10,000 மைல் பயணம் – 1| வெ. இறையன்பு IAS

 10,000 மைல் பயணம் – 1| வெ. இறையன்பு IAS
  1. பயணம் செல்வோம்

சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. ‘ஒருவன் மரணமடைவதற்குமுன் பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும்; பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்.’ ஆகாய விமானத்திலோ, குளிர்சாதன அதிவிரைவுத் தொடர்வண்டியிலோ தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு பயணம் செய்பவர்கள் அனுமன் சஞ்சீவி மலையை இடம்பெயர்த்து எடுத்துச் சென்றதைப் போல தங்கள் இருப்பை அடுத்த இடத்திற்குத் தூக்கிச் செல்பவர்கள்.

அவர்கள் பயணத்தால் எந்த அனுபவமோ, அதிசயமோ நிகழாது. ராகுல சங்கிருத்தியாயன், தன்னுடைய ‘ஊர் சுற்றிப் புராணம்’ நூலில் கூறுவதைப் போல, மக்களோடு இயைந்து மேற்கொள்ளுகிற பயணமே நம்மை மேன்மைப்படுத்தும். நடந்தும், பேருந்தில் பயணம் செய்தும், பாதையையும், இடங்களையும் மற்றவர்களிடம் கேட்டுக் கேட்டு முன்னேறி, அந்தப் பகுதி உணவை ருசித்து சாதாரண சூழலில் தங்கி பெறுகிற அனுபவமே பட்டறிவாக நம்மை உயர்த்தும்.

பயணமே மனிதனைப் பண்படுத்துகிறது. அடுத்தவர்களைப் பார்த்து அவர்களை உற்று நோக்கிக் கற்றுக்கொண்டதால் தான் மனித நாகரிகம் வளர்ச்சியடைந்தது. நம் கல்வி ‘போலச் செவதில்தான்’ புலர்ந்தது. உயர்ந்தவற்றை உறிஞ்சிக் கொண்டதால்தான் வளர்ந்தது.

மேன்மையான உள்ளமும், பொறுமையும், சகிப்புத்தன்மையும் உள்ளவர்களே பயணத்தின் நோக்கத்தில் வெற்றிபெற முடியும். பார்சி இன மக்கள் இந்தியாவிற்குப் பிழைப்புத் தேடி வந்தபோது, அப்போது வட இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மன்னரிடம் அனுமதி கேட்டார்கள். அப்போது அந்த மன்னர் ஏற்கெனவெ மக்கள்தொகை தன் நாட்டில் அதிகமாக இருப்பதை உணர்த்த விரும்பினார். அதை நுட்பமாக உணர்த்தும் வகையில், ஒரு குவளை நிறைய பாலைக் கொடுத்தனுப்பினார்.

இந்தக் குவளையைப் போல இந்நாடும் நிரம்பியிருக்கிறது என்பதுதான் அதன் பொருள். அந்தக் குவளைக்குள் கொஞ்சம் சர்க்கரையைக் கலந்து மன்னரிடம் திரும்பக் கொடுத்தனுப்பினார் மூத்த பார்சி ஒருவர். எங்கள் இருத்தல் உங்கள் வாழ்வை இனிமையாக்கும்” என்பதை அவர் உணர்த்தியதைக் கண்ட மன்னர் மனமகிழ்ந்து அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்.

1925ஆம் ஆண்டு நியுகினியா பகுதிக்கு புதிய தாவரங்களையும், விலங்கினங்களையும் கண்டறிவதற்காக வல்லுநர்க் குழு ஒன்று பயணம் செய்தது. அங்கே மேற்குப் பகுதியில் கற்கால மனிதர்களைப் போல வசித்து வந்த இனத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். புதிய மரங்களைக் கண்டுபிடிக்கச் சென்றவர்கள், புதிய மனித இனத்தையே கண்டறிய நேர்ந்தது.

உலகத்தின் எந்தப் பகுதியோடும் தொடர்புகொள்ளாமல், எங்கும் பயணம் செயாமல் தீவாகத் தேங்கியிருந்ததனால்தான், அவர்கள் கற்காலத்தைத் தாண்டி வெளியே வரமுடியவில்லை என்பதை உணர முடிந்தது. இன்றும்கூட இருந்த இடத்திலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் கற்கால மனிதர்களை நாம் காண முடியும்.

நிறைய பயணம் செய்பவர்கள் முதிர்ச்சியோடும், பொறுமையோடும் திகழ்கிறார்கள். பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து, அவர்களோடு அனுசரித்து வாழும்போதுதான் நம்மையும் அறியாமல் நம் நடவடிக்கைகளில் தெளிவும், சரியான அணுகுமுறையும் ஏற்படும்.

