிழ், சீனப்பெண் தமிழ், முத்துபடம் பார்த்து தமிழ் கற்றுக் கொண்ட ஜப்பானிய ரசிகனின் தமிழ் போல இவர் ஒரு திருநங்கை தமிழ் பேசுகிறார்.

பத்து முட்டுசந்து கிரிக்கெட்டர் மிகப்பெரிய இளிச்சவாயர். இவரின் சிரிப்பும் இரைச்சல் தமிழும் காதுகளில் இரத்தம் வரவைக்கிறது.

பட்சுமிபதி சாலாஜியின் தமிழ் வர்ணனை ‘ஜஸ்ட் பாஸ்’ ரகம்.

கிஷ்மன் பவராமகிருஷ்ணனின் தமிழ் வர்ணனை மனப்பாடம் செய்து ஒப்பித்தல் போல இருக்கிறது.

படகோபன் கிமேஷ் தமிழ் வர்ணனை செய்யவருகிறாரா சினிமா ஷுட்டிங்களுக்கு வருகிறாரா? நான்கு கோட்டிங்கில் மேக்கப்.

தப்பிரமணியன் சுத்ரிநாத் பேன்ஸி ட்ரஸ் காம்படிஷனுக்கு வருவது போல வருகிறார்.

பெண் தொகுப்பாளினியாக கேவனா வருகிறார். காந்திமதி பதினாறு வயதினிலே ஸ்ரீதேவி காஸ்ட்யூமில் வருவது போல வருகிறார். இவரது தமிழ் கடித்து துப்பும் தமிழ்.

மொத்தத்தில் உங்களது தமிழ்நிலா தொலைக்காட்சியின் கிரிக்கெட் தமிழ் வர்ணனை எட்டுகோடி தமிழர்களின் மானத்தை வாங்குகிறது.

உங்களது தமிழ் கிரிக்கெட் வர்ணனையால் மொழிவளம் காக்கப்படவில்லை. தமிழ்நாட்டு பண்பாடு கலாச்சாரம் மனிதரின் மேன்மையான பண்புகள் சீரழிக்கப்படுகின்றன. உங்களது தமிழ் வர்ணனையால் கிரிக்கெட் அறிவு தேய்கிறது.

உங்களது தமிழ் வர்ணனை சிறுபிள்ளைதனமாக அமெச்சுரிசமாக புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது போல இருக்கிறது. கிரிக்கெட் தமிழ்வர்ணனையை செய்ய கிரிக்கெட் அறிவு தேவையில்லை ரோட்டில் போகும் எவரும் வர்ணனை செய்யலாம் என்கிற கீழ்மையான அபிப்ராயத்தை உங்கள் வர்ணனை ஏற்படுத்துகிறது.

கிரிக்கெட்டிலும் தமிழ்மொழியிலும் பாண்டித்துவம் பெற்றவர்களை விட்டு தமிழ் வர்ணனை செய்யுங்கள். உங்களது தமிழ் கிரிக்கெட் வர்ணனை குழுவில் களையெடுங்கள்.

திருத்தி அமைக்கப்பட்ட உங்களின் தமிழ் கிரிக்கெட் வர்ணனையை கேட்க ஆவலாய் உள்ளேன், வாழ்த்துகள்!

-தஞ்சை தமிழ்நாடன் 60 ஜி மெய்ல் டாட் காம்

கிரிகாந்த்தின் முகம் ஒரு லிட்டர் வேப்பெண்ணெய் குடித்தது போல மாறியது. “நிர்வாக இயக்குநர் சார்! மின்னஞ்சல் வந்ததா, இல்ல நீங்களே எழுதி வாசிக்கிறீர்களா? நாங்கள் சம்பள உயர்வு கேட்பதை மறுதலிக்க சதி செய்கிறீர்களா?”

“கிரிகாந்த்! பொறுமையாக இருங்கள். இந்த தமிழ்நாடனின் மின்னஞ்சலில் ஒன்றை கவனித்தீர்களா? மேலோட்டமாக பார்த்தால் இவர் உங்களை கழுவிகழுவி ஊற்றியிருப்பதாக தெரியும். ஆழமாக கவனித்தால் அவர் உங்களது தமிழ் கிரிக்கெட் வர்ணனையை பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதியிருப்பது புரிபடும். தமிழன் எதனை திட்டுகிறானோ அதனைதான் அதிகம் பார்ப்பான்!”

“நிஜமாத்தான் சொல்றீங்களா?” மீலாஜி.

‘‘அவர் தனது மின்னஞ்சலில் உங்களின் எதன் எதனை மைனஸ் பாயின்ட் என்கிறாரோ அது சானலுக்கு ப்ளஸ் பாயின்ட். அவர் வேண்டாம் என்றதை இனி தொடர்ந்து விரும்பி செய்யுங்கள்…”

டிஆர்பி ரேட்டிங்கை மேஜை மீது விசிறினார் ஜோசப்.

“தமிழ் கிரிக்கெட் வர்ணனை ஒளிபரப்புக்கு 278சதவீதம் வரவேற்பு கூடியிருக்கு. இன்னும் ரேட்டிங்கை அதிகரிக்க யோசனைகள் இருந்தால் கூறுங்களேன்!”

“எங்களுக்கு சம்பள உயர்வு உண்டா இல்லையா என்பதனை முதலில் கூறுங்கள்!”

“கிரிகாந்துக்கு சம்பள உயர்வு மூன்று மடங்கு. மற்ற எல்லாருக்கும் இரண்டு மடங்கு!”

“சபாஷ்டா செல்லக்குட்டி!” கிரிகாந்த்.

“தமிழ் கிரிக்கெட் வர்ணனை தரத்தை மேம்படுத்த மா.நன்னன் மாதிரி ஒரு தமிழறிஞரை வர்ணனையாளராக போட்டு நம்ம அட்ராசிட்டியை பேலன்ஸ் செய்வோமா?” மீலாஜி.

“வாயைக் கழுவுடா!” கிரிகாந்த்.

“நம்ம வர்ணனையாளர் குழுவுல ஒரு சென்னைத்தமிழ் ஒரு திருநெல்வேலித்தமிழ் ஒரு மதுரைத்தமிழ் ஒரு வடஆற்காடு தமிழ் வர்ணனையாளரை சேர்க்கப்போறேன்!”

“படுலோக்கலா போகுமே…”

“இறங்கி அடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டம். தரை லோக்கலா மாறிட்னும்… மாஸ் பக்கா மாஸ் மரணமாஸ்!”

-“பாவா!” பந்தா இது அம்சவல்லி பிரியாணியோட லெக்பீஸ்… எடுத்து கர்ச்முர்ச்னு துன்னு!” மதுரை தமிழ் வர்ணனை

’“ஏலே… என்னலே நிக்க… புல் டாஸா வந்த பந்தை லாங்ஆன் சிக்ஸருக்கு தூக்குலே!” திருநெல்வேலிதமிழ் வர்ணனை.

“டோமரு… இந்த பேமானி ஸ்மித் அவுட்டாகாம பேஜார் பண்ணுரான் பாரு… பும்ரா அவன அசால்ட் பண்ணு… லுச்சா பய லூட்டி கிழியட்டும்!” சென்னை தமிழ் வர்ணனை.

கோடி பார்வையாளரின் விசில் விண்ணை பிளந்தது டமில் வால்க!

கமலகண்ணன்

1 Comment

  • வித்தியாசமான படைப்பு….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...