தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 4 – ஆரூர் தமிழ்நாடன்

 தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 4 – ஆரூர் தமிழ்நாடன்

அத்தியாயம் – 4

புத்திக்கு நெருடல்!??????

சிலுசிலுவென்னும் காற்று கூட மெளனமாகத்தான் வீசிக்கொண்டிருந்தது. அந்தத் திடல் முழுக்க நிசப்தம். நிசப்தத்துக்கு மத்தியில் எங்கிருந்தோ ஒரு குயில், காற்றில் வர்ணக் கோடு கிழித்துவிட்டு அமைதியானது.

‘அன்பான என் உறவுகளே! உங்களை வணங்குகிறேன். இந்த உலகம் உங்களைக் கொண்டுதான் இயங்குகிறது. அதனால் உங்களை ஆராதிக்கிறேன். இந்த உலகின்

உயிர்நாடி நீங்கள். நான் நீங்களாயிருக்கிறேன்; நீங்கள்தான் நானாயிருக்கிறீர்கள். உணர்வால், மனதால், எண்ணங்களால் நானும் நீங்களும் வேறு வேறல்ல’ என அறிவானந்தாவின் மிருதுவான குரல் காற்றில் சங்கீதம் போல் மிதந்துவர ஆரம்பித்தது. அத்தனை பேரும் வயமிழக்க, அகிலாவும் தனக்குள் ‘அட!’ போட்டாள்.

அறிவானந்தரின் உரைநடை ஆலாபனை மேலும் தொடர்ந்தது.

‘அன்புமயமான உலகை உருவாக்குவதுதான் ஆன்மீகம். அன்புக்கு எதிரான எதுவும் ஆன்மீகமாகாது. அன்பும் கருணையும் தரித்திருக்கும் போதுதான் நாம் முழுமையை அடைகிறோம்.

அந்த அன்புதான் என்னையும் உங்களையும் இணைக்கிறது. அதுதான் அம்மாவை நேசிக்க வைக்கிறது. அப்பாவிடம் வாஞ்சை கொள்ளச்செய்கிறது. அண்ணன், தம்பி,அக்காள், தங்கை, கணவன், மனைவி, நண்பன் நண்பி, தோழன், தோழி என்றெல்லாம்

உறவுகளின் வசம் நம்மை வயப்படவைக்கிறது. அதுதான் மனித உறவுகளை காப்பாற்றுகிறது. நாம் வளர்க்கும் நாய் கூட அன்பு காட்டும் போதுதான் பாசமாய் நம்மிடம் வாலை ஆட்டுகிறது. இல்லையேல் அது பற்களால் நம்மை பதம் பார்த்துவிடும்.

இந்த பூமிப் பந்து தாள லயத்தோடு சுழல்வதே அன்பு என்ற அச்சின் மீதுதான். எனவே நாம் எல்லோர் மீதும் அன்பு செலுத்தப் பழகவேண்டும். அதை ஏன் பழக வேண்டும்? அது அவ்வளவு கடினமான காரியமா? என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம்.

நமக்கு யாரிடமும் சரியாக அன்பு காட்டத் தெரிவதில்லை. அதனால்தான் அதைப் பழகவேண்டும் என்கிறேன்.

-என்று நிறுத்திய அறிவானந்தர், கூட்டம் முழுமையையும் பார்வையால் ஒருமுறை அமைதியாக அளந்தார். தனது பேச்சு எடுபடுகிறதா என கவனிக்கிறாரோ என்னவோ.

தனக்குள் திருப்தியாகி தன் ஆலாபனையை தொடர்ந்தார்.

‘குழந்தையைக் கூட அன்போடு முழுதாகக் கொஞ்சத் தெரியவில்லை பலருக்கு. கொஞ்சுதலுக்கு

இடையே அகம்பாவ அறிவு நம்மிடம் எட்டிப்பார்த்து அன்பை அடக்கிவைத்துவிடுகிறது. தன் மனைவி மீது முழுதாக அன்பு செலுத்த இங்கே எத்தனை பேரால் முடிகிறது. இடையே எட்டிப் பார்க்கும் ஈகோ, பாராட்ட வேண்டிய விஷயங்களைக் கூட அன்போடு பாராட்ட விடாமல் வார்த்தைகளின் கைகளைப் பிடித்துத் தடுத்துவிடுகிறது. அதேபோல் மனைவியானவள் தனது பேரன்பை தன் கணவனிடம் பகிரங்கமாக செலுத்த

முடிகிறதா? அவள் அன்புகாட்ட முயன்றால், அலையாதே என்று அவளை ஆணின் வார்த்தை காயப்படுத்தி அடக்கி வைத்துவிடுகிறது நண்பனிடம் முழுதாக நண்பனால் அன்பு செலுத்த முடியவில்லை. அன்பாகப் பேசும் போதே உனக்கு என்ன வேண்டும் என்று சொல். சுற்றி வளைக்காதே என கத்தரி போடுவான் நண்பன். சிறுவயதில் நாம் சேர்ந்து விளையாடிய நம்

தோழிகளிடம், பின்னாளில் அன்பு செல்லுத்த முடிவதே இல்லை. தோழிகளுக்கும் தம் தோழர்களோடு அன்பைப் பகிரும் வாய்ப்பு கொடுக்கப்படுவதே இல்லை. சமூக ஒழுக்கம் என்ற பெயரால் இங்கும் கூட அன்புக்கு மத்தியில் சுவர்கள்

கட்டப்பட்டுவிடுகின்றன.