மனித இனத்திற்குத் தன்னைச் சுற்றியிருக்கும் இடங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. அவர்கள் எழுத்துக்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே வரைபடத்தைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எஸ்கிமோக்கள், சிவப்பிந்தியர்கள் போன்றோர் தங்களுக்குப் பழக்கமான நிலப்பகுதிகளைப் படங்களாக வரைய ஆரம்பித்தார்கள். அதுவே நாளடைவில் வரைபடமாக வளர்ச்சியடைந்தது. உலகத்தின் மிகப் பழமையான வரைபடம் இப்போது ஹார்வேர்டிலிருக்கும் செமட்டிக் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அது பாபிலோனின் மண் பட்டயத்தில் 4500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டது. தன்னைச் சுற்றியிருக்கும் இயற்கையை அறிந்துகொள்ளும் ஆர்வம் மனித இனத்திற்கு இன்று மட்டுமல்ல, தொன்றுதொட்டு இருந்தது. அதுவே இருத்தலின் மாற்றங்களையும், இயற்கையின் சீற்றங்களையும் எதிர்கொண்டு வாழ அவனுக்கு உதவியது. இடம்விட்டு இடம் பெயர்ந்ததால்தான் பேராபத்துகளிலிருந்து மனித இனம் தப்பியது.

புத்தர் உலகெங்கும் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்தியது, அயராமல் அவர் செய்த பயணங்களால் விளைந்தது. ஓரிடத்திலேயே தங்கினால் அந்த இடத்தின் மீது பற்று வந்துவிடும். ‘பற்றுகொள்கிற நெஞ்சில் புற்று வந்துவிடும்’ என்பதால், தொடர்ந்து இடங்களை மாற்றிக் கொண்டேயிருந்தவர் அவர். ஓரிடத்தில் தங்கி எந்த ராஜ உபசாரத்தையும் அவர் மேற்கொள்ளாததால், அவர் காட்டிய அன்புநெறி பாரத நாடெங்கும் பரவியது. அவர் பிறந்த இடத்திலிருந்து தொடங்கி, உபந்நியாசம் செய்த இடங்களையும், மெஞானம் அடைந்த இடத்தையும், பரிநிர்வாணம் அடைந்த தலத்தையும் கண்டு உணர்வதற்கு வசதியாக ‘மகா பரிநிர்வாண்’ என்கிற அதிவிரைவு ரயிலை இந்திய ரயில்வே நிர்வாகம் தொடங்கி உள்ளது. புத்தர் குதிரைமீது ஏறியோ, பல்லக்கில் ஏறியோ பவனி வரவில்லை. கால்நடையாக கரடுமுரடான பாதைகளில் அவர் செய்த பயணமே, அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. அவர் எந்த இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி மடத்தை நிறுவும் நெறியைப் பின்பற்றவில்லை.

பயணங்களால்தான் வரலாற்று நூல்கள் உருவாயின. முதல் வரலாற்று நூலை எழுதியவர் ஹிரோடட்டஸ். அவர் ‘சரித்திரங்கள்’ என்கிற பெயரில் ஒன்பது புத்தகங்களை எழுதினார். ஒரு சுற்றுலாப் பயணியைப் போல 2430 ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்து நாட்டிலிருக்கும் மூன்று பிரமிடுகளை அவர் பார்வையிட்டார். பயணத்தின்போது அவர் பார்த்தவையும், கேட்டவையுமே அவரை நூலாசிரியராக மாற்றியது. பயணம் நமக்குள் இருக்கும் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருகின்ற ஒளிச்சாதனமாத் திகழ்கிறது.

மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பியபோது அவரிடம் தலைவர்கள் இந்திய விடுதலைக்காகப் பாடுபடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு அவர், இந்தியாவைச் சுற்றிப் பார்க்காமல் இந்திய விடுதலைக்காகப் போராடுவது சாத்தியமில்லை என்று சொல்லி, நம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியது மகாத்மா காந்தியினுடைய பயணம்தான். ‘ காந்தப்புரா’ என்கிற ஆங்கில நாவலில் ராஜாராவ் சுவையான ஒரு தகவலை உறுதிப்படுத்துகிறார்.

இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் தலப்புராணத்தைப் போல காந்தி புராணம் ஒன்று இருந்தது. காந்தி இங்குதான் உறங்கினார். கஸ்தூரிபா அம்மையார் இங்குதான் துணி துவைத்தார்” என்று காந்தி செல்லாத கிராமத்தில்கூட காந்தியைப் பற்றிய புனைவியல் பிம்பங்கள் இருந்தன. இன்றளவு தகவல் தொழில்நுட்பம் சிறிதுகூட வளர்ச்சியடையாதிருந்த அந்தக் காலத்தில் கடினமான பாதைகளில் காந்தி மேற்கொண்ட சிரமமான பயணங்கள்தான் இங்கிலாந்தின் இரும்பு இதயத்தை உருக்கித் தள்ளியது. ஒரு மூக்குக் கண்ணாடியையும், கைத்தடியையும் வரைந்தாலே அது காந்திதான் என்கிற அளவிற்கு அவர்மீது மக்களுக்குப் பற்று, அவர் பயணத்தால் விளைந்தது.

பயணங்களால் தேசங்கள் இணையும், தடுப்புச் சுவர்கள் உடையும், அன்பு பெருகும், பண்பாடு பரிமாறப்படும், விஞ்ஞானம் செழிக்கும், வாழ்க்கைத் தரம் உயரும்.

(தொடரும்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | 

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...