என்ன கொடுமை இது? – கலைவாணி இளங்கோ
“விற்பதற்காக பள்ளியில் கொடுத்த நுழைவுச்சீட்டுகளை எவ்வளவு தேடியும் கிடைக்கல!” என்ற பதற்றத்தில் என் கைகள் நடுங்குகின்றன.
பள்ளிக் கலைவிழாவிற்கான 50 நுழைவுச்சீட்டுகளை என் பையில்தானே வைத்திருத்திருந்தேன். ஆனால், பையில் எந்தப் பகுதியில் வைத்தேன் என்பதை என்னால் நினைவுகூற முடியவில்லை. 5 நாட்களில் 7 தேர்வுகள்.பதற்றத்தால் என் கைகள் தொடர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தன. குளிர்ச்சட்டை இல்லாமல் பனிக்காலத்தில் கீயுபேக் நகரில் நடந்துபோனால்கூட இப்படி நடங்காது.
ஆனால், எனக்குப் பதற்றம் அளவிற்கு மீறி போய்க் கொண்டிருந்தது. 50 நுழைவுச்சீட்டுகளைத் தொலைத்துவிட்டேன் என்றால் அதற்குள்ள பணத்தை நான்தான் கட்டியாகி வேண்டும். 50 நுழைவுச்சீட்டுகளின் மதிப்பு 300- 400 வெள்ளியாவது ஆகும். ஆசிரியருக்கும் நான் என்ன பதில் கூறுவது, என் சகமாணவர்களுக்கு நான் என்ன பதில் கூறுவது எனத் திகைத்து என் படுக்கையில் உட்கார்ந்திருந்தேன்.
பணிப்பெண் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்து ‘தம்பி மைலோ, ரோட்டி ஏதாவது சாப்பிடுறீங்களா, ஏன் முகம் எல்லாம் வாடி போயிருக்கு” எனக் கேட்டுக்கொண்டே என் அறையைச் சுத்தம் செய்தார். சுமார் 15 ஆண்டுகளாகவே என் வீட்டில் பணிபுரிந்து வருபவர் அவர். அவர் எனக்கு இன்னோரு சகோதரி ஆவார்.
‘அக்கா, என் ஆசிரியர் எனக்கு 50 நுழைவுச்சீட்டுகளை விற்க கொடுத்தார். இப்போது அது காணும். பையில்தான் வைத்தேன். ஆனால், பணப்பை, புத்தகங்கள் என எல்லாவற்றையும் தேடிவிட்டேன். காணல. வயித்தைக் கலக்குது. மனசே சரியில்ல. நாளைக்கு இன்னோரு தேர்வு வேற இருக்கு. படிக்கவே முடியல. ஏதாவது யோசனை சொல்லுங்க” என நான் அந்த அக்காவை அணுகினேன்.
‘சரி டா தம்பி, உன்னுடைய பள்ளிப்பையில எப்போ இந்த நுழைவுச்சீட்டுகளை வைச்சே? ஆசிரியர் உன்கிட்ட கொடுத்ததைப் பிறர் பார்த்தாங்களா? பையில் எந்தப் பகுதியில் வைப்பே” எனக் கேள்விக்கணைகளைத் தொடக்க ஆரம்பிக்க நான் மங்காத்தா அஜித் போல ஒவ்வொரு காட்சியையும் மீண்டும் என் மனத்திரையில் ஓட்டினேன்.
‘நேத்து என் ஆசிரியர் கொடுத்ததை என் நண்பர்கள் யாரும் பார்க்கல. பையில் ஒரு புத்தகத்தில்தான் வைச்சேன். ‘என்னது. புத்தகம். அது….. இரவல் வாங்கின புத்தகம். அது என்…. பையில்… இல்லை… ஏன்….. நான்தான் திருப்பிக் கொடுக்கலையே…
அப்போ புத்தகம் எங்கே டா மடையா” என என் மனசாட்சி காறி துப்பியது!
“அக்கா எனது இரவல் புத்தகத்தைப் பார்த்தீர்களா? ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாபாபாபாபாபாபாபாபாபா………………… எனக்குத் தலையே சுத்துதே” என நான் புலம்பும்போது என் தாத்தா கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு எம்ஜி ஆர் போல என் அறைக்குள் நுழைந்தார்.
‘தம்பி, இதோ உன் புத்தகம். நான்தான் பூங்காவில் போய் படிக்க ஒரு புத்தகம் தேடினே. ஒரு பெரிய அண்டா போல உன் பை திறந்திருந்துச்சு. இந்தப் புத்தகத்தை எடுத்திடுக்கிட்டேன். உள்ளே ஏதோ நுழைவுசீட்டுகள் இருக்குது பாரு. தா… வைத்துக்கொள். நல்ல புத்தகம்” என்று கூறி என்னிடம் அதைக் கொடுத்துவிட்டு விசில் அடித்தப்படி நடந்து சென்றார். அக்காவிற்குச் சிரிப்பும் எனக்குக் கடுப்பும் மாறி மாறி வந்தன.
– கலைவாணி இளங்கோ, சிங்கப்பூர்.