உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 11 – சுதா ரவி
காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி,
ஒதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே……
தில்லை நடராஜனின் முன்னே கண்மூடி நின்ற கார்த்தியின் மனதில் பல்வேறு குழப்பங்கள். பிச்சாவரதிற்கு சென்று வந்த பின்னர் மனதில் உள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று நினைத்தவனுக்கு மேலும் குழப்பமே மிஞ்சியது…
ஹரியின் ஆடியோ பைலை மீண்டும் மீண்டும் கேட்ட பிறகு அவன் தன் ஆதாரத்தை கோவிலில் எங்கோ விட்டு சென்றிருக்கிறான் என்ற அளவுக்கு புரிந்தது. ஆனால் அது எங்கே என்பது மட்டும் புரியாமல் அதை மீண்டும் மனதில் ஒட்டிப் பார்த்தபடியே பிரகாரத்தில் நடந்தான்.
‘அம்பலத்தானை காண ஆலயம் சென்று விட்டு – உன் பாதம் காப்பான் பொன்னம்பலத்துக்கு விடை கொடுக்கும் முன் – தகப்பனுக்கும் பாடம் சொல்லியவன் நானே என்றுரைத்து கேள்விக்கு விடை எடு……………’
அந்த வரிகளையே நினைத்துப் பார்த்தவனுக்கு….கோவிலுக்கு வந்து விட்டோம் ஆனால் இங்கே எந்த இடத்தில் ஆதாரத்தை தேடுவது என்று புரியாமல் கோவிலை பலமுறை சுற்றி வந்து ஒன்றும் புரிபடாமல் வெளியே வந்தான். காலனியை போட்டுக் கொண்டு கடையில் இருந்து வெளியே வரும் நேரம் அடுத்த கடைகாராரை யாரோ …..”பொன்னம்பலம்…..பொன்னம்பலம் என்று அழைக்க” கடையை விட்டு நகர்ந்தவன் ஆணி அடித்தார் போல் அப்படியே நின்று விட்டான்.
தன்னை அறியாமலேயே ஹரி சொன்ன வரிகளுக்கு மனம் விடை காண விழைந்தது. அம்பலத்தான் ஆலயம் என்றால் தில்லை நடராஜர் கோவிலை தான் சொல்கிறான். உன் பாதம் காப்பான் என்றால் செருப்பு போடும் கடை…பொன்னம்பலத்துக்கு விடை கொடுக்கும் முன் சென்று ‘தகப்பனுக்கு பாடம் சொல்லியவன் நானே’ இந்த வாக்கியங்களை கூறினால் அவன் ஆதாரத்தை கொடுப்பான் என்று அவன் மனதில் உறைக்க அவசரமாக திரும்பி அவனிடம் சென்றான்.
பொன்னம்பலத்திடம் சென்று தனியே பேச வேண்டும் என்று சொல்லி அவனை கடைக்கு உள்ளே அழைத்து சென்று ஹரி சொல்லியபடி சொல்ல…அவனோ கார்த்திகேயனை சந்தேகத்துடன் பார்த்து……”நான் எப்படி நம்புறது நீங்க தான்னு ஆதாரம் ஏதாவது வேணும்” என்றான். அவன் கேட்டதும் தன் மொபைலில் இருந்த ஹரியின் ஆடியோ பைலை காண்பித்து, தன் வேலைக்கான அட்டையையும் காண்பித்தான். அதை பார்த்ததும் திருப்தியுடன் உள்ளே சென்று தடிமனான ஒரு கவரை கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தான். அதுவரை அலைபுருதளுடன் இருந்த மனதில் சற்று தெளிவு பிறந்தது.
அவனை பின் தொடர்ந்தவர்கள் அவன் கோவிலை நான்கு முறை சுற்றியதிலேயே அலுத்து போய் இருந்ததால் ,அவன் அடுத்து அடுத்து இருந்த செருப்பு கடைக்குள் சென்று வந்ததை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கவரை வாங்கியவனோ அதை தன் சட்டைக்குள் வைத்துக் கொண்டு ஹோட்டலை நோக்கிச் சென்றான். தன்னறைக்குள் சென்று கதவை சாத்தி விட்டு அவசரம் அவசரமாக அதை பிரித்து அதிலிருந்ததை படிக்க ஆரம்பித்தான்.
முதல் பாதியில் அதிலும் சிவதாண்டாவத்தின் கடத்தல் தொழிலின் அடி முதல் பாதம் வரை அனைத்தையும் புட்டு புட்டு வைத்திருந்தான் ஹரி. எப்படி இவ்வளவு ஆதாரங்களை ஒற்றை ஆளாய் சேகரித்தான் என்பதில் அதிசயித்து போனான் கார்த்தி. அடுத்து ஆர்ஜேவின் பலம் பலவீனம் அனைத்தையும் படித்தவனது நெஞ்சு அடைத்து போனது.
