விலகாத வெள்ளித்திரை – பிம்பம் பதிப்பகம்
அனைவருக்கும் வணக்கம்,
மின்கைத்தடி.காம் குழுமத்திலிருந்து, பிம்பம் பதிப்பகம் என்று புதிய கிளை இந்த தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கி இருப்பதில் மிக்க மகிழ்ச்சியுறுகிறோம். படி வாழ்க்கையின் முதல் படி என்ற கூற்றுக்கு ஈடாகக் கடைசி மனிதர் இருக்கும் வரை, புத்தகம் நிச்சயமாக இருக்கும்.
நிச்சயமாக எந்த ஒரு தனி மனிதரையும் வளர்ப்பது புத்தகம் மட்டுமே அதைப் படிப்பதனால் மட்டுமே அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சி அடைகிறார் என்பது மிகையல்ல. 1093 சாதனங்கள் கண்டுபிடித்தற்குக் காப்புரிமை பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் தான் கண்டுபிடிக்கப் போகும் சாதனத்தின் ஆராய்ச்சிக்கு முன் அதற்குச் சம்மந்தப்பட்ட புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்துப் படிப்பாராம்.
அப்படிப் படித்த பின்னர் அந்த ஆராய்ச்சியாளர்கள் விட்ட இடத்திலிருந்து எடிசன் தன்னுடைய ஆராய்ச்சியைத் தொடர்வாராம். அதனால் பல மணி நேரங்கள் மிச்சம். பணம், பொருள், உழைப்பு அனைத்தும் மிச்சம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
புத்தகம் நம் வாழ்க்கையை உயர்த்த போகும் பெட்டகம். இதை உணர்ந்தவர்கள் அனைவரும், நல்ல மனிதர்களாகச் செல்வந்தர்களாக, மற்றவர்களுக்கும் பிடிக்கும் மாமனிதர்களாக உலா வருவதைப் பார்க்கலாம்.
அவர்கள் எப்பொழுதும் அதிகமாகப் படித்துக் கொண்டே இருப்பார்கள். அதை தன் வாழ்க்கையில் உபயோகப்படுத்தித் தான் மட்டுமல்லாமல், மற்றவர்களையும் உயர வைத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி நம்மை மட்டுமல்லாமல் நம்மைச் சார்ந்தவர்களையும் உயர வைப்பதற்கு மிகப் பெரிய காரணமாய் அமைவது இந்த புத்தகங்கள் தான்.
அந்த புத்தகங்களை கதை கவிதை மட்டுமல்லாமல் தன்னம்பிக்கை கட்டுரைகளையும் புத்தகமாக வெளியிட்டு அனைவரையும் உயர வைப்பதற்கான ஒரு சின்ன முயற்சிதான் இது. அதற்கு மிகப் பக்கபலமாக இருக்கும் எழுத்தாளர் லதா சரவணன் அவர்களுக்கும், உதவியாக இருக்கும் எழுத்தாளர் கணேஷ்பாலா அவர்களுக்கும் நன்றி. அட்டைப்படத்தை வடிவமைத்த கணேஷ்குமார் அவர்களுக்கும் நன்றி.
இந்த கதை மின்கைத்தடி.காம் மின்னிதழில் தொடராக வந்தது. அதை புத்தகமாக அளிப்பதில் முதல் அடி எடுத்து வைத்து மகிழ்கிறோம்.