காலச் சுவடுகள் SSR – 1 | டி.கே. ரவீந்திரன்
தேசியத்தின் வழித்தடத்தில் இந்தியாவெங்கும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன் ஆயுட்காலம் நீண்ட வருடங்கள் நீடிக்கவில்லை. மாநிலங்கள் தோறும் மாற்றுக் கருத்துகளின் எழுச்சித் தாண்டவத்தில், காங்கிரஸ் பேரியக்கம் ஆட்சிக் கட்டிலை விட்டு கீழிறக்கப்பட்டது. அத்தகையதோர் மாற்றத்துக்கு தமிழகமும் தன்னைத் தயார்படுத்திக் கொண்ட வருடம் 1967. ஆம் ! அந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதுவரை இங்கே ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியினை இழந்தது.
வியக்கத்தக்க வகையில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் திராவிட முன்னேற்றகழகம் ஆட்சியினைப் பிடித்தது.
சி.என் அண்ணாதுரை என்ற எளிய மனிதர் தமிழகத்தின் பெரும்பான்மையினராலும் குறிப்பாக கழகத் தோழர்களாலும் அண்ணா எனப் பாசமுடன் அழைக்கப்பட்ட அந்த அரசியல் வித்தகரின் தலைமையில் இங்கே திராவிட இயக்கத்தின் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தியத் திருநாடே அந்த சாதனையாளனைத் திரும்பிப் பார்த்தது? உலகின் பன்முகக் கண்களும் தமிழ்நாட்டின் மீது பதித்தன.
எப்படி இத்தகையதோர் வெற்றியினை இவரால் எட்ட முடிந்தது ? கேள்விகளின் வடிவங்கள் மாறினாலும் அவைகளின் கருப்பொருள் ஒன்றாகவே இருந்தன. அண்ணா தமிழக அரசியலை தலைகீழாக மாற்றிக் காட்ட தன் வசம் எடுத்துக் கொண்ட எளிய ஆயுதம் எதுவாக இருந்தது ?
இவைகளுக்கெல்லாம் ஒரே விடை மொழியும் கலையும் ஆம் ! தமிழைத் தலைநிமிரச் செய்யும் அவரது அடுக்கு மொழிப் பேச்சும் அறிவார்ந்த உரைநடையும் இளந்தலைமுறையினரைக் காந்தமெனக் கவர்ந்திழுக்க பட்டிதொட்டியெல்லாம் பாமரர்களைச் சென்றடையும் திரைப்பட ஊடகத்தையும் தன் கருத்துக்களைப் பரப்பும் கருவியாகக் கையாண்டார்.
இன்று போல் திரைப்படங்கள் பரவலாகாத அந்த நாட்களில் நாடகத்தையும் அவர் தனது பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.
இப்படிக் கலையுலகின் பரிமாணங்களை நாடகம், திரைப்படம், பேச்சு, உரைநடை ஆகிய அம்புகளை ஒவ்வொன்றாய் தொடுத்து, களை மண்டிய காங்கிரஸ் ஆட்சியினைக் கலைத்தார். ஆம் ! கலை அவருக்கு கைகொடுத்தது.
அந்த கலையுலகின் படை திரட்டுமு தளபதிகளாய் அவருக்கு பின்னால் அணிதிரண்டு நின்றவர்கள் பலர் இருந்தபோதும் குறிப்பாக ஒருசிலர் என்ற பட்டியலில் நம் முன்னே வந்து நிற்பவர்கள் மூவர். கலைஞர் கருணாநிதி, புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர்.மற்றும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் இதில் முன்னவர் அண்ணாவைப் போலவே திரைப்பட வசனங்களின் மூலம் தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டவர். ஏனைய இருவரும் நடிப்புக்கலையினால், கழகக் கொள்கைக்கு வலுசேர்த்தவர்கள்.