அன்பை செலுத்தத் தெரியாத மனிதர்களைப் போல்… இங்கே நம்மில் பலருக்கு மற்றவரின் அன்பை ஏற்றுக்கொள்ளவும் தெரிவதில்லை. காட்டப்படும் அன்பு, சிலருக்கு சங்கடம்.

சிலருக்கு சங்கோஜம். இன்னும் சிலருக்கோ அது துயரம்.

அன்பும் துயர் தருமா? என்றால் தரும். காலம் கடந்து காட்டப்படும் அன்பு, துயரம் தரும். காட்ட முடியாத உறவுகளிடம் காட்டப்படும் அன்பும் துயரத்தைத்தான் தரும்.

அன்பு என்பது ஒரு பிரபஞ்சம். அதற்குள் மகிழ்ச்சி, துயரம், ஏமாற்றம், சங்கடம், நெகிழ்ச்சி, வெட்கம், ஆரவாரம், நிசப்தம் என எல்லாமே இருக்கிறது. எனவே அன்பைப் பழக வேண்டும்.

ரெளத்திரத்தைப் பழகச் சொன்னான் பாரதி. ரெளத்திரத்தை மட்டுமல்ல; நாம் அன்பையும் பழகத்தான் வேண்டும்’ என்று அறிவானந்தர் கொஞ்சம் நிறுத்திய போதுதான் கேள்வியால் நுழைய வேண்டிய இடம் இந்த இடம்தான் என உணர்ந்தாள் அகிலா.சட்டென எழுந்தாள். அவள் எழுந்ததைப் பார்த்த அறிவானந்தர் அவளை நோக்கிக் கை கூப்பினார். இது சிக்கலான கேள்வியைக் கேட்கக் கூடாது என்பதற்கான கும்பிடோ என நினைத்த அகிலா…

‘ரெளத்திரத்தைப் பழகுவது போல் நாம் அன்பையும் பழகவேண்டும் என்கிறீர்களே… அப்படியானால் ரெளத்திரமும் தேவைதானா?’ என்றாள் கணீர் குரலில். ஒட்டுமொத்தக் கூட்டமும் அவள் பக்கம் திரும்பியது.

‘ நல்ல கேள்வி’ என சிலாகித்த அறிவானந்தர்… ‘இதில் என்ன சந்தேகம்?

ரெளத்திரத்தையும் நாம் பழகித்தான் ஆக வேண்டும். மனிதன் வெறும் மண்ணாங்கட்டி இல்லை என்று நிரூபிக்க ரெளத்திரம் தேவை. கோபம் என்ற ஒன்று இல்லையென்றால் யார்

வேண்டுமானாலும் நம்மை கைபொம்மை ஆக்கிவிடுவார்கள். கோபம் என்பது ரோஜாச் செடியைக் காப்பாற்றும் முள் போன்றது. அந்த முள் இல்லை என்றால் மலர்ச்செடிகள் சூறையாடப்பட்டு விடும். அகிம்சையை ஹிம்சை அடிமைப்படுத்திவிடும். நேர்மையை வன்முறை ஒடுக்கிவிடும். தர்மத்தை அதர்மம்

வீழ்த்திவிடும். மனிதம் மரணக் குழிக்கு அனுப்பப்பட்டுவிடும். நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நமக்கு முதலில் தேவையான உணர்வு ரெளத்திரம்தான். உயிர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொடுக்கப்பட்ட வரம்தான் கோபம்’ என்றார் புன்னகையை நழுவவிடாத உதடுகளோடு.

‘இங்கே அன்பைப் போதிக்க வந்திருக்கும் உங்களுக்குள்ளும் ரெளத்திரம் உண்டுதானே” என்றாள் அகிலா கூர்மையாக.

அறிவானந்தரோ ‘இதில் என்ன சந்தேகம். நமக்குள் பல கோப்பைகள் இருக்கிறது.,அதில் ஒன்றை நாம் அன்பால் நிரப்பிவைத்துக் கொள்ளவேண்டும். இன்னொரு

கோப்பையை ரெளத்திரத்தால் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி நிதானம், அறிவு, இரக்கம், செல்வம், ஞானம் என பலவற்றாலும் நிரப்பப்பட வேண்டிய கோப்பைகள் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் நாமோ செல்வம் ,புகழ் போன்ற

ஒரு சில கோப்பைகளுக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து நிரப்ப முயல்கிறோம்.