அவன் முற்றிலும் எதிர்பாராத உண்மைகள் அவன் இதயத்தை தாக்க அதன் பாதிப்பில் மூச்சு விட மறந்து போய் நின்றான். தொழில் ரீதியாக எந்த ஒரு சம்பவத்தையும் சாதரணமாக எடுத்துக் கொள்பவன் தனக்கு நெருக்கமான ஒன்றை பற்றி கேள்விப்பட்ட போது புத்தி பேதலித்து நின்றான். உடலில் அனைத்து பாகங்களும் உணர்வற்று போன நிலைக்கு தள்ளப்பட்டான்….மனதின் பாரம் நெஞ்சை அழுத்த கண்கள் கண்ணீரை சிந்த, என்னதான் உடல் வலுவுள்ள ஆண் மகனாய் இருந்தாலும் தான் கொண்ட அன்பிற்காக மனம் வருந்தி அமர்ந்து விட்டான்.
இனி அடுத்த என்ன என்று யோசிக்கவே மனம் நடுங்கியது. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் என்று தெரியவில்லை….அறை கதவை யாரோ தட்ட அதில் தெளிந்தவன் கதவை திறந்து பார்த்தது பதில் சொல்லிவிட்டு போனை கையில் எடுத்து ஆதிக்கு அழைத்தான்.
அவன் போனுக்காக காத்திருந்தவன் போல உடனே…..” ம்ம் சொல்லு கார்த்தி…….ஏதாவது தடயம் சிக்கிச்சா?”என்றான் ஆதி.
“ நான் ஒரு டாக்குமென்ட் என்னோட டிரைவ்ல ஷேர் பண்றேன் உனக்கு அதை படிச்சு பாரு.ஒரு அரை மணி நேரம் பொறுத்து கூப்பிடுறேன்.”என்றான்.
அவனது பதிலில் சட்டென்று மகிழ்ந்து” கார்த்தி ஹரியோட ஆதாரம் கிடைச்சிருச்சா?”என்று ஆர்வத்துடன் கேட்டான் ஆதி.
அதிர்ச்சியில் இருந்து மீளாத மனத்துடன்……”ம்ம்……நீ படி…….அப்புறம் பேசலாம்” என்று சொல்லி வைத்து விட்டான்.
‘என்ன இவன் அதை படிச்சிட்டு என்னவோ பயங்கர சோகமா இருக்கான். அப்படி என்ன விஷயம் அதில் கண்டு பிடிச்சு இருப்பான் ஹரி’ என்று யோசித்துக் கொண்டே அவசரமாக மெயிலை திறந்து கார்த்தி அனுப்பியதை படிக்க ஆரம்பித்தான். சிவதாண்டவத்தின் தொழில் ரகசியங்கள் அனைத்தும்
சிக்கியதில் மகிழ்ந்து போய்…’சபாஷ் ஹரி..இதை சாதிச்ச நீ உயிரோட இருந்திருந்தா எங்களுக்கு சந்தோஷமா இருந்திருக்கும்…என்று நினைத்தவன் மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தவனின் முகம் பேயறைந்தவன் போல் ஆனது. இந்த மாதிரி ஒரு விஷயத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. இதை எப்படி கார்த்தி தாங்குவான் என்று அவனுக்காக எண்ணியவன் உடனே அவனுக்கு அழைத்தான்.
போனை பண்ணியவனுக்கு அவனிடம் பேச மனமில்லாமல் தவித்தது….” “கார்த்தி..கார்த்தி” என்று அழைத்தவனின் நாக்கு உலர்ந்து வார்த்தை தொண்டையை விட்டு வர மறுத்தது……
அவனது தவிப்பை உணர்ந்து கொண்டு” படிச்சுட்டியா ஆதி?”என்று கேட்டான் கார்த்தி.
“ம்ம்ம்…இதில் இருக்கிறது உண்மையா கார்த்தி? ஆனா எப்படி?என்னால நம்பவே முடியல.அவனா உத்ராவை கடத்தி இருக்கான்?ஆனா ஏன்?”
“ நானும் நம்பி இருக்க மாட்டேன் ஆதி ஆனா என்னோட இன்றைய பயணம் பிச்சாவரத்தில் இது உண்மையாய் இருக்கும்னு என்னை நினைக்க வச்சு இருக்கு”.என்று சொன்னவனின் குரல் கரகரத்து போய் இருந்தது.
“என்ன கார்த்தி…….இப்போ நாம முதலில் பார்க்க வேண்டியது இதை தான்.என்ன சொல்ற? நாளைக்கே நாம இறங்கிடலாமா சொல்லு?”
“இல்ல………முதலில் சிவதாண்டவத்தோட தொழிலில் கை வைக்கணும் …..இப்போ தான் நமக்கு தேவையான ஆதாரங்கள் கிடைச்சு இருந்தாலும் முக்கியமான ஆதாரம் நமக்கு கிடைக்கல.அங்கே கையை வச்சாலே அவன் உஷாராவான் அப்போ மீட்டுடலாம்.நமக்கு இப்போ ரெண்டு எதிரிகள்.ரெண்டு பேருமே சாதாரணமானவங்க இல்லை.அதிலும் ஆர்ஜே வெறி பிடிச்சவன்.”
“நாம நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுலபம் இல்லேன்னு தோணுது…..என்னால இன்னும் ஜீரணிக்க முடியல……இந்த மாதிரி ஒன்றை சத்தியமா நான் எதிர்பார்க்கல………நீ எப்படி தாங்குவே கார்த்தி?”
(தொடரும்)
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |அத்தியாயம் – 11 |