அறிஞர் அண்ணா | சா.கா.பாரதி ராஜா
தடியின் பிள்ளையே!
தமிழைத் தாங்கிப் பிடித்தாய்!
உன் கரகரத்த குரலில்
ஓடி விளையாடியது தமிழ்!
உன் பேச்சைக் கேட்க
இரவுப் பனியிலும்
அமர்ந்திருந்தது கூட்டம்
புது விடியல் காண!
உதயசூரியனே!
ஒரு கோடி கரங்களாக
உயர்ந்து கேட்டது
உன் ஒற்றை விரல்!
கட்டை மீசை
குடையாக நின்றது
தமிழ் உதிர்த்த இதழுக்கும்
தமிழ் நாட்டிற்கும்!
குட்டை உருவம்
அமெரிக்காவையும் தொட்டது
அதீத அறிவாற்றலால்!
வெள்ளாடை
சுயமரியாதை திருமணங்கள்
நடத்தியது
வெள்ளை உள்ளத்தால்!
காஞ்சி
நூல் கொண்டு
நெய்து தந்தது
ஓர் பேரறிஞரை!
நல்ல தம்பியை இயக்கிய
எங்கள் அண்ணாவே!
இலட்சம் நல்ல தம்பியர்
நின்றனர்
இலட்சியத்தோடு
உன் கை கோர்த்து!
ஆதிக்க சக்திகளுக்கெதிராக
துடித்து எழுந்தாள்
உன் ’வேலைக்காரி!’
பொடி போட்டுப் பேசியவரே!
உன் பேச்சின் எழுச்சியில்
தும்மி அடங்கினர்
எதிரிகள்!
உன் நா
பெயர் சூட்டியதால் என்னவோ!
இது இன்றும்
உணர்வுள்ள தமிழ்நாடு!
கடமையைக் கொண்டு
கண்ணியத்தோடு பேசினாய்
கட்டுப்பாடோடு நின்றது
தமிழர் கூட்டம்!
வாழ்ந்து
சாதித்தவர் மத்தியில்
இறந்தும் சாதித்தவன்
நீயல்லவா!
தமிழ்நாடே கூடி
சுமந்து சென்றது
உன் பொன்னுடலை!
உடலைப்
புற்றுக்கு கொடுத்தாய்!
உயிரைத்
தமிழ்ப் பற்றுக்குக் கொடுத்தாய்!
அதிகாலையில் பார்க்கிறோம்!
வங்கக் கடற்கரையில்
இருபுறமிருந்து விடியல் தருகின்றன
இரு சூரியன்கள்!…