ஒரு அடைமழை – ஜி.ஏ.பிரபா
ஆடிக் களைத்து
அடங்கி விட்டது மழை.
குழந்தையின் சிணுங்கலாய்
கொஞ்சுகிறது தூறல்.
வான்முகம் பார்த்துக் கிடந்த
வறண்ட ஆற்றில் உயிர்த்துளி
உள்ளே விழுந்த அமுதத்தில்
உயிர்த்தெழுந்தது நிலம்.
மழையின் மெல்லிசை
மனதின் இடுக்குகளில்
ஒலிக்கிறது ஸ்வரங்களாய்
ஓய்ந்து கிடந்த உணர்வுகள்
உற்சாகமாகின்றன.
மழை வந்த பொழுதில்
மலர்ந்து விடுகிறது மனம்
மண்வாசனையும்,மழைநீரும்
கருத்த மேகமும்,காற்றும்
கைபிடித்து அழைத்துச் செல்கிறது
கனவுலகிற்கு…
மண்ணுக்கு மட்டுமல்ல
மனதிற்கும் தேவை
அவ்வப்போது அடித்துப் பெய்யும்
ஒரு அடைமழை
அன்பு மழை.
– ஜி.ஏ.பிரபா