அதனால்தான் பலரது நிம்மதிக் கோப்பைகள் காலியாகவே இருக்கிறது’ என்றார்.

இப்போதும் அவரிடம் புன்னகை கசிந்தது..

‘சுற்றி வளைக்காதீர்கள். அன்பைப் போதிக்கும் உங்களுக்குள்ளும் ரெளத்திரம் இருப்பது முரண்பாடல்லவா? என்று கிடுக்கிப்பிடி போட்டாள் அகிலா.

‘பகல் வரும் உலகிற்கு, இரவு வருவது முரண்பாடா? மலர் உள்ள உலகத்தில் முள் இருப்பது முரண்பாடா? நீர் இருக்கும் உலகில் நெருப்பு இருப்பது முரண்பாடா? ஓசை இருக்கும் உலகத்திற்கு நிசப்தம் முரண்பாடா? ஆண் இருக்கும் உலகத்தில்

பெண் இருப்பது முரண்பாடா? இவையெல்லம் கூடாத முரண்பாடு என்றால் எனக்குள் ரெளத்திரம் இருப்பதும் முரண்பாடுதான்.’ என்றார் அறிவானந்தார். கூட்டம் தாளம் பிசகாமல் கைதட்டியது.

அவரே தொடர்ந்தார் ‘எனக்குள்ளும் ரெளத்திரம் உண்டு. எனக்குள்ளும் ஆசைகள் உண்டு. எனக்குள்ளும் வேட்கைகள் உண்டு. எல்லோருக்குள்ளும் இருக்கும் எல்லாமும் எனக்கும் உண்டு. ஆனால் இவைகளை எல்லாம் நான் என் கட்டுக்குள்

கொண்டுவந்திருக்கிறேன். அப்படி எல்லோரும் சகலத்தையும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால் உலகம் முழுக்க அன்பு மலரும். எலோரிடமும் ஞானம்

ததும்பும். உலகம் முழுக்க அன்பும் ஞானமும் ததும்ப ஆரம்பித்தால் ஆன்மீகத்திற்கான தேவைகள் குறைந்துவிடும்’ என்றார். அவர் கண்கள் முன்னிலும் தீர்க்கமாகச் சுடர்ந்தன.

‘சரி தந்தை பெரியாரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்றாள் அகிலா.

அறிவானந்தரோ ‘அவர் மிகப்பெரிய மகான். ஞானி. புரட்சியின் வாசலாக வந்த புண்ணிய புருஷர்’ என்றார் அறிவானந்தர். அப்போது மீடியக்காரர்கள் மத்தியில் சலசலப்பு உண்டானது.

அகிலாவோ ‘மிகப் பெரிய பகுத்தறிவுவாதியான தந்தை பெரியரையே மகான் என்கிறீர்களே. என்ன தைரியம் உங்களுக்கு?’ என்றாள் கோபமாக.

அதற்கும் அறிவானந்தர் அசராதவராய் ‘அவரை நான் உணர்ந்த வகையில் உண்டான தைரியத்தால்தான் இப்படிச் சொல்கிறேன்’ என்றார். இதற்கும் அரங்கம் அடக்கமாகக் கை தட்டியது

’நீங்கள் சொல்வதை என்னால் ஏற்கமுடியாது’ என்றாள் அகிலா.

‘யார் சொல்வதையும் அப்படியே எடுத்துக்கொள்ளாதே என்பதுதான் தந்தை பெரியாரின் அறிவுரை. இதுதான் சரியானது’ என்றார் அறிவானந்தர்.

அகிலாவோ சமாதானப்படாமல் ‘இன்னும் உங்களிடம் கேட்க என்னிடம் நிறைய கேள்விகள் இருக்கிறது. பதில் தர நேரம் ஒதுக்குவீர்களா?’ என்றாள் அகிலா.

‘கேள்விகளை எதிர்கொள்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கையத் திறக்கும் சாவியே கேள்விகள்தான் என்பது என் கருத்து. எப்போதும் உங்களுக்காக எங்கள் அறவழிச் சாலையின் கதவுகள் திறந்தே இருக்கும். வாருங்கள்’ என்ற அறிவானந்தர். துண்டுச் சீட்டில் மேடை நோக்கி வந்த சில கேள்விகளுக்கும் விடை கூறத் தொடங்கினார். கூட்டம் ஆனந்த லயத்தில் மிதந்தபடி இருந்தது.

அகிலா பல்வேறு சிந் தனைகளோடும் தமிழ்ச்செல்வனோடும் கிளம்பினாள். ‘செல்வா, கடற்கரைக்குப் போலாமா?’ என்றாள் அகிலா.

‘போலாமே’ என்றான் தமிழ்ச்செல்வன். அறிவானந்தர், அகிலாவின் புத்திக்குள் நுழைந்து ஒருவித நெருடலைக் கொடுக்க ஆரம்பித்தார்.

(தொடரும்..)

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...