முதிர் கண்ணன் – ஆரதி
இந்த இரவுகளில் எல்லாம்
அவன் தூங்குவதே இல்லை.
தூங்காமல் கனவுக்காணும்
அவன் அவனுக்கே நெடுந்துயரம் தான்.
அவன் இவ்வாறு கனவு
காண்பதை தன் பதினாறு
வயதில் ஆரம்பித்திருந்தாலும் கூட
முப்பதைத் தாண்டியப் பிறகுதான்
அந்த கனவுகளின் கொடூரம்
அவன் அறிந்திருந்தான்.
நிமிர்ந்தும் தூங்க முடியவில்லை
சரிந்தும் தூங்க முடியவில்லை
கமந்தும் தூங்க முடியவில்லை
கனவுகள் கரப்பான்ப்பூச்சிகளைப் போல்
அவனை குடைந்தெடுத்தன.
இப்போதெல்லாம் இருக்
கைகளும் அவனுக்கு
சலித்து பாரமாய் இருந்தன.
நிம்மதியற்ற இரவுகள்
நெடுந்தூரப் பயணத்தை ஒத்ததாய்
முடிவறியாப் பாதையாய் சென்றது.
இன்னும் சொல்வதானால்
இரவுகளை விட பகல் தான்
முற்றிலும் அவனுக்கான
அமைதியைக் கொடுத்தது.
“கனவுகளின்” தொல்லை இல்லை.
வீடில்லை படிப்பில்லை
வழுக்கைத்தலை
சம்பளம் போதாது
நாத்தனார் இருக்கிறாள்
யு.எஸ். க்ரீன்கார்ட் இல்லை
அப்பா அம்மா இருக்காங்க
துபாய் போவாரா?
இல்லங்க…தூரத்தில பொண்ணைக்
கட்டிக்கொடுக்கிற ஐடியா இல்ல
இப்படி ஏதேதோக் காரணங்கள்
திருமண முட்டுக்கட்டையாய்.
இறுதி நம்பிக்கையாய் இன்றுவரும்
செய்திக்காகக் காத்திருந்தான்.
எப்போதும் போலதான்.
ஆனால் நிராகரிப்பிற்கு
புதியக் காரணம்
மப்பிள்ளைப் பையனுக்கு
வயசு அதிகமாம்.