இதில் எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகிய இருவரும் அண்ணாவுடன் அறிமுகம் ஆவதற்கு முன்னரே அந்த தலைவனுடன் தானும் ஒன்று படக்கலந்து ஒரே கொள்கையில் நடைபயின்றவர் என்ற பெருமை எஸ்.எஸ்.ஆரையே சாரும். அன்றும், இன்றும் என்றும் தனது இலட்சிய நோக்கை விட்டு கொடுக்காமல், அரசியலிலும் கலையுலகிலும் சந்தர்ப்பங்களின் சறுக்கல்களுக்கு ஆளாகாமல் ஆழ்ந்த கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தவர் எஸ்.எஸ்.ஆர். அவரது வாழ்க்கை ஏட்டின் பக்கங்களில் நிரம்பித் ததும்பும் ஒவ்வொரு வரிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றத்தை நமக்கு விலாவரியாக எடுத்துரைக்கும்.
வசதியும் வாய்ப்பும் பெருமளவில் குவிந்திருந்தும் ஓர் மாவட்டக் கல்வியதிகாரியின் மகனாகப் பிறந்தும், சிறுவயதிலேயே கல்வியை உதறிவிட்டு கலைப்பித்து தலைக்கேற நாடகத்தை நாடிய அந்த நடிகனின் நெஞ்சில் நாயகனாய் இடம் பிடித்தார் அண்ணா.
அண்ணாவின் அருமைத் தம்பியாகவும், எம்.ஜி.யாரின் உடன் பிறப்பாகவும், கலைஞரின் நண்பராகவும், தன்னை அரசியல்வானில் நிலை நிறுத்திக்கொண்ட எஸ்.எஸ்.ஆர் தன் வாழ்க்கைப் பயணத்தின் கடந்த காலங்களை அதிலும் அரசியல் பாதையில்தான் சந்தித்தவர்களையும், சாதித்தவைகளையும் வாழ்க்கைப் பதிவேட்டிலிருந்து நம்முன்னே எடுத்துரைக்கும் இந்த தொடர் மின்கைத்தடி மின்னிதழின் வாசகர்களின் கருத்து அமையப்போகும் அற்புத விருந்து.
இனி….
இலட்சிய நடிகர்……..
வாழ்க்கைப் பாதையின் கடந்த காலச் சுவடுகளை எண்ணிப்பார்ப்பதிலும், மெல்ல மெல்ல அந்த நாட்களை நோக்கிப் பயணிப்பதிலும் ஓர் இனிமையான சுகம்அனைவருக்கும் பொதுவானது. அதிலும் என்னைப் போல், அரசியலிலும், கலையுலகிலும் ஒருசேரப் பயணித்த ஒருவனின் பசுமையான நினைவுகளுக்கு ஏது பஞ்சம் ?
திராவிட இயக்கத்தின் வழியில் நடைபோட்டு தேர்தல் என்னும் ராஜபாட்டையின் மூலம்தான் கண்ட கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்த அமரர் அறிஞர் அண்ணாவும், அவருக்குப் பின்னால் கழகத்தையும், ஆட்சியினையும் ஒருங்கே அழைத்துச் சென்ற கலைஞர் கருணாநிதியும் அண்ணாவின் பெயரால் தனி இயக்கம் கண்டு, இந்திய வரலாற்றில் ஒரு நடிகனால் நாடாளவும் முடியுமென்று நிரூபித்து காட்டிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் பயணித்த அந்த பாதையில், அவர்களுடன் நானும் ஒருவனாக நடைபோட்ட அந்த நாட்கள் ஒன்றா இரண்டா ? சொல்லச் சொல்லத் திகட்டாத அந்த சுகமான அனுபவங்களை சொல்லி முடிக்கத்தான் எளிதில் முடியுமா ?
முடியாதுதான் இருந்தும் முயன்று பார்க்கிறேன். முத்தெடுக்க முழ்குபவனின் நிலை போல் கடந்த காலக் கடலின் ஆழ்த்திட்டுகளில் மூழ்கிக்கிடக்கும் நினைவுச் சிப்பிகளிலிருந்து அந்த அனுபவ முத்துக்களை சேகரித்து வழங்குகிறேன். உங்களுக்காக மின்கைத்தடி மின்னிதழின் வழியே !
உங்கள்
டி.கே.ஆர்
| அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 |